சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

America’s hungry 21st Century

21ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் பசி

Andre Damon
21 April 2014

Use this version to printSend feedback

அமெரிக்க உணவு களஞ்சியத்தின் தேசிய வலையமைப்பான Feeding America, வியாழனன்று உள்நாட்டு உணவு பாதுகாப்பின்மை மீதான அதன் ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. அது, ஐந்து குழந்தைகள் உட்பட ஆறு அமெரிக்கர்களில் ஒருவர், 2012இல் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் போதிய உணவின்றி இருந்ததாக எடுத்துக்காட்டுகிறது.

மூன்று பங்கிற்கு அதிகமான குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்காத டஜன் கணக்கான மாவட்டங்கள் (counties) இருப்பதையும் அந்த அறிக்கை கண்டறிந்தது. பசியால் வாடும் சம்பவங்கள் வேகமாக அதிகரித்துள்ளன. “உணவு பாதுகாப்பின்மையில்" உள்ள குடும்பங்களின் சதவீதம் 2007இல் 11.1 சதவீதத்தில் இருந்து 2012இல் 16 சதவீதமாக உயர்ந்தது.

உணவு பாதுகாப்பின்மை வேறெந்த பிரதான அபிவிருத்தி அடைந்த நாட்டையும் விட அமெரிக்காவில் மிக பரவலாக நிலவுகிறது. பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி அமைப்பிடமிருந்து (OECD) வெளியான வேறொரு பிரத்யேக புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்காவில் நிலவும் உணவு பாதுகாப்பின்மை விகிதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விடவும் சுமார் இரண்டு மடங்காகும்.

உணவு பாதுகாப்பின்மையின் உயர்வு அதீத வறுமையின் உயர்வோடு சமாந்தரமாக உயர்கிறது. நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைந்த வருவாயில் வாழும் அமெரிக்க குடும்பங்களின் எண்ணிக்கை 1996 மற்றும் 2011க்கு இடையே இரண்டு மடங்கை விட அதிகமாக, 636,000இல் இருந்து 1.46 மில்லியனாக உயர்ந்துள்ளது. நாளொன்றுக்கு 2 டாலருக்கு குறைந்த வருவாயில் வாழும் குடும்பங்களில் அங்கே இப்போது சுமார் 3 மில்லியன் குழந்தைகள் வாழ்கின்றனர்.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் உணவளிக்க உணவு மானிய கூப்பன்களைச் சார்ந்திருக்க நிர்பந்திக்கப்பட்டவர்களுக்கு வாழ்க்கை எவ்வாறு இருந்தது என்பதைச் சித்தரித்து உலக சோசலிச வலைத் தளம் புகைப்பட கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் போலவே, நல்ல பால் மற்றும் பால் பொருட்களும் ஆடம்பரமானவையாகி விட்டன. நபர் ஒருவருக்கு ஒருவேளை உணவிற்கு 1.40 டாலர் என்ற சராசரி உணவு மானிய ஒதுக்கீட்டைக் கொண்டு, “செயலாற்றலுக்கேற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு" தேவையான போதிய உணவு வகைகளை வாங்குவது அசாத்தியமானதாகும்.

ஒருபுறம் வெட்கமின்றி மிகப் பரந்த செல்வச் செழிப்பு காட்சியளிக்கின்ற அதேவேளையில் பரந்த பசி பட்டினிகளும் நிலவுகின்றன. நியூ யோர்க் நகருக்கு சற்று வெளியே அரண்மனை போன்ற 50 ஏக்கர் எஸ்டேட்டான காப்பர் பீச் பண்ணை 120 மில்லியன் டாலருக்கு கடந்த வாரம் தான் விற்கப்பட்டது, அது வரலாற்றில் மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட வீடு என்ற ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது. மேலும் அதி-ஆடம்பர கார் சந்தையும் மலர்ச்சி பெற்று வருகிறது. சமீபத்தில் புதிய பொலிவோடு, கால் மில்லியன் டாலர் மதிப்பிலான பன்னிரெண்டு சிலிண்டர் வாகனத்தை அறிமுகப்படுத்திய ஆடம்பர கார் உற்பத்தியாளர் பெண்ட்லே, கடந்த ஆண்டு 17 சதவீத அளவிற்கு விற்பனை உயர்ந்திருப்பதாக தெரிவித்தது.

கலைப் படைப்புகளை ஏலமிடும் கிறிஸ்டி (Christie) நிறுவனம் கடந்த ஆண்டு 7.1 பில்லியன் டாலர் மதிப்பிலான கலைப்படைப்புகளை விற்றது, இது அதற்கு முந்தைய ஆண்டை விட 16 சதவீத உயர்வு என்பதோடு மிக அதிகபட்ச சாதனையளவிலான விற்பனையும் ஆகும். இதில், பிரான்ஸிஸ் பேக்கோனின் "லூசியன் ஃபியூட்டின் மூன்று ஆய்வுகள்" (Three Studies of Lucian Freud) எனும் படைப்பு 142 மில்லியனுக்கு சூதாட்ட ஜாம்பவான் ஸ்டீபன் A. வென்னுக்கு விற்கப்பட்டதும் உள்ளடங்கும், இது கலைப்படைப்பின் மிக அதிகபட்ச சாதனையளவிலான விற்பனையாகும்.

Feeding America தெரிவிக்கும் புள்ளிவிபரங்களின்படி, உணவு பாதுகாப்பின்மையில் உள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சராசரியாக 2.26 டாலர் தேவைப்படுகிறது. அந்த அடிப்படையில், அமெரிக்காவில் மொத்த 16 மில்லியன் பசியில் வாடும் குழந்தைகளுக்கு போதிய உணவிற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டுமானால், ஆண்டுக்கு 13 பில்லியன் டாலர் செலவாகும். அமெரிக்காவில் 80 பில்லியனர்கள் உள்ளனர், தனிப்பட்ட முறையில், அவர்களின் செல்வ வளம் இந்த தொகையையும் விட அதிகமாகும்.

அமெரிக்க வரலாற்றின் முந்தய காலகட்டத்தில், செல்வச் செழுமைக்கு இடையில் இந்தளவிலான வறுமை மற்றும் பசி-பட்டனி என்பது ஒரு தேசிய அவமானமாக பார்க்கப்பட்டது. 1962இல் அப்பலாச்சியா மற்றும் ஏனைய இடங்களில் இருந்த வறுமையை வெளிக்காட்டிய மைக்கேல் ஹாரிங்டனின் The other America, அந்நாட்களின் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளை மருத்துவ காப்பீடு, மருத்துவ நல திட்டங்கள் மற்றும் உணவு மானிய கூப்பன்கள் போன்ற சீர்திருத்தங்களை ஆதரிக்க நகர்த்தி சென்றது. ஆனால் இன்றோ, தன்னைத்தானே "தாராளவாதம்" மற்றும் உண்மையான சமூக சீர்திருத்தத்தை ஆதரிப்பதில் அடையாளங்காட்டும், அரசியல் அல்லது ஊடக ஸ்தாபகத்தினுள் உள்ள எந்தவொரு குறிப்பிடத்தக்க போக்கும் அவ்விதத்தில் அங்கே இல்லை.

"பெரு மந்தநிலைமைக்குப் பின்னர் வேறெந்த காலத்தையும் விட அதிகமாக" பசிபட்டினி மேலோங்கி இருப்பதாக இந்த வார தொடக்கத்தில் WSWSக்கு வழங்கிய ஒரு நேர்காணலில் Feeding America தெரிவித்தது. இவ்வாறு இருக்கின்ற போதினும், பசி-பட்டினி பரவி வருவது குறித்து இரண்டு கட்சிகளின் அரசியல்வாதிகளால் அல்லது ஊடகங்களால் அரிதாகவே குறிப்பிடப்படுகிறது.

இந்த சமூக பேரழிவிற்கான பொறுப்பு, முதலாளித்துவ அமைப்புமுறையின் மீதும், அதன் அரசியல் பாதுகாவலர்களின் மீதும் தங்கி உள்ளது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சி நிர்வாகங்கள், பல தசாப்தங்களாக வறுமை ஒழிப்பு திட்ட நிதிகளை இல்லாதொழித்துள்ளன. ஒபாமா நிர்வாகமும், காங்கிரஸூம் கடந்த ஆறு மாதங்களில் உணவு மானிய கூப்பன்களில் வெற்றிகரமாக இரண்டு வெட்டுக்களை மேற்பார்வையிட்டுள்ளன: முதலில் நவம்பரில், நான்கு உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்திற்கு மாதத்திற்கு 36 டாலர் என்றளவிற்கு நாடு தழுவிய உதவித்தொகைகள் வெட்டப்பட்டன, பின்னர் இந்த ஆண்டின் ஜனவரியில், சுமார் ஒரு மில்லியன் குடும்பங்களுக்கு மாதத்திற்கு சராசரியாக 90 டாலர் உதவித்தொகைகள் வெட்டப்பட்டன.

இந்த இரண்டு வெட்டுக்களுக்கும் இடையே, சுமார் மூன்று மில்லியன் மக்களும் மற்றும் அவர்களைச் சார்ந்துள்ள இரண்டு மில்லியன் குழந்தைகளும் பாதிக்கப்படும் வகையில், பெடரலின் விரிவாக்கப்பட்ட நீண்டகால வேலையின்மை நலத்திட்டங்கள் காலாவதியாக வெள்ளை மாளிகையும், காங்கிரஸூம் அனுமதித்தன. வோல் ஸ்ட்ரீட்டிற்கு ட்ரில்லியன் கணக்கான டாலர்களை கைமாற்றிய, அதேவேளையில் 2008 பொறிவுக்குப் பொறுப்பான நிதியியல் குற்றவாளிகள் மீது வழக்கு தொடுக்க மறுக்கும் அதே நிர்வாகத்திடமிருந்து தான், இந்த கொடூரமான மற்றும் மனிததன்மையற்ற நடவடிக்கைகளும் வருகின்றன.

ஒபாமாவின் முன்னோடி சமூக முனைவான ஒபாமாகேர் திட்டமானது, ஏற்கனவே சாமானிய உழைக்கும் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய மருத்துவ காப்பீட்டின் தரம் மற்றும் அளவை குறைக்கும் மற்றும் அவர்களின் கையிலிருக்கும் பணத்தை அதிகளவில் செலவிட செய்யும் ஒரு திட்டமாக அம்பலப்பட்டுள்ளது. அதில் காப்பீட்டு ஏகபோகங்கள், சங்கிலித் தொடர் போன்ற மருத்துவமனைகள் மற்றும் மருந்து நிறுவனங்களின் இலாபங்களை ஊக்குவிக்க, மருத்துவ காப்பீடு மீதான அரசின் செலவுகள் குறைக்கப்படும்; அரசின் மெடிகேர் திட்டத்திற்கு குழிபறிக்கப்படும்; பெருநிறுவன செலவீனங்கள் குறைக்கப்படும்.

பங்குச்சந்தை உயர்வை மற்றும் பணக்காரர்களின் செல்வ வளமையை, ஒன்று பகிரங்கமாகவோ அல்லது நளினமான உற்சாகத்தோடோ, மிதமிஞ்சி எடுத்துக்காட்டும் பெருநிறுவன-கட்டுப்பாட்டினது ஊடகங்கள், வறுமை நிலவுவதை மிக அரிதாகவே ஒப்புக் கொள்கின்றன. Pew ஆய்வு மையத்தின் மேதகு இதழியலின் ஆய்வுத்திட்டங்கள் என்பதன் புள்ளிவிபரங்களின்படி, வறுமை சார்ந்த பிரச்சினைகளை எடுத்துக்காட்டுவதில் பிரதான ஒலி/ஒளிபரப்பு வலையமைப்புகள் அவற்றின் நேரத்தில் வெறும் 0.2 சதவீதம் மட்டுமே செலவிடுகின்றன.

பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் துணை அமைப்புகளான தொழிற்சங்கங்களை பொறுத்த வரையில், அவையும் உழைக்கும் மக்கள் மீதான தாக்குதலுக்கு உதவியுள்ளன. ஆளும் வர்க்கம் முன்னொருபோதும் இல்லாதளவிற்கு செல்வ வளத்தை அடியிலிருந்து மேற்தட்டிற்கு மறுபகிர்வு செய்துள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதிலும், ஜனநாயக கட்சியோடு ஓர் அரசியல் முறிவைத் தடுப்பதிலும் அவற்றின் முயற்சிகளை ஒருமுகப்படுத்தி உள்ளன.

என்ன மேலெழுந்து வருகிறதென்றால், சமூகத்தின் ஒரு துருவத்தில் பரந்த செல்வ வளத்தையும், மறுபுறத்தில் முன்னில்லாத அளவிற்கு பெரும் வறுமை மற்றும் அவலங்களையும் குவிக்கும் ஒரு அமைப்புமுறையான, முதலாளித்துவத்தின் உண்மையான, கொடூர முகமே மேலெழுந்து வருகின்றது.

இது அமெரிக்காவில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் உண்மையாகும். வங்கிகளின் கட்டளைகளைத் திருப்திப்படுத்த, உலகம் முழுவதிலும் காட்டுமிராண்டித்தனமான சிக்கன முறைமைகள் திணிக்கப்பட்டு வருகின்றன. உலகின் 85 மிகப்பெரிய பணக்காரர்கள், மொத்த மக்கள்தொகையில் அடியிலுள்ள பாதிப் பேரின் சுமார் 3.5 பில்லியன் மக்களின் செல்வத்தை விட அதிகமான செல்வத்தை கொண்டுள்ளனர்.

ஆரோக்கியமான உணவு, கண்ணியமான வீட்டுவசதி, மருத்துவ பராமரிப்பு, கல்வி, கலை மற்றும் பொழுதுபோக்கை அணுகுவதற்குரிய வாய்ப்புகள் என அனைத்து மக்களுக்கும் தேவையான வாழ்வின் தேவைகளை சௌகரியமாக பூர்த்தி செய்வதற்கு அவசியமான அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால் முதலாளித்துவ அமைப்புமுறையும், ஆளும் வர்க்கமும் அதன் மேலே உட்கார்ந்து கொண்டு, உற்பத்தி மற்றும் வினியோகம் மீதான எந்தவொரு அறிவுபூர்வமான கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்த சாத்தியமற்றதாக செய்துள்ளது. இந்த அமைப்புமுறை நீக்கப்பட்டு தனிநபர்களின் செல்வ வளமை மற்றும் பெருநிறுவன இலாபங்களுக்கான நிதியியல் பிரபுத்துவத்தின் உந்துதலுக்காக அல்லாமல், சமூக தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் சமூகத்தைப் பகுத்தறிவான முறையில் திட்டமிடக்கூடிய, சோசலிசத்தை கொண்டு அது மாற்றீடு செய்யப்பட வேண்டும்.