சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Journalist brutally attacked at Jaffna

இலங்கை: யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் கொடூரமாகத் தாக்கப்பட்டார்

Vimal Rasenthiran
21 April 2014

Use this version to printSend feedback

இலங்கையின் வடக்கில், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் தினக்குரல், வலம்புரி மற்றும் வீரகேசரி நாளிதழ்களின் செய்தியாளர் சிவஞானம் செல்வதீபன், கடந்த 14ம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார். இது இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் இருக்கும் வடக்கில் பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்களில் அண்மையதாகும்.

தமிழ்-சிங்கள புதுவருட தினமான அன்று, செல்வதீபன் மோட்டார் சைக்கிளில் தனது தாயாரின் வீட்டிலிருந்து சிறுப்பிட்டியிலுள்ள மனைவியின் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது, வல்லை புறாப்பொறுக்கிச் சந்திக்கு அருகாமையில், மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் இரவு 08.30 மணியளவில் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். தாக்குதல்காரர்கள்நீ ஊடகவியலாளரா?” என கேட்டுக்கொண்டே இரும்புக் கம்பியால் தலையின் பின்பகுதியில் தாக்கியுள்ளனர், தலைக்கவசம் அணிந்திருந்தமையால் அடுத்த அடிகள் நாரிப்பகுதியில் விழுந்த நிலையில், அவர் கீழே விழுந்தார்.

உயிர் தப்புவதற்காக அருகில் இருந்த பற்றையை நோக்கி ஓடிய செல்வதீபனை பின்னால் விரட்டிய, தாக்குதல்தாரர்கள், கையில் வைத்திருந்த கம்பிகளை அவர் மீது வீசியெறிந்து தாக்கினர். பின்னர் அவரது மோட்டார் சைக்கிளை அடித்து நொருக்கினர். இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் இராணுவ முகாம் ஒன்றும் உள்ளது.

நீண்ட நேரத்தின் பின் செல்வதீபன் தொலைபேசியில் உறவினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார், பின்னர் அவ்வழியாக வந்த பேரூந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் பயணிகளுமாக சேர்ந்து அவரை மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்த்தனர்.

இந்த தாக்குதல் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பது தெளிவு. சம்பவம் நடப்பதற்கு முன் சில நாட்களாக இனந்தெரியாத சிலர் தன்னை பின் தொடர்வதை செல்வதீபன் அவதானித்திருந்தார். தான் பணி புரியும் பத்திரிகைகளின் ஆசிரிர்களிடம் தனக்கு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரியப்படுத்தியதோடு இதனடிப்படையில் நெல்லியடி பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. “முறைப்பாட்டை பதிவு செய்தால் மட்டுமே விசாரணை மேற்கொள்ள முடியும் என்று பொலிசார் கூறியதால் நான் அடுத்த நாள் முறைப்பாடு பதிவு செய்ய இருந்த வேளையிலேயே தாக்கப்பட்டேன், என செல்வதீபன் கூறினார்.

தாக்குதல் நடந்த பின்னர் நெல்லியடி பொலிசார் அன்று இரவே செல்வதீபனிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தனர். கடந்த காலத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சம்மந்தப்பட்டவர்களோ அல்லது சந்தேக நபர்களோ இன்றுவரை பொலிசாரினால் கைது செய்யப்படவோ விசாரிக்கப்படவோ இல்லை. இந்த முறைப்பாட்டின் தலைவிதியும் வேறுவிதமாக இருக்க முடியாது.

இந்த தாக்குதல், கடந்த ஒரு மாத காலமாக இலங்கை அரசாங்கம் வடக்கில் கட்டவிழ்த்துவிட்டுள்ள பாரிய இராணுவ ஒடுக்குமுறைகளின் மத்தியிலேயே இடம்பெற்றுள்ளது. 2009 மே மாதம் இராணுவ ரீதியில் நசுக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் கடைசி மாதங்களில் நடந்த அரசாங்கத்தின் யுத்தக் குற்றங்கள் சம்பந்தமாக, கடந்த மாதம் .நா மனித உரிமைகள் பேரவையில் (யூஎன்எச்ஆர்சி) அமெரிக்க அனுசரணையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு பதிலிறுப்பாக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் மீண்டும்புலி பயங்கரவாதம்தலைநீட்டியிருப்பதாக ஒரு பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

கடந்த மார்ச் 12ம் திகதி, கோபி என்றழைக்கப்படுபவரின் தலைமையில் புலிகள் மீண்டும் வடக்கில் செயற்படுவதாகவும், கோபிக்கு அடைக்கலம் கொடுத்தார் என்ற போலி குற்றச்சாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி தர்மபுரத்தில் ஜெயகுமாரி என்பவரையும் அவரது மகளையும் கைது செய்த பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு, அதைத் தொடர்ந்து ஆண்களும் பெண்களுமாக சுமார் 60 பேரை கொடூரமான பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைத்தது. அதில் 50க்கும் மேற்பட்டவர்கள் இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாகச் சென்று விசாரிப்பது, கிராமங்களை சுற்றி வளைத்து இளைஞர்களை கைது செய்து விசாரிப்பது மற்றும் வீதிச் சோதனைகளை புதுப்பிப்பதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். செல்வதீபன், இத்தகைய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கைதுகள் தொடர்பான செய்திகளைத் திரட்டி வெளியிட்டிருந்தார்.

கடந்த மாதம் யூஎன்எச்ஆர்சியில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அனுசரணையிலான தீர்மானம், இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் மற்றும் ஏனைய மீறல்கள் தொடர்பாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில் தம்மால் இழைக்கப்பட்ட குற்றங்களை மூடி மறைப்பதற்காக, மனித உரிமை ஆர்வலர்கள், ஊடகங்கங்கள் மற்றும் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும் மௌனிகளாக்குவதற்கு அரசாங்கம் இந்த அச்சுறுத்தல் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

தர்மபுரத்தில் கைதுசெய்யப்பட்ட ஜெயகுமாரி, போரின் கடைசி நாட்களில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட தனது மகனைப் பற்றி தகவல் தறுமாறு கோரி, காணாமல் போனவர்களின் உறவினர்கள் முன்னெடுக்கும் பிரச்சாரத்தில் முன்னணியில் நின்றவராவார். இவரின் கைதை தொடர்ந்து மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு கைது செய்து பின்னர் விடுதலை செய்துள்ளது.

தனது சகோதரனும் 2008 ஆகஸ்ட் மாதம் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக செல்வதீபன் தெரிவித்தார், “மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நாம் அறிவித்ததை தொடர்ந்து, பொலிசார் தாம் அவரை விடுதலை செய்து விட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பதிலளித்தனர். காணாமல் போகும்போது அவருக்கு வயது 26. ஆறு வருடங்கள் ஆகியும் அவர் சம்பந்தமான எந்த விதமான தகவல்களும் அரசாங்கத் தரப்பால் தரப்படவில்லை,” என அவர் கூறினார்.

தான் தாக்குதலுக்கு உள்ளானது இது முதற் தடவை அல்ல என்றும், தன்னை இதற்கு முன்னர் அரசாங்கத்துடன் செயற்படும் தமிழ் துணைப்படைக் குழுவொன்றும் கடத்திச் சென்று தடுத்து வைத்திருந்ததாக செல்வதீபன் தெரிவித்தார். “கடந்த 2007ம் ஆண்டு எனது சகோதரனைப் பார்க்கச் சென்ற வேளையில் மொனராகல மாவட்டம் வெல்லாவய என்னும் இடத்தில் வைத்து, இந்தக் குழு என்னையும் எனது மாமாவையும் கடத்திச் சென்றது, என்னை விடுதலைப் புலிகள் சந்தேக நபராகவும், மாமா வர்த்தகர் என்பதனால் அவரிடம் கப்பம் வாங்குவதற்காகவும் வெலிகந்த காட்டில் மூன்று மாதங்கள் வைத்திருந்து சித்திரவதைகள் செய்தார்கள். விசாரணை என்ற பெயரில் 10 நாட்களுக்கு ஒரு முறை கடுமையாக சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்தோம். துப்பாக்கிப் பிடி மற்றும் மரக்கட்டைகளாலும் கைகள் மற்றும் சப்பாத்துக் கால்களாலும் கடுமையாக தாக்கப்பட்டோம்,” என்று அவர் கூறினார்.

இப்படியான பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கும் நிலையிலும், ஊடகத்துறை மூலம் மக்களுக்கு உண்மையான பிரச்சனைகளை வெளிப்படுத்தவே இதை தேர்ந்தெடுத்தேன். என் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பந்தமாக நான் யாரையும் வெளிப்படையாக குற்றம் கூறமுடியாது, ஆனால் இப்படியான தாக்குதல்கள் எவர்களால் இவ்வளவு துணிச்சலாகவும் மிலேச்சத்தனமாகவும் மேற்கொள்ள முடியும் என்பதனை கடந்த கால சம்பவங்களை அவதானித்திருக்கும் ஒருவரால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்என அவர் மேலும் கூறினார்.

யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் கடந்துள்ள போதும், இராணுவம் வடக்கில் ரோந்து நடவடிக்கைகளையும் சோதனை நடவடிக்கைகளையும் புதுப்பித்துள்ள நிலையில், தாக்குதல்காரர்கள் தடங்கல் இன்றி தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். கடந்த ஆண்டும் இதே காலப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் உதயன் பத்திரிகையின் அலுவலகத்துக்குள் ஆயுதங்களுடன் புகுந்த குண்டர்கள் தாக்குதலை நடத்தி அலுவலகத்துக்குத் தீ மூட்டிவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். இந்தப் பெரும் தாக்குதலின் குற்றவாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.

அண்மையில் ஊடகவியாலளர்களை பாதுகாக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள் விசாரிக்கப்படாமல் இருக்கும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக வரிசைப்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர், கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த ஒன்பது ஊடகவியலாளர்களின் கொலை சம்பந்தமாக பொறுப்பாளிகள் கண்டுபிடிப்பதில் அரசாங்கம் அக்கறை காட்டவில்லையென குற்றஞ்சாட்டும் அந்த அறிக்கை, இந்தக் கொலைகளில் பலவற்றின் பின்னணியில் அரசாங்கமும் இராணுவ அலுவலர்களும் சந்தேக நபர்களாக இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.