சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை பாதுகாப்பு படைகள் தமிழ் ஊடகவியலாளர்களை தடுத்து வைத்தன

By Subash Somachandran
9 August 2014

Use this version to printSend feedback

ஜூலை 31 அன்று யாழ்ப்பாண பஸ் நிலையம் முன்பாக, போரில் நாசமாக்கப்பட்ட வட இலங்கையைச் சேர்ந்த ஊடகவியலாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தார்கள். அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்புப் படைகளதும் ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

கொழும்பில் நடக்கவிருந்த ஊடக செயலமர்வு ஒன்றுக்கு, ஜூலை 25 யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த பத்திரிகையாளர் குழுவினர், பாதுகாப்பு படையினரால் ஓமந்தை சோதனைச் சாவடியில் நிறுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தமையே இந்த ஆர்ப்பாட்டத்துக்கான உடனடி காரணமாகும்.

சுதந்திர ஊடகவியலாளர்கள் ஒன்றியம் மற்றும் யாழ்ப்பாண ஊடக அமையமும் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த சுமார் 50 ஊடகவியலாளர்களும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள்வேண்டும் வேண்டும் ஊடக சுதந்திரம்!, “ஊடகவியலாளர்களைத் தாக்காதே!உண்மையை மறைக்க கஞ்சா பொதியா?, “ஆசியாவின் அதிசயம் கஞ்சா களஞ்சியமா? போன்ற கோசங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தினை வழமை போல் பொலிசாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் கண்காணித்தனர்.

இந்த அச்சுறுத்தலின் பண்பு, ஊடக அடக்குமுறை பற்றிய எடுத்துக் காட்டு மட்டுமன்றி, 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்து ஐந்து ஆண்டுகளின் பின்னரும் வடக்கு மற்றும் கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள இராணுவத்தின், ஏறத்தாழ அதன் ஆட்சியின் வலையமைப்பு இயக்கத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டாகும்.

ஊடகவியலாளர்கள் ஓமந்தை வரை அடையாளந்தெரியாத நபர்களால் வாகனங்களில் பின் தொடரப்பட்டனர். இடைவழியில் மாங்குளத்தில் அவர்கள் வழமைக்கு மாறாக சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். அவர்களின் அடையாள அட்டை விபரங்கள் பதிவு செய்யப்பட்டன. அப்போது ஊடகவியலாளர்கள் விசாரித்த போது, “நீங்கள் ஆனையிறவு சோதனச் சாவடியில் மறிக்கும்போது நிற்கவில்லை என்று இராணுவத்தினர் போலிக் காரணம் கூறியுள்ளனர்.

ஓமந்தையில் அவர்களின் வாகனம் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்ட அதே வேளை, இராணுவத்தினரும் பொலிசாரும் கடும் வார்த்தைப் பிரயேகங்களை மேற்கொண்டு கொடூரமாக நடந்து கொண்டதுடன் ஊடகவியலாளர்களைக் கைது செய்ய முயன்றனர். பத்திரிகையாளர்கள் கூறியபடி, இராணுவத்தினரே ஒரு கஞ்சா பொதியை வாகனத்துக்குள் வைத்துவிட்டு, போதைப் பொருட்கள் வைத்திருந்ததாக குற்றஞ்சாட்டி ஏழு ஊடகவியலாளர்களையும் ஒமந்தைப் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். “கஞ்சாவை இராணுவச் சிப்பாய் ஒருவரே வாகனத்துக்குள் வைத்ததை நேரடியாக பார்த்தோம் என அவர்கள் பொலிசாருக்குத் தெரிவித்தனர். ஊடகவியலாளர்கள் வீதி மறியலில் ஈடுபட்டதனால் பின்னர் பொலிசார் அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொள்ளத் தள்ளப்பட்டனர்.

இது உயர்மட்டத்தில் திட்டமிடப்பட்டது என்பது தெளிவாகும் வகையில், நிருபர்கள் மாநாடொன்றில் பேசிய இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய, “வானொன்றில் பெருந்தொகையான ஹெரோயின் கடத்தப்படுவதாக ஓமந்தை சோதனைச் சாவடிக்கு தகவல் கிடைத்தது, பத்து நிமிடங்களுக்குள் வான் ஒன்றை சோதனைசெய்தபோது அதில் சாரதி ஆசனத்திற்கு கீழ் சிகரெட் பெட்டிக்குள் கஞ்சாவை பொலிஸார் மீட்டுள்ளனர் என தெரிவித்தார்.

இறுதியாக வாகனத்தின் சாரதியை கைது செய்த பொலிசார் ஏழு மணித்தியாலங்களின் பின்னர் ஊடகவியலாளர்களை கொழும்பு செல்ல அனுமதித்தனர். அவர்கள் கொழும்பு சென்றபோது அந்த செயலமர்வு இரத்துச் செய்யப்பட்டிருந்தது.

இந்த செயலமர்வானது ரைட்ஸ்நௌ ஜனநாயகத்துக்கான கூட்டு (Rights Now Collective for Democracy) என்ற அரச சார்பற்ற அமைப்பினால் யாழ்ப்பாண தமிழ் ஊடக அமைப்புடன் சேர்ந்து இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் நிதியுதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. செயலமர்வு நடக்கவிருந்த பிரதேசத்தில் அரசாங்க-சார்பு குண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்ததால் ஏற்பாட்டாளர்கள் நிகழ்வை இரத்து செய்திருந்தனர்.

கடந்த இரு மாதங்களில் அரசாங்கத்தின் தலையீட்டால் இரத்துச் செய்யப்பட்ட மூன்றாவது ஊடக செயலமர்வு இதுவாகும். ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பால் பத்திரிகையாளர்களுக்கு முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வுகள், தொலைபேசி மிரட்டல்கள், பொலிசின் ஆதரவுடன் சிங்கள அதிதீவிரவாத குண்டர்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நேரடி இராணுவத் தலையீடுகளின் காரணமாக இரத்துச் செய்யப்பட்டன. இந்த அரசாங்க சார்பு குண்டர்கள் பத்திரிகையாளர்களையும் ஏற்பாட்டாளர்களையும் புலி ஆதரவாளர்களாக முத்திரை குத்தினர்.

செயலமர்வுகளை தடுப்பதில் இராணுவமும் குண்டர்களும் தலையீடு செய்வதானது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் ஊடகங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதற்கான இன்னொரு எடுத்துக்காட்டாகும். அவரது அரசாங்கம் 2006 நடுப்பகுதியில் இனவாத யுத்தத்தை மீண்டும் தொடங்கியதில் இருந்து, இராணுவத்துடன் சேர்ந்து செயற்படும் கொலைப் படைகளால் பல ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் மற்றும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். சிங்களவர்கள் உட்பட பல பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். தமிழ் ஊடக நிறுவனங்கள் ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகின.

யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்ட வலம்புரி, உதயன் மற்றும் தினக்குரல் போன்ற பத்திரிகைகளின் பல நிருபர்கள் கடந்த ஆண்டுகளில் கொலை முயற்சிகளில் இருந்து சற்றே உயிர் தப்பினர். பி. வின்ஸ்லோ மற்றும் எஸ்.கே. பிரசாத்தும் உயர் பாதுகாப்பு வலயங்களில் நில ஆக்கிரமிப்பு பற்றி செய்தி சேகரிக்க சென்றபோது, இராணுவத்தின் மரண அச்சுறுத்தலுக்கு உள்ளானதால் நாட்டை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர்.

போதைப் பொருள் மற்றும் வெடி மருந்துகள் வைத்திருந்ததாக குற்றச்சாட்டுக்களை சோடிப்பதிலும் சித்திரவதைகளை பயன்படுத்தி ஒப்புதல் வாக்குமூலங்களை பெறுவதிலும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகளிலும் இலங்கை பாதுகாப்புப் படைகள் பேர்போனவை. நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வருடக் கணக்காக, சிலர் பத்தாண்டுகளாக, விசாரணை மற்றும் குற்றச்சாட்டுக்கள் கூட இன்றி புலி சந்தேக நபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 25 நடந்த சம்பவம், அரசாங்கமும் இராணுவமும் தம்மை விமர்சிப்பவர்களுக்கு எதிராக எத்தகைய குற்றச்சாட்டுக்களையும் சோடித்து கைது செய்ய முடியும் என்ற எச்சரிக்கையை விடுக்கின்றது. இராஜபக்ஷவின் அரசாங்கம் வடக்கை திட்டமிட்டு இராணுவமயப்படுத்துவதோடு தமிழ் மக்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமிக்கின்ற அதே வேளை, வடக்கில் மேலோங்கும் பிரச்சினைகளை அம்பலப்படுத்தும் மூலாதாரங்களாக பத்திரிகையாளர்கள் இருப்பதே வடக்கில் அவர்கள் இலக்கு வைக்கப்படுவதற்கான காரணமாகும்.

ஊடகங்கள் மீதான அண்மைய ஜனநாயக-விரோத தாக்குதல்கள், அரசாங்கம் எந்தவொரு விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ளும் நிலையில் இல்லை என்பதற்கான அறிகுறியும், விமர்சனங்களை நசுக்குவதற்கு அது இராணுவம், பொலிஸ் மற்றும் சிங்கள அதிதீவிரவாத குண்டர்களையும் பயன்படுத்தும் என்ற எச்சரிக்கையுமாகும். இது அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக போராட்டத்துக்கு வரும் தொழிலாள வர்க்கம், ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் மாணவர்களுக்கும் எதிராகப் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்தின் களஞ்சியத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பவை பற்றிய எச்சரிக்கையுமாகும்.