சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Obama authorises a new air war in Iraq

ஈராக்கில் ஒரு புதிய வான்வழி போருக்கு ஒபாமா ஒப்புதல் அளிக்கிறார்

By Peter Symonds
8 August 2014

Use this version to printSend feedback

ஈராக்கில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க சமிக்ஞை காட்டும் ஒரு அறிக்கையை நேற்று மாலை வாஷிங்டனில் ஜனாதிபதி ஒபாமா அறிவிக்கையில், ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு (ISIS) போராளிகள் குழுவிற்கு எதிராக வடக்கு ஈராக்கில் அமெரிக்க விமான தாக்குதலுக்கு அவர் ஒப்புதல் வழங்கி இருப்பதாக அறிவித்தார்.

ISIS இராணுவம் முன்னேறியதால் அங்கிருந்து வெளியேறி இருக்கும், வடமேற்கு ஈராக்கின் சின்ஜார் பிராந்திய மலைப்பகுதிகளில் சிக்கியிருப்பதாக கூறப்படும் ஆயிரக் கணக்கான யாஜிதி (Yazidi) சிறுபான்மை உறுப்பினர்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலைமையே, இந்த புதுப்பிக்கப்பட்ட இராணுவ தலையீட்டிற்கான உடனடி போலிக்காரணமாக இருக்கிறது. அமெரிக்க இராணுவ விமானங்கள் ஏற்கனவே அப்பகுதியில் உணவு மற்றும் குடிநீரை வானிலிருந்து கீழே போட்டு வருவதாக பெண்டகன் அறிவித்தது.

பாசாங்குதனத்தில் ஊறிய கருத்துக்களோடு ஒபாமா அறிவிக்கையில், ஈராக்கிய சிறுபான்மை மதத்தினர் ஒரு படுகொலை அச்சுறுத்தலில் இருக்கும் போது அமெரிக்கா "கண்களை மூடிக் கொண்டிருக்க" முடியாது என்று அறிவித்தார். ஆனால் கடந்த மாதத்திலிருந்து, இந்த ஒபாமா நிர்வாகம் பாலஸ்தீன அப்பாவி மக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதலையும் மற்றும் காசா பகுதியின் பெரும் பகுதிகளை தரைமட்டமாக்குவதையும் முழுவதுமாக ஆதரித்து வந்துள்ளது.

மீண்டுமொருமுறை அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் சூறையாடும் நோக்கங்களை நியாயப்படுத்த மனிதாபிமான துருப்புச்சீட்டை வைத்து விளையாடி வருகிறது. ஈராக்கிய யாஜிதி, கிறிஸ்துவ மற்றும் ஏனைய சிறுபான்மையினரின் கதியைக் குறித்த ஒபாமாவின் போலியான கவலைக்காட்டும் வேலையெல்லாம், ISIS போராளிகள் குழுவை எதிர்க்க கடந்த இரண்டு மாதங்களாக வரையப்பட்ட இராணுவ திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு காட்டப்படும் ஒரு சௌகரியமான சாக்குபோக்கு என்பதற்கு மேலாக வேறொன்றுமில்லை.

அதன் இஸ்லாமிய படைகள் ஜூனில் கைப்பற்றிய வடக்கத்திய நகரான மோசூலின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில், ISISஇன் புதிய தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக அமெரிக்கா தலையீடு செய்துள்ளது. கடந்த வாரத்தில், ISISஉம் அதன் சுன்னி போராளிகள் குழுவும் ஒரு பிரதான மூலோபாய அணையையும் மற்றும் தொடர்ச்சியாக பல நகரங்களையும் கைப்பற்றியுள்ளன, அவை குர்திஷ் சுயாட்சி பிராந்தியத்தை மற்றும் பிராந்திய தலைநகரான எர்பிலைத் தாக்கக் கூடிய தூரத்திற்கு அவர்களைக் கொண்டு வந்திருக்கிறது.

குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் குழுவின் எதிர்ப்பும் பொறிந்து போனதால், வாஷிங்டனிலும் அத்தோடு எர்பில் மற்றும் பாக்தாத்திலும் அது ஓரளவிற்கு அதிர்ச்சியை உண்டாக்கியது. ஈராக்கிற்குள் அதன் நடவடிக்கைகளுக்கான தளமாக வாஷிங்டன் நீண்டகாலமாக குர்திஷ் பிராந்தியத்தைச் சார்ந்து இருந்துள்ளது. மோசூல் வீழ்ச்சியைத் தொடர்ந்து, ஒபாமா நூற்றுக்கும் மேலான அமெரிக்க சிறப்பு படைகள் மற்றும் இதர இராணுவ சிப்பாய்களை ஈராக்கிற்குள் இறக்க உத்தரவிட்டதோடு, பாக்தாத் மற்றும் எர்பிலில் கூட்டு நடவடிக்கை மையங்களையும் ஸ்தாபித்தார். விமான தாக்குதல்களுக்கு ஒப்புதல் வழங்குவதற்கான இரண்டாவது நியாயப்பாடாக ஒபாமா, எர்பிலில் உள்ள அமெரிக்க இராஜாங்க மற்றும் இராணுவ அதிகாரிகளைப் பாதுகாப்பதற்காக என்பதையும் கையிலெடுத்தார்.

பெண்டகன் மறுத்துள்ள போதினும், வடக்கு ஈராக்கில் ஏற்கனவே அமெரிக்க விமான தாக்குதல்கள் நடந்து வருவதாக குர்திஷ் மற்றும் ஈராக்கிய அதிகாரிகள் அறிவித்தனர். குர்திஷ் இராணுவ செய்தி தொடர்பாளர் ஹோல்கார்ட் ஹெக்மாத் Agence France Presse க்கு கூறுகையில், வடக்கு ஈராக்கில் அமெரிக்க போர் விமானங்கள் இரண்டு இலக்குகளைத் தாக்கியதாக தெரிவித்தார். “F-16கள் முதலில் உளவுபார்ப்பதற்காக ஈராக்கிய வான் எல்லையில் நுழைந்தன, இப்போது அவை க்வெர் (Gwer) மற்றும் சின்ஜார் பிராந்தியத்தில் தாஷை (ISIS) இலக்கில் வைத்திருக்கின்றன," என்றார். அமெரிக்க போர் விமானங்கள் மோசூல் மற்றும் க்வெரை இணைக்கும் ஒரு முக்கிய பாலத்தைத் தகர்த்ததாக அவர் தெரிவித்தார், அந்த பாலம் குர்திஷ் பிராந்தியத்திற்குள் இருக்கும் பிரதான சோதனைச்சாவடியிலிருந்து வெறும் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருப்பதாகும்.

அமெரிக்க போர் விமானங்கள் க்வெர் மற்றும் மஹ்மொர் நகரங்களில் ISIS இலக்குகளைத் தாக்கியதாக குர்திஷ் தொலைக்காட்சிக்கு அதிகாரிகள் கூறியதாக ஒரு நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை குறிப்பிட்டது. அது பிரதம மந்திரி நௌரி அல்-மலிக்கிக்கு நெருக்கமான ஒரு உயர்மட்ட ஈராக்கிய அதிகாரியின் கூற்றையும் மேற்கோளிட்டு காட்டியது, அமெரிக்கா விமான தாக்குல்களைத் தொடங்குவது குறித்து நேற்று நள்ளிரவில் ஈராக்கிய அரசாங்கத்தோடு கலந்து ஆலோசித்திருந்ததாகவும், நடத்தலாம் என்ற பதிலை பெற்றதாகவும், பின்னர் குண்டுவீச்சைத் தொடங்கியதாகவும் அவர் தெரிவித்திருந்தார். பெண்டகன் அதன் மறுப்புரையில் தெரிவிக்கையில், துருக்கிய அல்லது ஈராக்கிய போர்விமானங்கள் அந்த தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என்று தெரிவித்தது.

அவரது அறிக்கையில் ஒபாமா, அமெரிக்கா அதன் கூட்டாளிகளிடமிருந்து ஒத்துழைப்பைக் கோரி வருவதாக குறிப்பிட்டார். யாஜிதிகளின் கதியைக் குறித்த பிரச்சார நடவடிக்கைகளில் பிரான்ஸ் ஏற்கனவே சேர்ந்துள்ளதோடு, ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு அவசர அமர்விற்கும் அழுத்தம் அளித்தது, அந்த அமர்வு ISISக்கு கண்டனம் வெளியிட்டதோடு, ஈராக்கிய அரசாங்கத்திற்காக சர்வதேச ஆதரவிற்கு அழைப்பு விடுத்தது. குர்திஷ் தலைவர் மஸ்சோத் பார்ஜானியோடு பேசிய பின்னர் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலாண்ட், மத சிறுபான்மையினரைப் படுகொலை செய்வது "ஒரு மிக கடுமையான குற்றமாகும்" என்று அறிவித்தார், மேலும் "இதை எதிர்ப்பதில் ஈடுபடும் சக்திகளுக்கு ஒத்துழைப்பைக் கொண்டு வர பிரான்ஸ் உடனிருப்பதாகவும் உறுதியளித்தார்."

ஈராக்கிய சிறுபான்மையினர் மீதான பிரச்சார இயக்கம், பெங்காசி மக்களுக்கு அச்சுறுத்தல் என்று பொய்யுரைக்கப்பட்டதன் மீது 2011இல் சர்வதேச ஊடகங்களில் நிலவிய சாயலையும், கூக்குரலையும் நினைவூட்டுகிறது. அது, கேர்னல் மௌம்மர் கடாபியை பதவியிலிருந்து இறக்குவதற்கான ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் பாகமாக, லிபியா மீது விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்ட பகுதியை நடைமுறைப்படுத்துவதற்கு போலிக்காரணமாக சேவை செய்தது. இப்போது இந்த மனிதநேயவாதம் என்ற கிழிந்துபோன பதாகை, குர்திஷ் சுயாட்சி பகுதியிலும் ஈராக்கிலும் இன்னும் பரந்த விதத்தில் முக்கிய ஏகாதிபத்திய நலன்களை முன்னெடுப்பதற்கு தேவையான இராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்த மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது.

ISIS என்பதே கடந்த இரண்டு தசாப்தங்களில் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய குற்றகரமான நடவடிக்கையின் ஒரு விளைபொருளாகும். ஈராக்கில் அதன் சட்டவிரோத படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்புக்கு அதிகரித்து வந்த எதிர்ப்பை முகங்கொடுத்திருந்த நிலையில், வாஷிங்டன் திட்டமிட்டு குறுங்குழுவாத ஷியைட்-சுன்னி பிளவுகளுக்கு எரியூட்டியது. இது ஈராக்கில் நேரடியாக அல் கொய்தாவின் கரங்களுக்குள் விளையாடப்பட்டு, ISISக்கு கைமாற்றப்பட்டது. அதன் போராளிகள் குழுக்கள் அண்டைநாடான சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்ற நோக்கம் கொண்ட, அமெரிக்க ஆதரவிலான ஆட்சி-மாற்ற நடவடிக்கையின் பாகமாக இருந்துள்ளது, அது அமெரிக்க கூட்டாளிகள், சவூதி அரேபியா மற்றும் வளைகுடா அரசுகளால் நிதியுதவி வழங்கப்பட்டு, ஆயுதமேந்த செய்யப்பட்டு வருகின்றன.

ஈராக்கிற்குள் ISISஇன் சூறையாடல்களை அமெரிக்கா கண்டிக்கும் அதேவேளையில், சிரியாவில் அசாத் ஆட்சிக்கு எதிரான ISISஇன் நடவடிக்கைகள் குறித்து மவுனமாக இருக்கிறது. அந்த ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் கலிபாவை (caliphate) ஸ்தாபிக்க முனையும் இஸ்லாமிய தீவிரவாதிகளோ அதுபோன்ற எந்தவொரு வேறுபாடும் பார்ப்பதில்லை. ஈராக்கின் குர்திஷ் பிராந்தியங்களை நோக்கிய அவர்களின் இராணுவ தாக்குதல்கள், சிரியாவில் பெரிதும் குர்திஷ் நகரான யேன் அல்-அரபைக் கடந்த மாதம் கைப்பற்றியதிலிருந்து தொடங்கிய ஒரு முயற்சியோடு பொருந்தியுள்ளது.

மூன்றாவது முறையாக பிரதம மந்திரியாகும் திட்டத்தை மலிக்கி கைவிட நிர்பந்திக்கும் ஒரு முயற்சியில், ஒபாமா நிர்வாகம், இதுவரையில், ISISக்கு எதிராக ஈராக்கிய அரசாங்கத்திற்கு இராணுவ ஆதரவை வழங்குவதைத் தள்ளிப்போட்டு வந்தது. அமெரிக்காவும் சவூதி அரேபியா போன்ற அதன் கூட்டாளிகளும் மலிக்கியை ஈரானுக்கு மிக நெருக்கமாக அணிசேர்ந்தவராக கருதுவதோடு, அந்நாட்டின் சுன்னி மக்களை அன்னியப்படுத்தி வைத்ததற்காக அவரைக் குற்றஞ்சாட்டுகின்றன. விமான தாக்குதல்களுக்கு ஒபாமா வழங்கிய ஒப்புதல், வடக்கு குர்திஷ் பகுதிக்கு ISISஇன் அச்சுறுத்தலோடு மட்டும் பொருந்தி இருக்கவில்லை, மாறாக பிரதம மந்திரியை மாற்றுவதற்கான இறுதிக்கெடுவைப் பூசிமொழுகுவதோடும் பொருந்தியுள்ளது.

ஈராக்கில் ஒரு புதிய விமான போரைத் தொடங்கும் அதேவேளையில், 2003 மற்றும் 2011க்கு இடையே ஈராக் மீதான அமெரிக்க தலைமையிலான காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பால், சிறிய பகுதியில் அல்ல, அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் தோற்றுவிக்கப்பட்ட பரந்த யுத்த-எதிர்ப்பு உணர்வுகள் குறித்தும் ஒபாமா துல்லியமாக நனவுபூர்வமாக இருக்கிறார். “மற்றொரு ஈராக்கிய சண்டைக்குள் அமெரிக்கா இழுக்கப்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன்," என்று அவர் நேற்றிரவு அறிவித்தார். எவ்வாறிருந்த போதினும், ஈராக் மற்றும் மத்திய கிழக்கில் ஒரு மேலாதிக்க இடத்தைத் தக்க வைப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீர்மானகரமான நிலைப்பாடு அதன் சொந்த தர்க்கத்தைக் கொண்டிருக்கிறது—அதாவது, ஈராக்கிற்குள் நூற்றுக் கணக்கான அமெரிக்க இராணுவ ஆலோசகர்களை அனுப்பியதோடு, இப்போது அமெரிக்க விமான சக்தியைக் கட்டவிழ்த்துவிட்டு, ஈராக் மற்றும் சிரியா மட்டும் சம்பந்தப்படாமல் ஏனைய பிராந்திய சக்திகளும் இழுக்கப்படும் ஒரு தீவிரமடையும் மோதலில் அமெரிக்கா ஏற்கனவே சிக்கி கொண்டுள்ளது.