சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : நினைவகம்

Guy Charron, 1962-2014: Canadian fighter for Trotskyism

கீ சரோன்,1962-2014 : கனேடிய ட்ரொஸ்கிச போராளி

By Keith Jones
2 August 2014

Use this version to printSend feedback


கீ சரோன்

உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI), சோசலிச சமத்துவக் கட்சியின் (கனடா) தலைவரும் உலக சோசலிச வலைத் தள வேலைகளில் நாளாந்த ஒத்துழைப்பாளரும் ஆன கீ சரோனின் மரணத்தை ஆழ்ந்த துயரத்துடன் அறிவிக்கின்றது.

கீ தமது குடும்பத்துடன் விடுமூறையைக் கழிக்கச்சென்ற வடக்கு கரோலினா பகுதியில் அத்லாந்திக் பெருங்கடலில், ஜூலை 28, திங்கள் அன்று மூழ்கினார். அவருக்கு அப்போது 51 வயது மட்டுமே ஆகியிருந்தது.

கீயின் மரணமானது, அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும், தனது வாழ்வையே தொழிலாள வர்க்கத்தின் சோசலிச விடுதலைக்காக அர்ப்பணித்ததன் காரணமாக கட்சிக்கும் ஒரு பேரதிர்ச்சியாகும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, கனேடிய சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் முன்னோடியான கனேடிய வேர்க்கர்ஸ் லீக் ஆகியவற்றின் வேலைகளில் அவரது பங்களிப்புக்கள் ஏறத்தாழ 30 ஆண்டுகள் கால அளவினதாகும்.

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டை விரித்துரைப்பது மற்றும் ஏனைய தலைமைத்துவ கலந்துரையாடல்கள் முதல் அருகாமையில் உள்ள மாணவர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு துண்டறிக்கைகளை விநியோகித்தல் வரையிலான, கட்சியின் பன்முக வேலைகளிலும் கீ சுறுசுறுப்பாக விளங்கினார். ஆரம்பத்தில் கீ லூபுளோங் என்பதன் கீழும் அதன் பின்னர் அவரது சொந்தப் பெயரின் கீழும் சுமார் 70 கட்டுரைகளை உலக சோசலிச வலைத் தளத்திற்கு எழுதி இருந்தார். “கியூபெக் தேர்தல்கள்: தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” என தலைப்பிடப்பட்ட அவர் எழுதிய கடைசிக் கட்டுரை, இந்த ஆண்டு மார்ச் 19 அன்று பிரெஞ்சு மொழியிலும் மார்ச் 27 அன்று ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது.

இவற்றில் பெரும்பாலானவை, கனேடிய ஏகாதிபத்தியத்தின் மற்றும் ஆப்கானிஸ்தான், ஹைத்தி மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அதன் ஆயுதப்படைகளின் சூறையாடும் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தல், முக்கியமான தொழிலாள வர்க்கப் போராட்டங்களைப் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவம் உள்ளடங்கலான கியூபெக் அரசியல் செல்வந்தத் தட்டின் தொடர்ந்த வலதுசாரி மாற்றத்தை ஆய்வு செய்தல் உள்ளடங்கலான முக்கியத்துவம் வாய்ந்த கட்டுரைகளாக இருந்தன.

ஆயினும், கீயின்  கட்டுரைகள் உலக சோசலிச வலைத் தளத்தின் வேலைக்கு அவரின் பங்களிப்புக்கள் பற்றிய உண்மை அளவீடுகளை அரிதாகவே கொண்டிருக்கும். 2005ல் நாள்தோறும் கட்டுரைகளை வெளியிடத் தொடங்கிய உலக சோசலிச வலைத் தளத்தின் பிரெஞ்சு மொழி பக்கத்தில் அவர் ஒரு முன்னோடிப் பாத்திரத்தை ஆற்றினார். கீ எண்ணற்ற கட்டுரைகளை மொழிபெயர்க்கவோ அல்லது திருத்தவோ செய்திருக்கிறார். அதேபோல் வலைத் தளப் பகுதியை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்குமான நாளாந்த தொழில்நுட்ப வேலைகளிலும் தன்னையே ஈடுபடுத்தியிருந்தார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் பிரெஞ்சுப் பக்கத்தை மார்க்சிச ஆய்வின் நாளாந்த மூல வளமாக அபிவிருத்தி செய்வதில் கடந்த பத்தாண்டு காலத்தில் கீயுடன் உடனுழைத்த அந்துவான் லூரூஜ்ரெல் தனது இரங்கற் செய்தியில் கூறுவதாவது: “எமது உடன் ஒத்துழைப்பின் ஆரம்ப காலகட்டத்தில் நாங்கள் அடிக்கடி பேசுவோம், சில காலம் ஒவ்வொரு காலை வேளையிலும் .....  உலக புரட்சிகர சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் ஐரோப்பிய மற்றும்  வட அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தை ஒன்றிணைப்பதற்கான ஒரு பங்களிப்பாக, கீ இந்த வேலையை ஒரு இன்றியமையாத சர்வதேசிய உடன் ஒத்துழைப்பாக எண்ணி இருந்தார். அடிக்கடி, எமது கலந்துரையாடல்கள் நடைபெறுவது, கீ க்கு மிக அதிகாலையாக அமைந்திருக்கும், அவை  அரசியல் மற்றும் கலாச்சாரம் பற்றியதாக அபிவிருத்தி அடையும். இந்தவகையில், அவரால் ஈட்டப்பட்ட கலாச்சாரத்தை அறிந்தபோது, நான் அவரைப் பாராட்டியதோடு மட்டுமல்லாமல், மனித கலாச்சாரத்தின் அனைத்து அம்சங்களிலும் – அறிவியல்கள், கலைகள், மெய்யியல் மற்றும் வரலாறு பற்றியதில் அவரது ஆர்வத்தையும் அக்கறையையும் கூட அறிய வந்தேன், பாராட்டினேன்.”

கீ, கனடாவின் தலைநகரத்திலிருந்து நேர் குறுக்காக, ஒட்டாவா நதியின் கியூபெக் பகுதியில் அமைந்துள்ள, ஏழைத் தொழிலாள வர்க்கத்தை பெரும்பான்மையாகப் பெற்றிருந்த நகரமான ஹல் கற்றினோ (Hull Gatineau) ல், 1962ல் செப்டம்பர் 8 அன்று பிறந்தார்.

கீ ஒரு சுமாரான வாழ்க்கைத் தர வசதிகொண்ட குடும்ப அமைப்பில் வளர்ந்தார். அவரது தாத்தா படிப்பறிவு அற்றவர், இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய குறிப்பிட்ட காலப்பகுதி வரைக்கும் வறுமையுற்ற பிரெஞ்சு-கனேடிய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் முழுதும் பொதுவாக இருந்த ஒரு சமூக சூழ்நிலை ஆகும். அவரது வீட்டில் நிதி நிலைமையானது, குறிப்பாக அவர் பத்துவயதாக இருக்கும்பொழுது அவரது பெற்றோர்கள் பிரிந்து வாழத் தொடங்கிய பின்னர் இன்னும் மோசமானது.

அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உள்ளதைப் போல, கனடாவிலும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ எதிர்த்தாக்குதல் என்றும் அதிகரித்து வந்த நிலையாக, பண்பிடப்பட்ட காலப்பகுதியான, 1980களின்  முதல் பாதியில் கீ மேலும் மேலும் அரசியல் ரீதியாக விழிப்புணர்வும் செயலூக்கம் கொண்டவராகவும் ஆனார்.

கியூபெக்கில், René Lévesque –ன் கியூபெக் கட்சி (PQ) அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கொடூரமாகத் திரும்பியது, சமூகச் செலவினங்களை வெட்டியது, ஒரு அரசாங்க ஆணையால் பொதுத்துறைத் தொழிலாளர்கள் மீது சலுகை மிக்க தனியார் ஒப்பந்தங்களை திணித்தது, சம்பள வெட்டுக்கு எதிராக ஆசிரியர்கள் பெருந்திரளாய் கிளர்ந்தெழுந்தபொழுது அவர்களைப் பணி நீக்கம் செய்யப் போவதாக அச்சுறுத்தியது.

1972ல் தன்னியல்பாய் எழுந்த பொது வேலைநிறுத்தம் உள்ளடங்கலாக, 1970களின் முதற்பாதியில் கியூபெக்கானது, வட அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் மிக வெடிப்புக்குரிய  போராட்டங்களின் ஒரு பகுதியாக இருந்தது. ஸ்ராலினிஸ்டுகள் மற்றும் பப்லோவாதிகளின் உதவியுடன், தொழிற்சங்க அதிகாரத்துவமானது, இப்போர்க்குணம் மிக்க இயக்கத்தை பெருமுதலாளித்துவ கியூபெக் கட்சி உடனும் கியூபெக் தேசியவாதத்துடனும் பிணைத்துப் போட்டதன் மூலம் அதனை திராணியற்றதாக்கிவிட்டது.

வேர்க்கர்ஸ் லீக் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின்பாலான கீயின் ஈர்ப்புக்கு மையமாக இருந்தது முதலாளித்துவத்தை தூக்கி வீசுவதற்கான போராட்டத்தில் உலகம் முழுவதிலுமுள்ள தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கிற்கான அவற்றின் இடைவிடாத போராட்டமாகும். கீ தனது ஆரம்ப இருபதுகளில் கியூபெக் தேசியவாதம் மற்றும் குட்டி முதலாளித்துவ தேசியவாத சூழலையும் அரசியல் ரீதியாக ஏற்க மறுத்தார். அவரது வாழ்வின் எஞ்சிய பகுதியில்,  தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்துவதற்கு  தேசியவாத வேண்டுகோள்களை பயன்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்கும் கடும் பகையாக விளங்கினார்.

பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தை கைவிட்டதை அனைத்துலகக் குழு அம்பலப்படுத்தி தோற்கடித்த வேளையில், 1985-86 ல் கீ, வேர்க்கர்ஸ் லீக்குடன் முதலில் தொடர்பு கொண்டிருந்தார். தான் வேர்க்கர்ஸ் லீக் உறுப்பினராக ஆவதற்கும் ட்ரொட்கிஸ்டாக ஆவதற்கும் தன்னை இறுதியாய் ஏற்க வைத்தது தொழிலாளர் புரட்சிக் கட்சி ட்ரொட்ஸ்கிசத்தைக் காட்டிக் கொடுத்தது எப்படி – 1973-85 என்பதை மொழிபெயர்த்தல் என கீ பின்னர் விளக்கி இருந்தார். 1986ல் வெளியிடப்பட்ட இந்த ஆவணமானது, தொழிலாளர் புரட்சிக் கட்சியின் தந்திரோபாய சந்தர்ப்பவாதம் மற்றும் நிரந்தரப் புரட்சியின் சர்வதேச சோசலிச மூலோபாயத்தைக் கைவிடுதல் பற்றிய விரிவான திறனாய்வுக் கட்டுரையை செய்திருந்தது.

1987 கனடா-அமெரிக்க சுதந்திர ஒப்பந்தத்திற்கு (FTA) பதிலடி கொடுக்கும் விதமாக, எல்லைப் புறத்தின் இரு பகுதியிலும் உள்ள ஆளும் செலவந்தத் தட்டிற்கு எதிராக அமெரிக்க மற்றும் கனேடிய தொழிலாளர்களை ஒன்றிணைப்பதற்கான அதன் போராட்டத்தில் வேர்க்கர்ஸ் லீக்கின் தீவிரப்படுத்துதலில், கீ ஒரு முக்கிய பங்கை வகித்திருந்தார். இதற்கு தொழிற் சங்கங்களுக்கும் தேசிய ஜனநாயக கட்சிக்கும் (NDP) எதிரான அரசியல் தாக்குதல்  தேவைப்பட்டது. இவை, அமெரிக்காவிலிருந்தான அதிகரித்த போட்டிக்கு உட்பட்டால் எங்கே தங்கள் இலாபங்கள் போய்விடுமோ என அஞ்சிய கனேடிய முதாளித்துவ வர்க்கத்தின் பலவீனமான பகுதிகளுடனும் லிபரல் கட்சியினுடனும் தங்களை அணிசேர்த்துக்கொண்டு, பேரினவாத  மற்றும் பிற்போக்கு பொருளாதார தேசியவாத அடிப்படையில் FTA ஒப்பந்தத்தை எதிர்த்தன.

இந்தவேளை, கீ அவரது அப்போதைய துணவியான மரிஸ் உடன், தங்களின் இரட்டைச் சிறுவர்களான சிமோன் மற்றும் டேவிட்டை வயது வரும் வரை பேணுவதற்கான பொறுப்பைப் பகிர்ந்து கொண்டார். இருப்பினும், அடுத்து வர இருந்த தசாப்தங்களில் அரசியல் பலத்தின் பிரதான அறிவுஜீவித குவிமையமாகவும் வளமாகவும் தொடர்ந்து விளங்கிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றைப் படித்தறிவதில் ஆரம்பித்து, அவர் தன்னையே அரசியல் வேலைக்குள் மூழ்கடித்துக் கொண்டார்.

மொண்ட்ரீலின் மிகப்பெரிய மருத்துவமனைகளுள் ஒன்றான ஹோட்டல் டியு (Hotel-Dieu) வில் ஒரு மருத்துவமனைப் பணியாளாகப் பணி ஆற்றிக் கொண்டு, கீ பொதுத்துறைத் தொழிலாளர்களின் மத்தியில் கட்சியின் தலையீடுகளை வழிநடத்தினார். 1988-89 இல், வரிசைக்கிரமமான வேலை எதிர்ப்பு சட்டங்களுடன் தன்னையே ஆயுதபாணி ஆக்கிக் கொண்டிருந்த மாகாண அரசாங்கத்துடனும் துல்லியமாக, அரசாங்கத்தை சவால் செய்வதற்கு நோக்கங் கொண்டிராததன் காரணமாக இச்சட்டங்களைப்பற்றி வாய்திறவாத தொழிற்சங்க தலைமையுடனும் வர இருந்த ஒரு மோதலுக்காக தொழிலாளர்களை தயார்ப்படுத்துவதற்கு அவர் போராடினார். இறுதியில், “சமூக அமைதி” என்ற பெயரில், தொழிற்சங்கங்கள் பரந்த வேலைநிறுத்தத்தை தகர்த்தெறிந்தன.

சோவியத் ஒன்றியத்தின் பொறிவும் 1990களில் அது தொடர்பான நிகழ்வுகளும், 1917 ரஷ்யப் புரட்சி பற்றிய மற்றும் தொழிலாள வர்க்கத்தினுள்ளான போராட்டத்தில் சோசலிச நனவின் பாத்திரம் பற்றிய ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் புரிதலை ஆழப்படுத்துவதை தேவையாய் கொண்டிருந்தது. அனைத்துலக குழுவின் எழுத்துக்களைப் பற்றிய தீவிர விவாதம் மற்றும் கவனமான ஆய்வானது, (1992ல் அனைத்துலக குழுவின் 12வது பிளீனத்திற்கு டேவிட் நோர்த் வைத்த அறிக்கை, “சோவியத் ஒன்றியத்தின் முடிவுக்குப் பின்னர்: மார்க்சிசத்திற்கான போராட்டமும் நான்காம் அகிலத்தின பணிகளும்“ உள்பட) புரட்சிகர தலைமை நெருக்கடியை தீர்ப்பதற்கான போராட்டத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்குள்ளே சோசலிச கலாச்சாரத்தை புதுப்பிப்பதற்கான முயற்சிக்கும் இடையிலான பிணைப்பு பற்றி கீக்கு தெளிவூட்டியது. கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வேலகளுக்கு கீ தன்னையே முழுமனதுடன் ஆட்படுத்திக் கொண்டார் மற்றும் அதன் பின்னர் மேலும் அதிகமான முக்கிய பங்கை ஆற்றினார்.

1990களின் பொழுது கீ பள்ளிக்கூடத்திற்குத் திரும்பி வந்து வேதியியலை முதலில் படித்தார், பின்னர் இயற்பியல் படிப்பதற்கான பேரார்வத்தை வளர்த்துக் கொண்டார். அவர் மொண்ட்ரீயால் பல்கலைக் கழகத்தில் மருத்துவ பிம்பம் பற்றிய ஆய்வில் ஈடுபடத் தொடங்கினார். அவர் இறக்கும் பொழுதான காலப் பகுதியில், மொண்ட்ரீயாலின் இரண்டு பிரதான பயிற்றுநர் மருத்துவமனகளுள் ஒன்றினது ரேடிய கதிர்வீச்சு - புற்றுநோய்க் கட்டிகள் ஆய்வு துறையில் அவர் மருத்துவ ஆய்வாளராக இருந்தார்.

மொட்ண்ரீயால் பல்கலைக் கழக மருத்துவ மையத்தில் (CHUM)  வேலை செய்து கொண்டிருந்தபோதே, கீ தொடர்ச்சியாக அறிவியல் மாநாடுகளிலும் ஆய்வு செயற்திட்டப் பணிகளிலும் பங்கேற்றார், மற்றும் எப்போதாவது அவர் சிறப்புத் தேர்ச்சிகொண்ட துறைகளில் பாடப் பயிற்சிகளையும் நடத்தினார்.

கீயினது வேலை மனோரீதியாக பெருமுயற்சி தேவைப்படும் உயர் அழுத்தம் கொண்ட பணியாக இருந்தது. புற்றுநோய் கண்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய பொருத்தமான கதிர்வீச்சின் அளவைத் தீர்மானிப்பது உள்பட புற்றுநோய்க் கட்டிகளை மருத்துவ – பிம்பமாய்க் காட்டுவதில் பயன்படுத்தப்படும் உயர் தொழில்நுட்பம் கொண்ட எந்திரங்களை பராமரித்தல் ஆகியன அவரது பணிகளாக இருந்தன. இதில் ஏற்படும் பிழைகள் மருத்துவப் பராமரிப்பில் உள்ளவர்களுக்கு கடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.

அவர் அடிக்கடி பத்து, பன்னிரண்டு மணிநேர வேலை நேரத்திலும் கூட இருந்தார். இவை அனைத்தும் இருந்தபோதிலும், சோசலிச சமத்துவக் கட்சியின் (கனடா) தலைமைத்துவத்திற்கான கலந்துரையாடல் உள்பட, கட்சியின் அனைத்து அரசியல் வேலைகளுக்கும் தன்னைத் தயாராக வைத்துக் கொள்ளப் போராடினார்.

சிறந்த செயல்நோக்கங்கள் இருந்த போதிலும்,  இது ஒன்றில் அவரது பணிகளை முடிக்க இயலாமையில் விடக்கூடும் அல்லது அவர் கடின உழைப்பில் ஈடுபடுத்திக்கொள்வதை மேலும் கடினமாக்கி விடும் என்பதன் காரணமாக, அரசியல் பணிகளுக்காக அவர் ஒதுக்கும் ஆற்றல் மற்றும் நேரம் பற்றி கீ மிகை மதிப்பீடு செய்யவேண்டாம், என்று தோழர்கள் சிலவேளைகளில் அவருக்கு நினைவூட்டுமளவுக்கு அவரது ஆர்வம் அத்தகையதாக இருந்தது.

கீ  கடும் நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு மகிழ்ச்சியான மனிதர். மேலே குறிப்பிட்டவாறு, வரலாறு, அறிவியல், கலை மற்றும் மெய்யியல் உள்ளடங்கலான ஒரு பெரிய அணிவரிசையிலான பொருள்கள் பற்றி பரந்த அறிவைக் கொண்டிருந்தார். அவர் அந்த அறிவைப் பகிர்ந்துகொளவதில் என்றும் ஆவல் கொண்டிருந்ததுடன், எப்போதும் அறிவார்ந்த ஆர்வம் உடையவராகவும் இருந்தார்.

கீ அவரது வாழ்வை நடத்த தேர்ந்தெடுத்த விதம் குறித்து பெருமிதம் கொண்டிருந்தார். அவர் சுய தியாகம் செய்யக் கூடியவராக இருந்தார், ஆனால் அவரது நோக்கில் தியாகி என்பதன் சுவடு கூட இருந்ததில்லை. முதலாளித்துவ நெருக்கடி மற்றும் புரட்சிகரத் தலைமை பற்றிய தீர்மானகரமான முக்கியத்துவம் பற்றிய மார்க்சிச புரிதலால் தத்துவார்த்த ரீதியாகவும்  அரசியல் ரீதியாகவும் ஏற்பட்ட தாக்கத்திற்கு, அவர் தன்னையே வழங்கத் தயாராக இருந்தமை, இயல்பிலேயே பரந்தமனப்பான்மையை அவர் பெற்றிருந்ததாகும்.

பல ஆண்டுகளாக கீயுடன் நெருக்கமாக பணியாற்றியவன் என்ற வகையிலும்  அவரைத் தோழர் என்றும் நெருங்கிய நண்பர் என்றும் அழைத்து பேறுபெற்றவன் என்ற வகையிலும், அவரது வாழ்வின் கடைசி வருடங்கள்தான் அவர் பெற்ற சந்தோஷங்களிலேயே மிகவும் சந்தோஷமானவை என்று நான் துணிந்து கூறுவேன். ஈடுபாடும் கவனமும் தேவைப்படுகின்றதாக இருக்கும் அதேவேளை, அவரது மருத்துவ ஆய்வாளர் என்ற பணியானது, அவருக்கு சுமாரான அளவே சமூக மற்றும் அறிவார்ந்த திருப்தியைக் கொடுத்தது.

 
கீ அவரது மகன் டேவிட் மற்றும் மூன்று பேரக்குழந்தைகள். இதுவே கடைசியாக எடுக்கப்பட்ட கீயின் படமாகும்.

நான்காண்டுகளுக்கும் சற்றே முன்னர், அவர் புதிய துணையை விவியானை கண்டுகொண்டார், அவரும் ஒரு மருத்துவரே. கீயின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கையில், அவர் வலியுறுத்திக் கூறியதாவது: சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் நான்காம் அகிலத்தின் அனத்துலக குழுவின்பால் அவர் கொண்ட உணர்வுபூர்வமான அர்ப்பணிப்பானது, அவரது குடும்பத்தை – சிறப்பாக அவரது இரு மகன்கள் மற்றும் நான்கு  பேரக்குழந்தைகளை – நேசிக்கும் அவரது அன்புடன் மற்றும் அவர்கள் தேவைகள் இல்லாத, ஒடுக்குமுறை இல்லாத சிறந்த உலகில் வாழ வேண்டும் என்ற அவரின் உறுதிப்பாட்டுடன் பிணைந்ததாக இருந்தது.

கடைசியாகக் குறிப்பிடினும் முக்கியத்துவம் குறையாதது, ஸ்ராலினிசம் விட்டுச்சென்றதை வென்று கடந்து வருவதிலும் தொழிலாள வர்க்கத்திற்கு சோசலிச நனவை ஊட்டுவதிலும் சம்பந்தப்பட்டுள்ள பெரும் சவால்களை உணருகின்ற அதேவேளை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் உலக சோசலிச வலைத் தளம் இவற்றின் செல்வாக்கு விரிவடைதலால் கீ மகிழ்வும் மனநிறைவு கொண்டவராகவும் இருந்தார் என்பதாகும்.

2012ல் ஆறுமாதகாலம் நீடித்த கியூபெக் மாணவர் வேலைநிறுத்தத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் தலையீட்டில் கீ பெரும்பங்கை ஆற்றினார், பெருமுதலாளிகளின் கெடுபிடி நடவடிக்கை பட்டியலைத் தோற்கடிப்பதற்கு சமூக அதிகாரத்தைக் கொண்ட ஒரே சக்தி தொழிலாள வர்க்கம் என்ற வகையில், அதன்பால் மாணவர்களை திருப்புவதற்கு அவர்களுடன் விவாதிப்பதற்கான அறிக்கைகளை எழுதுவதில், தயாரிப்பதில் விநியோகம் செய்வதில் உதவியாக இருந்தார். சோசலிச சமத்துவக் கட்சி எச்சரித்தவாறு, அத்தகைய சோசலிச முன்னோக்கு இல்லாத இடத்து, தொழிற்சங்கங்கள் மாணவர் அமைப்புக்களுடன் சேர்ந்து, அவற்றின் அரசியல் துணை உறுப்புக்களாய் செயற்பட்டு, மாணவர் போராட்டத்தை தனிமைப்படுத்தியதோடு, காரெஸ்ட் லிபரல் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட பரந்த எதிர்ப்பை வலதுசாரி கியூபெக் கட்சி அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கு பயன்படுத்த தள்ளியது.

வரலாற்று சடவாதத்தின் அடிப்படைகளை விளக்குவதாக இருந்தாலும் அல்லது பப்லோவாத சந்தர்ப்பவாதத்திற்கு எதிரான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் முக்கியத்துவம் பற்றியதாக இருந்தாலும், வரலாற்று தத்துவார்த்த விஷயங்கள் ஊடாக பொறுமையாக வேலை செய்வதற்கு நேரம் எடுத்துக்கொண்டு, இளம் உறுப்பினர்களைக் கல்வியூட்டுவதில் கீ மிக ஆர்வம் காட்டினார்.

அவரது வாழ்க்கையின் மிக கடைசி  வாரங்களில், “ ஏகாதிபத்திய வன்முறை மற்றும் இராணுவ வாதத்தின் எழுச்சிக்கு எதிராக புரட்சிகர அமைப்பின் சர்வதேச மையமாக” நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை ஆக்குவதற்கான, அனைத்துலகக் குழுவின் அண்மைய பிளீனத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதில் நோக்கங்கொண்ட கலந்துரையாடல்களில் கீ  ஈடுபட்டிருந்தார். கனேடிய சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் தத்துவார்த்த அடித்தளங்களைப் பலப்படுத்துவது தொடர்பான முன்முயற்சிகள் மற்றும் அதன் வேலைகளை விரைவுபடுத்தல் பற்றியதில் கீ மிக ஆர்வமுடையவராக விளங்கினார்.

கீயின் வாழ்க்கை துன்பகரமாக குறுகிப் போனமை – அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் அவரது வாழ்வின் மையமாக அவர் ஏற்படுத்தி இருந்த புரட்சிகர கட்சிக்கும் ஒரு பேரிழப்பாகும். தனிப்பட்ட ரீதியிலும் அரசியல் ரீதியிலும் அவர் இன்னும் நிறைய வழங்குவதற்கு இருந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அந்த வகையில், அவர் ஒரு முழுமையான வாழ்க்கையை கொண்டிருந்தார். அது சர்வதேச தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான அரசியல் கருவியை உருவாக்கிக்கொள்ள நான்காம் அகிலத்தின் அனத்துலகக் குழு மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேலைகளின் மீது அதன் தடத்தை விட்டுச்சென்றுள்ளது, ஆகையால் அதன் மரபுரிமையானது நீடித்திருக்க வல்லது.