சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan unions call off health workers’ strike

இலங்கை தொழிற்சங்கங்கள் சுகாதார ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை முடித்துக்கொண்டன

By our correspondents
22 August 2014

Use this version to printSend feedback

இலங்கையில் அரச சுகாதார தொழிற்சங்கங்கள், உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் போலி வாக்குறுதிகளின் அடிப்படையில் வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தை முடித்துக்கொண்டன.

27 தொழிற்சங்கங்களின் கூட்டணியான சுகாதார சேவை தொழிற்சங்க கூட்டு கமிட்டி (JCHSTU), சம்பள உயர்வு, முந்தைய சம்பள நிலுவை, வாரத்திற்கு இரண்டு நாள் இரவுநேர கடமை மற்றும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரமாக்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து முதலில் இரண்டு நாள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.


சுகாதாரத்துறைத் தொழிலாளர்கள் அணிவகுப்பில் ஒரு பகுதி

இராஜபக்ஷவிடம் ஒரு மனுவைக் கையளிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரை ஊர்வலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்க்கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ) கட்டுப்பாட்டிலான அனைத்து இலங்கை சுகாதார சேவை சங்கமும் (ACHSU), ஒரு தனியான வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

ஆஸ்பத்திரி உதவியாளர்கள், ஆய்வக உதவியாளர்கள், வார்டு குமாஸ்தாக்கள், தொலைபேசி இயக்குனர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உட்பட சம்பந்தப்பட்ட தரங்களில் உள்ள 47,000 சுகாதார தொழிலாளர்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர், புதன் கிழமையன்று வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். 1,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த ஊர்வலத்தில் பங்கேற்க கொழும்புக்கு வந்திருந்தனர். இதன் விளைவாக நாடு பெரும்பாலான மருத்துவமனைகள் முடக்கப்பட்டன.

அரசாங்கம் வேலை நிறுத்தத்தை குழப்ப மருத்துவமனைகளில் கருங்காலிகளாக பாதுகாப்பு படைகளை பயன்படுத்தியது. இது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான உள்நாட்டு யுத்தத்தின்போது கட்டியெழுப்பப்பட்ட இராணுவத்தை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மேலும் பயன்படுத்துவதாகும். தொழிற்சங்க தலைவர்கள் இந்த படை நடவடிக்கையை எதிர்க்கவில்லை.

அரசாங்கத்தில் அமைச்சராக இருக்கும் வாசுதேவ நாணயக்கார, வேலை நிறுத்தம் செய்ய வேண்டாமென தனது இலங்கை ஜனரஜ சுகாதார தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு எச்சரித்தார். இதன் விளைவாக டிக்கோயா, பொகவந்தலாவை, மஸ்கெலியா, கொட்டகலை மற்றும் வட்டவலை மருத்துவமனைகளில் சேவையாற்றும் தொழிலாளர்கள், பதிலடிக்கு பயந்து வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளவில்லை.

புதன்கிழமை நண்பகல், JCHSTU தலைவர்கள், அன்று மாலை இராஜபக்ஷ ஒரு பேச்சுவார்த்தையை வழங்கியுள்ளதாக அறிவித்து திடீரென ஊர்வலத்தை நிறுத்த முடிவு செய்தனர். பெரும்பாலான தொழிலாளர்கள் இந்த முடிவை எதிர்த்து திட்டமிட்டபடி நடக்க தொழிற்சங்க தலைவர்களை கட்டாயப்படுத்திய போதிலும், அது நிராகரிக்கப்பட்டுவிட்டது.

இலங்கை சுதந்திர சுகாதார தொழிலாளர் சங்கத்தின் (SLFHWU) பொதுச் செயலாளர் டபிள்யூ ரோய் டி சில்வா, தொழிலாளர்களை எச்சரித்தார்: "நாங்கள் ஊர்வலத்தை தொடர்ந்தால், ஜனாதிபதி உடனான கலந்துரையாடலை பெறமுடியாமல் போகும். நாம் நம்முடைய கோரிக்கைகளை அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா? அரச தலைவர் எங்களுக்கு ஒரு பேச்சுவார்த்தையை வழங்கியுள்ளார், நாம் ஒரு ஏற்கத்தக்க தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.” இந்த தொழிற்சங்கம் இராஜபக்ஷவின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி (ஸ்ரீலசுக) சார்ந்ததாகும்.

இராஜபக்ஷ மாலை கலந்துரையாடலில், அரசாங்கத்திடம் நிதி பற்றாக்குறை உள்ளதாக கூறி, எழுப்பியுள்ள பிரச்சினைகளை "தீர்க்க" மூன்று மாத அவகாசம் கோரினார். JCHSTU தலைவர்கள் இந்த "வாக்குறுதியை" ஏற்றுக்கொண்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வெளியில் 38 நாள் தொடர்ந்த சத்தியாகிரகம் உட்பட எதிர்ப்பு பிரச்சாரத்தை கைவிட்டனர். "நாங்கள் ஜனாதிபதியின் வாக்குறுதியை நம்புகிறோம் மற்றும் அனைத்து தொழிற்சங்க நடவடிக்கைகளையும் முடித்துக்கொள்ள ஒப்புக்கொண்டோம்" என JCHSTU அழைப்பாளர் சோமரட்ன WSWS நிருபர்களிடம் கூறினார்.

இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், வேலைநிறுத்தங்களை தணிக்க கடந்த காலத்தில் எண்ணற்ற அத்தகைய வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். பின்னர் அவை குப்பை தொட்டியில் வீசப்பட்டுள்ளன. புதிய வாக்குறுதிகள் வேறு வகையில் இருக்கப் போவதில்லை. முடிவு தொடர்பாக தொழிலாளர்கள் மத்தியில் எந்தளவு அதிருப்தியும் கோபமும் இருந்தது என்றால், இராஜபக்ஷவுடனான பேச்சுவார்த்தையின் முடிவை அறிவிக்க நேற்று திட்டமிடப்பட்டிருந்த கூட்டத்தை எவரும் திரும்பி பார்க்கவில்லை.

JCHSTU இருந்து தன்னை தூர ஒதுக்கிக்கொள்ளும் ஒரு முயற்சியாக, ஜேவிபீயின் அஇசுஊச தலைவர் சமந்த கோரலேயாராச்சி, தனது தொழிற்சங்கம் வியாழக்கிழமையும் வேலைநிறுத்தத்தை தொடரும், பின்னர் மேலதிக நடவடிக்கைகளை முடிவெடுக்கும் என ஊடகங்களுக்கு தெரிவித்தார். தனது தொழிற்சங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்று அவர் முறைப்பாடு செய்தார்.

தொழிற்சங்க பிரிவுகளுக்கிடையில் உண்மையான வேறுபாடுகள் கிடையாது. அது சுகாதார தொழிலாளர்களின் எந்தவொரு சுயாதீனமான அரசியல் போராட்டத்தையும் ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட வேலையை பங்கிட்டுக்கொள்வது மட்டுமே. அரசாங்க சார்பு தொழிற்சங்கங்கள், இராஜபக்ஷவிடம் இருந்து போலி வாக்குறுதிகளை பெறும் அதே வேளை, அஇசுஊச இந்த வியாபாரத்திற்கு தொழிலாளர்கள் மத்தியில் வளரும் எதிர்ப்பை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சியில், மேலும் போர்க்குணம் மிக்க தோரணைகளை காட்டுகின்றது.

புதன்கிழமை அன்று, சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) உறுப்பினர்கள் கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் சுகாதார தொழிலாளர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் "சுகாதார தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம்" என்ற WSWS அறிக்கையின் சிங்கள பிரதிகளை விநியோகித்தனர்.


சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினர் சுகாதாரத்துறை தொழிலாளர்களுடன் பேசுகிறார்

ஒரு ஆய்வக உதவியாளரான அசங்க, WSWSக்கு கூறியதாவது: "எங்களில் பலருக்கு போராட்டத்தை நிறுத்த எடுத்த முடிவில் உடன்பாடு இல்லை. நாங்கள் அரசாங்கத்தின் வாக்குறுதி ஏற்றுக்கொண்டால், நாம் ஏன் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் இருந்திருக்க வேண்டும்? எங்களில் யாரும் அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பவில்லை. இப்போது அதனிடம் பணம் இல்லை என்றால், எப்படி மூன்று மாதங்களில் பணத்தை பெற முடியும்? எங்கள் கோரிக்கைகள் கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடர வேண்டும்" என்றார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒரு சமையலறை தொழிலாளி கூறியதாவது: "எனது அடிப்படை மாத சம்பளம் 12,600 ரூபாய்கள் [$US97] ஆகும். மேலதிக நேர வேலையுடன், 20,000 ரூபா சம்பளம் கிடைக்கும். ஆனால் வெட்டுக்கள் போக, மாதம் ஒன்றுக்கு சுமார் 14,000 ரூபாய் மட்டுமே வீட்டுக்கு கொண்டு போக முடியும். நான் திருமணம் முடித்தவன். என் மனைவி கூட வேலை செய்கிறாள். ஆனால் உயரும் வாழ்க்கைச் செலவுடன் எங்களது செலவுகளை சமாளிக்க முடியாது."

டிக்கோயா உள்ள கிளங்கன் ஆஸ்பத்திரியில் ஒரு தொழிலாளி கூறுகையில், "நாங்கள் வேலை நிறுத்தம் செய்ய தயாராக உள்ளோம், ஆனால் எந்த தொழிற்சங்கத்திலும் எமக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் வேலைநிறுத்தம் செய்தால், எமது வேலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. யாரும் பொறுப்பேற்கமாட்டார்”, என்றார்.

"இந்த மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை. ஒரு ஓய்வு அறை இல்லை. பெண் தொழிலாளர்கள், ஆண் தொழிலாளர்கள் தங்கள் சீருடைகளை மாற்ற ஒரே அறையை பயன்படுத்துகின்றனர். தொழிற்சங்கங்கள் [செப்டம்பர் 20 அன்று] ஊவா மாகாண சபை தேர்தலை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க விரும்பின, ஆனால் அரசாங்கம் சம்பள அதிகரிப்பு கொடுக்க பணம் இல்லை என்று கூறிவிட்டது.

"பல வேலை நிறுத்தங்கள் நடத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. தொழிற்சங்கங்கள் பயனற்றவை. அவர்களிடம் கோரிக்கைகளை வென்றெடுக்க ஒரு திட்டம் இல்லை. அரசாங்கத்திடம் பணம் இல்லை என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஏனையவற்றுக்கு பணம் செலவிடுகின்றனர்." அவர் மருத்துவமனைகளில் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டதை கண்டனம் செய்தார்.

ஒரு இளம் தொழிலாளி WSWSக்கு கூறியதாவது: "நான் மாதத்திற்கு சுமார் 27,000 ரூபா சம்பளம் பெறுகிறேன். உணவு தவிர, என் அறைக்கு வாடகை 8,000 ரூபாய் செலுத்த வேண்டும். நான் வீட்டிற்கு பணம் அனுப்ப வேண்டும். எப்படி நாம் இந்த வாழ்க்கை செலவில் வாழ முடியும்? சமீபத்தில் ஒரு தொழிலாளி ஓய்வு பெற்றார், ஆனால் ஒரு வருடம் கழித்தும் அவருக்கு இன்னும் ஓய்வூதியம் கிடைக்கவில்லை. தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வெல்ல போராட வேண்டும், ஆனால் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை ஒருவருக்கொருவர் எதிராக பிளவுபடுத்தி வைக்கின்றன."

இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதன் மூலம் தொழிலாளர் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. உலகம் முழுவதும் போலவே, இலங்கை அரசாங்கம் சமூக செலவினங்களை குறைத்து, ஜனநாயக உரிமைகளை தாக்கி, உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடியின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்த முயற்சிக்கின்றது. அரசாங்க ஊழியர்களின் ஊதியங்கள் 2006ல் இருந்தே உயர்த்தப்படாமல் உள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆணைகளுக்கு இணங்க, அரசாங்கம் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை 2016ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளது. உழைக்கும் மக்களின் எதிர்ப்பை தூண்டாமல் இன்னும் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த முடியாது என்பதை இராஜபக்ஷ நன்கு அறிவார். அதனாலேயே அரசாங்கமம் பொலிஸ் அரச நடவடிக்கைகளை தயார் செய்வதோடு இனவாத வழியில் தொழிலாள வர்க்கத்தை பிரித்து வைக்க சிங்களம்-பெளத்த பேரினவாதத்தை தூண்டிவிடுகின்றது.

சுகாதார தொழிலாளர்கள், முதலாளித்துவ அரசின் முகவர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களில் இருந்து பிரிந்து, தொழிலாளர்களின் ஏனைய பிரிவினரின் பக்கம் திரும்புவதோடு தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்புவதன் மூலமே தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராட முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்கு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான போராட்டத்தில், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டத்தை இது உள்ளடக்கிக்கொண்டுள்ளது.