சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Australian government ready to join US air war in Middle East

மத்திய கிழக்கின் அமெரிக்க வான்வழி போரில் இணைய, ஆஸ்திரேலிய அரசாங்கம் தயாராகிவிட்டது

By Peter Symonds
28 August 2014

Use this version to printSend feedback

ஈராக் மற்றும் சிரிய இஸ்லாமிக் அரசு (ISIS) போராளிகள் குழுக்களுக்கு எதிராக மத்திய கிழக்கில் நடக்கும் அமெரிக்க தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னதாக, வெறுமனே வாஷிங்டனிடமிருந்து ஒரு வார்த்தைக்காக அது காத்திருப்பதாக நேற்று ஆஸ்திரலிய அரசாங்கம் சமிக்ஞை காட்டியது.

மத்திய கிழக்கில் நிறுத்தப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய இராணுவ விமானங்கள் ஏற்கனவே வடக்கு ஈராக்கில் வானிலிருந்து-வீசும் மனிதாபிமான உதவிகள் என்றழைக்கப்படுவதை செய்திருக்கின்றன. இருப்பினும் இப்போது என்ன திட்டமிடப்பட்டு வருகிறதென்றால், சாத்தியமானால் வான் தாக்குதல்களுக்கு அதிவேக போர் விமானங்களைப் பயன்படுத்துவது மற்றும் ஈராக்கிற்கு SAS சிறப்பு படைகளையும் இதர இராணுவ சிப்பாய்களையும் அனுப்புவது உட்பட ஒரு விரிவாக்கப்பட்ட பாத்திரம் வகிப்பதென திட்டமிடப்பட்டு வருகிறது.

"எந்த முடிவும் எடுக்கப்படவில்லை" என்ற மந்திரத்தை பிரதம மந்திரி டோனி அப்போட்டும் அவரது மந்திரிகளும் திரும்ப திரும்ப கூறிவருகின்ற போதினும், ஆயத்த வேலைகளோ மிகவும் முன்னேறி இருக்கின்றன. ஆஸ்திரேலிய ABCஇன் "Lateline" நிகழ்ச்சியில் தாக்கும் விமானங்கள் அனுப்புவது குறித்து நேற்றிரவு கேட்கப்பட்டதும், பாதுகாப்பு மந்திரி டேவிட் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார்: “நம்மிடம் சூப்பர் ஹோர்னெட் போர்விமானங்கள் (Super Hornets) இருக்கின்றன. அவை நம்பமுடியாதபடிக்கு தகைமை வாய்ந்தவை ஆகும் ... இப்போது, நம்முடைய நண்பர்கள் மற்றும் நமது கூட்டாளிகளுடன் [அமெரிக்காவுடன்] பங்கெடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து நாம் பரிசீலிக்க வேண்டியிருப்பதே வெளிப்படையான தேவையாகும்."

சூப்பர் ஹோர்னெட் போர்விமானங்கள் மத்திய கிழக்கில் இருக்கின்றனவா, அல்லது செல்ல தயாராக இருக்கின்றனவா, என்று கேட்கப்பட்ட போது, ஜோன்ஸ்டன், “நாம் முற்றிலும் தயாராக இருக்கிறோம்," என்றார். நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கு முன்னதாக, அமெரிக்கா "ஈராக்கில் ஒரு நிலையான அரசாங்கத்தைக் காண" விரும்புகிறது, மேலும் "அது புதிய பிரதம மந்திரி பதவியேற்கவிருக்கின்ற செப்டம்பர் 10 வரையில் நடக்கப் போவதில்லை," என்று கூறி, ஒரு கால அவகாசத்தைக் குறித்தும் கூட அவர் குறிப்பிட்டுக் காட்டினார்.

ஈராக் மற்றும் சிரியாவில் ISISக்கு எதிரான அதன் போரை விரிவாக்க தயாராகி வருகின்ற ஒபாமா நிர்வாகம், 2003இல் ஈராக்கில் சட்டவிரோத படையெடுப்பைத் தொடங்கிய ஜனாதிபதி புஷ்ஷினது "விருப்பமுடையோர் கூட்டணியின்" ஒரு புதிய வடிவத்தைக் கட்டியமைத்து வருகிறது. நிர்வாக அதிகாரிகளை மேற்கோளிட்டுக் காட்டி, நியூ யோர்க் டைம்ஸ் செவ்வாயன்று குறிப்பிடுகையில், “ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜோர்டான், கடார், சவூதி அரேபியா, துருக்கி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளடங்கிய நாடுகள் அநேகமாக பட்டியலில் இடம்பெறுமென" குறிப்பிட்டது.

சில நாடுகளிடம் உளவுச்செய்திகள் மற்றும் நிதியியல் ஆதரவு கோரப்படும் என்றபோதினும், “ஒரு வான் தாக்குதலில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா அமெரிக்காவுடன் இணையக்கூடுமென அவர்கள் எதிர்பார்ப்பதாக ... [வெள்ளை மாளிகை] அதிகாரிகள் தெரிவித்தனர்."

சிரியா மீதான வான்வழி போர் குறித்து பகிரங்கமாக கூறுவதற்கு ஜோன்ஸ்டன் தயங்கினார், ஆனால் அவர் அதை தவிர்த்துக் கொள்ளவில்லை. “சிரிய சூழ்நிலை என்னவென்று நான் ஊகிக்க விரும்பவில்லை," என்றார். “நாம் நமது கூட்டாளியோடு உட்கார்ந்து அந்த சூழ்நிலைகளைக் குறித்து நீண்ட விவாதங்கள் நடத்த வேண்டியிருக்கிறது ... [ஆனால்] என்ன முடிவு மேலே வருமென்று யாருக்குத் தெரியும்?" என்றார்.

ஈராக்கில் யாஜிதி சிறுபான்மையினருக்கு உதவுவதற்காக என்ற பெயரில், ஒபாமா நிர்வாகம், ஒரு மாதத்திற்கும் குறைந்த காலத்தில், ISISக்கு எதிராக ஈராக்கி மற்றும் குர்திஷ் தாக்குதல்களுக்கு வான்வழி ஒத்துழைப்பை, ஒரு மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை என்பதிலிருந்து ஒரு வான்வழி தாக்குதல் என்றளவிற்கு விரிவாக்கி உள்ளது. சிரியாவில் உள்ள ISIS இலக்குகளுக்கு எதிராக வான்வழி நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்ய, அமெரிக்க விமானப்படை இந்த வாரம் அந்நாட்டின் மீது வேவுபார்க்கும் விமானங்களை அனுப்ப தொடங்கியது.

பொய்களின் அடிப்படையில் இருந்த ஈராக்கிய 2003 படையெடுப்பைப் போலவே, ஈராக் மற்றும் சிரியா மீதான அமெரிக்க தலைமையிலான புதிய யுத்தமும் அதே மாதிரியாக இருக்கிறது. அது தாக்கப்பட்டு வரும் ஈராக்கிய சிறுபான்மையினருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதையோ அல்லது அவர்களைப் பாதுகாப்பதையோ குறித்தது அல்ல. ஒபாமா நிர்வாகம் பாக்தாத்தில் அதன் வாடிக்கையாளர் ஆட்சிக்கு மறுவடிவம் கொடுக்கவும் மற்றும் ஒழுங்கமைக்கவும் முனைந்து வருகிறது, அதேவேளையில் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை வெளியேற்ற அங்கே ஆட்சி-மாற்ற நடவடிக்கையை ஊக்குவித்து வருகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் செய்தியின்படி, வெள்ளை மாளிகை "சிரியாவில் இருக்கும் மிதவாத எதிர்ப்பிற்கு ஆதரவை அதிகரிக்க அப்பிராந்தியத்தின் கூட்டாளிகள் மற்றும் அண்டைநாடுகளை உள்ளடக்க" முனைந்து வருகிறது. அசாத்திற்கு எதிரான அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்கள், எந்தளவிற்கு அமெரிக்க மூலோபாய தேவைகளுக்குப் பொருத்தமாக இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த நேரத்திற்கு "மிதவாதிகளாக" கருதப்படுகிறார்கள். சமீபத்தில் வரை, ஒபாமா, அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்களோடு சேர்ந்து, மிக சௌகரியமாக சிரியாவில் ISISஇன் அட்டூழியங்களைப் புறக்கணித்திருந்தார்.

அமெரிக்க தலைமையிலான வான் யுத்தத்தில் இணைய அது தயாராகின்ற அதேவேளையில், அபோட் அரசாங்கம், எதிர்கட்சிகள் மற்றும் ஒரு கீழ்படிந்த ஊடகங்களின் ஒத்துழைப்போடு, பரந்த யுத்தஎதிர்ப்பு மனோபாவத்தை துடைக்கும் ஒரு முயற்சியில், அதிகளவில் மிரட்சியூட்டும் ஒரு பயங்கரவாத-எதிர்ப்பு பிரச்சாரத்தைத் தூண்டிவிட்டு வருகிறது. ISISஇன் தலையறுப்புகள் மற்றும் ஏனைய காட்டுமிராண்டித்தனங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள், ஆஸ்திரேலியாவிற்குள்ளேயே ISISஇன் ஆஸ்திரேலிய அங்கத்தவர்கள் அதைச் செய்ய திரும்புகிறார்கள் என்ற அச்சமூட்டலோடு பிணைக்கப்பட்டு வருகிறது. அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும் மற்றும் சட்ட நெறிமுறைகளுக்கும், மேற்கொண்டும் குழிபறிக்கும் வகையில் அரசாங்கம் கொடூரமான புதிய பயங்கரவாத-எதிர்ப்பு சட்டமசோதாக்களைத் தயாரித்து வருகிறது.

எதிர்கட்சிகளான இடது கட்சியும் பசுமை கட்சியும், ஆஸ்திரேலிய இராணுவம் ஈடுபடுவதை அவை எதிர்க்கப் போவதில்லை என்பதை வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன. இன்று காலை ABCஇன் RN “பிரேக்பாஸ்ட்" நிகழ்ச்சியில் பேசுகையில், இடது கட்சியின் துணை தலைவர் தான்யா ப்லிபெர்செக், பங்கெடுப்பது குறித்து அரசாங்கம் "மிக மிக எச்சரிக்கையாக" இருக்க வேண்டுமென கூறினார், ஆனால் ஒரு "மனிதாபிமான நடவடிக்கைக்கு" அவரது ஆதரவை அறிவித்தார். அங்கே "ஈராக் மற்றும் சிரியாவில் இப்போது ஒரு மனிதாபிமான பேரழிவு நடந்து வருகிறது" என்றும், “சர்வதேச சமூகத்திற்கு" “பாதுகாப்பதற்கான கடமைப்பாடு" இருக்கிறதென்றும் அவர் தெரிவித்தார்.

இதேபோல, பசுமைக்கட்சி ஒரு நாடாளுமன்ற விவாதத்திற்கு அழைப்புவிடுத்தது, ஆனால் தீவிரப்படுத்தப்பட்டுவரும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளில் ஆஸ்திரேலியா ஈடுபடுவதை நிராகரிக்கவில்லை. பசுமைக்கட்சி தலைவர் கிறிஸ்டீன் மில்னே நேற்று நாடாளுமன்றத்திற்கு கூறினார்: “நாங்கள் மனிதாபிமான உதவியை ஆதரிக்கிறோமென பசுமை கட்சியினர் எப்போதும் தெரிவித்து வந்திருக்கிறோம், ஆனால் அது இராணுவரீதியில் நியாயமாக வேகமாக ஈடுபடுவதற்கு வடிவம் கொடுப்பதாக தோன்றுகிறது," என்றார். இராணுவம் ஈடுபடுத்தப்படுவதற்கு உரிய ஒரு விவகாரத்தை அபோட் அரசாங்கம் இன்னும் உருவாக்கவில்லையென பசுமைக் கட்சியின் துணை தலைவர் ஆதம் பாண்டிட் குறை கூறினார். ஈராக்கில் அமெரிக்க வான்வழி போரை அவர் எதிர்க்கவும் இல்லை.

"ISISக்கு எதிராக அதிகபட்ச படைகளைப் பயன்படுத்துவதற்குரிய விவகாரத்தை உருவாக்க, சிரியா மற்றும் ஈராக் முழுவதிலும் உள்ள பொதுமக்களுக்கு எதிராக ISISஆல் நடத்தப்பட்ட அட்டூழியங்களை விவரித்து" அபோட் அரசாங்கம் ஒரு ஆவணக்கோப்பை உருவாக்கி வருவதாக News Corp Australia இன்று குறிப்பிட்டது. வரவிருக்கின்ற நாட்களில், ஐயத்திற்கிடமின்றி, ஆஸ்திரேலிய இராணுவம் ஈடுபடுவதற்கு போலிக்காரணத்தை வழங்க அந்த ஆவணக்கோப்பிலிருந்து பரபரப்பான விபரங்கள் ஊடகங்களால் மேலதிகமாக ஊக்குவிக்கப்படும்.

அந்த கட்டுரை மேற்கொண்டும் குறிப்பிட்டது: “வான்வழி தாக்குதல்களுக்கு தேவையான இலக்குகள் குறித்த தகவல்களை வழங்க ஈராக்கிற்குள் நிறுவுப்பட உள்ள ஆஸ்திரேலிய SAS துருப்புகளுக்காக மிக-இரகசியமான திட்டங்களும் வரையப்பட்டு வருகின்றன. அந்த உயர்மட்ட துருப்புகள் எதிரிகளின் இடங்களுக்குள் உள்ள இலக்குகளைக் கண்டறியவும் மற்றும் கூட்டணி விமானங்களை வழிநடத்தவும் அதிக-அபாயகரமான இடங்களில் இரகசிய கண்காணிப்பு சாவடிகளை ஸ்தாபிக்கும்."

ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்திய அரசாங்கத்தின் (KRG) ஒரு பிரதிநிதியிடமிருந்து இராணுவ உதவி மற்றும் வினியோகங்களுக்காக நேற்று கிடைக்கப்பெற்ற ஒரு முறையீட்டை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜூலி பிஷாப் நேற்று அறிவித்தார். இன்று KRG பிரதிநிதியை சந்திக்க இருக்கும் ப்லிபெர்செக், குர்திஷ் பெஷ்மெர்கா போராளிகள் "வடக்கு ஈராக்கில் மிகவும் துல்லியமாக போராடும் படையாக" இருக்கின்றனர் என்று கூறி, அவரது ஆதரவைச் சுட்டிக்காட்டினார்.

அமெரிக்க மக்களின் முதுகுக்குப் பின்னால், அபோட் அரசாங்கம், ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவோடு, ஒரு பகிரங்கமான அமெரிக்க யுத்தத்திற்கு பொறுப்பேற்று வருகிறது, அது, 2003 படையெடுப்பைப் போலவே, அந்த எண்ணெய் வளம் மிக்க பிராந்தியத்தில் வாஷிங்டனின் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டதாகும். அனைத்திற்கும் மேலாக, சிரியாவிற்குள் யுத்தத்தை விரிவாக்குவதன் மூலமாக, ஏனைய நாடுகளையும் உள்ளுக்குள் இழுத்துவரும் மற்றும் ஒரு பரந்த பிராந்திய மோதலைத் தூண்டிவிடும் அபாயத்தை அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் கண்மூடித்தனமாக உயர்த்தி வருகின்றன.