சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Three years of the Egyptian revolution

எகிப்திய புரட்சியின் மூன்று ஆண்டுகள்

Johannes Stern
25 January 2014

Use this version to printSend feedback

ஜனவரி 25, 2011இல், எகிப்தில் ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக் ஆட்சிக்கு எதிராக பாரிய புரட்சிகர போராட்டங்கள் வெடித்தன. எகிப்திய தொழிலாளர்களும் இளைஞர்களும் அவர்களின் துனிசிய வர்க்க சகோதரர்களின் முன்னுதாரணத்தைப் பின்தொடர்ந்தனர். துனிசியாவில் பதினொரு நாட்களுக்கு முன்னர் அவர்கள் அந்நாட்டின் சர்வாதிகாரி ஜைன் எல் அபிதென் பென் அலியை பதவியிலிருந்து இறக்கி இருந்தனர். "சீற்றமிகு வெள்ளி" (“Friday of Anger”) என்ற வீதி போராட்டங்களில் பொலிஸை தோற்கடித்து, பாரிய வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பின்னர், அவர்கள் முபாரக்கை பதவியிலிருந்து வெளியேற்றினர்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி "வரலாற்றின் முடிவை" மற்றும் முதலாளித்துவத்தின் இறுதி வெற்றியைக் குறிக்கிறது என்று வாதிட்டவர்களுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுக்கும் விதத்தில், எகிப்திய புரட்சி தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர சக்தியை நிரூபித்தது. இருந்தபோதினும், அனைத்திற்கும் மேலாக, அது உலக புரட்சியின் இந்த சகாப்தத்தில் தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் முக்கிய கடமையை, அதாவது அதன் சொந்த புரட்சிகர சோசலிச கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசியத்தை, வெளிப்படுத்திக் காட்டியது.

முபாரக் வெளியேற்றப்படுவதற்கு முதல் நாள், உலக சோசலிச வலைத் தளம் எழுதியது: "தொழிலாளர்களின் ஜனநாயக அபிலாஷைகளை முதலாளித்துவ கட்சிகளின் ஆதரவுடன் எட்டிவிட முடியுமென்ற அனைத்து பிரமைகளுக்கு எதிராகவும் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்க வேண்டும். அவர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் பிரதிநிதிகளின் பொய் வாக்குறுதிகளை இரக்கமின்றிஅம்பலப்படுத்த வேண்டும். அரசியல் போராட்டம் தீவிரமடைகையில், அதிகாரத்தை தொழிலாள வர்க்கத்திற்கு மாற்றுவதற்கான அடித்தளமாக மாறக்கூடிய, தொழிலாளர்களின் அதிகாரத்திற்கான சுயாதீனமான அங்கங்களை உருவாக்க அவர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் அத்தியாவசிய ஜனநாயக தேவைகளை அடைவதென்பது சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் இருந்து பிரிக்கவியலாதபடிக்கு உள்ளதென்பதை அவர்கள் விளங்கப்படுத்த வேண்டும்...

"அனைத்திற்கும் மேலாக, புரட்சிகர மார்க்சிஸ்டுகள் எகிப்திய தொழிலாளர்களின் அரசியல் பரப்புகளை அவர்களின் சொந்த நாட்டு எல்லைகளைக் கடந்து உயர்த்த வேண்டும். இப்போது எகிப்தில் கட்டவிழ்ந்துவரும் போராட்டங்கள் உலக சோசலிஸ்ட் புரட்சிக்காக எழுந்துவரும் ஓர் உலகளாவிய நிகழ்முறையோடு பிரிக்கவியலாதபடிக்கு பிணைந்துள்ளது என்பதை, மற்றும் எகிப்திய புரட்சியின் வெற்றிக்கு ஒரு தேசிய மூலோபாயம் அல்ல, மாறாக ஒரு சர்வதேச மூலோபாயம் அவசியப்படுகிறது என்பதை அவர்கள் விளங்கப்படுத்த வேண்டும்," என்று எழுதியது.

லியோன் ட்ரொட்ஸ்கியின் நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் WSWS'ஆல் அமைக்கப்பட்ட முன்னோக்கு, அதற்கடுத்து எகிப்தில் ஏற்பட்ட அபிவிருத்திகளால் நிரூபிக்கப்பட்டுள்ளன. தொழிலாள வர்க்கத்தை எது புரட்சிக்கு இழுத்து வந்ததோ, அந்த உணவு, சுதந்திரம் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கான எந்தவொரு கோரிக்கையையும் பூர்த்தி செய்ய இயலாமல் எகிப்திய முதலாளித்துவம் இலாயக்கற்று இருப்பது, மூன்று ஆண்டு கால பாரிய சமூக போராட்டங்களுக்குப் பின்னர், நிரூபணம் ஆகி உள்ளது.

மாறாக அது வாஷிங்டனில் உள்ள அதன் ஆதரவாளர்களின் ஒத்துழைப்போடு பழைய முபாரக் ஆட்சியில் இருந்தவைகளையே எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு மீண்டும் நிலைநிறுத்த முயற்சித்து வருகிறது. 2013 ஜூலை 13 ஆட்சி கவிழ்ப்பில் இருந்து, முபாரக்-சகாப்திய உளவுத்துறை தலைமை ஜெனரல் அப்தெல் பதாஹ் அல்-செசி'இன் இராணுவ ஆட்சிக்குழு [junta] ஆயிரக்கணக்கானவர்களை படுகொலை செய்துள்ளதோடு சிறையிலும் அடைத்துள்ளது, இஸ்லாமியவாத முஸ்லீம் சகோதரத்துவத்தை (MB) தடை செய்துள்ளது, மற்றும் முபாரக்காலேயே பகிரங்கமாக ஒப்புதல் வழங்கப்பட்ட ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஒரு அரசியலமைப்பிற்கு அழுத்தம் அளித்துள்ளது.

இராணுவ ஆட்சிக்குழு பயங்கர ஒடுக்குமுறையினூடாக அதன் ஆட்சியை ஸ்திரப்படுத்த முயன்று வருகிறது. இன்று, எகிப்திய புரட்சியின் மூன்றாம் ஆண்டு நிறைவு நாளில், 260,000 பொலிஸ் சிப்பாய்கள், 180 பட்டாலியன்கள், மற்றும் 500 கலகம்-ஒடுக்கும் துருப்புகள் நாடு முழுவதும் நிலைநிறுத்தப்படுவார்கள்.

ஒரு புரட்சிகர முன்னோக்கிற்கு போராடுவதற்கான மற்றும் மார்க்சி நனவை அபிவிருத்தி செய்வதற்கான அதன் சொந்தக் கட்சி இல்லாமல், பாட்டாளி வர்க்கத்தால் அரசின் தலைமையைக் கவிழ்க்க முடிந்ததோடு அரசியல் ஸ்தாபகத்தின் அஸ்திவாரங்களை ஆட்டங்காணச் செய்யவும் முடிந்தது. ஆனால், எகிப்திய முதலாளித்துவ அரசை அதனால் தூக்கியெறிய முடியவில்லை மற்றும் முதலாளித்துவ சுரண்டலையும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையையும் முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமாக அதன் சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளை எட்டுவதற்கான அடித்தளத்தை அமைக்க முடியவில்லை.

மாறாக, எகிப்திய முதலாளித்துவ வர்க்கமும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் எவற்றைக் கொண்டு எகிப்தில் தங்களின் ஆட்சியை வெற்றிகரமாக ஸ்திரப்படுத்தினார்களோ, அந்த சமூக மற்றும் அரசியல் சக்திகளோடு கட்டவிழ்ந்துவரும் புரட்சி தொழிலாள வர்க்கத்தை மோதலுக்கு இழுத்து வந்தது. ஒன்று மாற்றி ஒன்று என போராட்ட அலையை தொழிலாளர்கள் தொடங்கிய போது, ஒருபுறம் இருந்த தொழிலாள வர்க்கத்திற்கும் மறுபுறம் இருந்த முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ சக்திகளுக்கும் இடையிலான சமரசமற்ற மோதல் முன்னுக்கு வந்தது.

ஆரம்பத்தில், வேலைநிறுத்த-விரோத மற்றும் போராட்ட-விரோத சட்டங்களைக் கொண்டு வந்தும், தஹ்ரீர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்கியும், ஆயுதமேந்திய படைகளின் தலைமை கவுன்சிலை (SCAF) அமைத்தும், இராணுவம் முபாரக் இல்லாமல் அதன் ஆட்சியைத் தொடர முயன்றது.

ஆயுதமேந்திய படைகளின் தலைமை கவுன்சிலுக்கு எதிரான பாரிய எதிர்ப்பு போராட்ட எழுச்சிகளுக்கு ஆளும் வர்க்கம் ஜனாதிபதி தேர்தல்களை ஏற்பாடு செய்து விடையிறுப்பு காட்டிய போது, அந்த தேர்தல்கள் இஸ்லாமியவாத மொஹம்மது மூர்சியை அதிகாரத்திற்கு கொண்டு வந்தன. வெறுக்கப்பட்ட முபாரக் ஆட்சி யாருடைய வர்க்க நலன்களை பாதுகாத்ததோ அதே வர்க்க நலன்களின் பாதுகாவலனாக முஸ்லீம் சகோதரத்துவம் அம்பலப்பட்டது. தொழிலாளர்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளைத் தயாரிக்க மூர்சி சர்வதேச நாணய நிதியத்தோடு பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, அவர் காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய விமான தாக்குதல்களை ஆதரித்தும், சிரியாவில் அமெரிக்க தலைமையிலான கைப்பாவை ஆட்சிக்கான யுத்தத்தை ஊதிவிட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு தலையாட்டியாக சேவை செய்தார்.

போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் வசதிபடைத்த மத்தியதர வர்க்கத்தின் தாராளவாத மற்றும் போலி-இடது கன்னைகள், தொழிலாள வர்க்கத்தின் நோக்கங்கள் அவற்றின் சொந்த தனிச்சலுகைகளுக்கு ஓர் அச்சுறுத்தலை முன்னிறுத்துகிறது என்பதை உணர்ந்த போது, அவை மிக கூர்மையாக அவர்களுக்கு எதிராக திரும்பின.

வெறுக்கப்பட்ட மூர்சி ஆட்சிக்கு எதிராக கடந்த கோடையில் பத்து மில்லியன் கணக்கானவர்களின் பாரிய போராட்டங்கள் வெடித்த போது, இந்த குழுக்கள் அதிர்ந்து போயின; அவை தொழிலாள வர்க்க புரட்சிக்கு ஒரு மாற்றாக ஓர் இராணுவ சர்வாதிகாரமே மீண்டும் ஆட்சிக்கு வருவதற்குப் பின்னால் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. அவை வலதுசாரி தமரோட் (Tamarod) இயக்கத்திற்கு அவற்றின் ஆதரவை வழங்கியதோடு, மூர்சிக்கு எதிரான பாரிய கோபத்தை அதன் பின்னால் திருப்பிவிட முனைந்தன. இதற்கிடையில், தமரோட் ஜூலை 3 ஆட்சி மாற்றத்திற்கு இராணுவத்திற்கு உதவியது. ஹம்தீன் ஷபாஹியின் Popular Current மற்றும் மொஹம்மது எல் பரடேயின் Constitutional Party போன்ற சக்திகள் இராணுவத்தால் ஸ்தாபிக்கப்பட்ட இடைக்கால அரசில் சேர்ந்து கொண்டதோடு, பாரிய ஒடுக்குமுறையை ஒழுங்கமைக்கவும் உதவின.

ஆட்சி மாற்றத்திற்கு ஒத்துழைத்த மற்றும் எதிர்புரட்சியின் சக்திகளுக்கு உதவிய மிக ஊழல்மிகுந்த குழுவாக போலி-இடது புரட்சிகர சோசலிஸ்ட் (RS) இருந்தது. புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், புரட்சிகர சோசலிஸ்ட், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவத்தின் இந்த அல்லது அந்த கன்னைக்கு அடிபணிய வைக்க முனைந்திருந்தது. ஆயுதமேந்திய படைகளின் தலைமை கவுன்சிலின் இராணுவ ஆட்சிக் குழு மாபெரும் சமூக மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களை வழங்கும் என்று தொடக்கத்தில் வாதிட்டு வந்த புரட்சிகர சோசலிஸ்ட், ஆயுதமேந்திய படைகளின் தலைமை கவுன்சிலுக்கு எதிரான ஒரு "இரண்டாவது புரட்சிக்கான" அழைப்புகளை எதிர்த்தது. அத்தோடு, மூர்சி தேர்ந்தெடுக்கப்பட்டதை "புரட்சியின் வெற்றியாக" வரவேற்று, "புரட்சியின் வலது கன்னையாக" முஸ்லீம் சகோதரத்துவத்தை ஊக்குவித்தது. மூர்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பு வலுத்ததும், புரட்சிகர சோசலிஸ்ட், தமரோட்டை "புரட்சியை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு பாதையாக" புகழ் பாடியது, அத்தோடு ஆட்சி கவிழ்ப்பை ஒரு "இரண்டாவது புரட்சியாக" குறிப்பிட்டது.

இராணுவ ஆட்சிக்குழுவின் ஒடுக்குமுறை தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர இயக்கத்தை மீண்டும் தூண்டிவிடும் என்ற அச்சத்தால் உந்தப்பட்டு, RS இன்னும் மேலதிகமாக வலதின் தரப்பிற்கு நகர்ந்து வருகிறது. தற்போது அது புரட்சிகர முன்னணிப் பாதை (Revolutionary Path Front - RPF) என்றழைக்கப்படும் Islamist Strong Egypt கட்சி மற்றும் ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் ஆகியவற்றின் அணியில் ஒன்றுகூடி உள்ளது. RPF, ஒன்றொடொன்று காழ்ப்புணர்ச்சி கொண்ட எகிப்திய ஆளும் மேற்தட்டின் கன்னைகளை இணக்குவிக்க நோக்கம் கொண்டதாகும். "எந்த கட்சியாக இருந்தாலும் ஒன்றை மற்றொன்று வெல்வதென்பது அரசின் தோல்வியைக் குறிக்கும்," என்று அது எச்சரிக்கிறது.

எகிப்தின் கொந்தளிப்பான போராட்டங்கள், எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கும் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கும், கசப்பான விலை கொடுத்து பெறப்பட்ட பெரும் படிப்பினைகளைக் கொண்டுள்ளன. புரட்சியின் வெற்றி, மத்தியதரவர்க்கத்தினுள் உள்ள தாராளவாத மற்றும் போலி-இடது சக்திகளுக்கு எதிரான எதிர்ப்போடு, தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதை சார்ந்துள்ளது. அவர்கள் ஒரு சமூகப் புரட்சியை தடுப்பதில் எங்கும் நிற்க போவதில்லை.

நிரந்தர புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் தன்னை அமைத்துக்கொண்ட ஒரு புரட்சிகர கட்சியை ஸ்தாபித்து, எகிப்திலும் மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் அதிகாரத்தை கையிலெடுக்க தொழிலாள வர்க்கம் போராடினால் ஒழிய, ஏகாதிபத்தியம் மற்றும் எகிப்தின் பல்வேறு முதலாளித்துவ மற்றும் குட்டி-முதலாளித்துவ கன்னைகளை புரட்சியால் வெற்றி கொள்ள முடியாது.