சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The assault on Gaza: A historic crime

காசா மீதான தாக்குதல்: ஒரு வரலாற்று குற்றம்

Patrick Martin and Barry Grey
21 July 2014

Use this version to printSend feedback

காசா மீது இஸ்ரேல் அதன் காட்டுமிராண்டித்தனமான தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருகின்ற நிலையில், ஞாயிறன்று குறைந்தபட்சம் 100 பாலஸ்தினியர்கள் கொல்லப்பட்டனர். காசா நகரின் கிழக்கே அமைந்துள்ள ஒரேயொரு அண்டைப்பகுதியான ஷிஜையாவில், இஸ்ரேல் வீசிய குண்டுகளும் மற்றும் பீரங்கி தாக்குதல்களும் குறைந்தபட்சம் 62 பேரை கொன்றதோடு, சுமார் 300 பேரை காயப்படுத்தியது. இறந்தவர்களில் 17 பெண்களும், 14 குழந்தைகளும் மற்றும் நான்கு முதியவர்களும் உள்ளடங்குவர். மக்கள் நடந்தும், அதிக எண்ணிக்கையில் ஆட்களை ஏற்றிய வாகனங்களிலும் வெளியேறிக் கொண்டிருந்த நிலையில், ஷிஜையாவின் வீதிகளில் அந்த பெண்கள் மற்றும் குழந்தைகளினது சடலங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தன.

காசாவில் அது அமைத்துள்ள 49 கூடாரங்களில் 63,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்குவதற்கு அனுமதி கோரியிருந்ததாக பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு UNRWA தெரிவித்தது. “அந்த சண்டையினால் அப்பாவி மக்கள் முகங்கொடுத்து வருகின்ற அசாதாரண அச்சுறுத்தல்களையும் மற்றும் அந்த மோதலின் தீவிரத்தையும் பிரதிபலிக்கும் வகையில், அந்த எண்ணிக்கை கடந்த மூன்று நாட்களில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக" UNRWA குறிப்பிட்டது.

காயமடைந்தவர்களும், மற்றும் தயவுதாட்சன்யமற்ற குண்டுவீச்சுக்களில் இருந்து தப்பிக்க ஏனைய பொதுமக்களும் அடைக்கலம் கோரி வருவதால் காசாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி இருந்தன. வினியோகிக்கப்பட்டு இருந்த கட்டுத் துணிகள் மற்றும் அடிப்படை மருந்துகள் தீர்ந்து கொண்டிருந்தன. முற்றுகையிடப்பட்டு கைப்பற்றப்பட்ட பிராந்தியத்தின் பெரும் பகுதிகளில், குடிநீர் மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தன.

யுத்தச் சட்டங்களின் கீழ் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறி, இஸ்ரேலிய இராணுவம் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஃபிலீச்சிட் (flechette) குண்டுகளைப் பயன்படுத்துவதை நியாயப்படுத்தியது. ஃபிலீச்சிட் குண்டுகள் என்பவை மனித தசைகளைக் கிழிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கூரிய முனைகளைக் கொண்ட ஆயிரக்கணக்கான சிறிய உலோக துண்டுகளை வீசக்கூடியவை ஆகும்.

பொதுவாக அமெரிக்க அரசியல் ஸ்தாபகத்துடன் கூட்டில் உள்ள அமெரிக்காவை தளம் கொண்ட Human Rights Watch அமைப்பு வெளியிட்ட ஒரு அறிக்கையில், அப்பாவி மக்கள் வசிக்கும் இடங்களை வேண்டுமென்றே குறி வைப்பதற்காக இஸ்ரேலைக் குற்றஞ்சாட்டியது. “Human Rights Watchஆல் ஆய்வு செய்யப்பட்ட காசா மீதான இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள், வெளிப்படையாக அப்பாவி மக்களின் உள்கட்டமைப்புகளை இலக்கில் வைத்திருப்பதோடு, யுத்தச் சட்டங்களை மீறி பொதுமக்களைக் கொன்று வருகிறது," என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டது.

இஸ்ரேலிய அரசு காசாவில் பாரிய படுகொலைகளை நடத்தி வருகிறது. அதன் துருப்புகளும், டாங்கிகளும், யுத்த விமானங்களும் மற்றும் துப்பாக்கி ஏந்திய படகுகளும் ஒரு சிறிய, வறிய மற்றும் மக்கள்தொகை நெருக்கம் நிறைந்த அந்த நிலப்பகுதிக்குள் சிக்கிக் கொண்ட பாதுகாப்பற்ற பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்து வருகின்றன. இரண்டு வாரகால இஸ்ரேலிய குண்டுவீச்சுக்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் உண்மையில் எத்தனை பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் ஞாயிறன்று மதியம் பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் அந்த எண்ணிக்கையை 436ஆக குறிப்பிட்டதோடு, 3,000க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாகவும் தெரிவித்தனர். இறந்தவர்களில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளடங்குவர்.

இது யுத்த குற்றங்கள் இல்லையென்றால், பின்னர் இது வேறு என்னவாம்?

இவை எல்லாவற்றிற்கும் அடியில், இந்த அட்டூழியத்தை நியாயப்படுத்த இஸ்ரேலிய பிரதம மந்திரி நெத்தானியாஹூவால் அளிக்கப்படும் பொய்கள், வெறுக்கத்தக்கவையாக உள்ளன. மக்கள் அவர்களின் சொந்த கண்களால் செய்தி அறிக்கைகளிலும் மற்றும் காணொளிகளிலும் என்ன பார்த்து வருகிறார்களோ அதை நம்ப வேண்டாமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், இதற்கிடையே பெரும்பாலும் பெருநிறுவன கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்களால் முற்றிலும் திரிக்கப்பட்ட, இஸ்ரேலிய-சார்பிலான செய்திகள் வழங்கப்பட்டன. அவர்களின் நடவடிக்கை ஹமாஸிடம் இருந்து வரும் ஆக்ரோஷ நடவடிக்கைகளுக்கு ஒரு தற்பாதுகாப்பு விடையிறுப்பாகும் என்று வாதிடுமளவிற்கு இஸ்ரேலிய அதிகாரிகள் மடத்தனமான துணிச்சல் பெற்றிருக்கிறார்கள். ஆனால் உண்மைகள் முன்னால் வந்து நிற்கின்றன: பாலஸ்தீன தரப்பில் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின் எண்ணிக்கை வேகமாக 1,000ஐ நோக்கி முன்னேறி வருகிறது, அதேவேளையில் ஹமாஸின் கொடூர ராக்கெட்டுகளின் விளைவாக இரண்டு இஸ்ரேலிய அப்பாவி மக்கள் மட்டும் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.

ஹமாஸின் அந்த நடவடிக்கைகள், தசாப்தகாலமாக சளைக்காமல் மற்றும் முன்பை விட இன்னும் தீவிரமாக நடத்தப்பட்ட இஸ்ரேலிய வன்முறையின் ஒரு உச்சக்கட்ட காட்டுமிராண்டித்தன தாக்குதலுக்கு, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் முற்றுகையிடப்பட்ட மக்களின் பாதுகாப்புக்கு விடையிறுப்பாக உள்ளன. ஆறு நாள் யுத்தத்தில் ஆக்கிரமிப்பு பிராந்தியங்கள் கைப்பற்றப்பட்டதற்கு சுமார் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர், அந்த யூத-பாதுகாப்புவாத ஆட்சி பாலஸ்தீன மக்களின் எதிர்ப்பை நசுக்குவதில் முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது. தற்போதைய வன்முறையின் தாங்கொண்ணா துயர், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதைவிட, விரக்தியின் ஒரு வெளிப்பாடேயாகும். அதன் அனைத்து அகந்தை மற்றும் காட்டுமிராண்டித்தனத்தோடும், இஸ்ரேலிய அரசாங்கம், ஏதோ அதன் பொறுமையை இழந்து விட்ட ஒரு ஆட்சியின் வெளிப்பாடாக காட்டிக் கொள்கிறது.

அதன் நீண்டகால மற்றும் இரத்தந்தோய்ந்த வரலாற்றில், இஸ்ரேல் கடந்த நான்கு நாட்களில் ஓர் அடிப்படை வரம்பை கடந்துள்ளது. காசாவில் அதன் நடவடிக்கைகள், அரசியல் மற்றும் அறநெறி சிதைந்த நிலையில் இருக்கும் ஒரு சமூகத்தின் நடவடிக்கைகளாக இருக்கின்றன —இது யூத-பாதுகாப்புவாதம் முட்டுச்சந்தை எட்டியிருப்பதன் விளைபொருளாகும்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிழக்கு ஜெருசலத்தில் 16 வயது நிரம்பிய மொஹாம்மத் ஹட்டீயரின் கழுத்திலிருந்து உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி, அவரை தீயிட்டு கொளுத்திய இஸ்ரேலிய பாசிசவாதிகளால் நடத்தப்பட்ட படுகொலை, இஸ்ரேலிய அரசின் உயர்மட்ட அதிகாரங்களால் நடத்தப்பட இருந்த ஒரு மிகப் பரந்த யுத்தத்திற்கான முன்நிகழ்வாக மட்டுமே இருந்தது என்பது இப்போது தெளிவாகிறது.

மேலும் மேலும், பாசிசவாதிகளின் மற்றும் பித்துப்பிடித்த கிறுக்கர்களின் ஒரு கலவையால் நடத்தப்படும் ஒரு தீண்டத்தகாத அரசாக இஸ்ரேல் உலகம் முழுவதிலும் பார்க்கப்படுகிறது. அதற்கு எதிரான சீற்றம், சர்வதேச அளவில் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஏகாதிபத்திய சக்திகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள முதலாளித்துவ அரசாங்கங்களிடம் இருந்து அரசியல் மற்றும் பொருள்சார் ஆதரவில்லாமல் அதுபோன்றவொரு அப்பட்டமான குற்றத்தை இஸ்ரேலினால் நடத்த முடியாது. சர்வதேச முதலாளித்துவ வர்க்கத்தின் உத்வேகமான மற்றும் பகிரங்கமான ஒத்துழைப்புடன், ஒரு உலகளாவிய அளவில் ஒத்து ஊதப்பட்ட ஒரு யுத்த குற்றத்தை உலகம் கண்முன்னால் பார்த்து வருகிறது.

பாலஸ்தீனியர்களைப் படுகொலை செய்வதற்கு இஸ்ரேல் பயன்படுத்தி வரும் ஆயுதங்களின் பெருந்தொகுப்பை, முதலும் முற்றிலுமாக அமெரிக்காவே அதற்கு வழங்கி உள்ளது. கடந்த புதனன்று, இஸ்ரேலின் தரைவழி தாக்குதலுக்கு முன்னதாக, ஜனாதிபதி பராக் ஒபாமா வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னால் தோன்றி, உடனடியாக நிகழவிருந்த அந்த இரத்தஆறுக்கு அவரது முழு ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்கினார்.

"நிதானமாக இருப்பது" மற்றும் "பாதிப்புகளைக் குறைப்பது" குறித்த வழக்கமான ஒழிந்து போன வார்த்தைகளைக் கூட ஒபாமா உச்சரிக்கவில்லை. மாறாக, “பூமியில் எந்தவொரு நாடும் அன்றாடம் சரமாரியான ராக்கெட் தாக்குதல்கள் இல்லாமல் வாழ்கிறதென்று கூற முடியாது," என்று கூறி, இஸ்ரேலிய தரப்பில் கூறப்படுகின்ற பொய்யை சொல்லுக்கு சொல் அவரும் திரும்ப உரைத்தார். இது, இஸ்ரேலிய ஏவுகணைகளும் மற்றும் குண்டுகளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனியர்களைக் கொன்று வருகின்ற போது கூறப்பட்டதாகும்.

பின்னர் அவர், ஒரு போலி போர்நிறுத்தத்தை ஏற்க மறுத்ததன் மூலமாக அந்த "நீண்ட மோதலைத்" தூண்டிவிட்டதற்காக ஹமாஸைக் குற்றஞ்சாட்டினார், ஆனால் உண்மையில், ஒரு தரைவழி யுத்தத்தைத் தொடங்குவதற்கான ஒரு போலிக்காரணத்தை உருவாக்குவதற்காகவே பரிதாபகரமாக சரணடைவதற்கான முறையீடாக அது கொண்டு வரப்பட்டிருந்தது.

ABC தொலைக்காட்சியின் "The Week" நிகழ்ச்சியில் ஞாயிறன்று நேர்காணல் செய்யப்பட்ட அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, காசாவில் என்ன நடந்து வருகிறதோ அதுவொரு "இனப்படுகொலை" மற்றும் "யுத்த குற்றமாகும்" என்று பாலஸ்தீன செய்தி தொடர்பாளர் ஹனான் அஸ்ராவியின் அறிக்கைக்கு விடையிறுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். கெர்ரி அதை பாலஸ்தீன "வார்த்தைஜாலமாக" குற்றஞ்சாட்டி புறக்கணித்ததோடு, ஆத்திரமூட்டும் வகையில் தொடர்ந்து கூறுகையில், "யுத்தம் அருவருப்பானது, மோசமான விடயங்கள் நடக்க உள்ளன," என்றும் தெரிவித்தார்.

கெர்ரிக்கு அவர் பொய்யுரைப்பது காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலை அவர் நியாயப்படுத்தும் போதே மிக நன்றாக தெரியும். “Fox News Sunday” நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு சற்று முன்னதாக, செல்பேசியில் பேசிக் கொண்டிருந்த கெர்ரியின் உரையாடலில் இருந்து ஒரு சிறிய பகுதியை நிகழ்ச்சி நெறியாள்கையாளர் ஒலிபரப்பிய போது, அந்நிகழ்ச்சியிலேயே அவரது வெறுப்பு மனோபாவமும், இரட்டைவேஷமும் அம்பலமானது. காசா மீதான இஸ்ரேலிய குண்டுவீச்சுக் குறித்து பேசுகையில் அவர், மிகவும் சாதாரணமாக, “துல்லியமான நடவடிக்கையின் நரகமது... நாம் அங்கே தலையிட வேண்டி உள்ளது," என்றார்.

அதற்கடுத்ததாக ஐரோப்பிய சக்திகளும் அங்கே இருக்கின்றன, அவை அனைத்துமே அவற்றின் முழு ஆதரவை இஸ்ரேலுக்கு வழங்கி வருகின்றன. பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கும் அளவிற்கு சென்றுள்ளதோடு, கண்ணீர் புகை குண்டுகளோடு பாரீசில் போராட்டக்காரர்களைத் தாக்க கலகம் ஒடுக்கும் பொலிஸாரைக் கொண்டு வந்து குவித்தது.

ஐக்கிய நாடுகள் சபை, எப்போதும் போல, ஒரு-தரப்பு முற்றிலுமாக தாக்கப்பட்டிருக்கும் நிலையில், வன்முறையைத் தவிர்க்குமாறு "இரு தரப்பிற்கும்" அழைப்புவிடுத்து, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் விருப்பங்களோடு அதே தரப்பில் விழுந்துள்ளது.

காசா மீதான தாக்குதலில், அரபு முதலாளித்துவ ஆட்சிகளும் இஸ்ரேலுடன் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றன. எகிப்தில் இராணுவ கொலைகாரர் அல் சிசியின் தலைமையிலான அமெரிக்க வாடிக்கையாளரின் ஆட்சி, இஸ்லாமிய இராணுவத்திடமிருந்து காசாவாசிகள் தப்பித்துச் செல்லாதபடிக்கும் மற்றும் எகிப்திற்குள் அடைக்கலம் தேடி வராதபடிக்கும் தடுப்பதற்காக அதன் எல்லையை மூடி முத்திரையிட்டுள்ளது. இஸ்ரேலிய தரைவழி தாக்குதலுக்கு ஒரு போலிக் காரணத்தை வழங்குவதற்கு அல் சிசி தான் அந்த போலித்தனமான போர்நிறுத்த பரிந்துரைக்கு தரகு வேலை செய்திருந்தார்.

மஹ்மொத் அப்பாஸின் பாலஸ்தீன ஆணையம், யூத-பாதுகாப்புவாத மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்காக அருவருக்கத்தக்க விதத்தில் வேலை செய்து வருகிறது, அது மேற்கு கரையில் இஸ்ரேலிய எதிர்ப்பு போராட்டங்களை ஒடுக்கி வருகின்ற அதேவேளையில் ஹமாஸிற்கு எதிராக சூழ்ச்சிகளைச் செய்து கொண்டிருக்கிறது.

அங்கே அரபு தேசியவாதம் மற்றும் ஐக்கியம் என்ற பிரமைகள் எதுவும் எஞ்சி இருக்கவில்லை. மொத்த முதலாளித்துவ ஆட்சிகளும், கட்சிகளும் ஏகாதிபத்தியத்தின் குட்டி முகவர்களாக அம்பலப்பட்டுள்ளன.

மரணகரமான இஸ்ரேலிய தாக்குதலை எதிர்க்க ஹமாஸ் சந்தேகத்திற்கு இடமற்ற தைரியத்தைக் காட்டி வருகின்றது. ஆனால் அதனிடம் ஒரு சரியான அரசியல் முன்னோக்கு இல்லை. பாலஸ்தீன மக்களைத் தனிமைப்படுத்தியும், மற்றும் தோற்றப்பாட்டளவில் பாதுகாப்பற்ற நிலைமையில் விட்டும், அது தேசியவாதத்தின் அடித்தளத்தில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு முற்றிலும் அடிபணிந்துள்ள அரபு ஆட்சிகளின் ஆதரவைக் கோரி நிற்கிறது.

உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களால் உதவி அளிக்கப்பட்டு வருகின்ற மற்றும் அவை உடந்தையாய் இருக்கின்ற காசாவின் இந்த கொலைவெறி பிடித்த வன்முறை, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். அது ஏகாதிபத்தியத்தின் முழுமையான அசுரத்தனத்திற்கு நிரூபணமாக இருக்கிறது. அதன் பூகோளமயப்பட்ட பொருளாதார மற்றும் புவிசார்-அரசியல் அபிலாஷைகளின் பாதையில் எது வந்தாலும் வெட்டி எறிய எந்தவொரு குற்றத்திலிருந்தும் அது பின்வாங்காது.

பாலஸ்தீன மக்களைப் பாதுகாப்பது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் கடமையாகும். முதல் சான்றாக, இஸ்ரேலிய தொழிலாளர்கள் அவர்களின் நாட்டை நடத்தி வரும் குற்றவாளிகளிடமிருந்து தங்களைத் தாங்களே பிரித்துக் கொள்ள வேண்டும். இஸ்ரேலிய மக்களின் பெரும்பாலான பிரிவுகள் கீழ்தரமான குற்றங்களுக்கு உடந்தையாக இருந்து வருகின்றன. நாஜிக்களின் "இறுதி தீர்வைப்" போல, பாலஸ்தீன மக்களை ஸ்தூலமாகவே நீர்மூலமாக்குவது குறித்து பகிரங்கமாக பேசி வருகிறவர்களின் குரல்கள் அங்கே இஸ்ரேலிய ஸ்தாபகத்திற்குள்ளே ஒலிக்கின்றன.

காசாவில் நடந்து வரும் தாக்குதலை இஸ்ரேலிய தொழிலாளர்கள் எதிர்க்க வேண்டும். அவர்கள் அவர்களின் இயல்பான கூட்டாளிகளான, அரபு தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை நோக்கி திரும்ப வேண்டும்.

காசாவில் என்ன நடந்து வருகிறதோ அதன் மீதான மில்லியன் கணக்கானவர்களின் உணர்வுகளுக்கும் மற்றும் பரந்த சீற்றத்திற்கும் அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் தலைமையை வழங்க வேண்டும். அந்த மனிதப் படுகொலையை உடனடியாக நிறுத்துமாறு அது கோரவேண்டும். எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் பாலஸ்தீனியர்களுடனான ஒற்றுமையுணர்விற்கும் ஒவ்வொரு நாட்டிலும் அழைப்புவிடுக்கப்பட வேண்டும்.

டெல் அவிவ்வில் உள்ள யுத்த குற்றவாளிகளையும் மற்றும், வாஷிங்டன் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு ஏனைய தலைநகரங்களிலும் உள்ள அவர்களின் உடந்தையாளர்களையும் பொறுப்பேற்க வைப்பதற்கான முறையீடுகள் உயர்த்தப்பட வேண்டும். அந்த போராட்டம் இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு எதிராக மட்டுமின்றி, மாறாக அந்த குற்றங்களுக்கு உதவியாக இருந்த ஏகாதிபத்திய மற்றும் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராகவும் திரும்ப வேண்டும்.