சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Sinhala-Buddhist mobs unleash violence against Muslims

இலங்கை: சிங்கள-பெளத்த கும்பல் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது

By our correspondents
17 June 2014

Use this version to printSend feedback

ஞாயிறன்று, அதிதீவிரவாத பொது பல சேனா அல்லது பௌத்த படையினரால் அணிதிரட்டப்பட்ட சிங்கள-பெளத்த குண்டர் கும்பல், தென் இலங்கை நகரான அளுத்கமையில் முஸ்லிம்களுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் கடைகளை எரித்து, இரண்டு பேரை படுகொலை செய்ததோடு டஜன் கணக்கானவர்களை காயப்படுத்தினர்.

இலங்கையில் இனவாத பதட்ட நிலைமைகளை உக்கிரமாக்கிய, நன்கு திட்டமிடப்பட்ட இந்த தாக்குதல், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம், உழைக்கும் மக்கள் மத்தியில் அதன் கொள்கைகள் மீது பெருகிவரும் எதிர்ப்பை திசை திருப்ப, பாசிச குழுக்களை எவ்வாறு ஊக்குவிக்கின்றது என்பதை சித்தரிக்கின்றது.

பொலிஸ் மற்றும் அதன் கமாண்டோக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே பொதுபல சேனா தனது தாக்குதல்களை தீவிரமாக்கியது. பின்னர், அரசாங்கம் கவச வாகனங்களுடன் அப்பகுதியில் இராணுவத்தை அணிதிரட்டியது. ஞாயிறு மற்றும் திங்கள் இரவும், போலீஸ் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் அளுத்கம மற்றும் பேருவலை பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. பொதுபல சேனா சார்பு கும்பலுக்கு பொலிஸ் சுதந்திரம் கொடுத்த பின்னரான இந்த தலையீடுகள், பதட்டத்தை மட்டுமே அதிகரிக்கச் செய்தன.

பிரதேசத்தில் ஒரு "பெளத்த பிக்கு மீதான தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்" நடத்துவதாக கூறி, அளுத்கமையில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததன் மூலமே பொதுபல சேனா ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வன்முறையை தூண்டிவிட்டது. மூன்று நாட்களுக்கு முன்னர் ஒரு பௌத துறவி மீது முஸ்லீம் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் விடயத்தையே அது இங்கு சுட்டிக்காட்டியது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இரு முஸ்லிம்களை கைது செய்ததுடன் அவர்கள் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், பொதுபல சேனாவுக்கு இனவாதத்தை தூண்டிவிட இந்த சம்பவம் ஒரு சாக்காக அமைந்தது.

கூட்டத்தில் பேசுகையில், ஒரு பௌத்த பிக்குவான பொதுபல சேனா தலைவர் கலேகொட அத்தே ஞானசார, பகிரங்கமாக முஸ்லிம்களை அச்சுறுத்தினார். அவர் கூறியதாவது: "இந்த நாட்டில் எமக்கு இன்னமும் சிங்கள போலீஸ் உள்ளது; எமக்கு இன்னமும் சிங்கள இராணுவம் உள்ளது. இதன் பின்னர் யாராவது ஒரு துலுக்கன் (முஸ்லிம்களை தரக்குறைவாக கூறும் வார்த்தை) அல்லது வேறு சில பரதேசிகள் (அன்னியர்கள்) ஒரு சிங்களவரை தொட்டால்... அது அவனது முடிவாக இருக்கும். "

மற்றொரு அதிதீவிரவாத கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர்களில் ஒருவரான பாடகர் மதுமாதவ அரவிந்த, சிங்களவர்களை எழுச்சிபெறுமாறு கோரி ஒரு பாடல் பாடினார்.

கூட்டத்திற்கு பின்னர், 1,000 க்கும் மேற்பட்ட ஒரு கும்பல், முஸ்லீம்-விரோத கோஷங்களை எழுப்பிக்கொண்டு, அருகில் முஸ்லீம்கள் செறிந்து வாழும் பகுதியான தர்கா நகர் வழியாக அந்த பிக்கு வசித்துவந்த விகாரையை நோக்கி ஊர்வலத்தை தொடங்கியது. முஸ்லிம்களிடம் இருந்து பதிலடி வரலாம் எனக் கூறி, பிக்குகள் மற்றும் ஏனைய பங்கேற்பாளர்களை வாகனங்களில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொண்ட அதேவேளை, பொலிஸ் இந்த ஊர்வலத்தை அனுமதித்தது. ஊர்வலத்தில் சென்ற வாகனங்கள் மீது முஸ்லிம்கள் கற்கள் எறியத் தொடங்கியதாலேயே மோதல்கள் வெடித்ததாக போலீஸ் கூறிக்கொள்கின்றது.

அளுத்கமைக்கு அருகே வெலிவிட்டிய கிராமத்தை சேர்ந்த மொஹமட் இஸ்லாம், 38, மொஹமட் சிராஸ், 30, ஆகிய இரண்டு முஸ்லிம்கள் தலையில் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். அளுத்கமையில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவில் துண்டுவ என்ற கிராமத்தை கூட குண்டர்கள் தாக்கினர். டஜன் கணக்கான முஸ்லிம்கள் காயமுற்றுள்ள போதிலும் தங்கள் பாதுகாப்பு கருதி அவர்கள் மருத்துவமனைக்கு செல்லவில்லை. சுமார் 30 முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்களும் களுத்துறை மாவட்டத்தில் நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



மருத்துவமனையில் உள்ள முஸ்லீம் இளைஞர்

அரசாங்கமும் போலீசும் படுகொலைகள் நடக்க அனுமதித்துள்ளன. போலீஸ் கமாண்டோக்கள் தாக்குதல் நடப்பதை பார்த்துக்கொண்டிருந்ததாக நேரில் கண்டவர்கள் உலக சோசலிச வலைத் தள (WSWS) நிருபர்களிடம் கூறினார். ஊரடங்கு அமுலில் இருந்தபோது கூட, குண்டர்கள் நடமாடிக்கொண்டு கடைகளை கொள்ளையடித்துள்ளனர்.

நேற்று மதியம், ஜாதிக ஹெல உறுமய தலைவரும் அமைச்சரவை அமைச்சருமான சம்பிக்க ரணவக, பிக்குகள் மத பிரார்த்தனை செய்ய அவர்களுடன் சேர்ந்து காயமடைந்த சிங்கள குண்டர்களை ஆறுதல்படுத்தினார்.



காயமடைந்த குண்டர்களுடன் வெள்ளை உடையில் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக

நேற்றும் சிங்கள கும்பல்கள் தர்கா நகருக்கு செல்ல மீண்டும் முயற்சித்ததுடன், மற்ற பகுதிகளுக்கும் பதட்டநிலை பரவியது. செய்தி ஊடக தகவல்களின்படி, மத்திய மாகாணத்தில் மாவனல்லையிலும் மத்திய மலையக மாவட்டமான பதுளையிலும் சில கடைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

அரசாங்கம், மேலும் வன்முறையை தடுக்க ஒரு "பொறிமுறையை" தயார்செய்வதன் பேரில், பிரதமர் டி.எம். ஜயரத்ன தலைமையில் ஒரு சிறப்பு கூட்டத்தை அறிவித்தது. முஸ்லீம் மற்றும் ஏனைய மத தலைவர்களுடன் பல அமைச்சரவை அமைச்சர்களும் இதில் கலந்துகொண்டனர். இது ஒரு முழுமையான மூடிமறைப்பாகும். அரசாங்கம் பொதுபல சேனாவுடனும் ஏனைய அதிதீவிரவாத அமைப்புகளுடனும் நெருக்கமான தொடர்புகளை கொண்டுள்ளது. கொழும்பு டெலிகிராப் வலைத் தளம், வன்முறையை தூண்டிவிட்ட பிக்கு ஞானசாரவும் இந்த சிறப்பு கூட்டத்தில் கலந்துகொண்டதாக செய்தி வெளியிட்டுள்ளது.

சமீபத்திய வன்முறையானது ஒரு விரவிவடையும் வடிவத்தின் பாகமாக உள்ளது. அளுத்கமையிலேயே கூட, ஏற்கனவே ஒரு முஸ்லீம் கடை எரிக்கப்பட்டிருந்தது. இன்னும் பரந்த அளவில், கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுபல சேனா, ராவண பலகாய (இராவணன் படை) மற்றும் சிஹல ராவய (சிங்களம் எதிரொலி) அமைப்புகளால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மட்டும், பொதுபல சேனா பல உச்சகட்ட அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் 9, இன மற்றும் மத ஒற்றுமைக்காக ஒரு எதிர் பௌத்த குழு நடத்திய செய்தியாளர் மாநாட்டை அது குழப்பியது. போலீஸ் அதிகாரிகள் ஒப்புதலுடன் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, ஞானசார அந்த குழுவின் தலைவரான ஒரு பிக்குவுடன் சண்டையிட்டார். ஏப்ரல் 22, அந்த எதிர் பிக்கு ஒழிந்திருப்பதாக கூறிக்கொண்டு பொதுபல சேனா கும்பல் ஒரு முஸ்லீம் அமைச்சரின் அலுவலகத்தில் தேடுதல் நடத்தியது.

தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராஜபக்ஷ, தனது ட்வீட்டர் செய்தியில்: "அளுத்கமை சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கு சட்டப்படி விசாரணைகள் நடத்தப்படும்," என்றார். "யாரும் சட்டத்தை கையில் எடுக்க அரசாங்கம் அனுமதிக்காது. நான் அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் செயற்படவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றேன்," என அவர் மேலும் கூறியுள்ளார்.

இது சுத்த பாசாங்குத்தனம் ஆகும். சிங்கள-பெளத்த பேரினவாதிகள் எல்லா சட்டத்தையும் புறக்கணித்து, தண்டனையிலிருந்து விலக்களிப்புடன் செயற்படுகின்றனர். கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு "அனைத்து தரப்புக்கும்" அழைப்பு விடுப்பதன் உண்மையான அர்த்தம், வன்முறையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்கள் மீதே பழிபோடுவதாகும். இராஜபக்ஷவும் அவரது சகோதரரும் பாதுகாப்பு செயலருமான கோட்டாபய இராஜபக்ஷவும், இந்த அதிதீவிரவாத குழுக்களை ஆதரப்பதோடு பெளத்த ஸ்தாபனத்துக்கு சார்பான அவர்களது கோரிக்கைகளை செயல்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

முஸ்லீம் விரோத உணர்வை தூண்டிவிட பௌத்த அதிதீவிரவாதிகளை பயன்படுத்தும் அதேவேளை, இராஜபக்ஷவும் அவரது அரசாங்கமும் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு புதுப்பிக்கப்பட்டு வருவதாக கூறிக்கொண்டு, பெருகிய முறையில் தமிழர் விரோத இனவாதத்தை நாடுகின்றனர்.

அரசாங்கம் செயல்படுத்தும் சிக்கன நடவடிக்கைகளுக்கு உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சி கண்டுவருவதையிட்டு அது அச்சமடைந்துள்ளது. மிக சமீபத்தில், தொழிற்சங்கங்கள் கட்டுப்படுத்தி வைத்திருந்த போதிலும், மின்சார சபை ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். அரசாங்கத் துறை முழுவதும், ஓய்வூதிய பணிக்கொடையை குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை எதிர்த்து ஊழியர்கள் போராட்டங்கள் நடத்தினர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட பல்கலைக்கழக மாணவர்கள், அரசாங்கத்தின் கல்வி வெட்டுக்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

அளுத்கம வன்முறைகள், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கையாகும். மீண்டும், 1948ல் உத்தியோகபூர்வமாக சுதந்திரம் அடைந்ததில் இருந்து அடுத்தடுத்து செய்தது போல், சிங்கள ஆளும் கும்பல்கள், உழைக்கும் மக்களை பிளவுபடுத்தி, அதன் விளைவாக வெடிக்கும் மோதல்களை தனது பொலிஸ்-அரச வழிமுறைகளை உக்கிரமாக்குவதற்கு திட்டமிட்டு பேரினவாதத்தை நாடுகின்றன. தொழிலாளர்கள், முஸ்லிம்கள் மீதான இழிந்த இனவாத தாக்குதலை கண்டனம் செய்வதோடு இன பிளவுகளை கடந்து தங்களது போராட்டங்களை ஐக்கியப்படுத்தி, இலங்கை மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பொது நலன்களை அடிப்படையாக கொண்ட ஒரு சோசலிச வேலை திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காகப் போராட வேண்டும்.