சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka’s war crimes and the US “human rights” charade

இலங்கையின் போர் குற்றங்களும் அமெரிக்கவின் "மனித உரிமைகள்" பம்மாத்தும்

By K. Ratnayake
20 February 2014

Use this version to printSend feedback

ஒபாமா நிர்வாகம், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தக் கோரி, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) மார்ச் மாத கூட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தீர்மானமொன்றை முன்வைப்பதாக அறிவித்தது. 2009 மே மாதம் முடிவுக்கு வந்த, பிரிவினைவாத தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த போரின் இறுதி மாதங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மீதே இந்த தீர்மானம் கவனம் செலுத்தப்படவுள்ளது.

ஆட்சியில் இருந்த இலங்கை அரசாங்கங்கள், விடுதலைப் புலிகளுடன் 26 ஆண்டு காலமாக முன்னெடுத்த யுத்தத்தின் போது நடந்த போர் குற்றங்களுக்கு நேரடி பொறுப்பளிகளாக இருந்தபோதிலும், ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் முன்னெடுக்கப்பட்ட உள்நாட்டுப் போர், மேலும் கொடூரமான திருப்பத்தை எடுத்தது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படுவதற்கு முந்தைய மாதங்களில் 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. நிபுணர் குழுவின் 2011 அறிக்கை மதிப்பிட்டுள்ளது.

இராஜபக்ஷவும் அவரது அமைச்சர்களும், ஒரேயடியாக ஐ.நா. அறிக்கையை நிராகரிப்பதோடு, தமிழ் மக்களை "விடுதலை செய்வதற்கானஇராணுவத்தின் "மனிதாபிமான நடவடிக்கை" என அவர்கள் விவரிப்பதில் எந்த போர் குற்றமும் நிகழவில்லை என்றும் மறுக்கின்றனர். அரசாங்கம் மறுத்த போதிலும், தீர்மானத்தை நிறுத்துமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு அவநம்பிக்கையான வேண்டுகோள் விடுப்பதோடு, அது நிறைவேறுவதை தடுப்பதற்காக சர்வதேச ஆதரவை பெற முயற்சிக்கின்றது. இலங்கைக்குள், தனது அரசாங்கம் கொழும்பில் ஆட்சி மாற்றத்திற்கான "ஒரு சர்வதேச சதியால்" பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இராஜபக்ஷ நாட்டுப்பற்றையும் தமிழர் விரோத உணர்வையும் தூண்டிவிட முயற்சிக்கின்றார்.

இராஜபக்ஷ சந்தேகத்திற்கு இடமின்றி குற்றங்களில் சம்பந்தப்பட்டிருப்பதோடு, வாஷிங்டனின் போலி "மனித உரிமைகள்" பிரச்சாரத்தில் எந்த நம்பிக்கையும் வைக்கக் கூடாது. அமெரிக்காவானது ஈராக் அல்லது லிபியா அல்லது சிரியாவில் செயற்பட்டதை விட அதிகமாக இலங்கை போர் குற்ற விவகாரத்தில் அக்கறை காட்டிவிடவில்லை. இந்த "மனித உரிமைகள்" நாடகம், வெறுமனே உலகம் முழுவதும் அதன் சூழ்ச்சிகள், தூண்டுதல்கள் மற்றும் ஆக்கிரமிப்பு போர்களுக்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திய கருத்தியல் பதாகை மட்டுமே. உண்மையில், இராஜபக்ஷ அரசாங்கமும் கொழும்பு ஊடகமும், அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் மீதான அதன் ஆக்கிரமிப்பில் மேற்கொண்டவற்றை சுட்டிக் காட்டுவதன் மூலம், இலங்கை இராணுவத்தின் சித்திரவதை, சட்டவிரோத கைதுகள், பொதுமக்கள் கொலைகள் மற்றும் ஏனைய மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்துகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இராஜபக்ஷ அரசாங்கம் விடுதலை புலிகளுடனான போர் நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து, 2006ல் இராணுவ தாக்குதல்களை புதுப்பித்தபோது, வாஷிங்டன் அதை முழுமையாக ஆதரித்தது. இந்தியா மற்றும் சீனாவுடன் சேர்ந்து புலிகளை கண்டனம் செய்த அதே வேளை, அமெரிக்கா இலங்கை இராணுவத்துக்கு இன்றியமையாத இராணுவ உதவிகளை வழங்கியதுடன், அதன் அட்டூழியங்கள் பற்றி ஆதாரங்கள் குவிந்த போதும் மௌனமாக இருந்தது. அமெரிக்க புலிகளின் ஆதரவாளர்கள் மற்றும் நிதி வழங்குனர்களை வேட்டையாடியதன் மூலம், புலிகள் மீது தனது சொந்த தடையை அமுல்படுத்தயிருந்ததோடு, அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியத்தையும் பலப்படுத்தியது.

அமெரிக்க மற்றும் அதன் ஐரோப்பிய பங்காளிகளும், புலிகள் தோல்வியை நாடுவது தெளிவானதை அடுத்தே, இலங்கை இராணுவத்தின் "மனித உரிமை" மீறல்கள் பற்றி அக்கறை காட்டத் தொடங்கியன. ஒபாமா நிர்வாகம், இலட்சக்கணக்கான தமிழ் பொது மக்களின் தலைவிதி பற்றி கவலைப்பட்டிருக்கவில்லை. மாறாக, இராஜபக்ஷ அரசாங்கத்திற்கு இராணுவ தளவாடங்கள், கடன்கள் மற்றும் உதவி வழங்குனராக சீனா செல்வாக்குப் பெற்றிருந்ததை பற்றியே அது கவலைகொண்டிருந்தது.

"இலங்கை: போரின் பின்னர் அமெரிக்க மூலோபாயத்தை வரைதல்," என்ற டிசம்பர் 2009 அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு குழு அறிக்கை, “இந்த மூலோபாய நகர்வு [சீனா நோக்கி இலங்கை], பிராந்தியத்தில் அமெரிக்க நலன்களுக்கு விளைவுகளை ஏற்படுத்தும்," என்று எச்சரித்திருந்தது. அது அமெரிக்க இலங்கையை "இழக்க" முடியாது என்று அப்பட்டமாக முடிவு செய்திருந்ததோடு அமெரிக்க நலன்களை பாதுகாக்க "அரசியல், பொருளாதார  மற்றும் பாதுகாப்பு கருவிகளை நகர்த்தும் ஒரு ஒருங்கிணைந்த மூலோபாயத்துக்கு" அழைப்பு விடுத்தது. இப்போது வெளிவிவகாரச் செயலாளராக உள்ள ஜோன் கெர்ரி அந்த செனட் குழுவுக்கு தலைமை தாங்கினார்.

இலங்கை மீது ஒபாமா நிர்வாகத்தின் நிலைப்பாடு, பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கை கீழறுப்பதோடு தற்போதைய அமெரிக்க மேலாதிக்க முயற்சியை உறுதிப்படுத்த சீனாவை இராணுவரீதியில் சுற்றிவளைக்கும் ஒரு விரிவான திட்டமான, "ஆசியாவிற்கு மீண்டும் திரும்புதல்" என அழைக்கப்படும் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் அபிவிருத்தியடைந்து வரும் நகர்வுகளுடன் பிணைந்துள்ளது. ஒபாமா நிர்வாகம் ஆசியாவில் அமெரிக்க இராணுவப் படைகளை மீண்டும் கட்டியெழுப்பி சீரமைப்பு செய்வதோடு சீனாவை தனிமைப்படுத்தும் வழிமுறையாக, கிழக்கு சீனா மற்றும் தெற்கு சீன கடல் போன்ற கடல் சார்ந்த சர்ச்சைகளை ஆபத்தான வெடிப்பு நிலைக்கு தூண்டி வருகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக, வாஷிங்டன் கொழும்பு மீது ஒரு நிலையான அழுத்தத்தை பேணி வருகிறது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அதன் முந்தைய தீர்மானங்கள், இலங்கை இராணுவத்தின் யுத்த குற்றங்களை மூடி மறைக்க உருவாக்கப்பட்ட இராஜபக்ஷ அரசாங்கத்தின் சொந்த போலியான கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு, நம்பகத் தன்மையை கொடுத்தது. ஆனால், இப்பொழுது, ஒரு கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா, போர் குற்றங்கள் தொடர்பான ஒரு சர்வதேச விசாரணையை ஸ்தாபிப்பதை சமிக்ஞை செய்துள்ளது. இந்த நகர்வு, போர் குற்றங்கள் சம்பந்தமான ஒரு சர்வதேச விசாரணை நீதிமன்றத்தில் இராஜபக்ஷவை நிறுத்தக் கூடும்.

அமெரிக்க அச்சுறுத்தல் பற்றி விழிப்புடன் உள்ள அதேவேளை, இராஜபக்ஷ ஒரு ஆழ்ந்த பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதோடு பொருளாதார உதவி மற்றும் முதலீட்டுக்காக சீனாவை பெரிதும் நம்பியுள்ளார். தனது ஆட்டங்கண்டுள்ள நிலையை ஸ்திரப்படுத்தும் ஒரு முயற்சியாக, “சர்வதேச சதிஎன்ற தனது கூற்றை தூக்கிப் பிடிக்கும் இராஜபக்ஷ, மேற்குலகம் தன்னை "மின்சார நாற்காலியில்" இருத்த சதி செய்கின்றது எனப் பிரகடனம் செய்கின்றார். அரசாங்கத்தை எதிர்க்கும் அல்லது விமர்சிக்கும் எவரும் "தேசத் துரோகிகள்" என வகைப்படுத்தப்படுகின்றனர்.

வலதுசாரி ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) தலைமையிலான எதிர்க்கட்சிகள்
, அமெரிக்க "மனித உரிமைகள்" தாக்குதலுடன் அணிசேர்ந்துள்ளதோடு சர்வாதிகார இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு எதிரான "ஜனநாயகத்துக்கான" தமது சொந்த போலி பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றன. 1983ல் புலிகளுக்கு எதிரான போரை தொடுத்து, இராணுவத்தின் குற்றங்களை அனைத்தையும் பாதுகாத்த யூஎன்பீ, இப்போது "அரசாங்கத்தின் தவறுகளுக்கு நாடு விலை கொடுக்க வேண்டியதில்லை" என்று அறிவிக்கிறது. இது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக இராஜபக்ஷவுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளுக்கு யூஎன்பீயின் ஆதரவையே சமிக்ஞை செய்கின்றது
.

புலிகளின் பாராளுமன்ற ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, சர்வதேச யுத்த குற்ற விசாரணைக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதற்கு கைம்மாறாக, முதலாளித்துவ தமிழ் கூட்டமைப்பு, நாட்டின் தமிழ் உயரடுக்கின் நலன்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அதிகாரப் பகிர்வுப் பொதிக்கு வாஷிங்டனின் ஆதரவைப் பெற முயற்சிக்கின்றது. இராஜபக்ஷ ஆட்சிக்கு வர உதவி செய்து, அவரது யுத்தத்தை ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபீ), இப்போது அமெரிக்க தலையீட்டுக்கு நாட்டை திறந்துவிட்டமைக்காக அரசாங்கத்தின் "மனித உரிமைகள்" சாதனையை விமர்சிக்கிறது.

அமெரிக்க "மனித உரிமைகள்" நாடகத்தின் மிக இழிந்த ஆதரவாளர்கள், போலி இடது அமைப்புக்களான நவ சம சமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும் (யூஎஸ்பீ) ஆகும். இவை யூஎன்பீ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அடிமைத்தனமாக ஊக்குவிக்கின்றன. கடந்த வாரம், நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, இலங்கையில் நியாயம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான வாஷிங்டனின் அழைப்பு எனப்படுவதற்கு தனது குரலையும் சேர்க்க, அடுத்த மாதம் ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்துக்கு செல்லவுள்ளதாக அறிவித்தார்.

தொழிலாள வர்க்கம், அமெரிக்கவின், கொழும்பிலும் மற்றும் சர்வதேச அளவிலும் உள்ள அதன் பங்காளிகளின் திட்டங்களை நிராகரிக்க வேண்டும். அதே சமயம், தற்போதைய மற்றும் கடந்தகால இலங்கை அரசாங்கங்களின் போர் குற்றங்களை தொழிலாளர்கள் கண்டனம் செய்ய வேண்டும். தமிழர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான அவற்றின் தாக்குதல்கள், எப்போதும் முழு தொழிலாள வர்க்கத்தினதும் சமூக நிலைமைகள் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதலின் பாகமாகவே இருந்து வந்துள்ளன.

கொழும்பில் உள்ள முழு அரசியல் ஸ்தாபனமும், யுத்த குற்றங்கள் மற்றும் யுத்தத்தின் போது கட்டியெழுப்பப்பட்ட பொலிஸ் அரச வழிமுறைகளுக்கு பொறுப்பாகும். 1948ல் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடம் இருந்து சுதந்திரம் என அழைக்கப்பட்டது கிடைக்கப்பெற்ற பின்னர் இருந்தே, இலங்கை முதலாளித்துவமானது தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அதன் பிற்போக்கு ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தமிழர் விரோத பேரினவாதத்தை பயன்படுத்தி வந்துள்ளது.

தொழிலாள வர்க்கம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்க தனது சொந்த மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இது ஒரு சோசலிச முன்னோக்குக்கான ஐக்கியப்பட்ட போராட்டத்தின் அடிப்படையில், இலங்கை, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களை சுயாதீனமாக அணிதிரட்டுவதோடு பிணைந்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஏகாதிபத்தியத்திற்கு முற்றிலும் தாழ்ந்து செயற்படும் முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவிடம் இருந்தும், இலங்கை தொழிலாள வர்க்கம் அரசியல் சுயாதீனத்துக்காகப் போராட வேண்டியதை அர்த்தப்படுத்துகின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி, முதலாளித்துவம் மற்றும் அதன் அரசியல் பாதுகாவலர்களுக்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் பேரில், தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் அனைத்து வடிவங்களையும் நிராகரிக்குமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கின்றது. சோசலிச சமத்துவ கட்சி, தெற்கு ஆசியா மற்றும் சர்வதேச அளவில் சோசலிச குடியரசு ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்காகப் போராடுகிறது. நாம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவ கட்சியில் இணைந்து அதைக் கட்டியெழுப்புமாறு தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.