சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

What the Western-backed regime is planning for Ukrainian workers

மேற்கத்திய ஆதரவிலான ஆட்சி உக்ரேனிய தொழிலாளர்களுக்காக என்ன திட்டமிடுகிறது

Julie Hyland
15 March 2014

Use this version to printSend feedback

ஒரு "ஜனநாயக புரட்சியின்" இடைவிடாத வார்த்தைஜால துதிபாடல்களுக்குப் பின்னால், உக்ரேனில் புதிதாக நிறுவப்பட்டுள்ள முன்னாள் வங்கியாளர்கள், பாசிசவாதிகள் மற்றும் செல்வந்த மேற்தட்டுக்களின் ஒரு அரசாங்கம் கடுமையான சிக்கன முறைமைகளுக்குத் தயாரிப்பு செய்து வருகின்றது.

வரையப்பட்டு வரும் திட்டங்கள் "கிரேக்க மாதிரியில்", அதாவது சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் (EU) திணிக்கப்பட்ட கொடூரமான வெட்டு திட்டங்களைப் போன்றிருப்பதாக பகிரங்கமாக விவரிக்கப்படுகின்றன. அத்திட்டங்கள் கிரேக்கத்தின் பொருளாதாரத்தை ஐந்தாண்டுகளில் சுமார் 25 சதவீத அளவிற்கு பொறிந்து போக செய்ததோடு, வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமையை பாரியளவில் அதிகரித்துள்ளது.

எவ்வாறிருப்பினும், உக்ரேன் விடயத்தைப் பொறுத்தமட்டில், இந்த சமூக சீரழிவானது முதலாளித்துவ மீட்சியின் புவிசார் பொருளாதாரத்தால் ஏற்கனவே வதைபட்டுள்ள ஒரு நாட்டிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது. சமீபத்திய சம்பவங்களுக்கு முன்னரே கூட, உக்ரேன் தனிநபர் வருவாய் சார்ந்த உள்நாட்டு மொத்த உற்பத்தியின் (GDP per capita) அடிப்படையில், ஈராக், டோங்கா மற்றும் பொஸ்னியா-ஹெர்செகோவினா ஆகியவற்றிற்குப் பின்னால் 80வது மிக வறிய நாடாக இருந்தது.

அதன் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியினருக்கும் மேலானவர்கள் —11 மில்லியன் மக்கள் உத்தியோகபூர்வ வறுமை கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர், அது ஒரு அற்பத்தொகையான மாதத்திற்கு 1,176 UAH ($127) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருந்த போதினும், நிலைமையோ உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் குறிப்பிடுவதைக் காட்டிலும் மிகவும் மோசமாக உள்ளது. வெறும் 1,218 UAH ($131) சராசரி மாத ஊதியத்தோடு, அல்லது ஒரு மணி நேரத்திற்கு 79 அமெரிக்க சென்டுகளில், மில்லியன் கணக்கானவர்கள் வாழ்வாதார அளவிற்கு சற்று மேலே வாழ்ந்து வருகின்றனர்.

பெரும் எண்ணிக்கையிலான பதிவு-செய்யாத மற்றும் தகுதி குறைந்த வேலைகளில் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்கள், 7.5 சதவீதம் என்ற உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை விகிதத்திலிருந்து மறைக்கப்படுகின்றனர். அனைத்திற்கும் மேலாக, பத்து ஆயிரக் கணக்கானவர்கள் வேலை தேடி நாட்டை விட்டு வெளியேறி வருகின்ற நிலையில், அதிகளவிலான புலம்பெயர்வு, குறைத்துக் காட்டப்படுகிறது. உக்ரேனிய மக்கள் தொகையில் 15 சதவீதத்திற்கு சமமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறிமை, அந்நாட்டை உலகின் பெரியளவில் புலம்பெயர்ந்தவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக மாற்றியது. சோவியம் ஒன்றியம் கலைக்கப்பட்ட 1991க்கும், 2010க்கும் இடையே உக்ரேனிய மக்கள் தொகை 51.7 மில்லியனில் இருந்து 45.9 மில்லியனாக சுருங்கியது.

புலம்பெயர்வுகளுக்கு அப்பாற்பட்டு, மக்கள்தொகையின் சரிவானது உக்ரேனின் பிறப்பு விகிதம் குறைந்ததன் ஒரு விளைவாகும், அது உலகிலேயே மிக குறைந்த பிறப்பு விகிதங்களில் ஒன்றாக உள்ளது. துன்பியலான விதத்தில், மருத்துவ நெருக்கடியின் பாகமாக, அந்நாடு ஐரோப்பாவிலேயே அதிகளவில் பிரசவகால குழந்தை இறப்பு விகிதத்தையும் கொண்டுள்ளது. மருத்துவ நெருக்கடியின் பாகமாக, தொற்று நோயாக HIV/AIDS பரவியதைக் கண்டுள்ளது, 2012இல் அங்கே நாளொன்றுக்கு 57 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டனர்.

HIV/AIDS பரவியதில் வறுமை ஒரு பிரதான பாத்திரம் வகித்ததுகுறிப்பாக ஏற்கனவே மந்தநிலைமை போன்ற நிலைமைகளில் இருந்த, கிழக்கு மற்றும் தெற்கின் முன்னாள் கனரக தொழில்துறை பிராந்தியங்களின் சில பகுதிகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

வறுமையை அடுத்துபோதை பயன்பாடு மற்றும் குடிபழக்கத்திலிருந்து விபச்சாரம் வரையில்அனைத்து விதமான சமூக நோய்களும் வெடித்து வந்துள்ளன, விபச்சாரத்தில் பருவமடையாத ஆறுபேரில் ஒருவர் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது. உக்ரேன் ஆள்கடத்தல்களுக்கான (human trafficking) ஒரு பிரதான மையமாக விளங்குகின்ற நிலையில், இதை பாலியல் சுரண்டலுக்காக மற்றும் கட்டாய உழைப்பைப் பெற என்ற இந்த இரண்டு நோக்கங்களுக்காக என்பது ஒரு குறைமதிப்பீடாகும்.

இந்த நிலைமைகள் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் எதிர்புரட்சிகர பாத்திரத்தின் மற்றும் 1917 அக்டோபர் புரட்சியை அது காட்டிக்கொடுத்தமையின் ஒரு நேரடி விளைவுகளாகும், அவை சோவியத் ஒன்றியத்தின் சிதைவு மற்றும் முதலாளித்துவத்தின் மீட்சியில் அதன் உச்சக்கட்டத்தை எட்டியது.

அதன் ஒரு விளைவாக, ரஷ்யா மீதான அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய வடிவமைப்புகளில் உக்ரேன் ஒரு பகடைக்காயாக சுருக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு யுத்தம் மற்றும் ஓர் உலகளாவிய இராணுவ மோதலின் அபாயங்களுக்கு மேலதிகமாக, ரஷ்யாவிடமிருந்து உக்ரேனை விலக்கி இழுத்து வருவதற்கான மேற்கத்திய ஆதரவிலான முயற்சிகள், 2004இன் ஆரெஞ்ச் புரட்சி" என்றழைக்கப்படுவதற்கு பின்னர் முதன்முறையாக, அதன் பிறகு 2008 உலகளாவிய முதலாளித்துவ நிலைமுறிவை அடுத்து, மக்களிடையே கூடுதலாக பெரும் சமூக அவலங்களை ஏற்படுத்தி உள்ளன.

சான்றாக, 2008 மற்றும் 2009க்கு இடையில், உக்ரேனின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15.1 சதவீத அளவிற்கு சரிந்தது, அதேவேளையில் வேலைவாய்ப்பின்மை 9.4 சதவீதத்திற்கு மூன்று மடங்கானது. முன்னாள் அரசு சொத்துக்களை திருடி தங்களைத்தாங்களே செழிப்பாக்கி கொண்ட முன்னாள் ஸ்ராலினிச அதிகாரத்துவவாதிகளும், மாஃபியா செல்வந்த மேற்தட்டுக்கள் அனைத்தும் அதே காலக்கட்டத்தில் அரசு சொத்துக்களை சூறையாடுவதை மற்றும் மேலதிகமாக முன்பில்லாத அளவிற்கு பெரியளவில் சொந்த சொத்துக்களைக் குவிப்பதையும் தொடர்ந்துள்ளன.

இன்னும் மோசமானவை வர உள்ளன. உக்ரேனின் மொத்த கடன் தற்போது ஏறக்குறைய 80 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து டாலருக்கு எதிராக அதன் செலாவணி 20 சதவீத அளவிற்கு சரிந்துள்ளதோடு சேர்ந்து, குறைந்துவரும் செலாவணி கையிருப்புகள் மற்றும் அதிகரித்துவரும் மூலதன வெளியேற்றம் ஆகியவற்றோடு, உக்ரேனின் கடன் விரைவாக இன்னும் அதிகமாக உயரும்.

IMF மற்றும் EU வெறும் 15 பில்லியன் டாலர் "மீட்சி" பொதி வழங்க வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இது மேற்கத்திய வங்கிகளுக்கு திருப்பி கொடுக்க வேண்டிய தொகைக்கே போதாது என்பது மட்டுமல்ல, இது ஓய்வூதிய செலவினங்களில் மற்றும் எரிபொருள் மானியங்களில் பாரிய வெட்டுக்களோடும் பிணைந்துள்ளது. 1998இல் இருந்து, உக்ரேன் IMFஇன் பல்வேறு கட்டமைப்பு சீர்திருத்த" திட்டங்களில் ஈடுபட்டுள்ளது, அவை அனைத்தும் ஒராண்டிற்குள் கைவிடப்பட வேண்டி இருக்கும் ஏனென்றால் அவற்றின் விளைவுகள் சமூகரீதியில் மிகவும் வெடிப்பார்ந்தவையாக கருதப்படுகின்றன.

இதைத் தான் முன்னாள் பிரதம மந்திரி Mykola Azarov, கடந்த ஆண்டு நவம்பர் 20இல் முன்னுக்கு கொண்டு வரப்பட்ட புதுப்பிக்கப்பட்ட IMF கடன் திட்டத்தின் "முற்றிலும் கடுமையான நிபந்தனைகள்" என்று வர்ணித்தார். அத்திட்டத்தால், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் உக்ரேனுக்கும் இடையிலான ஐக்கிய உடன்படிக்கையில் அரசாங்கம் கையெழுத்திடுவதை நிறுத்தி வைக்க முடிவெடுக்கும் நிலைக்கு சென்றது. ஆனால் நேரெதிர்விதமாக, அந்த முடிவு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஊக்கப்படுத்தப்பட்ட எதிர்ப்புகளுக்கும், இறுதியாக ஆட்சிக் கவிழ்ப்புக்கும் அதுவொரு போலிக்காரணமாக ஆனது.

மேற்கத்திய அதிகாரங்கள் எந்த தருணத்தை உருவாக்க இந்தளவிற்கு வேலை செய்தனரோ அந்த தருணத்தைக் கைப்பற்ற தற்போது நோக்கம் கொண்டுள்ளன. உக்ரேனிய அரசாங்கத்தின் ஒரு முன்னாள் ஆலோசகரான ஆண்டர்ஸ் அஸ்லூண்டு, பெப்ரவரியில் பைனான்சியல் டைம்ஸில் எழுதுகையில், மேற்கத்திய ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பை சிக்கன முறைமைகளைத் திணிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக வரவேற்றார். உக்ரேனிய நெருக்கடியானது கடந்த காலத்தில் "இதேபோன்ற நெருக்கடியை முகங்கொடுத்துள்ள பல நாடுகளை விட... தீவிர சீர்திருத்த திட்டத்தை அங்கே சுலபமாக நடத்த முடியும்" என்பதைக் குறிப்பதாக அவர் எழுதினார்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வக்காலத்து வாங்கும் நியூ யோர்க் டைம்ஸ், “உக்ரேனிய பொருளாதாரத்தைச் சரிசெய்தல்: அந்நாட்டின் தலைவர்கள் தவறான எரிசக்தி மற்றும் செலாவணி விகித கொள்கைகளை சீர்திருத்த வேண்டும்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒரு தலையங்கத்தில் சவுக்கை சுழற்றியது. அந்த தலையங்கம் "வீணாகும் எரிசக்தி மானியங்கள்" குறித்து குறை கூறியதோடு, “பெரும்பாலான நுகர்வோர் மீது எரிவாயு மீதான சில்லறை விற்பனை விலையை அதிகரிக்க" மேற்கத்திய ஆதரவில் நிறுவப்பட்ட கைப்பாவை அரசாங்கம் வேலை செய்ய வேண்டுமென கோரியது.

எரிசக்தி மற்றும் நிலக்கரித்துறை மந்திரியை மற்றும் உக்ரேன் தேசிய வங்கியின் மற்றும் எரிவாயு வினியோக நிறுவனம் நாஃப்தோகேஸின் பிரதிநிதிகளைச் சந்தித்து, IMF குழு ஏற்கனவே கடந்த பதினைந்து நாட்களாக அதன் வேலைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் வேலைகள் "சிறப்பாக முன்னேறி வருவதாகவும்", புதிய அதிகாரிகள் "பொருளாதார சீர்திருத்தத்திற்கு" பொறுப்பேற்றிருப்பதாகவும் அது அறிவிக்கிறது.

இந்த சீர்திருத்தங்களில் மேலதிகமாக செலாவணி மதிப்பைக் குறைத்தல், பொதுச் செலவினங்களில் மற்றும் ஓய்வூதியங்களில் பிரதான வெட்டுக்கள் மற்றும், குறிப்பாக, அரசு எரிசக்தி மானியங்களை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவை உள்ளடங்கும். வெப்பநிலை 20 டிகிரி அளவிற்கு கீழே குறையும் ஒரு நாட்டில் எரிசக்தி மானியங்களை முடிவுக்கு கொண்டு வருதல் என்பது ஒரு வாழ்வா-சாவா விடயமாகும்.

பைனான்சியல் டைம்ஸ் குறிப்பிடுகையில், “பல்வேறு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அறுபதி அரசு துறைகள், அவற்றின் உக்ரேனிய எதிர்பலத்தை அவற்றின் பார்வையிலிருந்து மறுசீரமைக்கும் நோக்கில், இரட்டை உடன்படிக்கைகள் (twinning agreements) என்றழைக்கப்படுவதை ஏற்கனவே தீர்மானித்து விட்டதாக" எழுதியது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு 10 சதவீதம் பொறியுமென்று பொருளியல் வல்லுனர்களால் பகிரங்கமாக பேசப்படுகிறது. வெளியேறிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சிற்கு மாற்றாக வாஷிங்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி அர்செனி யாட்சென்யுக், “என்னுடைய நாட்டின் வரலாறில் மிகவும் வெறுக்கப்படும் பிரதம மந்திரியாக" தான் இருப்பார் என்பதை ஒளிவுமறைவின்றி கூறி உள்ளார்.

டோன்பாஸ் பிராந்திய ஆளுநராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட செல்வந்தர் செர்கெ தருதா, இந்த முறைமைகளை நடைமுறைப்படுத்துவதற்கான கால வரையறை குறித்து ஒரு குறிப்பை அளித்தார். தன்னைத்தானே ஒரு "நெருக்கடி-தடுப்பு மேலாளராக" கூறிக் கொண்டு, தாம் அந்த பதவியை வெறும் "ஆறு மாதங்களுக்கு அல்லது ஓராண்டிற்கு" மட்டுமே ஏற்பதாக அவர் தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “அந்த காலத்திற்குள் பலமான நபர்கள் அரசாங்கத்திற்குள் வரவேண்டுமென்று நான் விரும்புகிறேன், பின்னர் நான் அதை அவர்களுக்கு விட்டுவிட்டு விலகுவேன்,” என்றார்.

அவரது கருத்துக்கள், பாசிசவாதிகள் மற்றும் அதிதீவிர-வலது நாடாளுமன்றவாதிகளால் நிரம்பிய ஓர் அரசாங்கத்தோடு கையெழுத்திட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அதிகாரங்கள் ஏன் இந்தளவிற்கு விரும்புகின்ற என்பதன் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. ரஷ்ய-விரோத போராட்டங்களில் இருந்த மற்றும் இராணுவ பயிலகங்களில் இருந்த "செயல்பாட்டாளர்களைக்" கொண்ட 60,000 எண்ணிக்கையிலான பலமான தேசிய பாதுகாப்புப் படையை ஸ்தாபிக்க, வியாழனன்று, உக்ரேனிய நாடாளுமன்றம் வாக்களித்தது.

அந்த படை, புதிய பாதுகாப்பு தலைவரான பாசிச ஸ்வோபோடா கட்சியின் ஆண்ட்ரெ பரூபியின் மேற்பார்வையில் இருக்கும். பரூபி, 1990களின் தொடக்கத்தில் ஸ்தாபிக்கப்பட்ட உக்ரேனின் நவ-நாஜி சமூக-தேசிய கட்சியின் ஸ்தாபகராவார். அவரோடு துணையாக இருந்த திமெட்ரோ யாரோஷ், துணை இராணுவப்படை Right Sectorஇன் தலைவராவார். அது ஹிட்லரின் அதிரடி துருப்புகளுக்கு சமமாக உக்ரேனில் இருக்கும் ஒன்றாகும்.

மாஸ்கோவிற்கு எதிராக அதன் ஆத்திரமூட்டல்களில் மேற்கிற்கு ஆதரவு வழங்குவதற்கு கூடுதலாக, இத்தகைய கூறுபாடுகளின் பிரதான பொறுப்பு என்னவென்றால் உக்ரேனிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சர்வதேச மூலதனத்திற்கு சார்பாக ஒரு சமூக தாக்குதலை நடத்துவதாகும்.