சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: மகசீன் சிறையில் அரசியல் கைதி மரணமடைந்தார்

By Subash Somachandran
25 March 2014

Use this version to printSend feedback

பெப்ரவரி 24ம் திகதி, மகசீன் சிறைச்சாலையில் மரணமாடைந்த 43 வயதான விஸ்வலிங்கம் கோபிதாஸின் இறுதி நிகழ்வுகள், மார்ச் 2ம் திகதி அவரது சொந்த ஊரான யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியில் உள்ள அவரது தகப்பனாரின் இல்லத்தில் நடைபெற்றது.

இறுதிச் சடங்கின் போது இலங்கை இராணுவத்தின் புலனாய்வாளர்கள் மற்றும் ஏராளமான பொலிசார் வீட்டில் இருந்து மயானம் வரை குவிக்கப்பட்டிருந்தனர். சடலம் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட நாளில் இருந்து புலனாய்வாளர்களும் இராணுவத்தினரும், உறவினர்களையும் மரண நிகழ்வில் கலந்து கொள்ளும் பொதுமக்களையும் அச்சுறுத்தும் நோக்கில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இதயநோயின் தாக்கம் காரணமாகவே இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், விசாரணைகளின் போது இடம்பெற்ற சித்திரவதைகள் மற்றும் சிறைவாசத்தின் போது அரசாங்கப் படைகள் மற்றும் இனவாத போக்குடைய சக கைதிகளினதும் தாக்குதல்களே அவரின் உடல்நிலை மோசமடையக் காரணமாகும். இது ஒரு அரசியல் கொலைக்குச் சமமான மரணமாகும். சம்பதினம், அவரது உடல் மலசல கூடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

பிரித்தானிய குடியுரிமை பெற்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோபிதாஸ், கடந்த 2007ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கைக்கு வருகை தந்தபொழுது, விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டார். பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் கொழும்பு பயங்கரவாத தடுப்பு புலனாய்வுத் பிரிவில் தடுத்து வைத்துச் சித்திரவதை செய்யப்பட்டார். மூன்று வருடங்கள் நடந்த நீதிமன்ற விசாரணையின் பின்னர், 2012ம் ஆண்டில் ஐந்து வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். தண்டனை முடிவடைய இன்னும் ஒரு ஆண்டு இருக்கும் போதே, அவர் இவ்வாறு துன்பகரமாக மரணித்தார்.

தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, கோபிதாஸ் இரண்டு தடவைகள் நடைபெற்ற சிறைக்கலவரத்தில் சிக்கி பலமான தாக்குதல்களுக்கு ஆளானார். 2010ம் ஆண்டு சிறைச்சாலையில் உள்ள இந்துக் கோவிலில் வழிபாட்டில் ஈடுபட்டபொழுது மாவீரர் நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் எனக் கூறி, சிறை அதிகாரிகள் அவரை நிர்வாணமாக்கி கண்மூடித்தனமாகக் தாக்கினர்.

சித்திரவதைகள் மற்றும் தாக்குதல்களே இவரை ஒரு நோயாளியாக்கியது. தனது நோய்க்கு தகுந்த சிகிச்சை பெறுவதற்காக சிறைச்சாலை நிர்வாகத்திடம் அனுமதி கோரியபொழுதும் அதற்கான அனுமதியை வழங்காத காரணத்தால் நோயின் தாக்கம் அதிகரித்து இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இறுதி நாட்களில் அவர் ஒரு நரம்பியல் நிபுணரிடம் சிகிச்சை பெறுவதற்கான அனுமதியைக் கோரியிருந்தார்.

கோபிதாஸின் மரணம், இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் மீது தொடர்ச்சியாக இனவாத அடிப்படையில் இடம்பெறும் சித்திரவதைகள் மற்றும் படுகொலைகளின் தொடர்ச்சியாகும். 1983 தொடங்கி 2009 மே மாதம் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இனவாத யுத்த காலப் பகுதியில், நூற்றுக் கணக்கான தமிழ் இளைஞர்கள் விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். பயங்கரவாத தடைச் சட்டமானது ஒருவரை எதேச்சதிகாரமான முறையில் கைதுசெய்யவும் விசாரணையின்றி நீண்டகாலம் தடுத்து வைக்கவும், சித்திரவதையின் மூலம் பெறப்படும் ஒப்புதல் வாக்குமூலங்களை கைதிகளுக்கு எதிராகவே பயன்படுத்தவும் அனுமதிக்கின்றது.

யுத்தம் முடிந்து ஐந்து ஆண்டுகள் நெருங்குகின்ற போதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட பல நூறு இளைஞர்கள் விசாரணைகளோ குற்றச்சாட்டுக்களோ இன்றி இன்னமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர், சிலர் எட்டு வருடங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது கொடூரமான சிறைவாழ்க்கையில் எல்லா அடிப்படை மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட நிலையில் இழிவான முறையில் நடத்தப்பட்டு வருகின்றார்கள் என்பது, அடிக்கடி நிகழும் அரசியல் கைதிகளின் மரணத்தின் மூலம் தெளிவாகின்றது. 2012ல் இனவாதிகளால் வவுனியா சிறையில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சிறைக் கலவரத்தில் 28 வயது கணேசன் நிமலரூபன் மற்றும் 30 வயது மரியதாஸ் டில்ருக்சன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

யுத்தத்தின் இறுதியில் கைது செய்யப்பட்ட மற்றும் சரண்டைந்த 11,000 இளைஞர்கள், புனர்வாழ்வு நிலையம் என்னும் பெயரில் நடத்தப்பட்ட சிறை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டதோடு சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்கள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ள போதிலும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றனர்.

அரசாங்கம் சந்தேக நபர்களை மட்டுமன்றி, யுத்தம் முடிந்தவுடன் கிட்டத்ட்ட 3 லட்சம் தமிழ் பொது மக்களை வவுனியாவில்நலன்புரிநிலையம் என சொல்லப்பட்டதில் அடைத்து வைத்திருந்தது. இந்த நலன்புரி நிலையங்கள் இராணுவத்தால் நடத்தப்பட்டதுடன் முட்கம்பி வேலிகளால் சுற்றி அடைக்கப்பட்டிருந்தன.

விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோது, கோபிதாசின் உறவினர்கள் இலங்கை ஜனாதிபதி, பிரிட்டன் பிரதமர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவுக்கும் அவரை விடுவிக்குமாறு கோரி பல விண்ணப்பங்களை கொடுத்தபோதிலும், எந்தவிதமான பதிலையும் அவர்கள் வழங்கவில்லை. இறுதியில் அவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர், எஞ்சிய காலத்தில் பிரித்தானியா சிறையில் கழிப்பதற்கு அவர் விண்ணப்பித்திருந்திருந்தார். அதற்கும் அனுமதி கிடைக்கவில்லை.

இலங்கையில் மனித உரிமைகள் பற்றிப் போலியாக அக்கறைப்படும் பிரித்தானியா, கோபிதாஸின் விடுதலைக்கான எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், “கோபிதாஸ் சிறையில் இருக்கும் போது, அவருக்கு சகல உதவிகளும் வழங்கினோம். ஆனாலும் அவர் இறந்த போது அவரது குடும்பத்துக்கு நட்ட ஈடு வழங்கும் திட்டம் எம்மிடம் இல்லை, என இலங்கைக்கான பிரித்தானியத் தூதரக அதிகாரி தெரிவித்தார். எவ்வாறெனினும், கோபிதாஸ் நோயாளியாக இருக்கும் போது, சிறைக்குள் அவருக்கு முறையான சிகிச்சைகள் கிடைக்கவில்லை.

கோபிதாஸின் மரணம் தொடர்பாக எந்தவொரு வெகுஜன எதிர்ப்பும் தோன்றுவதை தடுக்கும் பொருட்டு அரசாங்கம் பொலிசையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்தியிருந்தது. கோபிதாசின் தந்தை கூறும்போது, “எனது மகன் மரணித்து விட்டார். இனி நாங்கள் கதைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. எனது ஏனைய பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. சடலம் கொண்டுவரப்பட்ட நாளில் இருந்து எங்களை இராணுவம் கண்காணித்து வருகின்றது. எனது மகனுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் எமது குடும்ப நிலமைகளைக் கருத்தில் கொண்டுதான் வெளிநாடு போனார்,” என்றார்

சிறையில் இரண்டு தடவைகள் ஏற்பட்ட கலவரத்தில் பலமாகத் தாக்கப்பட்டதாலேயே கோபிதாஸ் ஒரு இதய நோயாளியாக மாறியதாக அவரது சகோதரர் தெரிவித்தார். “சிறைக்குள் போகும் போது அவர் தேக ஆரோக்கியத்துடன் இருந்தார். அவருக்கு சிறையில் நல்ல சிகிச்சைகள் கிடைக்கவில்லை. சிகிச்சைக்கான அனுமதியை அவர் கேட்டிருந்தும் சிறை நிர்வாகம் அதை வழங்கவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் இவ்வாறு நடந்திருக்க முடியாது. நாங்கள் சில தடவைகள் அவரை சென்று பார்த்திருக்கின்றோம். அடிக்கடி சென்று பார்க்க எம்மால் முடியாமல் போனது. அவரது நீதிமன்ற வழக்கினை நடத்துவதற்காக நாங்கள் பல இலட்சங்களை செலவழித்தோம், ஆனாலும் எங்களுக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை, என அவர் கூறினார்.

மரணவீட்டில் கலந்து கொண்ட ஒருவர், தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட நாடு என்பதுபோல காட்டிக் கொள்ளும் பிரிட்டன் ஏன் இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை சம்பந்தமாக ஒரு நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை, எனக் கேட்டார். “டேவிட் கமரோன் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பன ஆர்ப்பாட்டங்களை நடத்தி, அவர் தமிழ் மக்களைக் காப்பாற்றுபவர் என்பது போல் காட்டின. இது எல்லாம் போலி நடவடிக்கை என்பதை நாங்கள் உணர்கின்றோம். எல்லா வெளிநாடுகளும் தங்களின் சொந்த நலனின் பேரில் தான் இந்த நாட்டில் தலையீடு செய்கின்றன. தமிழ் மக்களின் நலனுக்காக அல்ல, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக என்ன அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்த்து? வெளிநாட்டுப பிரமுகர்கள் வரும்போது, ஆர்ப்பாட்டம் நடத்தினால் மட்டும் போதுமா?” என அவர் மேலும் வினவினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புஇந்த மரணம் தொடர்பாக சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்எனக் கோரிக்கை விட்டுள்ளது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பில் இந்த மரணத்தைக் கண்டித்து ஒரு ஆர்ப்பாட்டத்தினை நடத்தியது. அங்கு பேசிய அதன் தலைவர் மனோ கனேசன்,இந்த மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது, இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும்என்றார். அதேபோல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் புலோலியில் ஆர்ப்பாட்டம் நடத்தி, சர்வதேச சமூகத்துக்கு வேண்டுகோள் விடுத்தது.

தமிழ் முதலாளித்துவத்தின் நலன்களை தக்கவைத்துக்கொள்வதற்காக, வடக்கில் அதிகாரப் பகிர்வு ஒன்றுக்காக ஏகாதிபத்தியத்தின் ஆதரவை எதிர்பார்க்கும் தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், இந்த மரணத்தை தமது வேண்டுகோளைப் பலப்படுத்த சுரண்டிக்கொள்வதையே அவர்களது கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த கட்சிகள், தாம் முறையிடும் அதே ஏகாதிபத்திய சக்திகள், பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் மத்திய கிழக்கில் முன்னெடுக்கும் ஆக்கிரமிப்பு யுத்தங்களையும், படுகொலைகளையும் மற்றும் அபுகிரைப்பிலும் குவண்டனாமோ குடாவிலும் நடத்திவரும் சித்திரவதை முகாம்களையும் பாதுகாக்கின்றன. இது இத்தகைய தேசியவாத இயக்கங்களின் இலாயக்கற்றத் தன்மையையே கோடிட்டுக் காட்டுகின்றன.