சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The fraud of Obama’s NSAreform”

ஒபாமாவின் NSA “சீர்திருத்த" மோசடி

Joseph Kishore
27 March 2014

Use this version to printSend feedback

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுமொத்தமாக பதிவு செய்யும் தேசிய பாதுகாப்பு முகமையின் (NSA) உளவு திட்டத்தை மாற்றியமைப்பதற்கான ஒபாமா நிர்வாகத்தின் பரிந்துரை ஓர் அரசியல் மோசடியாகும். NSAஇன் நடவடிக்கைகளை முற்றிலுமாக நிறுத்துவதற்கு மாறாக, நிர்வாகம், அந்த உளவுத்துறை முகமை அணுகக்கூடிய தரவுகளின் அளவை விஸ்தரிக்கவும், அதேவேளையில் அமெரிக்க அரசாங்கத்தின் சட்டவிரோத மற்றும் அரசியலமைப்பிற்கு முரணான நடவடிக்கைகளுக்கு ஒரு சட்டமன்ற ஒப்புதலை பெறவும் முனைந்து வருகிறது.

வெள்ளை மாளிகையின் திட்ட விபரங்கள் வெளியிடப்படவில்லை, ஆனால் அதன் அடிப்படை புறவடிவு தெளிவாக உள்ளது. தொலைபேசி உரையாடல்களின் பதிவு செய்யப்பட்ட தரவுகளை NSA இன் சொந்த சர்வர்களில் சேமிப்பதற்கு பதிலாக, அந்த தகவல்கள் தொலைதொடர்பு நிறுவனங்களிடம் இருக்கும், அவை வரையறை செய்யப்பட்ட வடிவத்திலோ அல்லது தொடர்ச்சியாக புதுப்பிக்கப்பட்ட விதத்திலோ தேவையின் போது கிடைக்க செய்ய அந்நிறுவனங்களிடம் சட்ட முறைப்படி கோரி பெறப்படும். தொலைபேசி நிறுவனங்களோ பதிவு செய்யப்பட்ட அழைப்புகளை 18 மாதங்களுக்கு வைத்திருக்கும். NSA மற்றும் வெள்ளை மாளிகை அவற்றின் நோக்கங்களுக்கு அதுவே போதுமானதென கருதுகின்றன.

வழக்கமாக உளவுத்துறை முகமையின் கோரிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கி முத்திரை-குத்தும் அமைப்பான இரகசிய வெளிநாட்டு உளவுத்துறை கண்காணிப்பு நீதிமன்றம் (FISC), தரவுகளைக் கோரும் NSA இன் முறையீடுகளுக்கு ஒப்புதல் வழங்கும். இலக்கில் வைக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமாக வரும் எவரொருவரின் தரவையும் பெற NSA க்கு அனுமதி வழங்கப்படும், அதேவேளையில் அந்த "இலக்குகளோ" முற்றிலுமாக பரந்தளவில் வரையறுக்கப்படும்.

ஊடக செய்திகளில் புதைக்கப்பட்டுள்ளது என்பதே, அனேகமாக அந்த பரிந்துரையின் ஒரு மிக முக்கிய உட்கூறாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட செல்போன் தரவுகளை NSA அணுகுவதற்கு அனுமதி வழங்க தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு புதிய சட்ட வரைவு வேண்டியதிருக்கும் என்று கூறப்படுகிறது, இதுவே உளவு முகமையின் ஈடுபாட்டிற்குரிய ஒரு மைய விடயமாக உள்ளது. செல்பேசி பரந்தளவில் பயன்படுத்தப்படுவதால் பதிவு செய்யப்பட்ட அனைத்து அழைப்புகளில் சுமார் 30 சதவீதத்தை மட்டும் NSAக்கு கிடைப்பதாக அமெரிக்க அதிகாரிகள் பெப்ரவரியில் வெளிப்படுத்தினர், அது இதுவரையில் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட தகவல்களின் ஒரு பகுதியாக இருக்கவில்லை.

இறுதியில், இன்னும் மேலதிகமான தரவுகளை அணுகுவதற்கு NSAக்கு அனுமதி கிடைக்கும் என்பதோடு, அது அமெரிக்க தொலைபேசி வலையமைப்புகளில் நடைமுறையில் ஒரு ஏகபோகத்தைக் கொண்டிருக்கும் பெரிய நிறுவனங்களோடு தினசரி இன்னும் நெருக்கமாக இணைந்து அதை செய்யும்.

இராணுவ-உளவுத்துறை எந்திரத்தால்/எந்திரத்திற்காக வரையப்பட்டுள்ள இந்த பரிந்துரைக்கப்பட்ட "சீர்திருத்தம்", அதை யார் ஆதரிக்கிறார்களோ அவர்களாலேயே தெளிவுபடுத்தப்படுகிறது. பிரதிநிதிகள் சபையின் உளவுத்துறை கமிட்டிக்கான குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி தலைவர்கள் மைக் ரோஜர்ஸ் மற்றும் டச் ருப்பர்ஸ்பெர்கர் ஆகியோருடன் வெள்ளை மாளிகை நெருக்கமாக வேலை செய்து வருகிறது, இவர்கள் இருவருமே அமெரிக்க மக்களுக்கு உண்மையை அம்பலப்படுத்திய எட்வர்டு ஸ்னோவ்டெனை மற்றும் அவரது வெளியீடுகளை பிரசுரித்த இதழியலாளர்களை மிரட்டும் வகையில் இடித்துரைத்துள்ளனர்.

FISC அதன் முத்திரை குத்தும் ஒப்புதலை, தொலைதொடர்பு நிறுவனங்களில் இருந்து NSA தரவுகளைச் சேகரித்த பின்னர் அளிக்க வேண்டுமா அல்லது அதற்கு முன்னரே அளிக்க வேண்டுமா என்பது உட்பட சிறிய கருத்து வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு பார்த்தால், ஒபாமாவின் பரிந்துரைகள் செவ்வாயன்று ரோஜர்ஸ் மற்றும் ருப்பர்ஸ்பெர்கரால் வெளியிடப்பட்ட பரிந்துரைகளோடு பரந்தளவில் ஒன்று போல உள்ளன அவர்களின் அந்த திட்டத்திற்கு "மொத்தமாக திரட்டும் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருதல்" (End Bulk Collection Act) என்ற ஓர்வெல்லியன் தலைப்பு அளிக்கப்பட்டிருந்தது.

மொத்தமாக தரவு திரட்டும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான" அழைப்புக்கு, பதவியிலிருந்து இறங்க உள்ள NSA தலைவர் கீத் அலெக்சாண்டர், பிரதிநிதிகள் சபையின் குடியரசு கட்சி சபாநாயகர் ஜோன் பொஹ்னெர் மற்றும் செனட்டின் உளவுத்துறை கமிட்டிக்கான ஜனநாயக கட்சியின் தலைவர் டையன் ஃபெயின்ஸ்டீன் ஆகியோராலும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வாரம் அறிவிக்கப்பட்ட அந்த வெட்கக்கேடான "சீர்திருத்தம்" ஒரு விரிந்த அரசியல் நிகழ்வுபோக்கின் விளைபொருளாகும். கடந்த வசந்த காலத்தில் தொடங்கிய ஸ்னோவ்டெனின் கசிவுகள், அரசாங்கத்திற்கு ஒரு ஆழ்ந்த நெருக்கடியை உருவாக்கியதோடு, அனைத்து விதமான சட்ட மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகளுக்கும் வெளியே செயல்படும் ஒரு பரந்த பொலிஸ் அரசு உளவு எந்திரத்தை அம்பலப்படுத்தி உள்ளது.

ஸ்னோவ்டென் வெறுமனே தொலைபேசி அழைப்புகளைப் பதிவு செய்யும் திட்டத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை, மாறாக அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான நாடுகளின் மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள், இணைய தகவல் பரிமாற்றங்கள் மற்றும் ஏனைய தகவல்களின் ஒரு பரந்த தொகுப்பு கைப்பற்றப்படுவதை, கண்காணிக்கப்படுவதை அம்பலப்படுத்தினார். அமெரிக்கா சர்வதேச அளவில் இணையவழி உளவுபார்ப்பு மற்றும் இணையவழி யுத்தமுறை மற்றும் வெளிநாட்டு தலைவர்களை இலக்கில் வைத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. இணைய தொடர்பு பாதைக்குள் ஊடுறுவ மற்றும் அனைத்து இணைய தொடர்புகள் மற்றும் நடவடிக்கைகளை நடைமுறையளவில் அணுக, NSA வேறு நாடுகளில் உள்ள அதன் பங்காளிகளுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. அது குறியீட்டு முறைகளை (encryption methods) முறையாக உடைப்பதிலும் வேலை செய்துள்ளது, அதேவேளையில் உலகளவில் இலக்கில் வைக்கப்பட்ட கணினிகளுக்குள் தீங்கிழைக்கும் இரகசிய மென்பொருள்களையும் (malware) நிறுவி உள்ளது.

ஜனாதிபதி மற்றும் பல்வேறு உளவுத்துறை முகமைகளின் தலைவர்கள் உட்பட உயர்மட்ட நிர்வாக அதிகாரிகள், காரணமின்றி தேடலில் ஈடுபடுவது மற்றும் கைப்பற்றுவது ஆகியவற்றிற்கு எதிரான நான்காம் அரசியலமைப்பு திருத்தத்தின் கட்டுப்பாடுகளை முறையாக மீறியமை உட்பட, குற்ற விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய மற்றும் தண்டிக்கப்படக்கூடிய குற்றங்களில் உடந்தையாய் இருந்துள்ளனர். தேசிய உளவுத்துறையின் இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர் உட்பட அரசு அதிகாரிகள், பொய் சாட்சிகளாக அம்பலப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அந்த வெளியீடுகள் பாரியளவிலான மக்கள் எதிர்ப்பை உருவாக்கி உள்ளது உளவுத்துறை எந்திரம் மீதான அமெரிக்க மக்களின் "ஐயவாதம்" குறித்து செவ்வாயன்று பேசுகையில் ஒபாமா, இந்தவொரு உண்மை குறித்து சாடையாக குறிப்பிட்டார். ஒரு சர்வாதிபத்திய உளவுவேலை வலையமைப்பு குறித்து வெளியானமை, அரசின் சட்டப்பூர்வதன்மைக்கு ஆழமாக குழிபறித்துள்ளது.

இதற்கான விடையிறுப்பில், ஒபாமா நிர்வாகமும், உளவுத்துறை முகமைகளும் ஒரு பன்முக மூலோபாயத்தைப் பின்பற்றி உள்ளன. அவை, அரசாங்க குற்றத்தன்மையை அம்பலப்படுத்தி மன்னிக்க முடியாத பாவத்தைச் செய்துவிட்டதாக, ஸ்னோவ்டேனுக்கு எதிராக ஒரு வக்கிரமான பிரச்சாரத்தைத் தொடங்கின. ஒபாமா நிர்வாகம் உளவுவேலை திட்டங்களைச் சட்டப்பூர்வமானவை என்று பாதுகாத்ததோடு, அரசாங்கம் என்ன செய்து வந்ததோ அதைக் குறித்து வெட்கமின்றி பொய் உரைத்தது, மற்றும் மிக மிக முக்கிய வெளியீடுகளை மறைக்க ஊடகங்களோடு வேலை செய்தது.

அதே நேரத்தில், NSA உடனான நெருங்கிய கலந்தாய்வுகளில் இருந்து ஒளிவுமறைவான சீர்திருத்த முறைமைகளை வரைய அழைப்பு விடுத்ததன் மூலமாக, மக்கள் உணர்வுகளை எதிர்க்க வெள்ளை மாளிகை முனைந்துள்ளது.

உளவு திட்டங்களை விமர்சிப்பவர்களாக காட்டிக் கொண்ட குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினரை (ஒபாமாவின் பரிந்துரையை "அமெரிக்க மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கான உற்சாக செய்தி" என்று அறிவித்த செனட்டர் ரொன் வெய்டென் போன்றவர்களை), வெள்ளை மாளிகையோடு ஒன்று சேர்த்து, காங்கிரஸில் இரு கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஸ்தாபிப்பதே, தற்போது தயாரிப்பு செய்யப்பட்டு வரும் NSA சீர்திருத்தங்களின்" ஒரு முக்கிய அரசியல் நோக்கமாகும். இந்த சட்டவிரோத திட்டங்கள் காங்கிரஸில் நிறைவேற்றப்படும் சட்டங்களில் முறையாக தொகுக்கப்பட உள்ளன. அவை மேலதிகமாக பலப்படுகின்றன மற்றும் அமைப்புரீதியிலானதாக ஆக்கப்படுகின்றன என்பதோடு, அதேவேளையில் அந்த குற்ற நடவடிக்கைகளின் குற்றவாளிகளை மூடிமறைக்கும் திரையையும் வழங்குகின்றன. தொடரும் மக்கள் எதிர்ப்போ சட்டவிரோதமானவையாக மற்றும் குற்றத்தன்மை உடையதாக கையாளப்படும்.

ஒபாமாவின் அறிவிப்பை பாராட்டி உள்ளவர்களில் ஸ்னோவ்டெனே கூட ஒருவராக உள்ளார். அவர் அதை "ஒரு திருப்பு முனையாக", மற்றும்NSAவிடம் இருந்து நம்முடைய உரிமைகளை மீண்டும் பெற மற்றும் அரசாங்க மேஜையில் மக்களின் இடத்தை மீட்டெடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியின் தொடக்கமாக" அறிவித்தார். ஸ்னோவ்டென் ஓர் அறிக்கையில், இந்த பாரிய கண்காணிப்பு திட்டங்கள்... உண்மையில் அவசியமற்றவை மற்றும் அவை முடிக்கப்பட வேண்டியவை" என்பதை ஒபாமா உறுதிப்படுத்தி உள்ளார், என்று எழுதினார்.

ஸ்னோவ்டென் விடயத்தைப் பொறுத்த வரையில், அவர் அரசியல் இரட்டை வேடத்தோடு கையாண்டு வருகிறார் என்பதல்ல, ஆனால் அவர் தைரியமாக அம்பலப்படுத்தி உள்ள பொலிஸ் அரசு முறைமைகளை வழி நடத்தி வருகின்ற சமூக மற்றும் அரசியல் சக்திகளைக் குறித்த புரிதல் இல்லாமல் உள்ளார். எவ்வாறிருந்த போதினும், ஒபாமாவின் பரிந்துரைகளின் குணாம்சம் குறித்த நப்பாசைகள், தொழிலாளர் வர்க்கத்திற்கும் மற்றும் ஸ்னோவ்டெனுக்கே கூட தனிப்பட்ட முறையில், பெரும் அபாயகரமானவையாக உள்ளன. நிர்வாகத்தின் "சீர்திருத்தங்கள்", NSAஇன் இரகசியங்களை வெளியிட்டவருக்கு எதிரான பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துவதோடு, முற்றிலும் பொருந்தி உள்ளன.

சுமார் 10 மாதங்களுக்கு முன்னர் ஸ்னோவ்டெனின் ஆரம்ப வெளியீடுகளோடு தொடங்கிய ஒட்டுமொத்த நிகழ்வுபோக்கும், ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளுக்குள் அங்கே எந்தவொரு ஒரு குறிப்பிடத்தக்க குழுவும் இல்லை என்பதை உறுதிபடுத்தி உள்ளது. இது ஏனென்றால் ஒரு பொலிஸ் அரசு எந்திரத்தைக் கட்டியெழுப்புவதென்பது, சமூக சமத்துவமின்மையின் பாரிய வளர்ச்சியிலும், வெளிநாடுகளில் முடிவில்லா யுத்தம் மற்றும் உள்நாட்டில் சமூக எதிர்புரட்சிக்கான ஓர் ஆழ்ந்த மக்கள் விரோத கொள்கையைப் பின்தொடர்வதில் பெருநிறுவனங்கள் மற்றும் நிதியியல் பிரபுத்துவம் எந்தளவிற்குத் தீர்க்கமாக இருக்கின்றன என்பதிலும் வேரூன்றி உள்ளது.

ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பில் ஒரு நிஜமான திருப்புமுனை, உளவுவேலை முகமைகளின் தலைமை தலைவரான ஒபாமாவின் நடவடிக்கைகளில் இருந்து வரப் போவதில்லை, மாறாக முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அரசியல் ஐக்கியத்தின் மூலமாகவே வரும்.