சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France’s pseudo-left NPA backs restoration of law and order in Burkina Faso

பிரான்சின் போலி-இடது NPA பர்கினா பாசோவில் சட்டம் ஒழுங்கை மீட்டமைப்பதை ஆதரிக்கிறது

By Anthony Torres
12 November 2014

Use this version to printSend feedback

அக்டோபர் 28இல் பர்கினா பாசோவின் வெகுஜன எழுச்சியைத் தொடர்ந்து நடந்த ஓர் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA), பர்கினா பாசோவில் ஒழுங்கமைப்பை மீட்டமைக்கவும் மற்றும் அங்கே பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாக்கவும் முனைந்துள்ள நிலையில், பதவியிலிருந்து இறக்கப்பட்ட ஜனாதிபதி பிளைஸ் கோம்போரேக்கு எதிரான முதலாளித்துவ எதிர்ப்பை அது ஆதரித்து வருகிறது.

"பர்கினா பாசோ: பொதுமக்கள் எழுச்சியுடன் ஐக்கியப்படுவோம்," என்று தலைப்பிட்ட அதன் கட்டுரையில், NPA சிறிதும் கூச்சமின்றி முதலாளித்துவ எதிர்ப்பின் அறிக்கையோடு அணி சேர்கிறது: “மக்கள் எழுச்சியின் அந்த வெற்றி மக்களுக்குரியதாகும், அதனால் மாறுகின்ற நிர்வாகமும் நியாயமாக அதற்கே உரியதாகும், அது இராணுவத்தால் பறிக்கப்படக் கூடாது," இவ்வாறு கடந்த ஞாயிறன்று [நவம்பர் 2இல்] மக்களை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்த எதிர்கட்சிகள் மற்றும் அமைப்புகள் அறிவிக்கின்றன.

கேர்னல் இசாக் சீடாவின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புடனான அவரது பேச்சுவார்த்தைகள் "மக்கள் எழுச்சியிலிருந்து விளைந்த வெற்றியாகும்" என்ற NPAஇன் உட்குறிப்பான வாதம், ஒரு அப்பட்டமான அரசியல் பொய்யாகும்.

வெகுஜன மேலெழுச்சியிலிருந்து கிடைத்த வெற்றிக்கனியை பர்கினா பாசோவின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பெறுவதிலிருந்து தடுக்கும் முயற்சி, இராணுவத்தின் வேலையாக மட்டும் இருக்கவில்லை. அக்டோபர் 28 மேலெழுச்சிக்குப் பின்னர், இராணுவ ஆட்சிக்குழுவைப் போலவே முதலாளித்துவ எதிர்ப்பும் பர்கினா பார்சோவில் ஒழுங்கை மீட்டமைக்க முனைந்தது. எதிர்கட்சிகள் மற்றும் NGOகள் காட்டிய இராணுவத்தின் மீதான விமர்சனங்கள், வெறுமனே பேர்கினபே முதலாளித்துவத்திற்கு உள்ளேயும் மற்றும் சூழ்நிலையை எவ்வாறு கையிலெடுப்பது என்ற ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையேயும் நிலவும் கருத்துவேறுபாடுகளையே எடுத்துக்காட்டுகின்றன.

இத்தகைய அரசியல் யதார்த்தங்களை மறைத்து, NPA பிரெஞ்சு அரசாங்கத்துடன் அணிதிரள்கிறது, பிரெஞ்சு அரசாங்கமோ அதன் நலன்களைப் பாதுகாக்க எதிர்ப்பைக் கணக்கிலெடுத்து வருகிறது. மக்களின் கோபத்தைத் தணிக்க ஒரு பாதுகாப்பு வழியாக சேவை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவம்பர் 2ஆம் தேதி ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கமைக்க, பிரெஞ்சு தூதர் மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புக்கு இடையே விவாதங்கள் நடந்தன.

தனது ஏகாதிபத்திய-சார்பு நிலைப்பாட்டை மறைப்பதற்காக, வரலாற்றுக்கு புறம்பான மற்றும் தவறான வழியில் NPA, எதிர்ப்பை முற்போக்காக எடுத்துக்காட்டுகிறது. அது, சிஐஏ மற்றும் பிரான்சின் ஒப்புதலுடன், 1987இல் படுகொலை செய்யப்பட்ட பர்கினா பாசோவின் ஒரு முன்னாள் ஜனாதிபதி தோமஸ் சன்காராவை "ஆபிரிக்க சே குவேராவாக" ஊக்குவிக்கிறது. இவ்விதத்தில் NPA தன்னைத்தானே எதிர்ப்பின் பிரிவுகள் தரப்பில் மற்றும் தளபதி குவாமே லூகேக்கு நெருக்கமான இராணுவத்தின் தரப்பில் அதன் நிலைநோக்கை அமைக்கிறது. அத்தளபதி படுகொலை செய்யப்பட்ட ஜனாதிபதி பிம்பத்தின் ஒரு தீவிர சாயலைப் பயன்படுத்தி, போராட்டக்காரர்களின் அனுதாபத்தை வென்றெடுக்க முயற்சிக்கிறார்.

NPA எழுதுகிறது: “தோமஸ் இசிடோர் நோயல் சன்காரா நேர்மையோடு ஓர் ஆபிரிக்க புரட்சிக்கு அடித்தளங்களை அமைத்தார், அவர் அவரது வேலைத்திட்டத்தை ஏகாதிபத்திய-எதிர்ப்பாக வரையறுத்தார்; அரசாங்கத்தின் ஆடம்பர நடவடிக்கை போக்கை குறைக்கத் தொடங்கினார்; பழங்குடியின தலைவர்களின் பாரம்பரிய அமைப்புமுறையை ஒழித்தார்; எழுத்தறிவின்மைக்கு எதிரான போராட்டத்தையும் மற்றும் முன்னதாக அப்பர் வோல்டா (Upper Volta) என்றிருந்த அந்த மிகவும் சமநிலையற்ற சமூகத்தில் ஆண்-பெண்களுக்கு இடையே சமத்துவத்திற்கான பிரச்சாரத்தைக் கொண்டு வந்தார். தோமஸ் சன்காரா ஆபிரிக்காவில் மட்டுமல்ல, ஒவ்வொரு சர்வதேச விவாதகளத்திலும், ஒவ்வொரு சர்வதேச அரங்கிலும் ஒடுக்கப்பட்டவர்களின் பாதுகாவலராக விளங்கினார். உலகில் உள்ள அனைத்து புரட்சியாளர்களுக்கும், அனைத்திற்கும் மேலாக ஆபிரிக்க இளைஞர்களுக்கும் நீதி கிடைக்க, தோமஸ் சன்காராவின் நீதிக்கான போராட்டத்தை இப்போது நாம் தொடர வேண்டும்."

1983இல் இருந்து 1987இல் அவர் படுகொலை செய்யப்படும் வரையில் பேர்கினபே அரசு தலைவராக இருந்த தோமஸ் சன்காரா மீதான இந்த புகழுரை, 1980களில் மூன்றாம் உலக தேசியவாத ஆட்சிகளை நோக்கி இருந்த, NPA இன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) படிகமான நிலைநோக்கின் மிச்சமாகும்.

சன்காராவின் சமூக திட்டங்கள் மற்றும் தீவிர உபதேசங்கள் பர்கினா பாசோவிலும், வாஷிங்டன் மற்றும் பாரீசிலும் இருந்த மேற்தட்டுக்கள் மத்தியில் அவருக்கு சக்தி வாய்ந்த எதிரிகளை ஈன்றளித்தது. இருந்தபோதினும், அந்த கொள்கைகள் ஏகாதிபத்திய சக்திகளுடன், குறிப்பாக பிரான்சுடன் அரசியல்ரீதியாக ஒன்று சேர்ந்திருக்க முயன்ற ஒரு முதலாளித்துவ ஆட்சியால் நடத்தப்பட்டு வந்தன. இதில் சன்காரா, கியூபாவில் பிடல் காஸ்ட்ரோ, லிபியாவில் மௌம்மர் கடாபி, அல்லது பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) யாசர் அராபத் போன்ற முதலாளித்துவ தேசியவாத பிரபலங்களை ஒத்திருந்தார்.

சன்காரா ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் ஒடுக்கப்பட்டவர்களை ஒன்றுதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் தலைமையில் அதிகாரத்திற்கு வந்திருக்கவில்லை, மாறாக ஓர் ஆட்சிக்கவிழ்ப்புச் சதி மூலமாக வந்திருந்தார். பகுப்பாய்வின் இறுதியாக, அவர் தன்னைத்தானே பேர்கினபே முதலாளித்துவ பிரிவுகளின் அடித்தளத்தில் அமைத்துக் கொண்டிருந்தார் என்பதுடன், அப்பிரிவுகள் முடிந்த வரைக்கும் வெவ்வேறு பிரதான சக்திகளுக்கு இடையே சமன்படுத்திக் கொள்வதன் மூலமாக, அவற்றின் நலன்களைப் பாதுகாக்க முனைந்திருந்தன. இது தான், 1968க்குப் பிந்தைய மாணவர் இயக்கத்திலிருந்து உதித்திருந்த LCRஇன் மார்க்சிச-விரோத குட்டி முதலாளித்துவத்திடம் இருந்து அவருக்குக் ஒரு குறிப்பிட்ட மட்டத்திற்கு ஆதரவைச் சம்பாதித்து அளித்தது.

எவ்வாறிருந்த போதினும், பிரெஞ்சு ஏகாதிபத்தியத்திற்கும்—அக்காலக்கட்டத்தில் ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி (PS) ஆட்சியில் இருந்தது, இப்போது ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் தலைமையில் அதே கட்சி ஆட்சியில் இருக்கிறது— மற்றும் LCRக்கும் இடையிலான அரசியல்ரீதியான மற்றும் ஜடரீதியிலான உறவுகள், சன்காராவிற்கான இத்தகைய மனமார்ந்த அனுதாபங்களை விட மேலதிகமாக இருந்தன. ஆகவே தான் கோம்போரேவினால் சன்காரா படுகொலை செய்யப்பட்ட பின்னரும் மற்றும், ஏகாதிபத்திய சக்திகளாலும் மற்றும் பேர்கினபே ஆளும் வர்க்கங்களாலும் மிகவும் தீவிரமானதாக கருதப்பட்ட சன்காராவின் நடவடிக்கைகள் இரத்து செய்யப்பட்ட பின்னரும், LCR சோசலிஸ்ட் கட்சியின் தரப்பிலேயே தொடர்ந்து சாய்ந்திருந்தது.

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னர், 1980களில் இருந்த LCR விட NPA மிகவும் வலதில் இருப்பதைப் போலவே, சன்காரா என்னவாக இருந்தாரோ அதைவிட மிகவும் வலதில் பர்கினா பாசோவின் "எதிர்ப்பு" உள்ளது. RFI வானொலிக்கு தளபதி லூகே கூறுகையில், அவர் "அவரது தோழர்களை", அதாவது, இராணுவ ஆட்சிக்குழு மற்றும் முதலாளித்துவ எதிர்ப்புடனான "அதன் சூழ்ச்சிகளைத் தோளோடு தோள் சேர்த்து ஆதரிப்பதாக" தெரிவித்தார்.

NPAஆல் புகழப்படும் எதிர்ப்பு, உண்மையில் முன்னணி பிரெஞ்சு பெருநிறுவனங்களின் மூலோபாய நலன்களுக்கு ஒரு கருவியாகும். எதிர்ப்பு கூட்டணி தலைமையின் செய்தி தொடர்பாளர் செப்ஹிரன் டியாபிரே தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு நிர்வாகியும், வர்த்தகம், தொழில்துறை, சுரங்கங்கள், பொருளாதாரத்தின், மற்றும் நிதியியல் மற்றும் திட்டமிடலின் ஒரு முன்னாள் மந்திரியும் ஆவார். 2006இல் அவர் பிரான்சின் அரேவா பெருநிறுவனத்தில் ஆபிரிக்க மற்றும் மத்திய கிழக்கு பிரிவின் நடவடிக்கைகளுக்கு தலைமை கொடுக்க அந்நிறுவனத்தில் சேர்ந்தார். சுரங்கத்துறை நிதியுதவி மீதான ஓர் ஆலோசகராக பணியாற்ற அவர் 2011இல் அரேவாவிலிருந்து விலகினார். 2010இல் இருந்து அவர் முற்போக்கு மாற்றத்திற்கான ஐக்கிய கட்சிக்குத் (Union for Progress and Change party - UPC) தலைமை கொடுத்துள்ளார்.

ஆபிரிக்காவில், அதுவும் குறிப்பாக 2011இல் துனிசியா மற்றும் எகிப்தில், முதலாளித்துவ தேசியவாதத்துடன் வரலாற்றுரீதியில் தொடர்புபட்ட ஆட்சிகளுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் மேலெழுச்சி, முதலாளித்துவ தேசியவாத முன்னோக்கின் தோல்வியை உயர்த்திக் காட்டுகிறது. அது தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை உறுதிப்படுத்த இலாயகற்று இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இப்போதோ, அப்பிராந்தியத்தில் உள்ள ஏகாதிபத்திய-சார்பு ஆட்சிகள் முதலாளித்துவ நெருக்கடியின் அடியால் மற்றும் தொழிலாளர்களின் பெருகிய கோபத்தால் ஆடிப்போயிருக்கின்றன, இது, முதலாளித்துவ தேசியவாதம் அல்ல, தொழிலாள வர்க்கத்திற்குரிய ஒரு சர்வதேச புரட்சியின் முன்னோக்கு, அதன் பாதையில் வந்து கொண்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

இது NPAஆல் பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட குட்டி முதலாளித்துவ போலி-இடது சக்திகள், சமூக பிற்போக்கு முகாமிற்குள் நுழைந்ததில் நிறைவடைந்திருக்கிறது. NPA ஹோலாண்ட் அரசாங்கத்தினது கொள்கைகளைப் பாதுகாக்கிறது, அது தேர்ந்தெடுக்கப்பட அதற்கு உதவியது, தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுப்புகளை ஆதரித்ததன் மூலமாக சிக்கன கொள்கைகளுக்கு எதிரான ஒரு போராட்டத்தை தடுத்தது. இவ்விதத்தில் NPA பாரிய வேலைநீக்கங்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை வெட்டுவதற்கு உதவியுள்ளது.

சர்வதேச அளவில், லிபியா மற்றும் சிரியாவில் பிரான்ஸ் மற்றும் நேட்டோவின் "மனிதாபிமான" போர்களையும், மற்றும் உக்ரேனில் அவற்றின் ஆட்சி மாற்ற நடவடிக்கையையும் NPA புகழ்ந்துரைத்து, பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களுடன் அணி சேர்ந்துள்ளது. அது அல் கொய்தாவுடன் இணைந்த இஸ்லாமியவாதிகளை மற்றும் கியேவ் பதவிக்கவிழ்ப்புக்கு இட்டுச் சென்ற உக்ரேனிய பாசிச போராளிகள் குழுக்களை "புரட்சிகர" சக்திகளாக சித்தரித்துக் காட்டி ஆதரித்துள்ளது.

டியாபிரே, லூகே மற்றும் பேர்கினபே இராணுவ ஆட்சிக்குழுவுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மீது அது பொழிந்துவரும் பாராட்டு மழை, உலகின் தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக NPAஇன் ஏகாதிபத்திய-சார்பு நிலைநோக்கின்  ஒரு கூறுபாடு ஆகும்.

மேலதிக வாசிப்புகளுக்கு,

பர்கினா பாசோவின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் இராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பை நடத்துகிறது