சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany to deploy combat troops in Ukraine

ஜேர்மனி போரிடும் துருப்புகளை உக்ரேனில் நிறுத்த உள்ளது

By Christoph Dreier
7 October 2014

Use this version to printSend feedback

ஜேர்மன் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து மேற்கு உக்ரேனை விடுவித்த, எல்வோவ்-சான்டோமியேர்ஸ் நடவடிக்கையை (Lvov-Sandomierz operation) சோவியத் செம்படை ஆகஸ்ட் 29, 1944இல் முடிவுக்குக் கொண்டு வந்தது. ஜேர்மன் துருப்புகள் அந்த ஒரு சீரழிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேறின. இப்போதோ, பேர்லின் அரசாங்கம் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் முதல்முறையாக உக்ரேனுக்குள் ஜேர்மன் துருப்புகளை நிலைநிறுத்த நகர்ந்து வருகிறது.

வெள்ளியன்று, ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன், வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவ (Bundeswehr) நடவடிக்கைகளைப் பாரியளவில் விரிவாக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை பாதுகாப்பு கமிட்டிக்கு அறிவித்தார். உக்ரேனிய நடவடிக்கைக்கு கூடுதலாக, ஈராக்கில் தற்போதைய ஜேர்மன் பயிற்சியளிப்பு திட்டமும் விரிவாக்கப்பட உள்ளது.

வொன் டெர் லெயன் கருத்துப்படி, போருக்குத் தயார்நிலையில் இருக்கின்ற கிழக்கு உக்ரேனின் பிராந்தியத்திற்கு இதுவரையில் எத்தனை எண்ணிக்கையில் என்று தெரிவிக்கப்படாத உளவுபார்ப்பு டிரோன்களை அனுப்பவும் அரசாங்கம் திட்டமிடுகிறது. உக்ரேன் இராணுவத்திற்கும், ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளுக்கும் இடையே போர்நிறுத்தத்தைக் கண்காணிப்பதற்காக OSCEஇன் (ஐரோப்பிய பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அமைப்பு) சார்பாக இந்த டிரோன்கள் அனுப்பப்பட உள்ளன.

வேல்ஸில் நடந்த கடந்த நேட்டோ உச்சிமாநாட்டின் ஊடாக ஜேர்மன் சான்சிலர் ஆங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டுக்கு இடையே செய்யப்பட்ட ஓர் உடன்படிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. செப்டம்பரில், அவ்விரு அரசாங்கங்களும் நடவடிக்கையின் விபரங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள ஒரு பார்வையாளர் குழுவை அனுப்பி இருந்தன.

Bild பத்திரிகையின் ஓர் செய்திப்படி, அந்த டிரோன்களை வானில் வழக்கமான செயல்பாட்டில் வைத்திருக்க குறைந்தபட்சம் 150 ஜேர்மன் சிப்பாய்களும், அத்துடன் அந்நடவடிக்கையைப் பாதுகாக்க கூடுதலாக 50 ஆயுதமேந்திய சிப்பாய்களும் அவசியப்படுமென அக்குழு முடிவுக்கு வந்திருந்தது.

ஜேர்மன் துருப்புகள் அனேகமாக நிலைநிறுத்தப்படுவது ஒரு சிக்கலான நேரத்தில் வருகிறது. ஒருசில வாரங்களுக்கு முன்னர் உக்ரேனிய ஆயுத படைகள் தோல்வியின் விளிம்பில் காணப்பட்ட போது, ஜனாதிபதி பெட்ரோ பொறோஷென்கோ பிரிவினைவாதிகளுடன் ஒரு சமரசத்தைப் பேரம்பேசினார். ஆனால் இந்த சமரசம் நாளாந்தம் மீறப்பட்டுள்ளது.

பல பொதுமக்கள் உட்பட டஜன் கணக்கானவர்கள், கடந்த நாட்களில் கிளர்ச்சியாளர்கள்-பிடியில் இருக்கும் டொனெட்ஸ்க் நகரில் உக்ரேனிய படைகளின் பீரங்கி தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் கொல்லப்பட்டுள்ளனர். அந்த தாக்குதல்கள் தான்தோன்றித்தனமான படைகளால் நடத்தப்பட்டதாகவும், அவைமீது அதன் கட்டுப்பாடும் இல்லை என்று கியேவ் அரசாங்கம் கூறுகிறது. எவ்வாறிருந்த போதினும், தனிப்பட்ட படைக்குழுக்களால் ஈர்க்கப்பட்ட அதன் துருப்புகளது சில பிரிவுகள் மீது கியேவ் ஆட்சி கட்டுப்பாட்டை இழந்துவிட்டதாக, அல்லது கியேவ் வேண்டுமென்றே போர்நிறுத்தத்தை முறித்து விட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிக்கின்றனர்.

யுத்தத்தால் அழிக்கப்பட்ட கிழக்கு உக்ரேனில் ஜேர்மன் துருப்புகள் ஒரு நடுநிலையான நிலைப்பாட்டை எடுக்காது. அமெரிக்காவுடன் சேர்ந்து, ஜேர்மன் அரசாங்கமும் ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்த பெப்ரவரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியின் பின்னால் ஓர் உந்துசக்தியாக இருந்தது. அப்போதிருந்து அது கியேவ் ஆட்சியைப் பலமாக ஆதரித்துள்ளது, அதுவோ அடுத்தடுத்து பாசிச சக்திகளையே சார்ந்திருக்கிறது. ஆகவே உக்ரேனிய வெளியுறவுத்துறை மந்திரி பாவ்லோ க்ளிம்கின் டிரோன்களை அனுப்புவதற்கான ஜேர்மனின் பரிந்துரையை உற்சாகத்தோடு வரவேற்றதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

OSCEஇல் ரஷ்யாவும் உள்ளடங்கும், மேலும் அவ்வமைப்பினது கட்டளையின் எந்தவொரு விரிவாக்கத்திற்கும் அனைத்து 57 உறுப்பு நாடுகளின் ஒப்புதலும் தேவைப்படும். ஆகவே OSCE செய்திதொடர்பாளர் நட்டாசா ராஜாகோவிக், எந்தவொரு சாத்தியமான ஜேர்மன்-பிரெஞ்சு தலையீட்டையும் "ஊகமென்று" வர்ணித்தார். குறிப்பாக, ஆயுதமேந்திய துருப்புகளைப் பயன்படுத்துவது அனேகமாக எதிர்க்கப்படக்கூடும். உக்ரேனில் அதன் நடவடிக்கை ஆயுதமின்றி, படைத்துறைசாரா குணாம்சத்தில் இருக்குமென OSCE இதுவரையில் வலியுறுத்தி உள்ளது.

எவ்வாறிருந்த போதினும், திங்களன்று, பிரெஞ்சு செய்தி நிறுவனம் AFP மொத்தம் நான்கு டிரோன்களில் இரண்டு ஏற்கனவே உக்ரேனுக்கு அனுப்பப்பட்டு விட்டதாக அறிவித்தது.

உக்ரேனில் அதன் சொந்த இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு மூடிமறைப்பாக ஜேர்மனி OSCEஐ பயன்படுத்துவது இது முதல்முறையல்ல. ஏப்ரலில், நான்கு ஜேர்மன் அதிகாரிகளின் தலைமையில் 13 சிப்பாய்களின் ஒரு குழு உளவுபார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக ரஷ்யாவை-ஆதரிக்கும் பிரிவினைவாதிகளால் குற்றஞ்சாட்டப்பட்டனர். ஜேர்மனியோ கைது செய்யப்பட்ட அந்த சிப்பாய்கள் அந்நாட்டில் படைத்துறைசாரா OSCE நடவடிக்கையின் பாகமாக இருந்தார்கள் என்று வாதிட்டது, ஆனால் OSCE அதை உறுதியாக மறுத்திருந்தது.

செப்டம்பரில், மூன்று ஜேர்மன் சிப்பாய்கள் மேற்கு உக்ரேனிய நேட்டோ சூழ்ச்சிக்கையாளல்களில் ஈடுபட்டிருந்தனர்.

புதிய நேட்டோ செயலர் ஜெனரல் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க், திங்களன்று போலாந்துக்கு அவரது முதல் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு, பகிரங்கமாக ரஷ்யாவை அச்சுறுத்தினார். நேட்டோ அது விரும்பும் இடத்தில் எங்கே வேண்டுமானாலும் அதன் படைகளை நிலைநிறுத்துமென ஸ்டொல்டென்பேர்க் குறிப்பிட்டார், முக்கியமாக இது 1997இல் ரஷ்யாவுடன் கையெழுத்தான ஓர் உடன்படிக்கையை நிராகரிப்பதாக இருந்தது. அந்த உடன்படிக்கை ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோ துருப்புகளை நிரந்தரமாக நிலைநிறுத்துவதைத் தடுக்கிறது.

உக்ரேனிய நடவடிக்கைக்கு கூடுதலாக, வொன் டெர் லெயன் ஈராக்கில் ஜேர்மன் இராணுவ நிலைநிறுத்தத்தின் ஒரு விரிவாக்கத்தையும் அறிவித்தார். அந்த அரசாங்கம், ஈராக்கிய மற்றும் குர்திஷ் சிப்பாய்களுக்கு ஜேர்மன் இராணுவம் பயிற்சியளிக்க உள்ள, வடக்கு ஈராக்கிய குர்திஷ் தலைநகரான எர்பிலில் ஒரு புறச்சோதனைசாவடி அமைக்க திட்டமிட்டு வருகிறது. ஜேர்மன் அதிகாரிகள் ஈராக்கிய கூட்டுப்படை தளபதிகளுக்கும் உதவுவார்கள்.

அந்த பயிற்சி மையம், ISISக்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) எதிரான அமெரிக்க-தாக்குதலுக்கு உத்தியோகபூர்வமாக உதவ நோக்கம் கொண்ட அதுபோன்ற எட்டிலிருந்து பன்னிரெண்டு மையங்களின் ஒரு வலையமைப்பின் பாகமாக இருக்கும். யதார்த்தத்தில், அமெரிக்க தலைமையிலான கூட்டணியின் விமான தாக்குதல்களும், ஈராக் மற்றும் குர்திஷ்களுக்கு ஆயுத உதவிகளும், அப்பிராந்தியத்தில் அமெரிக்க மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துகின்ற அதேவேளையில், முதன்மையாக பஷர் அல்-அசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராக திருப்பிவிடப்பட்டுள்ளன.

ஜேர்மன் ஆளும் வர்க்கம் அதன் நலன்களும் பிரதிநிதித்துவம் செய்யப்பட வேண்டுமென்பதை உறுதிப்படுத்த மத்திய கிழக்கின் புதிய யுத்தத்தில் அதன் பங்களிப்பை அதிகரிக்க தீர்மானகரமாக உள்ளது.

வெளிநாடுகளில் ஜேர்மன் இராணுவ நடவடிக்கைகளின் விரிவாக்கமானது, ஜேர்மனியை இராணுமயமாக்கும் ஒரு பரந்த பிரச்சாரத்தின் அடுத்த கட்டமாகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில், பேர்லின் அரசாங்கம் அனைத்து இராணுவ கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக அறிவித்தது. அப்போதிருந்து அது திட்டமிட்டு இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்த வேலை செய்து கொண்டிருக்கிறது.

கடந்த சில வாரங்களில், அங்கே அரசியல் வட்டாரங்களில் மற்றும் ஊடகங்களில், இராணுவத்தின் மோசமான வெளிப்படையான நிலைமையை எடுத்துக்காட்டுவதற்கும் மற்றும் இராணுவ செலவுகளில் பெரும் அதிகரிப்புக்கான அவசியம் குறித்தும் அர்பணிக்கப்பட்ட ஒரு தொடர்ச்சியான பிரச்சாரம் இடம்பெற்றுள்ளது. திங்களன்று KPMG ஆலோசனை நிறுவனத்தால் பிரசுரிக்கப்பட்ட ஓர் அறிக்கை, பிரதான ஆயுத திட்டங்களில் நிலவும் பிரச்சினைகளை மற்றும் குறைபாடுகளைப் பட்டியலிட்டிருந்தது. அந்த அறிக்கைக்கான கேட்பாணை (order) பெப்ரவரியில் வொன் டெர் லெயனால் வழங்கப்பட்டிருந்தது.

வொன் டெர் லெயன் பாதுகாப்பு வரவு-செலவு திட்டத்தின் ஒரு பாரிய அதிகரிப்புக்கு வாதிட, அந்த அறிக்கையையும் மற்றும் புதிய இராணுவ நடவடிக்கைகளின் அறிவிப்புகளையும் பயன்படுத்தினார். உலகெங்கிலுமான நெருக்கடிகள் "நம்மை பொறுப்பேற்க கோருகின்றன" என ஞாயிறன்று அந்த பாதுகாப்பு மந்திரி அறிவித்தார்.

நையாண்டியாக எழுதும் ஜேர்மன் எழுத்தாளர் கார்ல் வலென்டின் எழுத்துக்களை எடுத்துக்காட்டி வொன் டெர் லெயன் இவ்வாறு அறிவித்தார்: “இந்த சிக்கலான, நெருக்கடி-நிறைந்த உலகில் எந்தளவுக்கு ஜேர்மனியின் பொறுப்புறுதி அவசரமாக தேவைப்படுகிறது என்பது நம் அனைவருக்கும் நன்றாக தெரியுமென நான் நம்புகிறேன். நாமும் அதில் முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்பதே அதன் அர்த்தம், அதற்கு பணம் செலவாகத் தானே செய்யும்."