சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

IMF report records global economic breakdown

IMF அறிக்கை உலகளாவிய பொருளாதார உடைவைப் பதிவு செய்கிறது

By Nick Beams
9 October 2014

Use this version to printSend feedback

இந்த வாரம் சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) வெளியிடப்பட்ட உலக பொருளாதார ஆய்வறிக்கை (WEO), அதன் சொந்த வழியில், 2008 நிதியியல் நெருக்கடி வெறுமனே ஒரு கடுமையான ஏற்ற-இறக்கமல்ல, மாறாக பூகோளமயப்பட்ட முதலாளித்துவ பொருளாதார செயல்பாடுகளின் ஒரு அடிப்படை முறிவை அடையாளப்படுத்துகிறது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

அவ்வறிக்கையின் பல அம்சங்கள் இதை எடுத்துக்காட்டுகின்றன, ஆனால் கடந்த நான்காண்டுகளில் IMF பொருளியல்வாதிகளின் எல்லா அறிக்கைகளும் தொடர்ந்து உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை ஏன் அதிகரித்து மதிப்பிட்டன என்பதை விவரிக்க அந்த ஐந்து-பக்க குறிப்பில் மிகத் தெளிவாக எந்தவொரு குறிப்பும் அளிக்கப்படவில்லை.

நிதியியல் நெருக்கடியின் உடனடி விளைவுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட ஆரம்ப உயர்வுகளைத் தொடர்ந்து, பூகோளமயப்பட்ட வளர்ச்சி 2010 மற்றும் 2013க்கு இடையே ஒவ்வொரு ஆண்டும்—5.4 சதவீதத்திலிருந்து 3.3 சதவீதத்திற்கு—வீழ்ச்சி அடைந்தது. இருப்பினும் கூட அடுத்தடுத்து வெளியிடப்பட்ட WEO அறிக்கைகளின் முன்மதிப்பீடுகளை விட உண்மையான வளர்ச்சி குறைந்திருந்தது, உண்மையான வளர்ச்சி 2011இல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் IMF கணிப்புகளுக்குக் கீழே தான் இருந்தன.

IMF பொருளியல்வாதிகள் எவ்வாறு அவர்களின் அமைப்பு பல காரணங்களால் இந்தளவுக்கு தவறான புள்ளிவிபரங்களைப் பெற்றதென்பதை விவரிக்கும் விருப்பமற்ற வேலையை கைதுறந்தார்கள். எழுச்சிபெற்றுவரும் சந்தைகள் மற்றும் அபிவிருத்தி அடைந்துவரும் பொருளாதாரங்களின், குறிப்பாக பிரிக்ஸ் நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா) பங்களிப்பை அதிக-மதிப்பீடு செய்தமை, யூரோ மண்டலத்தில் நெருக்கடியை அனுமானிக்காமல் விடுத்தமை, மற்றும் மத்திய கிழக்கில் அழுத்தத்திற்கு உள்ளான பொருளாதாரங்களின் தாக்கத்தைக் கணக்கில் எடுக்க தவறியமை ஆகியவையும் அதில் உள்ளடங்கும். இருந்தபோதினும், பிழைகளின் இந்த பட்டியல் எதுவும் விவரிக்கப்படவில்லை.

IMF முன்மதிப்பீடு தோல்விக்கான அடிப்படை காரணம், அது பயன்படுத்திவரும் ஆய்வுமுறையில் வேரூன்றி உள்ளது. IMF அதன் முன்வரைவுகளை ஒழுங்குப்படுத்துகையில், கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில், முன்மாதிரி மற்றும் முன்மதிப்பீட்டு உத்திகளைப் (models and forecasting techniques) பிரயோகித்தது. அந்த கடந்தகால அனுபவங்களோ, நிதியியல் நெருக்கடியை வெறுமனே வியாபார சுழற்சியில் இருந்த ஒரு ஏற்ற-இறக்கமாக, மிகப் பெரியதாக இருந்தாலும் கூட அவ்வாறே கையாண்டிருந்தன. ஆனால் பூகோளமயப்பட்ட நிதியியல் நெருக்கடியோ அவற்றையும்விட பெரியதாக இருந்தது: அது முதலாளித்துவ திரட்சியின் நிகழ்வுபோக்கிலேயே ஏற்பட்ட ஒரு உடைவாகும்.

IMF பகுப்பாய்வு மிகவும் அதிர்ச்சியூட்டும் வெளிப்பாடுகளில் ஒன்றையும் குறிப்பிடுகிறது. எங்கெல்லாம் அதிக-மதிப்பீடு செய்யப்பட்டதோ அந்த புவியியல் பகுதிகளைக் குறிப்பிட்டுக் காட்டிய பின்னர், அது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் எந்த அம்சம் மிகவும் முக்கியமானதென்ற பிரச்சினைக்குத் திரும்புகிறது: “முதன்மையாக 2011-2013 வரையிலான உலகளாவிய வளர்ச்சி மீதான அதிகப்படியான-கணிப்பு, முதலீட்டின் மீது அதிக-கணிப்பு வைக்கப்பட்டதைப் பிரதிபலிக்கிறது," அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இருந்தபோதினும், “இந்த முடிவுகள் முதலீட்டு வளர்ச்சி முற்றிலுமாக குறைந்துவிட்டதை அடையாளப்படுத்தவில்லை" என்று குறிப்பிட்டு, அத்துடன் முடித்துக் கொள்கிறது. எவ்வாறிருந்த போதினும், முதலாளித்துவ பொருளாதாரத்தின் வளர்ச்சியில் முதலீடு முக்கிய பாத்திரம் வகிப்பதால், எந்தவொரு பகுப்பாய்வையும் இந்த புள்ளியிலிருந்து தான் தொடங்கி ஆகவேண்டியுள்ளது.

முதலாளித்துவ உற்பத்தி முறையானது, ஜடரீதியிலான செல்வவள திரட்சியின், அல்லது அத்தகைய சமூக தேவையைப் பூர்த்தி செய்வதற்கான உற்பத்தியின், அடித்தளத்தில் இல்லை. அதன் உந்துசக்தியே உபரிமதிப்பின் திரட்சியில் உள்ளது, அது இலாப வடிவத்தில் காணப்படுகிறது. இது ஏதோ ஒருமுறை சம்பவம் அல்ல, மாறாக ஒரு தொடர்ச்சியான சுழற்சியாகும். ஒரு புள்ளியில் ஈட்டப்படும் இலாபம், கூடுதலாக திரட்ட வேண்டுமென்ற நோக்கத்துடன் மற்றொரு முதலீட்டுக்கு, அதைத் தொடர்ந்து இன்னும் நிறைய முதலீட்டுக்கு, இன்னும் அதிக முதலீட்டுக்கு அடித்தளமாகிறது. பொருளாதார வளர்ச்சியோ இந்த திரட்டும் சுழல்முறையில் ஒரு துணை-விளைபொருளாக உள்ளது.

2008 நெருக்கடி, இந்த "வழக்கமான" முதலாளித்துவ விரிவாக்கம் முறிந்து போனதைக் குறித்துக் காட்டியது. அது அமெரிக்காவை மையமாக கொண்டு 1980களின் இறுதியிலிருந்து ஏற்பட்டு வந்திருந்த ஒரு நிகழ்வுபோக்கின் உச்சக்கட்டமாகும். 1980களின் தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள், அவற்றிற்கு ஆரம்ப காலக்கட்டங்களில் இருந்ததைப் போல், அபிவிருத்தியின் முந்தைய பாதைக்குத் திரும்பவில்லை, மாறாக அவை அமெரிக்க பொருளாதார மாற்றத்தின் ஒரு தொடக்கமாக இருந்தன.

தொழில்துறை விரிவாக்கம் (இந்த விரிவாக்கம் மந்தநிலைமைகளைப் பின்தொடர்ந்து 1950கள் மற்றும் 1960களின் வியாபார சுழற்சிமுறை உயர்வில் அடித்தளத்தைக் கொண்டிருந்தது), இது தொழிற்துறை-குறைப்பு (de-industrialisation) மூலமாக மாற்றீடு செய்யப்பட்டன. அமெரிக்க தொழில்துறையின் ஒட்டுமொத்த பிரிவுகளும் மூடப்பட்டன. முந்தைய நூற்றாண்டில் அமெரிக்க பொருளாதார இயக்கவியலின் மையத்திலிருந்த உற்பத்தி தொழில்துறை மூலமாக வந்த இலாப திரட்சி, அமெரிக்க மற்றும் சர்வதேச அளவில் ஆழமடைந்துவந்த நெருக்கடிகளுடன் சேர்ந்து, ஒட்டுண்ணித்தனமான நிதியியல் வழிவகைகள் மூலமாக கிடைத்த செல்வவள திரட்சியால் அதிகளவில் மாற்றீடு செய்யப்பட்டது.

1980களின் ரீகன் பங்குச்சந்தை உயர்வு, அக்டோபர் 1987 முறிவைக் கொண்டு வந்தது, அப்போது அது 1930களுக்குப் பிந்தைய மிக கடுமையான சேமிப்பு மற்றும் கடன் நெருக்கடியாக இருந்தது. புதிய நிலைமைக்கு விடையிறுப்பாக, பெடரல் ரிசர்வ், புதிதாக நியமிக்கப்பட்ட சேர்மேன் ஆலன் க்ரீன்ஸ்பான் தலைமையின் கீழ், நிதியியல் அமைப்புகள் கட்டுப்பாடற்ற பணப்புழக்கத்தை அணுகுவதற்கு உறுதியளித்தது.

உலக பொருளாதாரம் முன்பில்லாத விதத்தில் இன்னும் அதிகமாக தொடர்ச்சியான கடன்வழங்கும் சந்தை உயர்வுகளைச் சார்ந்திருப்பதாக மாறியது. ஒவ்வொன்றும் ஒரு முறிவுக்கு இட்டுச் சென்றன, அதை மற்றொரு சந்தை உயர்வு பின்தொடர்ந்தது. இந்த உயர்வுகள் மத்திய வங்கிகள் நிதியியல் அமைப்புமுறையை ஊக்குவிக்க முனைந்ததால், அவற்றின் தலையீட்டால் உருவாக்கப்பட்டன. 1980களின் இறுதியில், ஜப்பான் பங்குச்சந்தையும் மற்றும் நில விலைகளும் ஒரு பாரிய உயர்வைக் கண்டன, அது பின்னர் 1990களில் பொறிந்து போனது. அதை 1990களின் முதல் பாதியில் ஆசிய பொருளாதாரங்களில் சந்தை உயர்வு பின்தொடர்ந்தது. அவை 1997-98இன் ஆசிய நிதியியல் நெருக்கடிக்கு சற்று முன்னர், உலக வங்கியால் "அதிசய பொருளாதாரங்களாக" கூறப்பட்டன.

பின்னர் 1990களின் இறுதியில் இணைய பங்குச்சந்தை உயர்வு என்பது வந்தது, 2000களின் தொடக்கத்தில் அதை "தொழில்நுட்ப சிதைவு" என்பது பின்தொடர்ந்தது. அதற்கடுத்து பெடரலினால் குறைக்கப்பட்ட வட்டிவிகிதங்கள் மற்றொரு சந்தை உயர்வுக்கு களம் அமைத்தது, அது வீட்டுத்துறை, குறைந்த பிணையுள்ள அடமானக்கடன் (sub-prime mortgage) மற்றும் அவற்றுடன் தொடர்புபட்ட நிதியியல் திட்டங்களை அடிப்படையாக கொண்டிருந்தது, அது 2008 பொறிவுக்கு இட்டுச் சென்றது.

இன்றோ நிதியியல் அமைப்புமுறை, பிரதான மத்திய வங்கிகளால் வங்கிகளுக்கும் நிதியியல் அமைப்புகளுக்கும் ட்ரில்லியன் கணக்கான டாலர் அதிமலிவு பணம் வழங்கப்பட்டு, மிதக்க விடப்பட்டுள்ளது. சீனாவில் அரசாங்கமும் மற்றும் நிதியியல் ஆணையங்களும் ஒரு கடன்வழங்கு குமிழியைக் கட்டவிழ்த்துவிட்டதன் மூலமாக (இது கட்டிடம்-நிலம் விற்பனைத்துறை மற்றும் உள்கட்டமைப்பு முதலீட்டுக்கு நிதி வழங்கியது), 2008-2009 நெருக்கடிக்கு விடையிறுப்பு காட்டியது. இவ்விரு விடையிறுப்புகளுமே மற்றொரு நிதியியல் பேரிடருக்கு நிலைமைகளை உருவாக்கி உள்ளன. இதற்கிடையே நிஜமான பொருளாதாரத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் கேடுற்றநிலைமை, அதன் முந்தைய வளர்ச்சி பாதைக்கு ஒத்த விதத்தில் திரும்புவதற்கு முதலீடின்மையால் குறிக்கப்பட்டுள்ளது.

இந்த உடைவின் வெளிப்பாடுகள் IMFஇன் WEO அறிக்கையினது ஏறத்தாழ ஒவ்வொரு பக்கத்திலும் தென்படுகிறது. முதல் அத்தியாயத்தின் அறிமுகமே, “சமீபத்திய ஆண்டுகளில் உலகளாவிய மீட்சியின் வேகம் ஏமாற்றம் அளித்திருப்பதாக" குறிப்பிடுகிறது. 2014இன் முதல் அரைபகுதியின் வளர்ச்சி, அதிகப்படியான கீழ்நோக்கிய அபாயங்களுடன்", எதிர்பார்த்ததையும் விட பலவீனமடைந்துள்ளது. அதன் ஒரு விளைவாக, “அனுமானிக்கப்பட்ட வளர்ச்சி அதிகரிப்பு அனேகமாக மீண்டும் தோல்வியடையலாம் அல்லது நடைமுறைக்கு வராமல் போகலாம் அல்லது எதிர்பார்ப்புகளை விட குறைந்து போகலாம்."

அந்த அறிக்கை இலத்தீன் அமெரிக்காவில், குறிப்பாக பிரிக்ஸ் குழுவின் ஓர் உறுப்பு நாடான பிரேசிலின் "மெதுவான வளர்ச்சியை" சுட்டிக் காட்டுகிறது, இந்நாடு, வெகுகாலத்திற்கு முன்னர் அல்ல, சமீபத்திலேயே உலகளாவிய பொருளாதார விரிவாக்கத்திற்கான ஒரு புதிய அடித்தளத்தை வழங்கி வருவதாக எடுத்துக்காட்டப்பட்டது. பிரேசிலில் முதலீடு "பலவீனமாக" இருந்ததுடன், பொருளாதாரம் உண்மையில் இந்த ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் சுருங்கியது.

ஒரு காலக்கட்டத்தில், “எழுச்சிபெற்றுவரும் சந்தைகள்" உலக வளர்ச்சியின் 80 சதவீதத்தைக் கணக்கில் கொண்டிருந்தன. இருப்பினும், IMF தலைமை பொருளியல்வாதி ஒலிவியே பிலான்சர்ட் அவரது பத்திரிகையாளர் கூட்டத்தில் குறிப்பிடுகையில், 2011இல் இருந்து அவற்றின் வளர்ச்சி விகிதம் 1.5 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

முன்னேறிய பொருளாதாரங்கள் முழுவதும் பணவீக்கம் குறைந்திருப்பதாக அவ்வறிக்கை குறிப்பிடுகிறது, இந்த பொருளாதாரங்கள் "கணிசமான வெளியீட்டு இடைவெளிகளைக்" கொண்டிருக்கின்றன என்பதுடன், "பணச்சுருக்கம் ஒரு கவலைக்குரியதாக தொடர்கிறது" என்பதற்கும் அதுவொரு அறிகுறியாகும்.

யூரோ பகுதி முழுவதிலும், அங்கே "முற்றுமுதலான பணச்சுருக்க" அபாயங்களோ அல்லது நீண்ட காலத்திற்கு மிக குறைந்த பணவீக்கம் நீடிக்கும் அபாயங்களோ இருந்தன. மத்திய காலத்திற்கு, அங்கே முன்னேறிய அனைத்து பொருளாதாரங்களிலும் "வெளியீட்டு வளர்ச்சிக்கு குறைந்த சாத்தியக்கூறே இருந்தது மற்றும் 'நீடித்த மந்தநிலைமையின்'” ஓர் அபாயமும் இருந்தது.

குறிப்பாக மிக குறைந்த வட்டிவிகிதங்கள் தொடர்கின்றன மற்றும் நிதியியல் சந்தைகளில் அபாயத்தன்மை அதிகரித்ததுள்ளது, இதற்கிடையே முதலீடு உயர்வும் இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை, இது அனேகமாக மத்திய காலத்தில் குறைந்த வளர்ச்சிக்கான சாத்தியக்கூறை மற்றும் தனியார் நுகர்வு குறையும் கவலைகளை எதிரொலிக்கிறது [ஒருவர் இதை நிச்சயமாக NB என்று கூறலாம்].”

முன்னேறிய நாடுகளில் தேவை குறைவதென்பது "ஐந்தாண்டு காலத்தில் நீடித்த உலகளாவிய பொருளாதார பலவீனத்திற்கு இட்டுச் செல்லும்".

அங்கே சீனாவில், கடன் மூலமாக நிதியளிக்கப்பட்ட முதலீட்டு உயர்வே வளர்ச்சிக்கான பிரதான உந்துதலாக இருப்பதால், அளவுக்கதிகமான கடன்களோடு கடன்வழங்குமுறை தொங்கி போகும், "திடீர் வீழ்ச்சியின்" (hard landing) அபாயமும் இருக்கிறது.

பூகோளமயப்பட்ட பொருளாதார மாற்றத்தின் மிக முக்கிய வெளிப்பாடுகளில் ஒன்று, உலக வர்த்தக வளர்ச்சியின் வீழ்ச்சியாகும். 1990களில் மற்றும் 2000களின் முதல் ஐந்தாண்டுகளில் வேகமாக அதிகரித்த பின்னர், அது "உலகளாவிய நடவடிக்கையோடு ஒப்பிடுகையில் 2014இன் முதல் பாதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மந்தமானது."

நிதியியல் தரப்பிலோ, “அங்கே சந்தைகள் அபாயத்தை குறைத்து மதிப்பிடுவதாக" மற்றும் பரந்த-பொருளாதார (macroeconomic) ஆய்வுகள் மற்றும் மத்திய வங்கிகளால் பண பொதிகள் திரும்ப பெறப்படுவதன் தாக்கங்கள் குறித்து முழுவதுமாக கணக்கில் எடுக்கப்படவில்லை என்பதாக "கவலை நிலவுகிறது".

அமெரிக்க வட்டிவிகிதங்களில் கொண்டு வரப்படும் ஒரு உயர்வானது உலகளாவிய "பொங்கிவழியும்" விளைவுகளைக் கொண்டிருக்கிறது, அத்துடன் எழுச்சி அடைந்துவரும் சந்தைகளில் இருந்து நிதிகள் வெளியேறி பாதுகாப்பான புகலிடங்களைத் தேட முனையும். “அதுபோன்றவொரு அதிர்வு உலகளாவிய பங்குபத்திர துறையில் பெரும் இழப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், சாத்தியமாள அளவுக்கு நிதியியல் மற்றும் பரந்த-பொருளாதார (Macro Economy) ஸ்திரப்பாடு மீதான உலகளாவிய தாக்கங்களுடன், அது துறைசார் சரிக்கட்டல்களை வேகமாக துரிதப்படுத்தி குறிப்பிடத்தக்களவில் சந்தை கொந்தளிப்பை உண்டாக்கும்."

மோசமடைந்துவரும் பொருளாதார நிலைமைகளின் பட்டியல் இவ்விதமாக நீண்டு கொண்டே செல்கிறது. குறைந்த வருமான நாடுகள், குறிப்பாக ஆபிரிக்காவினது, வளர்ச்சி 2014 மற்றும் 2015இல் 6 சதவீதமாக முன்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த "வேக போக்கு" மட்டுமே, ஒட்டுமொத்த அறிக்கையிலும் இருக்கும் ஒரேயொரு "பிரகாசமான புள்ளியாக" இருக்கிறது.

உலகளாவிய முதலாளித்துவ பொருளாதாரத்தில் நிகழ்ந்துவரும் உடைவு, பெரும் சமூக மற்றும் அரசியல் தாக்கங்களைக் கொண்டிருக்கிறது. இது IMF அறிக்கையில் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற போதினும் விவரிக்கப்படவில்லை. அது ஒவ்வொரு நாட்டிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமடைந்துவரும் தாக்குதல்கள் மற்றும் அதிகரித்துவரும் இராணுவவாதத்திற்கு உந்துசக்தியாக உள்ளது.