சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan provincial election: Oppose the drive to war and austerity

இலங்கை மாகாண சபை தேர்தல்: போருக்கான உந்துதலையும் சிக்கன நடவடிக்கைகளையும் எதிர்த்திடுக

By the Socialist Equality Party
11 September 2014

Use this version to printSend feedback

ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் இலங்கை அரசாங்கம், செப்டம்பர் 20 அன்று மத்திய மலையக பிரதேசத்தில் ஊவா மாகாண சபைக்கான தேர்தல்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

முழு அரசியல் ஸ்தாபகமும் -ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, அதே போல் எதிர் கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி (யூஎன்பீ) மற்றும் மக்கள் விடுதலை முன்னணியும் (ஜேவிபீ)- பூகோள முதலாளித்துவத்தின் வீழ்ச்சியினால் உந்தப்பட்டு வரும் யுத்த ஆபத்து மற்றும் சமூக எதிர் புரட்சி சம்பந்தமான பிரச்சினைகளை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு மூடி மறைப்பதற்காக ஒரு தேசியவாத மற்றும் பேரினவாத பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.

100 ஆண்டுகளுக்கு முன்பு முதலாம் உலகப் போர் மற்றும் 75 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் உலக போரிலும் வெடித்த முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

மற்ற நாடுகளைப் போலவே இலங்கையும், அமெரிக்க மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளால் தூண்டிவிடப்படும் புவிசார்-அரசியல் நீர்ச்சுழிக்குள் இழுபட்டு வருகின்றது. சர்வதேச தொழிலாள வர்க்கம் தலையிட்டு, உலக முதலாளித்துவத்தை புரட்சிகர முறையில் தூக்கிவீசப் போராடாவிட்டால், இந்த பதட்ட நிலைமைகள், இம்முறை அனுவாயுதங்களுடன் இடம்பெறக்கூடிய ஒரு மூன்றாம் உலகப் போருக்கு தவிர்க்க முடியாமல் வழிவகுக்கும் என சோசலிச சமத்துவக் கட்சி (சோசக) எச்சரிக்கின்றது.

ஐரோப்பாவில், அமெரிக்காவும் ஜேர்மனியும் ஒரு பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் உக்ரேனில் ஒரு தீவிர வலதுசாரி அரசாங்கத்தை திணிப்பதற்கு நடவடிக்கை எடுத்த பின்னர், ரஷ்யா உடனான மோதலை ஈவிரக்கமின்றி தூண்டி வருகின்றன. வாஷிங்டனின் இறுதி நோக்கம், ரஷ்யாவை துண்டு துண்டாக்கி அதை ஒரு தொகை அரைக்காலனிகளாக ஆக்குவதே ஆகும்.

அமெரிக்கா ஆசியாவில், சீனா தொடர்பாகவும் அதே நோக்கத்தையே முன்னெடுக்கின்றது. ஜனாதிபதி ஒபாமாவின் "ஆசியாவில் முன்னிலை" கொள்கையானது இராணுவத்தை கட்டியெழுப்புதல் மற்றும் இந்து-பசிபிக் ஊடான, குறிப்பாக ஜப்பானிய மற்றும் ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியங்களுடனான கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்காண்மையை வலுப்படுத்துவதன் மூலம் சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைத்து அதை கீழறுப்பதை இலக்காகக் கொண்டாகும்.

மத்திய கிழக்கில், அமெரிக்கா காசா பகுதியில் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் கொலைகார போரை ஆதரிப்பதோடு, இப்போது ஈராக் மற்றும் சிரியாவில் புதிய யுத்தங்களுக்கு தயார் செய்கின்றது. உலகச் சுற்றியுள்ள இத்தகைய வெடிபுள்ளிகள் ஒரு பரந்த மோதலை எந்த நேரத்திலும் வெடிக்கச் செய்யக் கூடும்.

முழு தெற்காசியாவும் இந்த புவிசார்-அரசியல் பதட்டங்களுக்குள் அகப்பட்டுள்ளது. பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான போரில் ஆழமாக சிக்கிக்கொண்டுள்ளதோடு தனது சொந்த மக்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களை ஆதரிக்கும் அதேவேளை, சீனாவுடனான உறவுகளையும் தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றது. இந்தியா நீண்ட காலத்துக்கு முன்பே அதன் அணிசேரா நிலையை கைவிட்டு, சீனாவிற்கு எதிராக குறிவைக்கப்பட்டுள்ள அமெரிக்காவுடனான அதன் மூலோபாய பங்கான்மையை விரிவாக்கி வருகின்றது.

சிறிய இலங்கை தீவானது, இந்த உலக கொந்தளிப்பில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அபத்தமாக காட்டிக்கொள்ள முயற்சிக்கும் இராஜபக்ஷ, அதேசமயம், தனது அரசாங்கம் "மேற்கத்திய சதியில்" பாதிக்கப்பட்டுள்ளது என்றும் கூறிக்கொள்கின்றார்.

சதி என்ன? பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு அவரது போர் குற்றங்களை கண்டுகொள்ளாமல் இருந்த அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், இப்போது சீனாவுடனான உறவுகளை முறித்துக்கொள்ள அவரை நெருக்குவதற்காக போர்க் குற்றங்களை பயன்படுத்த முயல்கின்றன. இராஜபக்ஷ ஒருபோதும் சதிகாரர்களின் பெயர்களை கூறுவதில்லை. ஏனெனில், சீனா மீது தங்கியிருக்கும் அதேவேளை, அவர் வாஷிங்டனுக்கு சேவை செய்யவும் ஏக்கத்துடன் முயற்சிக்கின்றார்.

இராஜபக்ஷவின் சூழ்ச்சி, ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே அண்மையில் கொழும்புக்கு விஜயம் செய்ததில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. அவர்களது கூட்டறிக்கை, "ஆசியா மற்றும் ஆபிரிக்கா இடையில் விரிந்திருக்கும் இந்து சமுத்திரத்தின் கடல் மார்க்கத்தில் இலங்கையின் மூலோபாய புவிசார்-அரசியல் அமைவிடத்தை" குறிப்பிட்டு, வாஷிங்டன் மற்றும் அதன் பங்காளிகளுக்கும் இலங்கையின் முக்கியத்துவத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. இரு தலைவர்களும் கடல் பாதுகாப்பு பற்றிய பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு உடன்பட்டுள்ளனர், இது கடல்சார் உறவுகளை நெருக்கமாக்குவதை நோக்கிய ஒரு நடவடிக்கையாகும்.

அடுத்த வாரம், இராஜபக்ஷ சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து, மூலோபாய முக்கியத்துவம் கொண்ட அம்பாந்தோட்டை துறைமுகம் உட்பட சீன முதலீடுகளை சமரசம் செய்யும், வாஷிங்டன் மற்றும் டோக்கியோ நோக்கிய கொழும்பின் நகர்வை பற்றிய சீனாவின் கவலைகளை போக்க முயற்சிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆயினும், இராஜபக்ஷவின் எச்சரிக்கையுடனான சமநிலைப்படுத்தும் செயல், ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்ற நிலை அதிகரித்து வருகிறது. இலங்கை போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஒரு சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விடுத்து .நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்கா ஆதரவளித்தமை, கொழும்பு சம்பந்தமாக வாஷிங்டன் பொறுமை இழந்திருப்பதை கோடிட்டுக் காட்டியது. இந்த விசாரணைகள் இறுதியில் இராஜபக்ஷ உட்பட இலங்கையின் தலைவர்கள் விசாரிக்கப்படுவதை காணக்கூடும்.

அவரது மேற்கத்திய-எதிர்ப்பு வாய்ச்சவடால் ஒருபுறம் இருக்க, இராஜபக்ஷ வாஷிங்டனுடன் உறவை புதுப்பிப்பதிலேயே குறியாக இருக்கின்றார். அவர் ஒபாமா மற்றும் அமெரிக்க காங்கிரசிடம் இருந்து ஒரு சாதகமான பதிலைப் பெற அமெரிக்க அரசு தொடர்பாடல் நிறுவனங்களுக்கு பல மில்லியன் டாலர்களை செலவு செய்கின்றார். அவரது அரசாங்கம் தனது பாலஸ்தீன ஆதரவு தோரணையை கைவிட்டுள்ளதோடு இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு போருக்கு பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸை குற்றம் சாட்டி, காசா தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. உக்ரேனில் பாசிச தலைமையிலான ஆட்சிக் கவிழ்ப்பின்போது, ரஷ்ய-சார்பு மற்றும் மேற்கத்திய-எதிர்ப்பு என அர்த்தப்படக் கூடிய ஒரு அறிக்கையை வெளியிடுவது சம்பந்தமாக தனது வெளிவிவகார அமைச்சர் இராஜபக்ஷ எச்சரித்திருந்தார்.

இலங்கை எதிர்க்கட்சிகள் ஏற்கனவே வாஷிங்டனின் முகாமில் உள்ளன. நீண்ட காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சேவகனாக இருந்து வரும் வலதுசாரி யூஎன்பீ, யதார்த்தத்தில் சீனாவிடம் இருந்து ஒதுங்கிக்கொள்வதை அர்த்தப்படுத்தும் விதத்தில், "மனித உரிமைகள்" சம்பந்தமான அமெரிக்க கோரிக்கைகளுக்கு உடன்பட வேண்டும் என்று கோரியுள்ளது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை உரத்து ஆதரித்த ஜேவிபீ, இப்போது மனித உரிமைகளை மீறியதனால் .நா விசாரணைக்கு வழி வகுத்துள்ளதாக அரசாங்கத்தை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த வழியில், முன்னர் அதன் ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவடால்களுக்கு பேர்போன ஜேவிபீ, தான் வாஷிங்டன் பாதையில் இருப்பதாக சமிக்ஞை காட்டுகின்றது.

போலி இடது அமைப்புக்களான நவ சம சமாஜ கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சியும், மனித உரிமைகள் தொடர்பான அமெரிக்கவின் போலித்தனத்தை வெட்கமின்றி ஆதரிப்பதோடு இலங்கையில் "ஜனநாயக உரிமைகளை" ஸ்தபிப்பதற்கான வழிமுறையாகவும் அதை சித்தரிக்கின்றன. அதே நேரம், தமது சர்வதேச சகதரப்பினரை போல், இவர்களும் உலகப் போர் அச்சுறுத்தல் ஒன்று கிடையாது மற்றும் ஏகாதிபத்தியத்தின் கீழ் உலக அமைதி ஏற்படும் என்று பிரகடனம் செய்து தொழிலாள வர்க்கத்தை மயக்குவதற்கு முயற்சிக்கின்றனர்.

இலங்கையில் தொழிலாளர்களும் இளைஞர்களும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பூகோள போர்-எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதன் பகுதியாக ஏகாதிபத்திய போருக்கான உந்துதலை எதிர்க்க வேண்டும். இத்தகைய ஒரு இயக்கத்தை முதலாளித்துவ வர்க்கத்தின் அனைத்து கன்னைகளுக்கும் எதிராக மட்டுமே கட்டியெழுப்ப முடியும். முதலாளித்துவ மீட்சிக்கான செயல்முறைகளில் தங்களை வளப்படுத்திக்கொண்ட, செல்வம் படைத்த தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவம் செய்யும் ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள அரசாங்கங்களும் இதில் அடங்கும். போரை தடுப்பதற்கான ஒரே வழி உலக சோசலிச புரட்சி மட்டுமே ஆகும். இந்த முன்னோக்கு போராடும் ஒரே அமைப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே ஆகும்.

இந்த பிராந்தியத்தில், தெற்காசிய சோசலிச குடியரசுகளின் ஒன்றியத்துக்கான, மற்றும் இந்த தீவில் ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசுக்கான போராட்டத்தை சூழ ஐக்கியப்படுமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறது,

போருக்கான உந்துதல், ஒவ்வொரு நாட்டிலும் வாழ்க்கை தரங்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள் மீது ஆழமடைந்துவரும் தாக்குதல்களுடன் பிணைந்துள்ளது. 2008ல் வெடித்த உலக முதலாளித்துவ நெருக்கடியானது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இலங்கை உட்பட உலகின் ஒவ்வொரு மூலையிலும், ஒரு தொடர்ச்சியான சமூக எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளை முன்னெடுக்க ஒட்டுண்ணி நிதி எதேச்சாதிகாரங்கள் விடுக்கும் கோரிக்கைகளை ஊக்கப்படுத்துகின்றது.

2009ல் இருந்து, இராஜபக்ஷ அரசாங்கமானது வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை குறைக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கையை நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த ஆண்டுக்கான இலக்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாக குறைப்பதாகும், அடுத்த ஆண்டு அது 3.8 சதவீதமாகும். இதன் விளைவாக கல்வி, சுகாதாரம் மற்றும் நலன்புரி சேவைகளுக்கான செலவுகள் முடிவின்றி வெட்டிக் குறைக்கப்படுவதோடு விலை மானியங்களும் குறைக்கப்படுகின்றன. அதே சமயம், அரசாங்கம் அனைத்துக்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீது இலக்கு வைக்கப்பட்ட ஒரு பிரமாண்டமான இராணுவ/பொலிஸ் இயந்திரத்தை பராமரிக்கின்றது.

இராஜபக்ஷ வளர்ந்து வரும் சமூக அமைதியின்மையின் அறிகுறிகள் பற்றி அச்சம் கொண்டுள்ளார். 50,000 க்கும் மேற்பட்ட சுகாதார தொழிலாளர்கள் சமீபத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இறுதியில் அந்த வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்களின் துரோக நடவடிக்கையினால் நிறுத்தப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலான எதிர்ப்புக்கள் தொடர்கின்றன.

கொழும்பை ஒரு வர்த்தக மையமாக மாற்றும் அதன் திட்டங்களின் ஒரு பகுதியாக, அரசாங்கம் 100,000 குடும்பங்கள் வெளியேற்றுவதோடு ஏற்கனவே இந்த வெளியேற்றுங்களை துரிதப்படுத்த இராணுவத்தை பயன்படுத்தியுள்ளது. இராஜபக்ஷ, தாங்க முடியாத கடன் சுமையில் மூழ்கியுள்ள பொருளாதாரத்தை பிணை எடுப்பதன் பேரில், முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏங்குகிறார். இலங்கையின் வெளிநாட்டு கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 59 சதவீதமாகும். இது மங்கோலியா மற்றும் பப்புவா நியூ கினிக்கு அடுத்ததாக ஆசியாவிலேயே மிகப் பெரிய தொகையாகும்.

பதுளை, மொனராகலை ஆகிய ஊவா மாவட்டங்கள், உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் சமூக நெருக்கடியை குறிக்கின்றன. சனத்தொகையில் சுமார் 15 சதவீதமானவர்கள் நாளொன்றுக்கு 1 அமெரிக்க டாலருக்கும் குறைவான வருமானத்தில் வறுமையில் வாழ்கின்றனர். மற்றும் 30 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் நாளொன்றுக்கு 2 டாலருக்கும் குறைவான வருமானத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்கின்றனர். பெரும்பாலான பதுளை வாசிகள் ஏழை தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் ஆவர், மற்றும் மொனராகலை வாசிகள் வறுமையில் வாடும் விவசாயிகளாவர்.

இந்த சமூக நெருக்கடியை அக்கறையுடன் அணுகுவதற்கு திராணியற்ற இராஜபக்ஷவின் ஆளும் கட்சி, தனது அரசியல் எதிரிகள் மீதான குண்டர் தாக்குதல்களை நாடியுள்ளதோடு பொதுப் பணத்தை சட்டவிரோதமாக அதன் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகின்றது. மிகவும் பரவலாக வன்முறைகள் அதிகரித்த நிலையில், தேர்தல் ஆணையர் தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளார்.

எதிர்க் கட்சிகளான யூஎன்பீ மற்றும் ஜேவிபீயும் ஆட்சியில் இருந்தபோது அதே சந்தை சார்பு முன்னோக்கையே பகிர்ந்துகொண்டன. யூஎன்பீ அரசியல்வாதிகள் உழைக்கும் மக்கள் எதிர்கொள்ளும் பொருளாதார கஷ்டங்களை பற்றி தங்கள் தேர்தல் கூட்டங்களில் முதலை கண்ணீர் சிந்திய போதிலும், ஆட்சியில் இருந்தபோது, இந்த பெருநிறுவன உயரடுக்கின் கட்சி, வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு பேர்போனதாக இருந்தது. ஜேவிபீயை பொறுத்தவரை, அது தனது முந்தைய சோசலிச வார்த்தை ஜாலங்களை கைவிட்டு, இப்போது தீவுக்குள் வெளிநாட்டு மூலதனத்தை கவருவதே அதன் நோக்கம் என்று அறிவிக்கின்றது.

இராஜபக்ஷவின் ஆளும் கூட்டணியின் ஒரு பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இதொகா) மற்றும் ஏனைய தமிழ் கட்சிகளும், "தமிழ் பிரதிநிதி" ஒருவரை தேர்வு செய்வது தோட்ட தொழிலாளர்களுக்கு நன்மையளிக்கும் என்ற மோசடி கதையை ஊக்குவிக்கின்றன. அவர்கள் அனைவரும் சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களை பிளவுபடுத்த தமிழ் இனவாத அரசியலை வளர்ப்பதோடு, பெருந்தோட்ட நிறுவனங்களின் கோரிக்கைப்படி சம்பளம் மற்றும் நிலைமைகள் வெட்டப்படுவதை நிறைவேற்றுவதற்குப் பொறுப்பாளிகளாவர்.

போலி இடது குழுக்களில் ஒன்றான ஐக்கிய சோசலிச கட்சி (யுஎஸ்பீ), மொனராகலை மாவட்டத்தில் போட்டியிடுகின்ற போதிலும், பகிரங்க கொள்கை அறிக்கை எதையும் வெளியிட்டிருக்கவில்லை. அதன் மெளனம் ஆச்சரியத்திற்குரியதல்ல. நவ சம சமாஜ கட்சியுடன் சேர்ந்து, ஐக்கிய சோசலிச கட்சியும் யூஎன்பீ உடனான ஒரு கூட்டணியில் நின்று அந்த வலதுசாரி, வணிக சார்புடைய கட்சியை ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலனாக காட்டும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆளும் வர்க்கத்தின் சார்பாக நவ சம சமாஜ கட்சியும் ஐக்கிய சோசலிச கட்சியும் பிரதானமாக செயற்படுவது, சோசலிச சர்வதேசியவாதத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன இயக்கம் உருவாவதை தடுப்பதற்கே ஆகும்.

மாகாண சபை தேர்தலில் போட்டியிடாத போதிலும், சோசலிச சமத்துவக் கட்சி போர் மற்றும் சமூக எதிர் புரட்சியை எதிர்த்து செயலூக்கத்துடன் பிரச்சாரம் செய்யும். முதலாளித்துவத்தை தூக்கியெறிந்து, சோசலிச கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக ஒரு தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவருவதன் பேரில் சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து அதை ஒரு வெகுஜன புரட்சிகர கட்சியாக கட்டியெழுப்புமாறு நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும், போருக்கான உந்துதல் பற்றி விளக்கவும் அதை எதிர்க்கவும் பல கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளன. நாம் உலக சோசலிச வலைத் தளத்தை வாசிக்குமாறும் எங்கள் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கை படித்து, சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE), அமைப்பில் சேர விண்ணப்பிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.