சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

American imperialism and the rise of Islamic extremism in Syria and Iraq

அமெரிக்க ஏகாதிபத்தியமும், சிரியா மற்றும் ஈராக்கில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் எழுச்சியும்

By Niles Williamson
9 September 2014

Use this version to printSend feedback

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் மக்கள் எதிர்ப்பின் முன்னால் சிரியா மீது குண்டுவீசும் அதன் திட்டங்களிலிருந்து ஒபாமா நிர்வாகம் பின்வாங்கி வெறும் ஓராண்டுக்குப் பின்னர், மத்திய கிழக்கில் ஒரு பகிரங்கமான ஏகாதிபத்திய தாக்குதலை தொடங்க ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) சௌகரியமான புதிய போலிக்காரணமாக எழுந்துள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ISISஐ இலக்கில் வைப்பதற்காக என்று கூறப்படும் ஒரு முடிவில்லா யுத்தத்தை அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா புதனன்று, தேசியளவிலான-தொலைக்காட்சி உரையில், அறிவிக்க இருக்கிறார். அந்நிர்வாகம் அந்நாட்டிற்குள் துருப்புகளின் மறுஅறிமுகம் உள்ளடங்கலாக ஈராக்கின் மீது வான் தாக்குதல்களை ஏற்கனவே தொடங்கிவிட்டது. இது பாரியளவில் விரிவாக்கப்பட உள்ளது.

கடந்த ஆண்டு சிரியாவிற்கு எதிராக போர் அறிவிப்பதற்கு காரணமாக, கூத்தா நகர் மீது இரசாயன ஆயுதங்களின் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இத்தகைய தாக்குதல்களுக்கு அசாத் அரசாங்கம் தான் பொறுப்பு என்ற ஏகாதிபத்திய சக்திகளின் வாதங்கள், பின்னர் ஒரு திட்டமிட்ட மோசடியாக அம்பலப்படுத்தப்பட்டன, அதில் இதழாளர் செமோர் ஹெர்ஸின் ஓர் அறிக்கையும் உள்ளடங்கும், அதைத்தொடர்ந்து வந்த காலங்களில் இந்த அறிக்கை அமெரிக்க ஊடகங்களால் புதைக்கப்பட்டுவிட்டது.

மத்திய கிழக்கில் விரிவாக்கப்பட்ட யுத்த உந்துதலின் இலக்காக இப்போதைக்கு வெளிவேஷத்திற்கு ISIS இருக்கின்ற போதினும், திரைக்குப் பின்னால் அமெரிக்க ஆளும் வர்க்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு" புத்துயிரூட்டவும் மற்றும் அசாத் அரசாங்கத்திற்கு எதிரான— அது எதை தொடங்கியதோ அதை முடித்து வைக்கும்— நடவடிக்கைகளைத் தயாரிக்கவும் அந்த நெருக்கடியைப் பயன்படுத்த முனைந்து வருகிறது. அசாத் அரசாங்கம் காலங்காலமாக ஈரான் மற்றும் ரஷ்யா இரண்டினதும் நெருங்கிய பங்காளியாக இருந்து வருகிறது, பிந்தையது (அதாவது ரஷ்யா) உக்ரேனில் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியால் ஆதரிக்கப்பட்ட வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியால் தொடங்கிய தீவிரமடைந்துவரும் யுத்த உந்துதலில் ஓர் இலக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா இன்னமும் அசாத்திற்கு எதிராக சதி செய்து வருவதைச் சிந்தனை கூடங்கள் மற்றும் வெளியுறவு கொள்கை இதழ்களில் வெளியாகும் பல்வேறு கட்டுரைகளிலும் காண முடியும். முன்னாள் சிஐஏ பகுப்பாய்வாளரும், ஜனநாயக கட்சியின் முன்னணி மூலோபாயவாதியும், புரூக்கிங்ஸ் பயிலகத்தின் ஒரு மூத்த ஆய்வாளருமான கென்னெத் எம். பொல்லாக் எழுதிய ஒரு கட்டுரை (அசாத்தைத் தோற்கடிப்பதற்கு ஓர் இராணுவம்) Foreign Affairsஇன் மிக சமீபத்திய பதிப்பில் வெளியானது. பொல்லாக், ISISஐ தோற்கடிக்கக்கூடிய மற்றும் அசாத் ஆட்சியைக் கவிழ்க்கக்கூடிய ஓர் இராணுவத்தை உருவாக்கி சிரியாவில் உள்ள தற்போதைய எதிர்ப்பு சக்திகளுக்குப் பயிற்சியளிக்கவும் மற்றும் பாரியளவில் ஆயுதயுதவிகள் வழங்கவும், மற்றும் ஓர் அமெரிக்க-ஆதரவிலான இராணுவ சர்வாதிகாரத்தை அங்கே ஸ்தாபிக்கவும் அமெரிக்காவிற்கு அழைப்புவிடுக்கிறார்.

இந்த தருவாயில், ISISஆல் அமெரிக்க இதழாளர்கள் ஜேம்ஸ் ஃபோலே மற்றும் ஸ்டீவன் சோட்லோஃப் காட்டுமிராண்டித்தனமாக கழுத்தறுத்து கொல்லப்பட்டமை, குறைந்தபட்சம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சரியான நேரத்தில் கிடைத்த போலிக்காரணமாக இருக்கின்றன.

ISISயும், சிரியாவிற்கு எதிரான நடவடிக்கையும்

அமெரிக்க அரசாங்கமும் பிரதான ஊடகங்களும் வலியுறுத்துவதைப் போல, ISIS ஒரு விளங்கமுடியாத "தீய" சக்தியோ அல்லது ஒரு "புற்றுநோயோ" அல்ல. சிரியாவிலும் ஈராக்கிலும் ISIS மற்றும் ஏனைய இஸ்லாமிய தீவிரவாத குழுக்களின் வெற்றி என்பது முற்றிலும் மத்திய கிழக்கில் அமெரிக்க வெளியுறவுத்துறை கொள்கையின் ஒரு விளைபொருளே ஆகும்.

அல் கொய்தா மற்றும் ஒசாமா பின்லேடன் உடனான அதன் தொடர்புகள் உட்பட, ISIS உடனான அமெரிக்க அரசாங்கத்தின் தொடர்புகளும் ஒரு பாரம்பரிய வடிவத்தைப் பின்தொடர்கிறது. அல் கொய்தாவைப் போலவே, ISISயும் அமெரிக்க தலையீட்டின் ஒரு விளைபொருளாகும்முந்தையது 1980களில் சோவியத் ஒன்றியத்துடனான பினாமி யுத்தத்தின் பாகமாக முதலில் ஆப்கானிஸ்தானிலும், பிந்தையது சிரியா மற்றும் ஈராக்கிலும் உருவாக்கப்பட்டது. மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசியா மீது கட்டுப்பாட்டை பெறும் அதன் முயற்சியில், அமெரிக்க ஆளும் வர்க்கம் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மிகவும் பிற்போக்குத்தனமான, பின்தங்கிய உட்கூறுகளின் மீது தங்கியிருந்துள்ளது. (பார்க்கவும்: ISIS atrocities and US imperialism)

அமெரிக்கா, பிரதான ஐரோப்பிய சக்திகள், சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அவற்றின் பிராந்திய பங்காளிகள் அனைத்துமே, ISIS மற்றும் ஏனைய தீவிரவாத அமைப்புகள் பெரிதும் ஆதாயமடையும் வகையில், சிரியாவில் அசாத்-விரோத குழுக்களுக்குக் கணிசமான இராணுவ, அரசியல் மற்றும் நிதி உதவிகளை வழங்கியுள்ளன.

ஜோர்ஜ் டபிள்யு. புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகங்கள் இரண்டினது கீழும், அமெரிக்க அரசாங்கம் அசாத் ஆட்சியைத் தூக்கியெறிய நோக்கம் கொண்ட ஒரு பொதுவான கொள்கையின் பாகமாக, சிரிய எதிர்ப்பு படைகளுக்குப் பணத்தைப் பாய்ச்சி இருந்தன. இவ்விதத்தில் சிரியாவை நிலைகுலைக்கும் மூலோபாயத்தின் ஒரு முக்கிய விளைவாக, ISIS போன்ற சுன்னி தீவிரவாத அமைப்புகளின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க இராஜாங்கத்துறை கசிவுகள், அமெரிக்க அரசுத்துறை இலண்டனில் நாடுகடந்து வாழும் சிரியர்களால் அமைக்கப்பட்ட நீதி மற்றும் வளர்ச்சிக்கான இயக்கம் (MJD) எனும் ஒரு இஸ்லாமிய குழுவிற்கு, 2006க்கும் மற்றும் 2010க்கும் இடையே, 6 மில்லியன் டாலர் வழங்கியதை அம்பலப்படுத்தியது. அந்த பணம், MJDஇன் செயற்கைக்கோள் செய்தி ஒளிபரப்பான, பராடா தொலைக்காட்சிக்கு (Barada TV) நிதியளிக்கவும், அத்துடன் சிரியாவிற்குள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் MJDஆல் பயன்படுத்தப்பட்டது.

டிசம்பர் 2006இல் வெளியான ஒரு இராஜாங்க கசிவு, அசாத் ஆட்சியை ஆத்திரமூட்டும் மற்றும் சிரியாவை நிலைகுலைக்கும் அரசுத்துறையின் திட்டங்களை அம்பலப்படுத்தியது. அதில் முன்னாள் சிரிய துணை ஜனாதிபதி அப்துல் ஹலீம் கஹாத்தம் மற்றும் அவரது தேசிய மீட்சிப்படையை (National Salvation Front) ஊக்குவிப்பதும் உள்ளடங்கி இருந்தது.

2011இல் சிரியாவில் விரோத நடவடிக்கைகளைத் தொடங்கியதிலிருந்து, சுதந்திர சிரிய இராணுவத்தில் (Free Syrian Army - FSA) இருந்த மிதவாதிகள் என்றழைக்கப்பட்டவர்களுக்கு உயிருக்கு சேதம் விளைவிக்காத உதவி வழங்குகிறோம் என்ற போர்வையில் சிஐஏ ஒரு முக்கிய துப்பாக்கி சுடும் பயிற்சியை மற்றும் இராணுவ பயிற்சி நடவடிக்கையைத் தொடங்கியது.

அந்த இரகசிய சிஐஏ நடவடிக்கையில் சவூதி அரேபியா, கட்டார், மற்றும் துருக்கி ஆகியவையும் சம்பந்தப்பட்டிருந்தன, அவை விலைக்கு வாங்கிய ஆயுதங்களை வடக்கு சிரியாவிற்குள் துருக்கி எல்லை வழியாக கொண்டு சென்றதுடன், சிரிய முஸ்லீம் சகோதரத்துவம் உட்பட இடைத்தரகர்கள் மூலமாக வினியோகித்தன. லிபியா, குரேஷியா மற்றும் சூடானிலிருந்து சிரியாவிற்குள் ஆயுத தொகுப்புகள் கடத்தப்பட்டு வந்தன என்பது அறியப்பட்ட ஒன்றேயாகும்.

CIAஇன் இந்த தலையீடு சிரியாவிற்குள் தானியங்கி துப்பாக்கிகள், ராக்கெட் மூலமாக ஏவப்படும் வெடிகுண்டுகள் மற்றும் மில்லியன் கணக்கில் துப்பாக்கி தோட்டாக்கள், அத்துடன் டாங்கி தகர்ப்பு மற்றும் விமான தகர்ப்பு ஏவுகணைகள் ஆகியவற்றை வெள்ளமென கொண்டு சென்றது.

நியூ யோர்க் டைம்ஸிற்கு எழுதிய சி.ஜே. சீவெர்ஸின் கருத்துப்படி, சவூதி அரேபியா மற்றும் கட்டாரிலிருந்து ஜோர்டான் மற்றும் துருக்கி வரையில் நூற்றுக் கணக்கான இராணுவ ஆயுத விமானங்கள் நவம்பர் 2012 மற்றும் மார்ச் 2013க்கு இடையே சிரியாவிற்குள் குறைந்தபட்சம் 3,500 டன் இராணுவ உபகரணங்களைக் கொண்டு சென்றிருந்தன, இவை CIAஆல் அமைக்கப்பட்ட வலையமைப்புகள் மூலமாக வினியோகிக்கப்பட்டன மற்றும் மேற்பார்வை செய்யப்பட்டன.

செமோர் ஹெர்ஸ், ஏப்ரல் 2014இல் புத்தகங்களின் இலண்டன் மீளாய்வு கட்டுரையில், லிபியாவிலிருந்து சிரியாவிற்குள் போராளிகள் மற்றும் ஆயுதங்களை அனுப்புவதற்கு CIAஆல் நடத்தப்பட்ட "எலிப்பாதை" (rat line) என்ற நடவடிக்கையை விவரித்திருந்தார்.

ஹெர்ஸின் கருத்துப்படி, அந்த நடவடிக்கை சிஐஏ இயக்குனர் டேவிட் பெட்ரீயஸ், மற்றும் பெங்காசி தூதரகத்தால் மேற்பார்வையிடப்பட்டது. செப்டம்பர் 11, 2012இல் அத்தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆயுத பரிவர்த்தனைக்கு மூடிமறைப்பை வழங்க பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஹெர்ஸின் கருத்துப்படி, சிஐஏ நடவடிக்கைக்கு நிதி கிடைப்பதற்கு, MI6இன் பிரிட்டிஷ் உளவுத்துறை முகவர்களால் உத்தியோகபூர்வமாக மேற்பார்வையிடப்பட்டது. ஆயுதங்கள் வாங்குவதற்காக மற்றும் சிரியாவிற்குள் ஆயுதங்களைக் கொண்டு செல்வதற்காக முன்னணி நிறுவனங்களால் ஓய்வுபெற்ற அமெரிக்க சிப்பாய்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். பெங்காசி தூதரக தாக்குதலுக்குப் பின்னர் சிஐஏ அந்த நடவடிக்கையை நிறுத்திவிட்டது, ஆனால் ஆயுதங்களும் போராளிகளும் சிரியாவிற்குள் செல்வது தொடர்ந்து கொண்டு தான் இருந்தது.

FSAஇன் போராளிகளுக்காக என்று கூறப்பட்ட போதினும், அத்தகைய ஆயுதங்களில் ஒரு கணிசமான எண்ணிக்கை ISISஇன் மற்றும் அல் நுஸ்ரா முன்னணி, சிரியாவில் உள்ள அல் கொய்தாவின் கிளை அமைப்பு உட்பட இதர இஸ்லாமிக் அடிப்படைவாத குழுக்களின் கைகளுக்குப் போய் சேர்ந்தன.

நியூ யோர்க் டைம்ஸில் எழுதிய டேவிட் சாங்கெரின் கருத்துப்படி, 2012 முழுவதும் சிரியாவிற்குள் கடத்தப்பட்டு வந்த பெரும்பாலான ஆயுதங்கள் "கடுமையான போக்கெடுக்கும் இஸ்லாமிய ஜிஹாதிஸ்டுகளின்" கரங்களுக்கு போயிருப்பதை அமெரிக்க அதிகாரிகளும் மற்றும் மத்திய கிழக்கு இராஜாங்க அதிகாரிகளும் அறிவார்கள். இருந்தபோதினும், சிரியாவிற்குள் ஆயுதங்களை வெள்ளமென பாய்ச்சும் மற்றும் எதிர்ப்பு போராளிகளுக்கு பயிற்சியளிக்கும் திட்டம் தொடர்ந்தது.

பெப்ரவரி 2013இல் குரேஷியாவிலிருந்து ஜோர்டான் வழியாக சிரியாவிற்குள் கடத்தப்பட்ட ஆயுதங்களில் பெருந்தொகுதி இறுதியாக ISIS போராளிகள் மற்றும் அஹ்ரார் அல்-ஷாம் (Ahrar al-Sham) உட்பட இதர குழுக்களின் கைகளில் போய் சேர்ந்தது. ISIS போராளிகள் அன்பார் மாகாணத்தில் நடத்திய அவர்களின் தாக்குதலின் போது ஈராக்கிய இராணுவத்திற்கு எதிராக ஒரு குரேஷிய M79 ஒசா (M79 Osa) டாங்கி-தகர்ப்பு ஆயுதத்தைப் பயன்படுத்தி இருந்தார்கள். ISIS போராளிகள் ஈராக்கில் ஒரு குரேஷிய RBG-6 குண்டுவீசியைக் கொண்டு சண்டையிட்டதும் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜோர்டான் மற்றும் துருக்கியை ஒட்டிய சிரிய எல்லையோரத்தில், சிஐஏ மற்றும் அமெரிக்க இராணுவம் நூற்றுக் கணக்கான சிரிய எதிர்ப்பாளர்களுக்கு இராணுவ பயிற்சியளிப்பதிலும் ஈடுபட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியிட்ட ஒரு கட்டுரையில், நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிடுகையில், ஜோர்டானில் CIAஆல் பயிற்சியளிக்கப்பட்ட 50-நபர் குழு செப்டம் பர் 2013இல் சிரியாவிற்கு அனுப்பப்பட்டதாக அறிவித்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியம் எதை வெளிப்படையாக ஆதரித்ததோ அந்த FSAக்கும், மற்றும் ISIS போன்ற குழுக்களுக்கும் இடையே ஒரு கடினப் போக்கை எடுப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சி, முற்றிலும் ஓர் அரசியல் மோசடியாகும்.

சிரிய மோதல் போக்கின் போது, அக்-கொய்தா கிளைஅமைப்புடன் அவர்களின் பற்றுறுதியைச் சூளுரைத்து ஒட்டுமொத்த படையணிகளுடன், ஆயிரக் கணக்கான போராளிகள் FSAஇல் இருந்து அல்-நுஸ்ராவிற்குள் மாறினார்கள். அல்-நுஸ்ரா பிரிவுகளும் மற்றும் FSA படையணிகளும் அசாத்தின் படைகளுக்கு எதிராக வழக்கமாக கூட்டு தாக்குதல்கள் நடத்தியுள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில் சுதந்திர சிரிய இராணுவத்தின் கிழக்குப் படைப்பிரிவின் உயர் இராணுவ கவுன்சிலின் ஒரு தளபதி, சதாம் அல்-ஜமால், ISIS உடனான அவரது பற்றுறுதியைச் சூளுரைத்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அல்-நுஸ்ராவும் ISISஉம் சிரிய இராணுவத்தின் ஒரு தாக்குதலில் இருந்து யாப்ரௌத் நகரத்தைப் பாதுகாக்கும் முயற்சியில் ஒன்றாக சண்டையிட்டன, ஆனால் அது தோல்வியடைந்தது.

பாக்தாதி மற்றும் சிஷானியின் அமெரிக்க தொடர்புகள்

அல் கொய்தாவைப் போலவே, அந்த அமைப்பில் இணைந்திருந்தவர்களில் பலர் ஓர் இரகசிய கடந்தகாலத்தைக் கொண்டிருந்தார்கள், அமெரிக்கா மற்றும் அதன் பிரதான பங்காளிகளுடனான தொடர்புகளும் அதில் உள்ளடங்கும்.

2010இல் தலைமை ஏற்ற தற்போதைய ISISஇன் தலைவர் அபு பக்ர் அல் பாக்தாதி குறித்த பல ஊடக செய்திகள், அவர் முன்னர் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை அம்பலப்படுத்தி உள்ளன.

பாக்தாதி வரலாறின் இந்த அத்தியாயம் பிரதான ஊடகங்களில் பெரிதும் குறைத்துக் காட்டப்பட்டிருந்தது, அவை பாக்தாதியை ஒரு குறிப்பிடத்தக்க கடந்தகாலம் இல்லாத ஒரு வஞ்சக நபராக காட்ட விரும்புகின்றன. ஆனால் அநேகமாக பாக்தாதியின் சிறைக்காலம், அந்த அமைப்பின் தலைவராக அவர் வேகமாக உயர்வதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருக்கக்கூடும்.

பாதுகாப்புத்துறையை பொறுத்த வரையில், பெப்ரவரி 2004இல் அமெரிக்க இராணுவத்தால் கைது செய்யப்பட்ட பாக்தாதி டிசம்பர் 2004இல் ஒரு நிபந்தனையற்ற விடுதலை அளிக்கப்படும் வரையில் இழிபெயர்பெற்ற புக்கா முகாமில் ஒரு சாமானிய கைதியாக வைக்கப்பட்டிருந்தார். எவ்வாறிருப்பினும், புக்கா முகாமின் முன்னாள் தளபதி கேர்னல் கென்னத் கிங் The Daily Beastக்கு கூறுகையில் பாக்தாதி 2009 வரையில் அமெரிக்க சிறைக்காவலில் இருந்து விடுவிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

ISISஇன் முன்னோடி அமைப்பான ஈராக்கிய இஸ்லாமிக் அரசின் தலைவராக, பாக்தாதி மே 2010இல் பெயரிடப்பட்டார், இது, அவ்வமைப்பின் முந்தைய தலைவர்கள் அபு ஒமர் அல்-பாக்தாதி மற்றும் அபு அயூப் அல்-மஸ்ரி இருவரும் திக்ரிட்டிற்கு அருகில் அமெரிக்க மற்றும் ஈராக்கிய படைகளால் ஒரு கூட்டு இராணுவ வேட்டையில் கொல்லப்பட்டு நீண்டகாலத்திற்குப் பின்னர் நடந்ததல்ல.

அமெரிக்கா மற்றும் அதன் பங்காளிகளுடன் முன்னர் தொடர்பு கொண்டிருந்த மற்றொரு முக்கிய பிரமுகர், ஜோர்ஜியாவிலிருந்து வந்த இனரீதியில் செச்செனியரான தார்கான் பாட்ராஷ்விலி (Tarkhan Batirashvili) அல்லது அபு ஒமர் அல்-சிஷானி என்று அறியப்படுபவர் ஆவார், இவர் 2013இன் கோடையில் சிரியாவின் வடக்கு பகுதியில் ISISஇன் தளபதி ஆனார்.

வெள்ளியன்று NPR உடனான ஒரு நேர்காணலில், மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் கோர்டன் ஹானின் கருத்துப்படி, “கிளர்ச்சி ஒடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் ஜோர்ஜிய இராணுவத்தைத் தயாரிப்பு செய்ய அமெரிக்க பயிற்சி மற்றும் ஆயுதமேந்த செய்யும் திட்டத்தின் கீழ்" சிஷானி "ஜோர்ஜிய இராணுவத்தில் சேர்ந்து, பல்வேறு ஆயுதங்களைக் கையாளும் வல்லுனராக பயிற்சியளிக்கப்பட்டார்."

ஜோர்ஜிய இராணுவத்திலிருந்து வெளியேறிய பின்னர், சிஷானி சட்டவிரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்ததற்காக கைது செய்யப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறையில் இருந்தார், பின்னர் சிரியாவில் சண்டையிட்டு வந்த ஓர் இஸ்லாமிய அடிப்படைவாத குழுவில் இணைய துருக்கிக்குப் பயணித்தார்.

செச்சென் தேசியவாத மற்றும் இஸ்லாமிய அமைப்புகளுடன் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் சம்பந்தப்பட்டிருக்கும் விவகாரம் நீண்டகாலமாக இருந்து வருகிறது. “காகசஸ் எமிரேட்டின் ஜிஹாதி [இஸ்லாமிய அடிப்படைவாத] இயல்பை...வாஷிங்டனில் உள்ள பலர்...குறைத்துக் காட்டுகிறார்கள் அல்லது மறுக்க முயல்கிறார்கள்," காகசஸ் எமிரேட் செசென்யாவில் இருக்கும் ஒரு பிரிவினைவாத அமைப்பாகும். “செச்சென் விளைவை மற்றும் காகசஸ் எமிரேட்டை, என்றாவது, ஒருவேளை, ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா அவர்களை ஆதரிக்கக்கூடுமென்ற நம்பிக்கையில், அது யதார்த்தத்தில் இருப்பதைக் காட்டிலும் மிகவும் மிதமானதாக காட்ட முயலும் ஒரு குறிப்பிட்ட உட்கூறும் வாஷிங்டனுக்குள் இருக்கிறது."

2013இல் பாஸ்டன் மாரதான் குண்டுவெடிப்பில் சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவரான தாமர்லன் ஜார்னெவ் இனரீதியில் செச்சென் ஆவார் என்பதும், அவரும் அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தார் என்பதை நினைவுகூர்வதும் மதிப்புடையதாக இருக்கிறது. ஜார்னெவ்வின் தாயாரும், அவர் தரப்பு வழக்கறிஞர்களும், செச்சென்யாவில் இஸ்லாமிய படைகளின் தலைமையில் ரஷ்ய-விரோத நடவடிக்கைகளின் பாகமாக அவரைப் பயன்படுத்துவதற்காக ஜார்னெவ்வை நியமிக்க FBI முனைந்தது என்று கூறுகிறார்கள்.

அமெரிக்காவுக்கும் ISISஇன் தலைவர்களுக்கும் இடையே என்னமாதிரியான குறிப்பிட்ட தொடர்புகள் இருந்தாலும், அந்த அமைப்பும் மற்றும் அதன் தொடர்ச்சியான குற்றங்களும் உயர்வதற்கான பொறுப்பு, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் காலடியில் தான் சுருண்டுவந்து விழுகிறது. அசாத்தை பதவியிலிருந்து இறக்கும் அவர்களின் உந்துதலில், ஏகாதிபத்திய சக்திகள் சுன்னி அடிப்படைவாத உட்கூறுகள் ஆதாயமடையும் வகையில் ஆயுதங்கள், பணம், மற்றும் பயிற்சிகளை வழங்கி சிரியாவை ஸ்திரமின்மைக்கு உள்ளாக்க செயலூக்கத்துடன் வேலை செய்துள்ளன, அந்த நிகழ்வுபோக்கினூடாக அப்பிராந்தியத்தில் இராணுவ தலையீடுகளை இன்னும் மேற்கொண்டும் தீவிரப்படுத்த ஒரு சௌகரியமான போலிக்காரணத்தை உருவாக்கி வருகின்றன.