சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French press expresses concerns over German re-militarization

ஜேர்மன் மீள்இராணுவமயமாக்கல் குறித்து பிரெஞ்சு பத்திரிகைகள் கவலைகளை வெளிப்படுத்துகின்றன

By Kumaran Ira and Alex Lantier
6 April 2015

Use this version to printSend feedback

பிரதான ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே அதிகரித்துவரும் பதட்டங்களை அம்பலப்படுத்தும் வகையில், ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்எழுச்சி குறித்து பிரான்சில் மேலோங்கியிருந்த மௌனத்தைப் பிரெஞ்சு பத்திரிகைகளது பிரிவுகள் கலைத்து வருகின்றன. ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கல் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் நலன்களுக்கு ஓர் அடிப்படை அச்சுறுத்தல் என்று பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்திற்குள் அங்கே ஆழ்ந்த கவலைகள் நிலவுகின்றன.

ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜோன்-குளோட் ஜூங்கர் ஜேர்மனியின் Welt am Sonntag இதழுக்கு மார்ச் 8 இல் அளித்த பேட்டியில் ஓர் "ஐரோப்பிய ஒன்றிய கூட்டு இராணுவத்தை" உருவாக்குவதற்கு அழைப்புவிடுத்த பின்னர், “ஜேர்மனியர்கள் சீருடையில்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையை Le Monde பிரசுரித்தது.

ஜூங்கரின் ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்திற்கான முன்மொழிவு மீது, அது ஜேர்மனியால் மேலாதிக்கம் செலுத்தப்படும் என்ற நிலையில், பிரெஞ்சு ஊடகங்களும் மற்றும் அரசியல் ஸ்தாபகமும் பெரும்பாலும் அது குறித்து மௌனமாக இருந்து வந்துள்ளன. “பிரான்சில் பெரிதும் எடுத்துக்காட்டாமல் விடப்பட்ட அந்த முன்மொழிவு, ரைன் ஆற்றின் அக்கரையில் மிகவும் பிரபலமாக இருந்தது,” என்று Le Monde எழுதியது. “ஐரோப்பியர்களாக நமது எதிர்காலம், ஒரு நாள் ஓர் ஐரோப்பிய இராணுவத்தைச் சார்ந்திருக்கும்,” என்று கூறி, ஜூங்கரின் முன்மொழிவை வரவேற்ற ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயெனின் கருத்தை Le Monde மேற்கோளிட்டுக் காட்டியது.

இந்த சூழ்நிலைக்கும் இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய சூழ்நிலைக்கும் ஒரு சமாந்தரத்தை Le Monde வரைந்து காட்டியது, அப்போது USSRக்கு எதிராக திரும்பி இருந்த மேற்கு ஜேர்மனியின் மீள்ஆயுதமயமாக்கலுக்கு சம்மதம் வழங்க வாஷிங்டன் பாரீஸை நிர்பந்தித்தது. “பிரெஞ்சு எதை தவிர்க்க விரும்பியதோ அதற்கு, அதாவது ஜேர்மனியின் மீள்ஆயுதமயமாக்கலுக்கும் மற்றும் நேட்டோவுடன் அதன் ஒருங்கிணைப்பிற்கும், அது உடன்பட வேண்டி இருந்தது. அறுபது ஆண்டுகளுக்குப் பின்னர், வரலாறு மீண்டும் திரும்பி உள்ளதாக தெரிகிறது. அது இஸ்லாமிக் அரசு (IS) மற்றும் விளாடிமீர் புட்டினால் அச்சுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் போல, ஐரோப்பா மீண்டும் ஜேர்மனியர்களைச் சீருடையில் காண விரும்புகிறது," என்று அப்பத்திரிகை எழுதியது. இருப்பினும், Le Monde அப்பட்டமாக குறிப்பிட்டதைப் போல, “பிரெஞ்சு… ஜேர்மனியர்களைச் சீருடையில் காண்பதற்கு அவசரப்படவில்லை.”

ஓர் ஐரோப்பா-தழுவிய திட்டத்தின் போர்வையில் பேர்லின் அதன் ஏகாதிபத்திய நலன்களின் மீள்உறுதிப்படுத்தலை மறைக்க முயலும் அதன் முயற்சிகளை அப்பத்திரிகை ஒட்டுமொத்தமாக நிராகரித்தது. அது பேர்லினின் கணக்கீடுகளை பின்வருமாறு விவரித்தது: “நமது மீள்இராணுவமயமாக்கத்திற்கு ஒரு ஐரோப்பிய வெளிப்பூச்சை வழங்குவது சிறப்பானது தான், ஆனால் நாம் மீள்ஆயுதமேந்துகையில் நமது அண்டையில் இருப்பவர்களைப் பீதியூட்ட முடியாது.”

ஐரோப்பிய முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாடுகள் மீண்டும் அவற்றை பலமாக உறுதிப்படுத்தி வருகின்றன. பேர்லினும் பாரீஸூம் போரிடும் டிரோன்கள் போன்ற கூட்டு திட்டங்களைத் திட்டமிட்டு வருவதுடன், ரஷ்யா உடன் முழு போருக்கு அவசரப்படுவதிலிருந்து அமெரிக்காவைத் தடுக்க உக்ரேனில் ஒரு போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு ஒருங்கிணைந்து வேலை செய்துள்ளன. ஆனால் ஐரோப்பா எங்கிலும் மீள்ஆயுதமயமாக்கும் கொள்கையானது, 1870-1871 இன் பிரான்கோ-பிரஷ்யா போர் மற்றும் 20ஆம் நூற்றாண்டின் இரண்டு உலக போர்கள் என அவை கடந்த ஒன்றரை நூற்றாண்டில் மூன்று முறை போர் புரிந்த ஜேர்மனி மற்றும் பிரான்சிற்கு இடையே ஆழமாக வேரூன்றிய பதட்டங்களைக் கூர்மைபடுத்தி வருகிறது.

ஏப்ரல் 1 அன்று ஒட்டோ வொன் பிஸ்மார்க்கின் இருநூறாம் ஆண்டு பிறந்தநாளில், அந்த "இரும்பு சான்சிலர்" ஜேர்மனியின் அரசியல் மற்றும் ஊடக வட்டாரங்களால் போற்றி புகழப்பட்டார். ஜேர்மன் அரசுகளை ஒருங்கிணைத்த மற்றும் பிரஷ்யாவினால் தலைமை கொடுக்கப்பட்ட ஒரு பலம்வாய்ந்த ஜேர்மன் சாம்ராஜ்ஜியத்தை ஸ்தாபித்த பல போர்கள் பிஸ்மார்க் தலைமையில் நடந்தன. பிரான்கோ-பிரஷ்யா போரில் பிரான்ஸைத் தோற்கடித்ததும், அவர் ஐரோப்பா கண்டத்தில் முன்னணி சக்தியாக ஜேர்மனியை ஸ்தாபித்தார்.

ஐரோப்பிய கண்டத்தில் பிஸ்மார்க்கின் கொள்கை பெரிதும் பிரான்ஸை நசுக்கும் வகையில், பின்னர் இராஜாங்கரீதியில் தனிமைப்படுத்தும் ஒரு மூலோபாயத்தின் அடிப்படையில் இருந்தபோதினும் கூட, பிஸ்மார்க்கை இன்றைக்கான ஒரு முன்மாதிரியாக புகழ்வதென்ற பேர்லினின் தீர்மானம், அங்கே பிரெஞ்சு ஊடகங்களில் சில விமர்சனங்கள் இருந்தபோதினும் கூட, பிரதானமாக இறுக்கமான மௌனத்தையே சந்தித்தது.

பிஸ்மார்க்கின் வெறிக்கு ஜேர்மனி தன்னைத்தானே அர்பணிக்கிறது" என்று தலைப்பிட்ட ஏப்ரல் 2 கட்டுரையில், பிரெஞ்சு வணிக நாளிதழ் Les Echos எழுதியது: “பிரஷ்யர் பன்முகங்களைக் கொண்டிருந்த நிலையில், ஒட்டொவைக் கௌரவிப்பது தவிர்க்கவியலாமல் சிக்கலானதாகும். பிரான்ஸில் அவரது பெயரும் கூரான தலைக்கவசமும் பிரான்கோ-பிரஷ்ய போருடனும் மற்றும் அல்சாஸ்-லோரைன் இணைப்புடனும் பிணைந்துள்ளன. மேலும் சில கிரேக்க மந்திரிமார்கள் அவரது நிஜமான அரசியல் கோட்பாடுகளை வாசிப்பதன் மூலமாக ஜேர்மனி மீதான அவர்களது பார்வை உறுதிப்படுவதாக பார்க்கக்கூடும்: அதாவது 'நாம் அவர்களை அச்சமின்றி, சாத்தியமான அளவிற்கு தயக்கமின்றி சுரண்டி வருகின்ற நிலையில், பெரும் நெருக்கடிகள் பிரஷ்யாவின் வளர்ச்சிக்கு ஒரு சாதகமான சூழலை உருவாக்குகின்றன,'”

ஐரோப்பிய ஒருங்கிணைப்பு மற்றும் ஐக்கியம் மீதான வாய்ஜம்பங்களின் மேற்புறத்துக்கு அடியில், ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் இரத்தந்தோய்ந்த வரலாற்றுடன் பிணைந்துள்ள தீர்க்கப்படாத மோதல்கள் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்துகின்றன. போரால் கிழிக்கப்பட்ட இருபதாம் நூற்றாண்டைப் போலவே, இப்போதும், போருக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் ஓர் ஐக்கியப்பட்ட போராட்டமே ஒரே முற்போக்கான முன்னோக்கிய பாதையாக உள்ளது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியமும் அதன் ஜேர்மன் சமதரப்பை போலவே பிற்போக்குத்தனமானதாகும். அது ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கல் குறித்து கவலைகளை எழுப்புகின்ற போதினும், அது ஆக்கிரமிப்பு போர் கொள்கையை நிராகரிக்கவில்லை. அது அதன் மிகவும் பலம் வாய்ந்த போட்டியாளர்கள் குறித்த அச்சத்தால் எதிர்வினை காட்டுகிறது.

ஐரோப்பிய இராணுவம் குறித்த அதன் கட்டுரையில் Le Monde, அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளின் ஒரு பரந்த நெருக்கடியை ஜேர்மன் மீள்ஆயுதமயமாக்கலுக்கான ஓர் உந்துசக்தியாக சுட்டிக் காட்டியது. “மேர்க்கெல் அவரது பிரத்யேக தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதன் மீது அவர் ஒபாமாவை மன்னித்துவிடவில்லை என்றநிலையில், ஜேர்மனி அமெரிக்காவை நம்புவதாக இல்லை,” என்று சுட்டிக்காட்டியது. அப்பத்திரிகை தொடர்ந்து எழுதுகையில், “அமெரிக்கா பின்னாலிருந்து ஐரோப்பியர்களைத் தள்ளி, அவர்களை ஒரு கடுமையான போக்கை எடுக்குமாறு தூண்டிவிட்டும் மற்றும் புட்டினுடன் குறிப்பிடத்தக்க பதட்டங்களைத் தூண்டிவிட்டும், ரஷ்யாவில் அது ஓர் அபாயகரமான விளையாட்டை விளையாடுகிறது,” என்று குறிப்பிட்டது.

பெப்ரவரி 2014 இல் விக்டர் யானுகோவிச்சின் ரஷ்ய-ஆதரவு உக்ரேனிய அரசாங்கத்தை பதவியிலிருந்து வெளியேற்றிய ஒரு பாசிச-தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பின்னரில் இருந்து, வாஷிங்டன் ரஷ்யாவுடன் மோதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. பாரீஸூம் பேர்லினும் கியேவ் ஆட்சிக்கவிழ்ப்பிற்கு ஆதரவளித்த போதினும், அவை ரஷ்யாவிற்கு எதிராக கூர்மையான பொருளாதார தடைகளையும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக கியேவ் ஆட்சியை ஆயுதமேந்த செய்யும் அமெரிக்காவின் நகர்வையும் எதிர்த்துள்ளன.

கியேவிற்கு நேரடியாக ஆயுத உதவி வழங்க வேண்டுமென்று, ஒபாமா நிர்வாகத்திற்குள் இருக்கும் மற்றும் வாஷிங்டனின் இராணுவ/உளவுத்துறை ஸ்தாபகத்திற்குள்ளும் இருக்கும் கன்னைகளின் அழுத்தம் குறித்து இந்த பெப்ரவரியில் பத்திரிகை செய்திகள் வெளியானதும், ஜேர்மனியும் பிரான்ஸூம் உக்ரேனிய சண்டைக்கு ஒரு இராஜாங்கரீதியிலான தீர்வை முன்மொழிய ஓடின. உக்ரேனில் ஒரு போர்நிறுத்தத்திற்குப் பேரம்பேசுவதற்கு முன்னதாக, பிரெஞ்சு ஜனாதிபதி ஹோலாண்ட் கூறுகையில், ரஷ்யாவுடன் "நாம் ஒரு சில மாத இடைவெளியில் கருத்துவேறுபாடுகள் என்பதிலிருந்து, மோதல் வரைக்கும், போர் வரைக்கும் சென்றுள்ளோம்... நாம் ஒரு போர் என்ற நிலைக்கு வந்துள்ளோம், அத்தகைய ஒரு போர், முழு அளவிலான போராக இருக்கக்கூடும்,” என்று எச்சரித்தார்.

வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்டிருக்கும் ஓர் உலகப் போர் குறித்த அச்சங்கள், இப்போதைக்கு, பேர்லின் மற்றும் பாரீஸை ஒருங்கிணைத்து கொண்டு வந்துள்ளன. ஆனால், ரஷ்யாவுடன் பதட்டங்களை குறைக்கும் கூட்டு முயற்சிகள் மற்றும் ஒரு பொதுவான ஐரோப்பிய பாதுகாப்பு ஆகிய மேற்புறத்திற்கு அடியில், ஐரோப்பிய ஏகாதிபத்திய அதிகாரங்களுக்கு இடையே ஓர் ஆயுத போட்டி அபிவிருத்தி அடைந்து வருகிறது.

பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பொறுப்பற்ற கொள்கை இதில் ஒரு பிரதான காரணியாக உள்ளது. ஜேர்மன் எதிர்ப்பிற்கு முன்னால், 2011 இல் அமெரிக்கா தலைமையிலான லிபியா போருக்கும் மற்றும் அதைத் தொடர்ந்து சிரிசாவிற்கு எதிரான போர் உந்துதலுக்கும் பிரான்ஸ் ஆக்ரோஷமாக அழுத்தம் அளித்தது. பேர்லின் லிபிய போரில் பங்கெடுக்க மறுத்ததுடன், தனிச்சிறப்பார்ந்தமத்தியதரைக்கடல் ஒன்றியத்தின்" கீழ், பிரான்சின் முன்னாள் காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தில் ஒரு மத்தியதரைக்கடல் செல்வாக்கு மண்டலத்திற்கான பாரீஸின் திட்டங்களையும் எதிர்த்தது.

லிபிய போருக்கு இட்டுச் சென்ற மாதங்களில் பிரான்ஸ் பிரிட்டனுடன் ஓர் இராணுவ கூட்டணியில் கையெழுத்திட்டது, அது குறிப்பாக ஜேர்மனியைத் தவிர்த்திருந்தது. பேர்லினின் பொருளாதார மேலாதிக்கத்தை ஈடுகட்ட, பாரீஸ் தெளிவாக அதன் அணுஆயுத உடைமை உட்பட, அதன் பெரும் இராணுவ பலத்தில் தங்கியிருக்க முடியுமென நம்பியிருந்தது. இந்த மூலோபாயம் பிரான்சின் கண் முன்னாலேயே தோற்றுபோயுள்ளது.

சில காலமாக தயாரிக்கப்பட்டு வந்துள்ளதும் மற்றும் ஜேர்மன் ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க்கால் 2013 இல் ஜேர்மன் ஐக்கிய நாளன்று தெளிவாக வெளியிடப்பட்டதுமான ஜேர்மன் இராணுவவாதத்தின் ஒரு மீளெழுச்சியை அது முகங்கொடுக்கிறது. “அரசியல், பொருளாதாரம் மற்றும் இராணுவ மோதல்களில் இருந்து" விலகி இருக்க ஜேர்மனி ஒன்றும் "ஒரு தனித்த தீவல்ல" என்று கௌவ்க் அறிவித்தார். 2014 இன் தொடக்கத்தில் முனிச் பாதுகாப்பு மாநாட்டில், அவர் ஜேர்மனியின் "இராணுவ தவிர்ப்பு கொள்கை" முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அறிவித்தார்.

அதன் இராணுவ வரவு-செலவு திட்டங்களை பெரிதும் உயர்த்திய பின்னர், ஜேர்மனி இறுதியில் பிரான்சின் இராணுவ செலவினங்களைக் கடந்து, ஆண்டுக்கு 32.4 பில்லியன் யூரோவை எட்டியது, அதேவேளையில் பிரான்ஸின் பாதுகாப்பு செலவினங்கள் 31.4 பில்லியன் யூரோவாக சற்றே வீழ்ச்சி அடைந்தது. இப்போது அதன் இராணுவ செலவினங்களை அதிகரிக்க பிரான்ஸ் தயாராகி உள்ளதோடு, ஐரோப்பாவில் ஓர் ஆயுத போட்டி வெடிக்க கூடிய நிலையில், ஜேர்மன் இராணுவவாத கவலைகள் மீதான ஆரம்ப வெளிப்பாடுகள் பிரெஞ்சு ஊடகங்களில் அதிகரிக்க தொடங்கியுள்ளன.