சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Interview with Indian filmmaker Rahul Roy, director of The Factory

இந்திய திரைப்படைப்பாளி, திஃபேக்டரி ஆவணப்படத்தின் இயக்குநர், ராகுல் ராயுடனான நேர்காணல்

By Lee Parsons
7 December 2015

Use this version to printSend feedback

 

 

 

 

 

 

 


ராகுல் ராய்

ராகுல் ராயின் தி ஃபேக்டரி எனும் 132 நிமிடங்கள் ஓடும் ஒரு ஆவணப்படத்தின் மீதான ஒரு விரிவான பார்வையை நவம்பர் 25 அன்று உலக சோசலிச வலைத் தளம் வெளியிட்டிருந்தது.

வட இந்தியாவின் ஹரியானாவில், புது டெல்லியில் இருந்து 30 மைல் தூரத்தில், மானேசரில் அமைந்திருக்கும் ஜப்பானிய வாகன உற்பத்தி நிறுவனம் சுசுகியின் துணைநிறுவனமான மாருதி சுசுகி இந்தியாவினால் (MSI) இயக்கப்படுகின்ற அசெம்பிளி ஆலையில் தொழிலாளர்கள் நடத்தியதொரு போராட்டத்தினை இந்த முக்கியமான படம் காலவரிசைப்படுத்துகிறது.

இந்தியாவின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனத்திற்கும் அதன் எடுபிடி தொழிற்சங்கம் ஒன்றிற்கும் எதிராக மானேசர் MSI தொழிலாளர்கள் நடத்திய ஒரு விரிவான போராட்டத்தைச் சுற்றி இந்த ஆவணப்படம் சுழல்கிறது. தொழிலாளர்கள், அவர்களது விடாப்பிடியான முயற்சிகளின் காரணத்தால், தவிர்க்கவியலாமல் போலிஸ், நீதிமன்றங்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியால் ஆளப்படுகின்ற ஹரியானா மாநிலத்தின் அரசாங்கம் ஆகியவற்றுடன் மோதும்நிலைக்கு வருகின்றனர். புதிய சுயாதீனமான தொழிற்சங்கத்தின் தலைவர்களும், அவர்களுடன் சேர்த்து ஏராளமான போர்க்குணமிக்க தொழிலாளர்களும், கொடூரமான மற்றும் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு ஜோடிப்புக்குள் சிக்க வைக்கப்படுவதில் நிறுவனமும் அரசியல் ஸ்தாபகமும் கூடிவேலைசெய்வதை தி ஃபேக்டரி அம்பலப்படுத்துகிறது.

 

 

 

 

 

 

 

 

திஃபேக்டரி

2012 ஜூலையில் நிறுவனத்தின் குண்டர்கள் தொழிற்சாலையின் வேலையிடத்தில் ஒரு கைகலப்பைத் தூண்டி விடுகிறார்கள், அது தொழிற்சாலை தீப்பற்றுவதிலும் ஒரு மேலாளர் மரணமடைவதிலும் உண்மையில் அந்த ஒரு மேலாளரைத்தான் தங்கள் மீது அனுதாபம் கொண்டவராக தொழிலாளர்கள் கருதி வந்திருந்தனர் முடிந்தது.

இந்த சம்பவத்தின் விளைவாக, சுமார் 150 தொழிலாளர்கள் கொலை, தீவைப்பு மற்றும் பிற பெரிய குற்றங்களது மோசடியான குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுக்கின்றனர். இவர்களில் அநேகம் பேர் சமீபம் வரையிலும் சிறையிலடைக்கப்பட்டிருந்தனர், இறுதியாக 112 பேர் பிணை பெற்றனர். மாருதி சுசுகி தொழிலாளர் சங்கத்தின் 36 தலைவர்கள் தொடர்ந்தும் சிறையிலிருக்கின்றனர்.

ராகுல் ராய் புது டெல்லியில் உள்ள ஜமியா மிலியா இஸ்லாமியா மாஸ் கம்யூனிகேஷன் ரிசர்ச் சென்டர் கல்வி நிறுவனத்தில் (Mass Communication Research Centre at Jamia Millia Islamia) 1987 ஆம் ஆண்டில் திரைப்பட உருவாக்கத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவராவார். அப்போது முதல் அவர் ஒரு சுதந்திரமான ஆவணப்பட படைப்பாளியாக வேலைசெய்து வந்திருக்கிறார்.

ராய் ஊடகம், கலாச்சாரம் மற்றும் ஆராய்ச்சி ஆகிய பிரிவுகளில் வேலை செய்கின்ற ஆகார் என்ற டெல்லியில் இருக்கும் அறக்கட்டளை ஒன்றின் இயக்குநர் ஆவார். தி ஜஸ்டிஸ் என்ற ஒரு திட்டப்பணியை இப்போது அவர் ஒழுங்கமைத்துக் கொண்டிருக்கிறார். தெற்காசிய பிராந்திய ஆராய்ச்சி மற்றும் திரைப்பட திட்டப்பணியான இதில் நீதி மற்றும் சண்டை ஆகிய கருப்பொருளில் 15 ஆய்வறிக்கைகளும் ஐந்து படங்களும் உருவாக்கப்படுகின்றன.

டிசம்பர் 1 அன்று, டொரோன்டோவில் ராய் உடன் நான் பேசினேன்.

* * * * *

லீ பார்சன்ஸ்: இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நிலைமை குறித்து முதலில் எப்படித் தெரிந்து கொண்டீர்கள்?

ராகுல் ராய்: மாருதி போராட்டம் இந்தியாவில் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் ஒரு இலட்சியமாதிரியாக அமைந்த ஒன்று என்பதுடன் அந்தப் போராட்டம் தனித்துவமானமானதும் ஆகும். இந்தியாவில் மாருதி சுசுகி அமைத்த இரண்டாவது தொழிற்சாலையான மானேசர் தொழிற்சாலையில் 2011 இல் ஒரு தொழிற்சங்கம் அமைப்பதற்கான போராட்டம் தொடங்கிய நாளில் இருந்தே அங்கேயான நிலைமை மக்களுக்குத் தெரிந்துதான் இருக்கிறது.

பின் 2012 மார்ச்சில் கோரிக்கைகளின் ஒரு பட்டியலை தொழிற்சங்கம் நிர்வாகத்திடம் கொடுத்திருந்ததற்கு பின்னர், ஜூலையில் இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதில் ஒரு மேலாளர் இறந்தார், 149 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு கொலைக்குற்றம் சாட்டப்பட்டனர்.

இது ஒரு பெரிய வடிவமைப்பின் பகுதி என்பது ஓரளவுக்கு தெளிவாகவே தெரிகிறது. 149 தொழிலாளர்கள் கொலைக்குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள், 2,500 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மை இது ரொம்பவே மிகப்பெரியது.

அந்த சமயத்தில் வெகுஜன தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாய் இருந்தன. அதில் நான் விசித்திரமாய் கண்டது என்னவென்றால், பெருநிறுவன நிர்வாகத்தில் இருந்தும் துரதிர்ஷ்டவசமாக இறந்த மேலாளரின் குடும்ப உறுப்பினர்களில் இருந்தும் அத்தனை வகையான பிரதிநிதித்துவங்களும் இருந்தனவே தவிர, இந்த விவாதங்கள் எதிலுமே தொழிலாளர்களின் எந்தக் குரலையும் காண்பது வெகு அரிதாய் இருந்தது.

ஊடகங்களில் எவருக்குமே தொழிலாளர்களின் குரலைக் கேட்க விருப்பமில்லை என்ற உண்மையைக் கொண்டு பார்க்கும்போது, அது எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. ஆனால், தொழிலாளர்களில் மிகத் திறம்பட தங்கள் வாதத்தை முன்வைக்கக் கூடிய அத்துடன் மிகவும் அரசியல்மயமான தொழிலாளர்கள் இங்கே இருந்தார்கள், ஆனால் அவர்கள் ஊடகங்களால் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்தார்கள் என்ற உண்மையையும் அது சுட்டிக்காட்டுவதாக இருந்தது. ஆக அங்கே தான் எனக்கு அந்த எண்ணம் உருவானது.

லீ: மிகத் திறம்பட தங்கள் வாதங்களை முன்வைக்கக் கூடிய அத்துடன் மிகவும் அரசியல்மயமான தொழிலாளர்கள் என்று எந்த அர்த்தத்தில் கூறுகிறீர்கள்?

ராகுல் ராய்: ஒன்றரை ஆண்டுகாலம் நீண்டுசென்ற போராட்டத்தின் பாதையில், இந்த தொழிலாளர்கள் அரசியல்மயப்பட்ட வழியானது வெறுமனே ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவது என்ற உடனடியான இலக்கை மட்டும் பிரதிபலித்ததாக இல்லை. அவர்கள் நிர்வாகம் குறித்த மிக அடிப்படையான கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தனர் என்பதோடு அந்த தொழிற்பகுதியின் பரந்த உழைக்கும் மக்கள் முகம் கொடுத்த பிரச்சினைகளின் முன்னால் தங்களை நிறுத்திக் கொண்டிருந்தனர்.

அவர்கள் உற்பத்தி நிகழ்முறையின் மீதும் இலாபங்களின் மீதும் கேள்விகள் எழுப்பியதோடு, தொழிற்சாலையை இயக்கும் பொருளாதாரத்திற்குள்ளும் அவர்கள் ஆழ்ந்து சென்று கொண்டிருந்தனர், அத்துடன் அந்த தொழிற்பகுதிக்கான புதிய மற்றும் தீவிரப்பட்ட சிந்தனைகளுடன் வந்தனர். உதாரணமாக, நிரந்தர தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுவதில் இருந்து தடுக்கின்றதொரு பொறிமுறை எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. இங்கே நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான ஒரு போராட்டம் இருந்தது என்பது ஓரளவுக்கு தனித்துவமானதொரு விடயமாகும். ஏனென்றால் இருந்த தொழிற்சங்கம் தற்காலிக அல்லது ஒப்பந்த தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

லீ: அதாவது நிறுவனத்தின் தொழிற்சங்கம்?

ராகுல் ராய்: ஆம், நிறுவனத்தின் தொழிற்சங்கம்.

லீ: இதற்கு முன்பாக நிறுவனத் தொழிற்சங்கத்திற்கு எதிராய் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு வேறு எந்த தொழிற்சங்கக் கூட்டமைப்புகளின் தரப்பில் இருந்தோ அல்லது அரசியல் அமைப்புகளின் தரப்பில் இருந்தோ முயற்சிகள் ஏதும் நடந்திருக்கவில்லையா?

ராகுல் ராய்: இல்லை, 2007 இல் தொடங்கப்ட்ட இந்த தொழிற்சாலையில், தொழிற்சங்கமே ஒருபோதும் இருக்கவில்லை - நிறுவனத்துடன் இணைந்த ஒரு தொழிற்சங்கம் கூட இல்லாதிருந்தது. அதன்பின்னர் தான் தொழிற்சங்கக் கோரிக்கை எழுந்தது, தொழிலாளர்கள் தாங்களாகவே ஒழுங்கமையத் தொடங்கினார்கள். அருகிலிருந்த கூர்கான் தொழிற்சாலையில் செயல்பட்டுக் கொண்டிருந்த தங்களது கைப்பாவை தொழிற்சங்கத்தை இந்தப் புதிய தொழிற்சாலையின் தலையில் கட்டுவதற்கு நிறுவனம் முயன்றது. ஆனால் தொழிலாளர்கள் அதனைத் திட்டவட்டமாக நிராகரித்து விட்டார்கள்.

 

 

 

 

 

 

 


தி ஃபேக்டரி

இவ்வாறாக, 2012 இல் தொழிற்சாலையில் உண்மையில் எந்த ஒரு தொழிற்சங்கமும், ஒரு கைப்பாவை தொழிற்சங்கமும் கூட இருக்கவில்லை. ஆக, ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கும் கோரிக்கையானது தொழிலாளர்களிடம் இருந்து சுயாதீனமாக வந்திருந்தது என்பது தான் நடந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம். அந்த கோரிக்கை வந்ததன் பின்னர், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்வம் காட்டத் தொடங்கின.

இந்தியாவில் ஒரு தொழிற்சங்கத்தை பதிவுசெய்வது என்பது மிக மிகக் கடினமான வேலை, ஏனென்றால் அரசாங்கத்தின் தொழிலாளர் துறை அலுவலகத்தின் மூலமாக அதனை நீங்கள் பதிந்தாக வேண்டும், அதற்கு ஏற்கனவே இருக்கின்ற பெரியதொரு தொழிற்சங்கத்தின் ஆதரவும் உங்களுக்கு அவசியமாக இருக்கும்.

பெரும்பாலும் என்ன நடக்கிறதென்றால், இந்த தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை தொழிலாளர்களின் கோரிக்கைகளைக் கொண்டு தொடங்குகின்றன, ஆனால் அதன்பின் பெரிய அமைப்புகளால் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி CPI (M) ஆகிய இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளது தொழிற்சங்கங்களான இரண்டு பெரிய மத்திய தொழிற்சங்கங்கள் - அவை கைப்பற்றப்பட்டு விடுகின்றன. காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு தொழிற்சங்கம் இருக்கிறது, வலது-சாரிக் கட்சிகளுக்கென தனியான தொழிற்சங்கங்களும் இருக்கின்றன.

இந்த தொழிலாளர்களை பொறுத்தவரை, அத்தகைய உருவாக்கங்களில் ஒன்றாக ஆவதன் அபாயங்கள் குறித்து அவர்கள் நன்கறிந்து வைத்திருந்தார்கள்.

லீ: குறிப்பாக என்ன அபாயங்கள் அவை?

ராகுல் ராய்: இந்தத் தொழிற்சங்கங்களில் பெரும்பாலானவை ஊழலடைந்தவையாக இருக்கின்றன என்பதும் அவை நிர்வாகத்துடன் கைகோர்த்து வேலைசெய்கின்றன என்பதும் ஒரு பொதுவான கவலையாக இருக்கிறது.

இந்தத் தொழிற்சாலையின் தனித்தன்மைகளில் ஒன்று என்னவென்றால் நிரந்தரத்தொழிலாளர்களிலும் சரி ஒப்பந்தத் தொழிலாளர்களிலும் சரி அநேகம் பேர் தங்கள் இருபதுகளில் இருந்தார்கள். அவர்கள் வயதொத்தவர்களாய் இருந்தார்கள், ஒன்றாகக் கலந்து பழகி வந்தார்கள், ஒரே பகுதிகளில் வாழ்ந்திருந்தார்கள்.

பலதரப்பான அரசியல் கட்சிகளுடன் பேசிப் பார்க்குமளவுக்கு அவர்களுக்கு புத்திக்கூர்மையும் இருந்தது. அவர்களிடம் பேசினால் அவர்கள் சொல்வார்கள், இதோ பாருங்கள், நாங்கள் அனைவருடனுமே பேசிக் கொண்டிருக்கிறோம். எல்லோருடைய அறிவுரைகளையுமே நாங்கள் எடுத்துக் கொள்கிறோம், ஒவ்வொருவர் சொல்வதையுமே நாங்கள் மிகக் கவனமாக செவிமடுக்கிறோம், ஆனால் முடிவு நாங்கள் எடுப்பதாகவே இருக்கும். ஆக அவர்கள் பல்வேறு தரப்பினருடன் பேசினர், பல்வேறு சிந்தனைகளையும் கேட்டனர். முடிவில், எந்த பெரிய தொழிற்சங்கங்களுடனும் இணைவதில்லை என்கிறதான முடிவை அவர்கள் எடுத்தனர்.

லீ:  இது என்ன கேள்வியை எழுப்புகிறதென்றால், இப்போதிருக்கின்ற அரசியல் சாத்தியங்கள் அத்தனையும் பயன்படுத்தத்தகாதவை என்றால், எப்படி தங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட முடியும் என்று அவர்கள் காண்கிறார்கள்?

ராகுல் ராய்: உண்மையான போராட்டத்தின் உள்ளடக்கத்திற்குள்ளாக சில விடயங்கள் உயிர்ப்புடன் நிகழ்ந்து கொண்டிருந்தன. ஒரு உதாரணம் சொல்கிறேன். முதன்முறை அவர்கள் வேலைநிறுத்தம் செய்தபோது, தொழிற்சாலைக்கு வெளியே செல்வதில்லை மாறாக உள்ளிருப்பு செய்வது என்று அவர்கள் முடிவெடுத்தனர், இது அந்தப் பகுதியை பொறுத்தவரை மிகவும் தனிச்சிறந்த ஒரு விடயமாய் இருந்தது.

அநேக மத்திய தொழிற்சங்கங்கள் அதற்கு உடன்படமாட்டா. அப்படியிருந்தும் கூட, அவை முற்றிலுமாய் ஒதுங்கிக் கொள்வதற்கோ அல்லது விமர்சனப் பார்வை கொள்ளவோ முடியாத அளவுக்கு அவர்களுக்கு வெகுஜன ஆதரவு கிட்டியிருந்தது. தொழிலாளர்களுக்கு ஆதரவாய் இருந்தாக வேண்டிய ஒரு நிலைக்குள் அவை தள்ளப்பட்டன. ஆனால் அதே சமயத்தில், அவற்றின் சிறு விளையாட்டுகளை முயற்சி செய்வது, அவர்களை தங்கள் தொழிற்சங்கங்களின் பகுதியாக்குவது இது தொடர்ந்தும் எப்போதும் நடந்து கொண்டேயிருந்தது.

லீ: அமெரிக்க நிலைமையையும் கூட நீங்கள் கவனித்து வந்திருக்கலாம், அங்கு தொழிற்சங்கத் தலைவர்கள் திணித்த ஒப்பந்தத்திற்கு எதிராக வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சி இருந்து வந்திருக்கிறது, இது தலைமை குறித்த பிரச்சினை என்ற தீர்மானகரமான பிரச்சினையாக இருக்கிறது.

ராகுல் ராய்: ஆம், நான் அந்த நிகழ்வை பின்பற்றி வந்திருக்கிறேன், இதுவும் ஒட்டுமொத்த தொழிற்துறை உலகிலுமான ஒத்த போராட்டங்களின் ஒரு பாகம்தான்.

லீ: உங்களின் பின்னணி என்ன, இது மாதிரியான படங்களை முன்பும் செய்திருக்கிறீர்களா?

ராகுல் ராய்: நான் திரைப்பட உருவாக்கப் பயிற்சி பெற்றவன். எனது பெரும்பான்மையான படங்கள் முறைசாரா தொழிலாளர்கள், நிரந்தரமல்லாத தொழிலாளர்கள் குறித்துத் தான் இருந்திருக்கிறது. இதில் தான் முதல்முறையாக ஒழுங்கமைந்த தொழிலாள வர்க்கத்தைக் குறித்து வேலை செய்திருக்கிறேன்.

ஜூலை 18, 2012 அன்று தொழிற்சாலையில் அந்த சம்பவம் நடந்திருந்தது; நான் 2013 ஜூலை 18 அன்று படப்பிடிப்பை தொடங்கினேன், ஒரு வருட காலம், அதாவது சரியாக 2014 ஜூலை 18 வரை படப்பிடிப்பு நடந்தது. இவ்வாறாய், நான் படப்பிடிப்பை தொடங்குகின்ற சமயத்தில் ஏற்கனவே 149 தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்தார்கள், ஒரு நீதிமன்ற வழக்கு நடந்து கொண்டிருந்தது, சுமார் 2,500 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்கள், அவர்களது வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. தொழிற்சாலைக்கு வெளியே நிர்வாகத்தின் மீதும் அரசின் மீதும் அழுத்தம் கொடுப்பதற்காய் ஒரு வருட கால முயற்சி நடந்து வந்திருந்தது, ஏனென்றால் நிறைய தொழிலாளர்கள் தொழிற்சாலை அமைந்திருக்கும் இடத்தை சுற்றிய கிராமங்களை சேர்ந்தவர்கள். அந்த கிராமங்களில் இருந்து ஆதரவு திரட்டுவதற்கான முயற்சிகள், பட்டினிப் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இருந்தன.

லீ: இந்தியாவில் திரைப்படத் துறையின் இப்போதைய நிலையை எப்படி குணாம்சப்படுத்துவீர்கள்?

ராகுல் ராய்: இந்தியாவில் பெரிய திரைத்துறை என்றால் பாலிவுட், அது வணிகரீதியான தொழிற்துறை. ஆனால் அங்கேயும் மிக வலிமையான ஒரு பிராந்திய மொழி சினிமா இருக்கிறது. பாலிவுட் பிரதிநிதித்துவம் செய்கின்ற இந்தி சினிமா தவிர்த்து, நாடெங்கிலும் அதற்கிணையான சிறுசிறு துறைகளும் இருக்கின்றன, அவையும் பாலிவுட் போன்றே வணிகமயப்பட்டே இருக்கின்றன.

 

 

 

 

 

 

தி ஃபேக்டரி

ஆனால் கடந்த பத்தாண்டு சுமார் காலத்தில் நடந்திருக்கக் கூடிய மிக சுவாரஸ்யமான விடயம் இந்தியாவில் ஆவணப்படத்தின் எழுச்சி ஆகும். 1987 இல் நான் திரைப்படப் பள்ளியில் பட்டம் பெற்று முடித்த காலம் முதல் 1990களின் மத்தியில் வரைக்கும், நல்ல வரவேற்பைப் பெற்றதொரு படத்தை நாங்கள் செய்திருந்தோம் என்றால், அது ஒரு நூறு திரையிடலைப் பார்த்ததென்றால், நாங்கள் உண்மையிலேயே மிகப்பெரியதொரு படத்தை எடுத்திருந்ததாக நினைத்துக் கொள்வோம்.

ஆனால் இப்போது, கடந்த சுமார் 12 வருட காலம் என்று சொல்லலாம், ஆவணப்படங்களுக்கான ஒரு பெரிய திரையிடல் கலாச்சாரம் அபிவிருத்தி கண்டிருக்கிறது. இது ரொம்பவும் முறைசாராததாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் முழுமையாக வெளித்தெரியாததாக இருக்கிறது. சிறு அளவில் தான் நடக்கிறது, என்றாலும் சிறு நகரங்கள் முதல் மாநகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் நடக்கிறது. ஒவ்வொரு இடத்திலுமே ஆவணப்படங்கள் பார்க்கப்படுகின்றன என்பது எங்கள் சொந்த வாழ்க்கைக்காலத்தில் நாங்கள் கண்டிருக்கக் கூடிய ஒரு முழுத் தீவிரமான திருப்பமாகும்.

ப்பொழுது எங்கே எங்கள் படங்கள் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்று எங்களுக்கும் உண்மையில் தெரியவில்லை. ஒரு முறையான விநியோக முறை இன்றி இது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைக் கட்டுப்படுத்துவது என்பது அரசுக்கு அதனினும் கடினமான காரியமாக இருக்கிறது.

லீ : தி ஃபேக்டரிக்கு வரவேற்பு எப்படி கிடைத்திருக்கிறது?

ராகுல் ராய்: சமீபமாய் திரையிடல்கள் செய்திருக்கிறேன், 2016 இல் இன்னும் தீவிரமாய் திரையிடல்கள் நடக்கும். மும்பையில் தொழிலாள வர்க்க தொழிற்சங்க மையம் ஒன்றில் திரையிடல் நடந்தது. தொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிற்சங்கத் தலைவர்களும் அங்கு இருந்தார்கள், படம் நல்ல வரவேற்பை பெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கின்ற தொழிற்சங்கங்களுக்கும் மத்தியில் அதனை நான் திரையிட வேண்டும் என்ற கோரிக்கை இப்போது வந்திருக்கிறது, இனி அந்த நிகழ்முறையைத் தான் நான் தொடங்கப் போகிறேன்.

லீ : இன்னும் சிறையிலிருக்கும் தொழிலாளிகளது தற்போதைய நிலைமை என்ன?

ராகுல் ராய்: வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் தீர்ப்பு வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். 34 தொழிலாளர்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். மற்றவர்களுக்கு நான்கைந்து மாதங்களுக்கு முன்னால் பிணை கிடைத்தது. தொழிலாளர் நீதிமன்ற வழக்கு இன்னும் நிலுவையில் தான் இருக்கிறது. அந்த முனையில் எந்த அசைவும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தத் தொழிலாளர்களது ஒரு வேலைநிறுத்தம் நடந்தது, இதில் துயரமான அம்சம் என்னவென்றால் முதன்முறையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் நிரந்தரத் தொழிலாளர்களுக்கும் இடையில் ஒரு விரிசல் இருந்தது. தொழிற்சங்கத்திற்கும் நிர்வாகத்திற்கும் இடையில் ஏற்பாடான ஒரு ஒப்பந்தத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்கு அவர்களது ஊதியங்களில் பெரும் அதிகரிப்பு கிட்டியிருக்கிறது, ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எதுவுமே அதில் இல்லை. ஆகையால் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர், பின் சுமார் 500 அல்லது 600 தற்காலிக தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்.  அதன்பின் அழுத்தம் கிட்டியதால் நிர்வாகம் ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் ஒரு ஒப்பந்த ஏற்பாட்டைக் கொண்டுவந்தது, ஆனாலும் நிரந்தர தொழிலாளர்களுக்குக் கிட்டியதுடன் ஒப்பிட்டால் இது வெறும் சோளப்பொரி தான்.

லீ : இந்தியாவில் திரைப்படத் துறை தொடர்பான கடினமான நிலை குறித்துப் பேசினீர்கள். மேலும் மேலும் அதிகமாய் நாம் உலகெங்கும் இதேபோன்ற இணைநிகழ்வுகளை கண்டுவருகிறோம். ஹாலிவுட்டில் கொஞ்சம் கொஞ்சமாய் எல்லாமே பெரிய பெரிய பெருநிறுவனங்களால் மேலாதிக்கம் செய்யபட்டு வருகிறது. கலாச்சாரத்திலான இந்த உலகளாவிய நெருக்கடி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

ராகுல் ராய்: இந்தியாவிலும் அதேபோல் பிறவெங்கிலும் கலாச்சார தயாரிப்புகளை பார்க்கின்றபோது, கடந்த காலத்தைப் பொறுத்தவரை, எப்போதுமே தொழிலாளிக்கு ஒரு முக்கியமான இடம் இருந்து வந்தது, அங்கு ஒரு பிரதிநிதித்துவம் நிச்சயம் வெளிப்படுவதாய் இருந்தது. நீங்கள் அந்த பிரதிநிதித்துவத்துடன் உடன்படலாம் அல்லது உடன்படாமல் போகலாம், ஆனால் நிச்சயமாக தொழிலாள வர்க்கத்தின் மீதான ஒரு குறிப்பிட்ட ஆர்வம் இருந்தது, தொழிலாள வர்க்கத்தைக் குறித்த கதைகளும் படங்களும் வரும். இந்தியாவில் இது மிக அதிகமாய் இருந்தது, மேற்கில் அந்த அளவுக்கு இல்லை, என்றாலும் அங்கும் கூட நீங்கள் தொழிலாள வர்க்க நிலைமைகளையும் கதைகளையும் கையாளுகின்ற படங்களைக் காண முடியும். அந்த நிலை இப்போது மாறியிருக்கிறது.

ந்தியாவில் தொழிலாள வர்க்கத்தைக் காட்டுகின்ற ஒரேயொரு பெரிய படத்தைக் கூட நீங்கள் காண முடியாது. உண்மையில் தொழிலாள வர்க்கத்தின் எண்ணிக்கை வளர்ச்சிக்கு நேர்விகிதத்தில் இப்போக்கு இருக்கிறது. இப்போது இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட வாழ்க்கைமுறை விற்கப்படுவதாகி இருக்கிறது. மேற்கில், அது ஒரு நீண்டகாலப் போக்கில் நடந்து வந்திருக்கிறது, ஆனால் இந்தியாவில் அது உங்கள் கண்முன்னால் காணக்கூடிய அளவுக்கு மிகத் துரிதகதியில் நடந்தேறி வருகிறது. திரைப்படங்கள் மேலும் மேலும் வசதியானவர்களை, பணக்காரர்களைக் குறித்ததாக இருக்கிறது. அவர்களின் வாழ்க்கை, அவர்களின் உணர்வுகள், அவர்களின் கதைகள், அவர்களின் போராட்டங்களைத் தான் ஒருவர் இப்போது காண முடிகிறது.

ந்தியாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியே முற்றிலுமே விடுபட்டுப் போகிறது, இந்த நிலை முன்பு இருக்கவில்லை. அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. வணிகரீதியான இந்தி, பாலிவுட், பாம்பே சினிமாவில் எப்போதுமே ஏராளமான இடது எழுத்தாளர்களும் கவிஞர்களும் இருந்தார்கள், ஏனென்றால் இந்தியாவில் சினிமாவில் நிறைய பாடல்களும் ஆடல்களும் இருக்கும். கவிஞர்கள் எப்போதுமே சினிமாவுடன் இணைந்து வந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் பாடல் எழுதியவர்களில் பெரிய பெரிய பிரபலங்கள் அனைவரும் இடதுசாரிகளாய் இருந்தார்கள், எல்லோருக்குமே இடதுசாரி கடந்தகாலம் இருந்தது. அவர்களெல்லாம் போய் விட்டார்கள். இப்போது அப்படி ஒருவரும் கூடக் கிடையாது.

லீ : போய் விட்டார்கள் என்றால் எந்த அர்த்தத்தில் சொல்கிறீர்கள்? சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவுக்குப் பின்னர் என்று சொல்ல வருகிறீர்களா?

ராகுல் ராய்: அந்த எழுத்தாளர்கள் எல்லாம் வயதாகி இறந்து விட்டார்கள் என்பது ஒரு விடயம். இன்னொரு விடயம் இந்தியாவின் இடதுகள் - கம்யூனிஸ்ட் கட்சிகள் என்று கூட நீங்கள் சொல்லலாம், அவர்கள் கலாச்சார மற்றும் கலாச்சார உற்பத்தி குறித்த சோவியத் சிந்தனைகளுக்கு இயைந்தும் அதனைப் பின்பற்றியும் இருந்து வந்தார்கள் - கலாச்சாரக் களத்தில் தலையீடு செய்வதற்கான வெகு வலுவான இயக்கங்களைக் கொண்டிருந்தார்கள்.

ம்யூனிஸ்ட் கட்சிகளே நொருங்கத் தொடங்கியதை அடுத்து அவை அனைத்தும் உருக்குலைந்து போயின. நிறைய எழுத்தாளர்களும் கலைஞர்களும் சோவியத் ஒன்றியத்தின் உருக்குலைவில் பாதிக்கப்பட்டார்கள், ஒரு குறிப்பிட்ட கனவு காணாமல் போனது. அதற்கு முன்பாக சோவியத் ஒன்றியத்தின் அர்த்தச்சூழலுக்குள்ளாக ஸ்ராலினிசம் குறித்த பிரச்சினை மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியை கேள்விக்குட்படுத்தும் பிரச்சினை இருந்தது - அது நிறைய ஏமாற்றத்திற்கும் விலகிச் செல்லலுக்கும் இட்டுச் சென்றது என்று நினைக்கிறேன். ஆக இந்த அத்தனை காரணிகளுமே பங்களித்தன என்று நினைக்கிறேன்.

தன்பின்னர் 1960களின் பிற்பகுதியிலும் 1970களில் ஆரம்பத்திலும் மாவோயிச இயக்கம் என்று விரிந்த முறையில் விபரிக்கக்கூடிய இயக்கம் எழுந்தது, ஏராளமான நடுத்தர வர்க்க மாணவர்களும் மற்றவர்களும் அதில் இணையக் கண்டோம். 1971 இல் எழுந்த பங்களாதேஷ் நெருக்கடியை ஒட்டி, திடீரென்று அதிலும் பெரும் குழப்பம் சூழ்ந்து விட்டது. பங்களாதேஷில் படுகொலையை நடத்திக் கொண்டிருந்த பாகிஸ்தானை சீனா ஆதரித்துக் கொண்டிருந்தது, மில்லியன் கணக்கான அகதிகள் இந்தியாவிற்குள் வந்து கொண்டிருந்தார்கள். இது ரொம்பவே முரண்பாடான விடயமாக இருந்தது.  இந்த எல்லா விடயங்களுமே வெவ்வேறு வழிகளில் பங்களித்திருந்தன. இடது கலைஞன் அதன்பின்னரும் உத்தியோகபூர்வ கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் தொடர்புபட்டவனாய் இல்லை.

லீ : இந்தியாவில் ஆவணப்படங்களுக்கு வெகுஜன ஆதரவு மேலெழுச்சி கண்டு வருவதாகக் குறிப்பிட்டீர்கள், ஆனாலும் இது ஒரு சர்வதேச நிகழ்வு அத்துடன் வணிகரீதியான ஒன்றும் கூட. சமீபத்தில் வந்த எட்வார்ட் ஸ்னோவ்டென் படத்தை பார்த்தீர்கள் என்றால், ஆவணப்படத்தினால் சாத்தியமாகும் பாதிப்பு பிரம்மாண்டமானதாக இருக்கிறது.

ராகுல் ராய்: வணிகமயமாகாமல் இருப்பதில் ஒரு நன்மை இருக்கிறது என்பதைத் தான் இந்தியாவில் நான் தொடர்ந்து வாதிட்டு வருகிறேன். ஆவணப்படங்களை ஏன் பெரிய திரையரங்குகளில் திரையிட முடியாது, வணிகரீதியான சினிமாவைப் போல முறையாக வெளியிட முடியாது? என்ற ஒரு பார்வை என்னைப் பொறுத்தவரை ஒரு ஆபத்தான வாதம், ஏனென்றால் நீங்கள் அதன் பகுதியாக ஆகின்ற கணத்திலேயே வணிக நலன்கள் தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றன, பின் நீங்கள் இலாபகரமாக இருந்தாக வேண்டும்.

தன்பின் பணம் போடுபவர்கள் கதை என்ன என்பதில் மேலும் மேலும் அதிகக் கட்டுப்பாடு செலுத்த ஆரம்பிப்பார்கள். இது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் கூட நடந்து கொண்டிருக்கிறது. அதன்பின் ஒரேயொரு வகையான - மகத்தான மானுட ஆன்மாவைக் குறித்த வகை, உங்களுக்குத் தெரியும், தலைப்புச் செய்திகள் என்று அழைக்கப்படுவன - ஆவணப்படம் மட்டுமே ஏற்கத்தக்க வகையாகி விடும். வணிகமயமாகாமல் இருப்பதன் மூலமாக, இதற்கு இணங்குவதற்குக் கொடுக்கப்படும் அழுத்தம் சிலவற்றில் இருந்து நாம் தப்பிக்கலாம்.

நாங்கள் செய்ய விரும்பும் படங்களை நாங்கள் செய்கிறோம். இலாபங்களை உருவாக்கும் அழுத்தத்தின் வகை எங்கள் மீது இல்லை. தொந்தரவின்றி நாங்கள் விரும்புவதைச் சொல்ல முடியும் செய்ய முடியும், அத்தனை பெரும்பாலும் தணிக்கை வெட்டுகள் எங்களுக்கு கிடையாது, ஆயினும் எல்லா இடங்களிலும் எங்களால் படத்தைக் காண்பிக்க முடியும். நீங்கள் அந்தப் பெரிய மட்டத்திற்கு போகின்ற தருணத்தில், அரசுக்கு ஒரு நலன் இருக்கிறது - அவர்கள் அதனைப் பார்ப்பார்கள், சான்று கொடுப்பார்கள், இந்த அத்தனை பிரச்சினைகளும் வரும். ஆகவே ஆவணப்படமானது ஒரு மிக வளமான மற்றும் பல்தரப்பு வகையான ஒன்றாகவே வாழ்ந்திருக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். அத்துடன் அது வணிகரீதியான புனைவு சினிமாவின் பாதையைப் பின்பற்றாமல் இருக்கவேண்டும் என்பதும் முக்கியமானதாகும்.

ஆசிரியர் பரிந்துரை:

திஃபேக்டரி: ஆவணப்படம் இந்திய வாகன உற்பத்தித்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது