சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Venezuelan elections and the dead end of Latin Americas turn to the left

வெனிசூலா தேர்தல்களும், இலத்தீன் அமெரிக்காவின் "இடதை நோக்கிய திருப்பத்தின்" முட்டுச்சந்தும்

Bill Van Auken
11 December 2015

Use this version to printSend feedback

கடந்த ஞாயிறு சட்டமன்ற தேர்தல்களில் ஜனாதிபதி நிக்கோலா மாதுரோவின் ஆளும் கட்சியான வெனிசூலாவின் ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியின் (PSUV) அவமானகரமான தோல்வி, இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் "இடது" முதலாளித்துவ அரசாங்கங்களின் மீது அதிகரித்துவரும் நெருக்கடியின் பாகமாகும்.

தேர்தல் முடிவுகள், ஜனநாயக ஐக்கியத்தின் வட்டமேசை (MUD) என்று அறியப்படும் வலதுசாரி எதிர்ப்பு கூட்டணிக்கு சட்டமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களை வழங்கியுள்ளது. அச்சட்டமன்றம் கடந்த 16 ஆண்டுகளாக மறைந்த ஹ்யூகோ சாவேஸ் மற்றும் மாதுரோவின் ஆளும் கட்சியினது இடர்பாடற்ற கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த பெரும்-பெரும்பான்மை, சட்டங்களை மாற்றி எழுதுவதற்கும் மற்றும் தேர்தலுக்கு மறுஅழைப்பு கொடுக்கவும் அல்லது மாதுரோவின் பதவிகாலத்தை குறைக்கும் ஓர் அரசியலமைப்பு சட்டதிருத்தம் கொண்டு வரவும் கூட சட்டமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கிறது. வெளிப்பார்வைக்கு சாத்தியமான அளவிற்கு அரசியலமைப்பு வழிவகைகளை கொண்டு நிறைவேறுவதைப் போல காட்சிப்படுத்தல் இருந்தாலும், 2002 இன் கருசிதைக்கப்பட்ட சிஐஏ-ஆதரவிலான ஆட்சிக் கவிழ்ப்பு சதியிலிருந்து, 2013 தேர்தலில் மாதுரோவிற்கு மயிரிழையில் கிடைத்த வெற்றி வரையில் வாஷிங்டன் மற்றும் அமெரிக்க-நிதி உதவியுடன் அதன் வெனிசூலா கூட்டாளிகள் பின்பற்றிய ஆட்சி-மாற்ற நோக்கத்தையே இது அர்த்தப்படுத்துகிறது.

வெனிசூலாவில் சாவிஸ்டாஸ் இன் (chavistas) தோல்வி, ஆர்ஜென்டினாவில் புதனன்று ஜனாதிபதியாக பதவியேற்ற வலது வேட்பாளர் மௌரிசியோ மாக்ரி (Mauricio Macri) இன் வெற்றியுடன் பெரோனிஸ்டுகளை (Peronists) அதிகாரத்திலிருந்து நீக்கியதை அடுத்து வந்துள்ளது. மாக்ரி இன் வெற்றியானது, ஜனாதிபதி கிறிஸ்டினா பெர்னான்டஸ் கிர்ச்னர் (Cristina Fernandez Kirchner) மற்றும் அவரது காலஞ்சென்ற கணவர் நெஸ்டர் கிர்ச்னரின் (Nestor Kirchner) டஜன் கணக்கான ஆண்டுகள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தது. இவர்கள் பெரோனிசத்தின் (Peronism) "இடது" வகையறா என்பதாக காட்டி வந்தார்கள்.

இதற்கிடையே, பிரேசிலில், தொழிலாளர்கள் கட்சி (PT) தலைவர் டில்மா ரூஸ்செஃப் (Dilma Rousseff) காங்கிரஸில் முறைகேடு விசாரணையை முகங்கொடுத்திருக்கும் நிலையில் மற்றும் இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய பெருநிறுவனமான அரசு எண்ணெய் நிறுவனம் பெட்ரோபராஸைச் சுற்றி அவரது அரசாங்கம் பல பில்லியன் டாலர் ஊழல் மோசடியில் சிக்கியுள்ள நிலையில், அவரது செல்வாக்கு விகிதம் ஒரு தசம இலக்கிற்கு வீழ்ந்துள்ளது.

அங்கே இந்த மூன்று அரசாங்கங்களின் வரலாற்று தோற்றுவாய்கள் மற்றும் அரசியல் போக்குகளில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன என்பதில் ஐயத்திற்கு இடமில்லை, என்றாலும் அவை சில இன்றியமையாத அம்சங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை அனைத்துமே, இந்த புத்தாயிரம் ஆண்டு தொடங்கிய போது முன்னுக்குக் கொண்டு வரப்பட்ட, இலத்தீன் அமெரிக்காவின் "இடதை நோக்கிய திருப்பம்" என்று கூறப்பட்ட நிகழ்வுபோக்கின் பாகமாக இருந்தன.

இத்திருப்பத்திற்குப் பின்னால் நிறைய அபிவிருத்திகள் உள்ளன. 1990களின் சுதந்திர சந்தை "வாஷிங்டன் கருத்தொற்றுமை", அத்துடன் சேர்ந்து அதிகரித்த தனியார்மயமாக்கல் மற்றும் அன்னிய முதலாளித்துவ ஊடுருவலுக்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டமை என இவை ஆழ்ந்த சமூக துருவமுனைப்பாடு மற்றும் சமூக ஒழுங்கமைப்பையே அச்சுறுத்திய பாரிய வறுமை நிலைமைகளைத் தோற்றுவித்தது.

அதேநேரத்தில், இந்த சகல நாடுகளது பொருளாதாரங்களின் அடித்தளமாக இருந்த மூலப்பொருட்கள் மற்றும் பண்டங்களின் சீரான விலை உயர்வும், சீனப் பொருளாதாரத்தின் மேலெழுச்சியும் உருவாக்கிய பொருளாதார நிலைமைகளில், அதிகரித்த ஏற்றுமதி வருவாய்களின் ஒரு பகுதியை சமூக நலத்திட்டங்களுக்கு நிதி வழங்கவும் பயன்படுத்த முடிந்தது. அதேவேளையில் அவை, அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அப்பிரதேசத்தில் நலிந்துவந்த அதன் மேலாதிக்கத்திலிருந்து இலத்தீன் அமெரிக்க அரசாங்கங்கள் அதிகரித்தளவில் அவற்றின் சுதந்திரத்தை ஸ்திரப்படுத்தவும் அனுமதித்தது, அவ்வேளையில் அவை ஓர் இடது தேசியவாத தோரணையை ஏற்றிருந்தன.

அந்த "இடது திருப்பத்தால்" உருவான அரசாங்கங்களது தற்போதைய நெருக்கடியின் அடியிலிருப்பது, இப்பொருளாதாரங்களை முறுக்கிப்பிழியும் மாற்றங்களாகும். இம்மாற்றங்கள், உலக முதலாளித்துவத்தின் ஆழமடைந்துவரும் நெருக்கடி, சீனாவின் வளர்ச்சி குறைவு மற்றும் பண்டங்களின் வேகமான விலை வீழ்ச்சியால் உருவாகியுள்ளன.

அதன் ஏற்றுமதி வருவாய்களில் 90 சதவீதத்தை எண்ணெய் விலைகளின் கணக்கில் கொண்டுள்ள வெனிசூலா, எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலருக்கு அதிகமாக இருந்ததிலிருந்து ஏழு ஆண்டுகளில் மிகக் குறைவாக 30 டாலராக வீழ்ச்சி அடைந்திருப்பதைக் காண்கிறது. பணவீக்கம், உலகின் மிக உயர்ந்த விகிதமாக, மூன்று இலக்கத்திற்கு உயர்ந்துள்ளது, உணவு பண்டங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களின் அதிகரித்த பற்றாக்குறையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.

பிரேசில், 1930களின் பெருமந்த நிலைமைக்குப் பின்னர் அதன் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை முகங்கொடுப்பதுடன், கடந்த ஆண்டு 4.5 சதவீத பொருளாதார சுருக்கத்தைப் பதிவு செய்தது, அத்துடன் பணவீக்கம் இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது, வேலைநீக்கங்கள் சுமார் 1.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. அதேபோல ஆர்ஜென்டினாவும் பொருளாதார சுருக்கம் மற்றும் 30 சதவீத பணவீக்கத்தை முகங்கொடுக்கிறது.

இந்த நெருக்கடி அந்த மண்டலம் எங்கிலும் ஏற்கனவே மலைப்பூட்டும் அளவில் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பிற்குமான அமைப்பின் தகவல்படி, அப்பிராந்தியத்தில் சமத்துவமின்மை மீண்டுமொருமுறை கூர்மையாக அதிகரிக்க தொடங்கியுள்ளது, அதில் மக்கள்தொகையில் மேலே உள்ள 10 சதவீதத்தினர் வறிய 10 சதவீதத்தினரின் வருவாயை விட ஒன்பது மடங்கு அதிகமாக பெற்று வருகிறார்கள். இலத்தீன் அமெரிக்காவின் மிகப் பணக்கார 1 சதவீதம் இப்போது அப்பிராந்திய செல்வ வளத்தில் 41 சதவீதத்தை உடமையாக கொண்டுள்ளது மற்றும் 2022 வாக்கில் மீதமுள்ள 99 சதவீதத்தினரை விட அதிக செல்வவளத்தை அது கொண்டிருக்குமென முன்கணிக்கப்படுகிறது. வெனிசூலா மற்றும் பிரேசிலிலும் சமத்துவமின்மையின் கூர்மையான அதிகரிப்புகள் உள்ளன.

ஆர்ஜென்டினாவை போலவே மற்றும் பிரேசிலில் ரூஸ்செஃப் இன் பதவிநீக்க விசாரணைக்கு இருந்த பரந்த ஆதரவின் அறிகுறிகளைப் போலவே, வெனிசூலா தேர்தலும் மக்களது வலது திருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை, மாறாக இத்தகைய நாடுகளில் தொழிலாள வர்க்கத்தின் எந்த பாரிய கட்சிகளும் இல்லாத நிலைமைகளின் கீழ், தற்போதைய அரசாங்கங்களின் சமூக தாக்குதல்களுக்கு எதிரான ஒரு மக்கள் போராட்டத்தையே பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பொலிவிய புரட்சி" மற்றும் "21ஆம் நூற்றாண்டு சோசலிசம்" குறித்த அதன் சகல வீராவேசங்களைக் குறித்துப் பார்த்தால், சாவெஸ் மற்றும் மாதுரோவின் அரசாங்கங்கள் வெனிசூலிய முதலாளித்துவத்தை மற்றும் முதலாளித்துவ அரசின் இன்றியமையா அமைப்புகளை, அனைத்திற்கும் மேலாக அவர்களது ஆட்சியின் முக்கிய தூணாக விளங்கும் ஆயுதப்படைகளை சேதமடையாமல் பேணி பாதுகாத்துள்ளன.

அந்நாட்டின் ஆளும் தன்னலக்குழு பொருளாதாரத்திற்கு கட்டளையிடும் உயர்மட்டங்களை உறுதியாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அவற்றில் 71 சதவீதம் தனியார் வசம் உள்ளதுஇது சாவெஸ் ஜனாதிபதியாக ஆன போதிருந்த பங்கை விட மிகவும் அதிகமாகும்.

சமூகத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்கள் முன்னொருபோதும் இல்லாதளவில் செல்வவளத்தை திரட்டியுள்ளனர் இந்தாண்டின் முதல் காலாண்டில் வங்கி இலாபங்கள் 72 சதவீத அளவிற்கு உயர்ந்தது அதேவேளையில் தொழிலாள வர்க்கமோ பொருளாதார வறுமையை முகங்கொடுக்கிறது. தங்களைத்தாங்களே செழிபாக்கிக் கொள்பவர்களில், ஒட்டுமொத்த ஆளும் கட்சி அரசியல்வாதிளும் மற்றும் boliburguesia என்று கூறப்படும் ஒரு சமூக அடுக்கான அரசாங்கத்துடன் பிணைந்துள்ள தனியார் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிதிய ஊக வணிகர்களும் உள்ளடங்குவர்.

மாதுரோ அரசாங்கம் இந்த அடுக்கின் இலாபங்களைப் பாதுகாக்கிறது, அதன்போதே இந்தாண்டில் அந்நாட்டின் அன்னிய கடனில் 11 பில்லியன் டாலரைச் சரியாக திரும்பி செலுத்த வோல் ஸ்ட்ரீட்டிற்கும் உத்தரவாதமளித்துள்ளது. அது சமூக உதவித் திட்டங்களை வெட்டுவதுடன், நிஜமான கூலிகளைக் குறைக்கும் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்தி உள்ளது. வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களைக் கொண்டு இத்தகைய தாக்குதல்களை எதிர்த்துள்ள தொழிலாளர்களை, குற்றவாளி தொழிலாளர்கள்" (labor criminals) என்று மாதுரோ கண்டித்துள்ளதுடன், அதற்கேற்ப கையாள்கிறார்.

இலத்தீன் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் போலி-இடது அமைப்புகள், சாவெஸ் இன் பொலிவிய புரட்சியை சோசலிசத்திற்கான ஏதோ புதிய பாதையாக பெருமைப்படுத்தின. அதிக தனிச்சலுகை படைத்த நடுத்தர வர்க்க அடுக்குகளின் நலன்களைப் பிரதிபலிக்கும் இத்தகைய அரசியல் கூறுபாடுகளின் அரசியல், சாவிஸ்மோ (chavismo) ஆல் ஈர்க்கப்பட்டிருந்தது, துல்லியமாக ஏனென்றால் அது அடிமட்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை பிரதிபலிக்கவில்லை என்பதால் ஆகும், மாறாக தொழிலாளர்களை ஒரு கவர்ச்சிகரமான "தளபதியிடம்" அடிபணியச் செய்யும் ஒரு முதலாளித்துவ இயக்கத்தையே அது பிரதிநிதித்துவம் செய்தது, இவர்களின் கொள்கைகள் வெனிசூலாவில் வெடிப்பார்ந்த வர்க்க மோதலை மத்தியஸ்தம் செய்வதை நோக்கி திருப்பி விடப்பட்டிருந்தது.

முன்னதாக தொழிலாளர் கட்சியில் (Workers Party) இதேபோன்ற பிரமைகளை ஊக்குவித்துவந்த, கடந்த டஜன் கணக்கான ஆண்டுகளாக பிரேசிலிய முதலாளித்துவத்தின் அரசியல் பிரதிநிதியாக விளங்கிய இத்தகைய அரசியல் போக்குகள், இடது" என்று கூறிக்கொண்ட அரசாங்கங்களால் இலத்தீன் அமெரிக்க தொழிலாள வர்க்கம் அவர்களுக்கு எதிரான தாக்குதலை முகங்கொடுக்கையில் அவர்களை அரசியல்ரீதியில் நிராயுதபாணி ஆக்குவதற்கும், அத்துடன் வலதின் அரசியல் வெற்றிகள் முன்னிறுத்தும் தீவிரமான புதிய அச்சுறுத்தல்களுக்கும் பொறுப்பாகின்றன.

இந்த ஒட்டுமொத்த அரசியல் அனுபவத்தின் கசப்பான படிப்பினைகள், இத்தகைய முதலாளித்துவ கட்சிகள் மற்றும் அரசாங்கங்கள் மற்றும் அவர்களின் போலி-இடது ஆதரவாளர்களை எதிர்த்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை அமைப்பதற்குரிய உடனடி அவசியத்தை தொகுத்தளிக்கின்றன. தொழிலாளர்களின் அதிகாரம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பாகங்களாக, இலத்தீன் அமெரிக்கா எங்கிலும் புரட்சிகர கட்சிகளைக் கட்ட வேண்டும்.