சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The US oil strike and the international struggles of the working class

அமெரிக்க எண்ணெய் துறை வேலைநிறுத்தமும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச போராட்டங்களும்

Jerry White
25 February 2015

Use this version to printSend feedback

இப்போது நான்காம் வாரத்தை எட்டியிருக்கும் அமெரிக்க எண்ணெய் சுத்திகரிப்புத் துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தமானது வேலைகளையும், ஊதியங்களையும், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமைகளையும் பாதுகாத்துப் போராடுவதற்கு தொழிலாளர்கள் தயாராக இருக்கும் நிலை பெருகியிருப்பதன் ஒரு வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. 6,500 தொழிலாளர்கள் பங்குபற்றியிருக்கும் இந்த புறக்கணிப்புப் போராட்டமானது அமெரிக்க எண்ணெய்த் துறையில் 1980க்குப் பிந்தைய மிகப்பெரும் வேலைநிறுத்தமாகும். பல தசாப்தங்களாக வாழ்க்கைத் தரங்கள் சரிவுகண்டு வருவதைத் தடுத்து நிறுத்த தொழிலாளர்கள் துறைமுகத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அஞ்சல் தொழிலாளர்கள், வாகனத் துறைத் தொழிலாளர்கள் மற்றும் பிற துறைத் தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற ஒரு பரந்த முயற்சியின் ஒரு பாகமாக இது அமைந்துள்ளது.

இந்த வேலைநிறுத்தத்தை மட்டுப்படுத்த முனைந்து கொண்டிருக்கும் USW (ஐக்கிய உருக்குத் தொழிலாளர் சங்கம்) இத்துறையிலான தனது 30,000 பேர் கொண்ட உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினருக்கு மட்டுமே அழைப்பு விடுத்து 63 சுத்திகரிப்பு ஆலைகளில் வெறும் 11 இல் மட்டுமே முற்றுகைப் போராட்டத்துக்கு ஒழுங்கமைத்தது. ஒபாமா நிர்வாகத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் USW, இந்த புறக்கணிப்புப் போராட்டம் வெள்ளை மாளிகையுடனான ஒரு அரசியல் மோதலாக உருவெடுத்து விடாமல் தடுக்க வேலைசெய்து கொண்டிருக்கிறது. சென்ற வார இறுதியில் தான் மேற்குக் கரைப் பகுதியில் 20,000 துறைமுகத் தொழிலாளர்கள் மேற்கொள்ளவிருந்த ஒரு வேலைநிறுத்தத்தை தடுக்க வெள்ளை மாளிகை தலையிட்டிருந்தது.

உற்பத்தியில் மிகக் குறைந்தபட்ச பாதிப்புக்கு மட்டுமே முகம் கொடுக்கும் ஷெல், எக்ஸான்மொபில், BP, செவ்ரான் மற்றும் பிற எண்ணெய் துறை பெருநிறுவனங்கள், ஏளனப்படுத்தும் அளவிலான ஒரு ஊதிய அதிகரிப்பு, அபாயகரமான அளவில் நீளுகின்ற வேலைக்கால அட்டவணைகள், மற்றும் ஓரளவுக்கு முழு-நேரத் தொழிலாளர்களாக இருப்பவர்களை தற்காலிக ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு பிரதியீடு செய்வது ஆகிய தமது கோரிக்கைகளில் இருந்து பின்வாங்க மறுத்துள்ளன.

இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதும் USW திணிக்கும் தளைகளை உடைத்தெறிவதும் அவசியமாக இருக்கிறது. ஒரு முதல் படியாக, வேலைநிறுத்தமானது நாடெங்கிலும் இருக்கும் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு விரிவுபடுத்தப்பட்டாக வேண்டும். ஒபாமா நிர்வாகமோ அல்லது நீதிமன்றங்களோ முன்னெடுக்கின்ற வேலைநிறுத்த-உடைப்புத் தலையீடு எதுவொன்றுக்கும் எதிராக, எண்ணெய் துறை தொழிலாளர்களை பாதுகாத்து நிற்பதற்கான ஒரு விண்ணப்பம் தொழிலாள வர்க்கத்தின் அனைத்து பிரிவுக்கும் விநியோகிக்கப்பட வேண்டும்.

ஆயினும் கூட இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஒட்டுமொத்தமாய் எண்ணெய் துறை தொழிலாளர்களும் தொழிலாள வர்க்கமும் ஒரு பரந்த அரசியல் மூலோபாயத்தை அபிவிருத்தி செய்தாக வேண்டும்.

அமெரிக்க எண்ணெய் துறை தொழிலாளர்கள் முகம்கொடுக்கின்ற பிரச்சினைகள் ஒரு தேசிய அளவிலான, இன்னும் சொன்னால், சர்வதேச அளவிலான நெருக்கடியின் பாகமாகும். ஒவ்வொரு நாட்டிலுமே பகாசுர பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்தும் மற்றும் வங்கிகளிடம் இருந்துமான தாக்குதலுக்கு தொழிலாளர்கள் முகம்கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இடது என்பதாகச் சொல்லப்படும் அரசாங்கங்களும் சரி வலதுசாரி அரசாங்கங்களும் சரி இந்த தாக்குதலுக்கு ஆதரவளிக்கின்றன. வேலைகள், ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமூகநலத் திட்டங்களுக்கு எதிரான இப்போதைய தாக்குதலானது அது எதேன்ஸாயிருந்தாலும் அல்லது டெட்ராயிட்டாய் இருந்தாலும் பல தசாப்த கால ஆட்குறைப்பு மற்றும் ஊதியக் குறைப்பினை பின்தொடர்ந்த நடவடிக்கையாய் இருக்கிறது. பெருமந்தநிலை காலத்திற்குப் பின் மிக நீண்டதொரு ஊதியத் தேக்கக் காலத்தின் ஊடாக அமெரிக்கா பயணித்திருக்கிறது.

2008 வோல்-ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பிந்தைய காலத்தில் அரசாங்க-பெருநிறுவனத் தாக்குதலானது அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. பல-டிரில்லியன்-டாலர் செலவில் நிதிப் பிரபுத்துவத்தினை பிணையெடுப்பதற்கு தொழிலாள வர்க்கம் தொகை செலுத்தச் செய்வதாக அமைகின்ற கொள்கைகளை அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலுமான ஆளும் உயரடுக்கினர் அமல்படுத்தினர்.    

அடுத்தடுத்து ஒவ்வொரு நாட்டிலும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன, அத்துடன் தொழிலாளர்கள் ஒரு நூறாண்டு காலப் போராட்டத்தில் வென்றெடுத்திருந்த சமூக தேட்டங்களில் எஞ்சியிருக்கும் மிச்சத்தையும் அழிக்கும் பொருட்டு கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் என்பதான விடயங்களும் அமல்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழிலாளர்களை சுரண்டுவதற்கும், வங்கிகளாலும் பெருநிறுவனங்களாலும் சமூகம் சூறையாடப்படுவதற்கும் இடைஞ்சலாய் இருந்த அத்தனையும் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இதனுடைய விளைவுதான் உழைக்கும் மக்கள் ஒட்டுமொத்தமாய் ஓட்டாண்டிகளாக்கப்படுகின்ற அதேநேரத்தில், பக்கவாட்டில் சாதனை அளவிலான பெருநிறுவன இலாபங்களும், எகிறும் பங்கு விலைகளும், பத்து மில்லியன் டாலர்களில் ஏன் நூறு மில்லியன் டாலர்களிலும் கூட தலைமை நிர்வாக அதிகாரிகளது ஊதியத் தொகுப்புகளுமாய் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. சமூக சமத்துவமின்மை என்பது சென்ற நூற்றாண்டின் திருப்பத்தில் நிலவிய மட்டங்களுக்குத் திரும்பியிருக்கிறது. ஒரு புள்ளிவிவரத்தை மேற்கோள் காட்டிக் கூறலாமென்றால், மனித குலத்தின் கீழ் அடுக்குகளில் இருக்கும் 50 சதவீதத்தினரிடம் அதாவது 3.5 பில்லியன் மக்களிடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான செல்வம் வெறும் 80 பில்லியனர்களிடம் இருக்கிறது.

ஐரோப்பா, ஆசியா, தென்னமெரிக்கா அல்லது வடஅமெரிக்கா எங்கென்றாலும் சரி எதிர்ப்பு காட்டுவதற்கு தொழிலாளர்கள் மேற்கொள்கின்ற ஒவ்வொரு முயற்சியுமே தொழிற்சங்கங்களால் தடுக்கப்படுகின்றன அல்லது குழிபறிக்கப்படுகின்றன. வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதிலும் பெருநிறுவனங்கள் மற்றும் அரசின் கையாட்களாக உருமாற்றம் காண்பதிலும் தமது அத்தனை முனைப்புகளையும் இந்த தொழிற்சங்கங்கள் குவித்து வந்திருக்கின்றன.

கச்சா எண்ணெய் விலைகளிலான சரிவும் கூட இலாப அமைப்புமுறையின் நெருக்கடியின் ஒரு வெளிப்பாடு தான் என்ற நிலையில், எண்ணெய்த் துறை தொழிலாளர்கள் மீதான ஒரு உலகளாவிய தாக்குதலை முன்வைக்க இந்த விலைச்சரிவானது கெட்டியாக பற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த பெரும் எண்ணெய் நிறுவனங்கள் வசதிபடைத்த பங்குரிமையாளர்களுக்கு ஈவுத்தொகைகளின் வடிவத்திலும் பங்குகளை திரும்ப வாங்கிக் கொள்வதான வடிவத்திலும் பத்து பில்லியன்கணக்கில் அள்ளித் தருகின்ற போதிலும், தொழிலாளர்களின் வேலைகள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகளுக்கு எதிராக ஒரு இரக்கமற்ற தாக்குதலைத் தொடுக்க தயங்குவதில்லை.  

குறிப்பாக எண்ணெய் துறை தொழிலாளர்கள் சர்வதேச குணாம்சம் கொண்டதொரு துறைக்கு முகம்கொடுக்கின்றனர். வட கடலில், சுமார் 20,000 கட்டுமான மற்றும் எண்ணெய் துறப்பணத் தொழிலாளர்கள் 15 சதவீதம் வரையான ஊதிய வெட்டுகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் ஊதிய அதிகரிப்பின்றி 28 நாட்கள் கூடுதலாக கரைதாண்டி வேலை செய்வதற்கான கோரிக்கைகளுக்கும் முகம்கொடுத்து நிற்கின்றனர். அதேநேரத்தில் தொழிலாளர்களது எண்ணிக்கையோ ஐந்தில் ஒரு பங்கு வெட்டப்படுகிறது. மெக்சிகோ வளைகுடாவில் அமெரிக்கத் தொழிலாளர்கள் ஏற்கனவே முகம்கொடுத்திருக்கும் அதே கொடுமையான வேலைக்கால அட்டவணையையே BP, Marathon, Canadian Natural Resources மற்றும் பிற நிறுவனங்கள் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் மீதும் திணிப்பதற்கு விரும்புகின்றன. இதற்குப் பதிலிறுப்பாய், வட கடல் தொழிலாளர்கள் அடுத்த மாதத்தில் வேலைநிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள கருத்துத் திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

எண்ணெய் துறை தொழிலாளர்களின் எதிர்ப்பானது சர்வதேசரீதியாக தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி கண்டுவருகின்ற இயக்கத்திற்கான ஒரு அறிகுறியாக அமைந்திருக்கிறது. வேலை வெட்டுகள், ஊதியக் குறைப்புகள் மற்றும் பிற தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கிலான ஜேர்மன் இரயில் சாரதிகள் வேலைப்புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள். மேற்கு ஆஸ்திரேலியாவில், தாது அகழ்வுத் துறை எழுச்சியின் பொறிவானது பத்தாயிரக்கணக்கிலான வேலை இழப்புகளுக்கு இட்டுச் சென்றுள்ளது, நிலக்கரி இரயில் சாரதிகள் வேலைநிறுத்தத்தில் இறங்குகிறார்கள். முன்னதாக கனடா பசிபிக் இரயில் தொழிலாளர்கள் வேலைப் புறக்கணிப்புப் போராட்டத்தில் இறங்கி ஹார்ப்பர் அரசாங்கத்தின் வேலைநிறுத்த-உடைப்புத் தலையீட்டுக்கு பின்னர் அப்போராட்டம் முடிவுக்கு வந்தது.

முதலாளித்துவம் என்ற ஒரு ஒட்டுமொத்த பொருளாதார அமைப்புமுறையின் தோல்விக்கு உலகெங்கிலுமான தொழிலாளர்கள் முகம்கொடுத்து நிற்கின்றார்கள். அதேபோல தொழிற்சங்கங்களது திவால்நிலையையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள். இந்த அமைப்புகள் முதலாளித்துவத்துடன் மாற்றவியலாத வண்ணம் பிணைக்கப்பட்டுள்ளதோடு அதன் தேசிய-அரசு கட்டமைப்புடன் பிரியவியலாத உறவுக்குள் சென்றுள்ளன. அவை தமது சொந்த தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் பின்னால் நின்று கொண்டு, தமது தாய்நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் பெருநிறுவனங்களது போட்டித்திறனை ஊக்குவிப்பதான பேரில் வேலைகளையும் வாழ்க்கைத் தரங்களையும் வெட்டுவதில் கூடி வேலை செய்கின்றன. 

அமெரிக்க தேசியவாதத்தின் மிக வெறுக்கத்தக்க வடிவங்களில் ஒரு நிபுணராக இருக்கும் USW இன் தலைவரான லியோ கெரார்ட் சீனாவின் நாணயமதிப்புக் கைப்புரட்டு வேலைகளையும், கொரிய உருக்குத் தயாரிப்பு நிறுவனங்களின் மலிவுக் குவிப்புகளையும் கண்டிப்பதுடன் தேசியப் பாதுகாப்பு மற்றும் இராணுவத் தயாரிப்பு நிலையை ஊக்குவிக்கின்றதான சுயபாதுகாப்புவாத நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கிறார். பொருளாதார தேசியவாதத்தின் அடிப்படையில் நூறாயிரக்கணக்கிலான தொழிலாளர்களின் வேலைகளையும் ஓய்வூதியங்களையும் அழிப்பதில் உருக்காலை முதலாளிகளுடன் USW கூடி வேலைசெய்திருக்கிறது. 

இந்தக் காட்டிக்கொடுப்புகள் எல்லாம் வெறுமனே தனிநபர் கோழைத்தனத்தின் அல்லது ஊழலின் விளைபொருள் அல்ல. முதலாளித்துவ அமைப்புமுறையை எதிர்த்து நிற்பதற்கான ஒரு சர்வதேச மூலோபாயத்தை வழங்குவதற்கு திறனற்று இருப்பதில் தான் அமெரிக்கா மற்றும் உலகெங்குமான தொழிற்சங்கங்களது தோல்வியின் வேர் அமைந்திருக்கிறது. 

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலுள்ள எண்ணெய் துறைத் தொழிலாளர்களுக்கும், ஜேர்மனி மற்றும் ஆஸ்திரேலியாவில் இருக்கும் இரயில் சாரதிகளுக்கும் அத்துடன் போராட்டத்திற்குள் நுழைகின்ற ஒவ்வொரு மற்ற பிரிவுத் தொழிலாளர்களுக்கும் அவசியமாக இருப்பது என்னவென்றால், நடப்பு நெருக்கடிக்கு கீழும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் உடனடித் தாக்குதல்களுக்கு கீழும் அமைந்திருக்கக் கூடிய விரிந்த வரலாற்று, பொருளாதார மற்றும் அரசியல் நிகழ்ச்சிப்போக்குகளை கணக்கில் எடுத்துக் கொள்கின்ற ஒரு முன்னோக்கும் மூலோபாயமுமே ஆகும்.

முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக நெறிப்படுத்தப்படுகின்ற ஒரு சர்வதேச கொள்கையின் அடிப்படையில் மட்டுமே உலக அளவில் செயல்படுகின்ற நாடுகடந்த பெருநிறுவனங்களை திறம்பட எதிர்ப்பது சாத்தியமாகக் கூடியதாகும். மேலும் எந்தவொரு நாட்டிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கும் இன, மத, மொழி மற்றும் பிற அடிப்படையில் பிரிவினைகளை விதைக்கும் ஆளும் வர்க்கத்தின் இடைவிடாத முயற்சிகளை முறியடிப்பதற்கும் இத்தகையதொரு சர்வதேசக் கொள்கை ஒரு முன்நிபந்தனையாக இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் தமது வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களின் மீது நடத்தப்படும் உலகளாவிய ஒருங்கிணைப்புடனான தாக்குதலுக்கு, முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துகின்ற ஒரு மூலோபாயத்தைக் கொண்டு பதிலளிக்க வேண்டியது கட்டாயமாகும். தேசியவாத மற்றும் முதலாளித்துவ-ஆதரவு தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக, தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளை எட்டுகின்ற விதமாய், போராட்டத்திற்கான புதிய அமைப்புகளைக் கட்டியெழுப்புவது இதற்கு அவசியமாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தை சர்வதேசரீதியாக  ஐக்கியப்படுத்துவதற்கும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் தனியார் இலாபத்தின் அடிப்படையில் அல்லாமல் மனிதகுலத் தேவையின் அடிப்படையில் பொருளாதார வாழ்வை மறுஒழுங்கமைவு செய்யவுமான ஒரு சுயாதீனமான அரசியல் மூலோபாயத்தைக் கொண்டு அதன் போராட்டங்களை நிரப்பவும் ஒரு புதிய தலைமையானது கட்டியெழுப்பப்பட்டாக வேண்டும். இது தான் அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவில் உள்ள எமது சகோதரக் கட்சிகளும் போராடி வருகின்ற சோசலிச சர்வதேசியவாதத்தின் முன்னோக்கு ஆகும்.