சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German media brays for war and dictatorship after Paris attacks

பாரீஸ் தாக்குதல்களுக்குப் பின்னர் ஜேர்மன் ஊடகங்கள் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு நெருக்குகின்றன

By Johannes Stern
17 November 2015

Use this version to printSend feedback

ஜேர்மனியின் இரண்டு பிரதான பத்திரிகைகளின் ஞாயிற்றுக்கிழமை தலையங்கங்களை வாசிக்கும் எவரொருவரும், பாரீஸின் கொடூர பயங்கரவாத தாக்குதல்கள் ஜேர்மன் உயரடுக்குகளின் வலதுசாரி நிகழ்ச்சிநிரலை முன்னுக்குத் தள்ள ஒரு சந்தர்ப்பமாக அவற்றால் வரவேற்கப்படுகின்றன என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்க்க சிரமப்படுவார்.

“உலக போருக்குள்", “இது பயங்கரவாதம் அல்ல, இது போர்", “நாம் பணிந்து போகக்கூடாது, நாம் சண்டையிட வேண்டும்" என்பது போன்ற தலைப்புகளைத் தாங்கிவந்த கட்டுரைகளில், Frankfurter Allgemeine Sonntagszeitung இல் பேர்தோல்ட் கோஹ்லரும், Die Welt am Sonntag இல் ஸ்ரெபான் ஆஸ்ட் மற்றும் மத்தியாஸ் டோஃப்னர் (Mathias Döpfner) உம் ஆக்ரோஷமான போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு அழைப்புவிடுத்தனர். இவை முன்னர் அதிதீவிர வலதுசாரி வட்டாரங்களில் மட்டுமே காணக்கூடியதாய் இருந்தன.

கோஹ்லர், ஆஸ்ட் மற்றும் டோஃப்னர் எங்கோ ஓரத்தில் இருக்கும் பிரபலங்கள் கிடையாது. அவர்கள், அரசு மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் ஆழமாக தொடர்புகளைக் கொண்ட "ஆல்ஃபா இதழாளர்கள்" (Alpha journalists) என்றழைக்கப்படுபவர்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தான் ரஷ்யாவிற்கு எதிராக போர் பிரச்சாரத்தையும் மற்றும் ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவையும் பறைசாற்ற உக்ரேனிய நெருக்கடியை பயன்படுத்தியவர்கள்.

1999 க்கு பின்னரில் இருந்து, கோஹ்லர் Frankfurter Allgemeine Zeitung (FAZ) இன் நான்கு பதிப்பாசிரியர்களில் ஒருவராக மற்றும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் வழமையாக பங்குபெறுபவராகவும் உள்ளார். ஜேர்மனியின் மிகப்பெரிய ஊடக நிறுவனங்களில் ஒன்றான Axel Springer SE இன் நிர்வாக குழு தலைவராக உள்ள டோஃப்னர் வெளியுறவுகளுக்கான அமெரிக்க கவுன்சிலின் உலகளாவிய ஆலோசகர் குழுவின் ஓர் அங்கத்தவராவார் மற்றும் இழிவார்ந்த Bilderberg கூட்டங்களில் பங்கெடுப்பவராகவும் உள்ளார். Der Spiegel இன் தலைமை பதிப்பாசிரியராக 1994 இல் இருந்து 2008 வரை இருந்த ஆஸ்ட், 2014 வரையில் வலதுசாரி Springer குழும பத்திரிகை Die Welt இன் பதிப்பாசிரியராக இருந்துள்ளார்.

அவர்களது கட்டுரையில், அவர்கள் மூவருமே 9/11 உடன் ஒரு நேரடி சமாந்தரத்தை வரைகிறார்கள். இந்த ஒப்பீடு மட்டுமே கூட அந்த எழுத்தாளர்களின் பிற்போக்குத்தனமான அரசியல் நிகழ்ச்சிநிரலைக் குறித்து கட்டுக்கட்டாக பேசுகிறது. செப்டம்பர் 11, 2001 பயங்கரவாத தாக்குதல்களுக்கான துல்லியமான காரணங்கள் இதுவரையில் தெளிவுபடுத்தப்படாத நிலையில், அது புஷ் மற்றும் ஒபாமா நிர்வாகத்தால் சட்டவிரோத போர்களை நடத்தவும், வெளிநாடுகளில் பாரிய இராணுவ மீள்ஆயுதமயப்படுத்தலை முன்னுக்குத் தள்ளவும் மற்றும் உள்நாட்டில் அரசு அதிகாரங்களை அதிகரிக்கவும் ஒரு சாக்காக பயன்படுத்தப்பட்டது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில், அமெரிக்கா ஆப்கானிஸ்தான் (2001) மற்றும் ஈராக் (2003) மீது படையெடுத்தது. லிபியாவிற்கு (2011) எதிரான நேட்டோ போர் மற்றும் சிரியாவில் ஓர் உள்நாட்டு போரை அது தூண்டிவிட்டமை, மில்லியன் கணக்கானவர்களை கொன்றும் அதனினும் அதிகமாக அகதிகளை உருவாக்கியும் ஒட்டுமொத்த பிராந்தியத்தையுமே சீரழித்தது. அமெரிக்காவின் போர் கொள்கைக்கு உலகில் எங்கேனும் உள்ள நிஜமான அல்லது உத்தேசமான எதிர்ப்பாளர்களை, அமெரிக்கா கடத்துகிறது, சித்திரவதை செய்கிறது, படுகொலை செய்கிறது மற்றும் ஒட்டுமொத்த மனிதகுலத்தின் மீதும் கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ உளவுபார்க்கிறது, மற்றும் அமெரிக்காவில் ஒரு பொலிஸ் அரசைக் கட்டமைத்து வருகிறது.

இப்போதோ, ஜேர்மன் அரசியலின் வலது சாரி வட்டாரங்களும் ஊடகங்களும் பயங்கர பாரீஸ் தாக்குதல்கள் மீதான அதிர்ச்சியை அதேபோன்ற காரணங்களுக்காக சாதகமாக்கி வருகின்றன, இதுவரையில் அத்தகைய நடவடிக்கைகளை அவர்கள் ஒரு மட்டுப்பட்ட வரம்பிற்குள் தான் நடைமுறைப்படுத்த முடிந்திருந்தது. அவர்களுக்கு இரண்டு பிரதான நோக்கங்கள் உள்ளன: ஒன்று, ஜனாதிபதி கௌவ்க் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு மற்றும் போர் கொள்கைக்குத் திரும்புவதற்கு அவர்கள் அழுத்தமளிக்க விரும்புகிறார்கள். இரண்டாவது, இராணுவவாதத்திற்கு பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பை உடைக்க ஒரு சர்வாதிபத்திய ஆட்சியை ஸ்தாபிக்கவும் மற்றும் எதிர்வரவிருக்கின்ற வர்க்க போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதில் அரசு எந்திரங்களை ஆயுதபாணியாக்கவும் அவர்கள் பகிரங்கமாக வாதிடுகிறார்கள்.

அவர்களது பிற்போக்குத்தனமான அரசியல் நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கவும், போர் மற்றும் சர்வாதிகாரத்தை ஏற்க பொதுமக்களைத் "தயார்படுத்தவும்", அந்த எழுத்தாளர்கள் பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களை ஒரு போர் நடவடிக்கையாக வரையறுக்கிறார்கள். செப்டம்பர் 11 ஐ சுட்டிக்காட்டி, அங்கே "அதிர்ச்சியலைகள் கடந்த காலத்தை விஞ்சிச் செல்லக்கூடுமென" அறிவிக்கின்றனர். “உலகளாவிய போர்" (ஆஸ்ட்) அல்லது "உலக போர்" (கோஹ்லர்) என்று கருதப்படுபவைக்கு அதிதீவிர எதிர்நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர்கள் நிறைவு செய்கிறார்கள்.

கோஹ்லர் எழுதுகிறார், பாரீஸ் சம்பவங்கள் "பிரான்சிற்கும், நேட்டோவிற்கும் மற்றும் அவ்விதத்தில் மிக முக்கிய கூட்டாளியான ஜேர்மனிக்கும் தீவிர விளைவுகளைக்" கொண்டிருக்கும். FAZ இன் அந்த பதிப்பாசிரியர் மத்திய கிழக்கில் ஜேர்மனியின் ஆக்ரோஷமான கூடுதல் இராணுவ தலையீட்டுக்காக ஏங்குகிறார். “சிரியாவிலிருந்து வரும் அகதிகள் அலையின் காரணங்களுக்கு எதிராக ஒருவர் போராட வேண்டுமென்ற  மேர்க்கெலின் அபிப்ராயம், அவரது அர்த்தத்திற்கு திடீரென விரும்பத்தகாத மாற்றத்தின் அனுபவத்தைப் பெறலாம்,” என்றவர் அறிவிக்கிறார்.

கோஹ்லர் ஒரு சர்வாதிபத்திய ஆட்சிக்கான கோரிக்கையுடன் நேரடியாக போருக்கான அவரது அழைப்பை இணைக்கிறார். “முன்பு எப்போதையும் விட அதிகமாக மேற்கின் ஐக்கியம் இப்போது முக்கியமாகும். அதைக் கொண்டு, அது அதன் மதிப்புகளை பாதுகாப்பதற்கான அதன் உறுதிப்பாட்டை மற்றும் தகைமையை எடுத்துக்காட்டும்,” என்றவர் எழுதுகிறார், “அச்சுறுத்தல் மற்றும் மோதல் சமச்சீரின்மையின் அளவைப் பார்க்கையில், காப்பாற்ற வேண்டிய சுதந்திரங்களுக்குத் தடைவிதிக்காமல், அவசியமானால், சிரியாவில் நமது சொந்த துருப்புகள் இல்லாமல் இது முற்றிலும் சாத்தியமாகாது. தியாகங்கள் இல்லாமல் இந்த சகாப்த போரை வெல்வது சாத்தியமில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

அவர் ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மீதான ஒளிவுமறைவற்ற தாக்குதலுடன் அவரது பேரழிவார்ந்த தலையங்கத்தை நிறைவு செய்கிறார். அகதிகள் மீதான அவரது ஒடுக்குமுறை இருந்தாலும் கூட, மேர்க்கெல் வலதுசாரி வட்டாரங்களில் மிகவும் "மென்மையானவராக" கருதப்படுகிறார். பாரீஸ் தாக்குதல்களுக்கு முன்னதாக, ஜேர்மனியர்கள் "அவர்களது அரசு தலைவரின் நேசமான முகத்தை எதிர்க்கவில்லை", ஆனால் இப்போதையது போன்ற நேரங்களில் "அவர்கள் வேறொரு முகத்தை, கடுமையான ஒன்றை, பார்க்க விரும்புகிறார்கள் மற்றும் அது தான் அவசியப்படுகிறது,” என்று அறிவிக்கிறார்.

ஆஸ்ட் உம் மேர்க்கெலை கடுமையாக தாக்குகிறார் மற்றும் "[ஜேர்மனியின்] வரவேற்கும் கலாச்சாரத்தில் வெளிப்பட்ட மனிதாபிமானத்தை" "அபாயகரமான அப்பாவித்தனம்" என்று சாடுகிறார். அவர் ஒரு "கடுமையான" அரசாங்கத்திற்காக மட்டும் ஏக்கப்படவில்லை, மாறாக மேற்கத்திய போர் கொள்கையின் விளைவாக ஜேர்மனிக்குப் பறந்துவரும் நூறாயிரக் கணக்கான அகதிகளைப் பொதுவான சந்தேகத்தின் கீழ் நிறுத்துகிறார். “பல ஆண்டுகளாக உபயோகிக்காமல் இருந்த பாதுகாப்பு எந்திரங்கள்,” “முழுவதுமாக மூழ்கி போய்விட்டன" மற்றும் எல்லைகளைத் திறந்துவிட்டமை "போரை ஏற்றுமதி செய்ய" அனுமதித்துள்ளது. “அந்த இளைஞர்களின் கூட்டத்தில், நிச்சயமான அகதிகள் யார் அல்லது …வன்முறை இஸ்லாமியர்கள் யார்" என்பதை யாராலும் தீர்மானிக்க முடியாது என்கிறார்.

டோஃப்னர் அகதிகளுக்கு எதிரான அவரது கொந்தளிப்பில் இன்னும் மேலதிகமாக செல்கிறார். அவர் "அகதிகள் நெருக்கடி" மற்றும் "பாரீஸில் பயங்கரவாத அலை" குறித்து ஒரே மூச்சில் பேசுகிறார். அவ்விரண்டையும் அவர் "நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த ஒரு கலாச்சார போரின் தீவிரப்படுத்திகளாக" குறிப்பிடுகிறார். “கலாச்சார போருக்கு" இட்டுச் செல்லும் ஒரு சர்வாதிபத்திய ஆட்சிக்கான அவரது ஏக்கம் இதைவிட வெளிப்படையாக இருக்க முடியாது. “உலகின் ஜனநாயகம்-அல்லாத ஆட்சிகள் பெரும்பாலும் தைரியத்துடன் இருக்கின்றன, மிகவும் தீர்க்கமாக தலைமை கொடுக்கின்றன, ஜனநாயக சமூகங்கள் பெரும்பாலும் பலவீனமாக, உறுதியற்று, தயக்கத்துடன் இருக்கின்றன,” என்று அவர் புலம்புகிறார்.

“ரஷ்யர்கள், சீனர்கள் மற்றும் பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள்” “அவற்றிற்கு என்ன வேண்டும்” என்பதை அறிந்துள்ளன மற்றும் அவற்றின் நோக்கங்களையும் நடைமுறைப்படுத்துகின்றன, அதேவேளையில் “பெரும்பாலான ஜனநாயகங்களோ… பேச்சுவார்த்தையை, சமரசங்களை மற்றும் அனைத்திற்கும் மேலாக அவற்றின் சொந்த மக்களின் வரவேற்பை [எதிர்நோக்குகின்றன]. இந்த கொள்கையின் விளைவு "சிரியாவில் செயலின்மையாக உள்ளது. ஈரானில் தயங்கி நிற்கிறது. ஆபிரிக்காவின் தீவிரமயப்பட்ட பகுதிகளில் வெறுமனே பார்த்துக் கொண்டிருக்கிறது.”

டோஃப்னரின் சேதி தெளிவானதாகும்: மத்தியக் கிழக்கின் ஏனைய பகுதிகளில் போர் மற்றும் அகதிகளைத் திருப்பி அனுப்பவும் உடனடியாக வெளியேற்றவும் அவசியமான அகதிகளுக்கு எதிரான மூர்க்கமான நடவடிக்கை—அதற்காக ஒரு சர்வாதிபத்திய ஆட்சி அவசியப்படுகிறது. மிகக் குறிப்பாக, Springer தலைவர், “சமூகத்தின் மத்தியில் ஒரு தீவிரமயப்படுத்தலைக்" கொண்டு நடைமுறைப்படுத்தக்கூடிய "பலமான கொள்கை" ஒன்றை கோருகிறார்.

ஜேர்மனியில், இதுபோன்ற வெளிப்பாடுகளின் அரசியல் உள்ளடக்கமும் வரலாற்று விளைவுகளும் நன்கறியப்பட்டவையே. கடந்த முறை ஜேர்மன் உயரடுக்கு "பலமான கொள்கையைப்" பின்பற்றுவதற்காக "சமூக மத்தியில் தீவிரமயப்படுத்திய" ஒரு கொள்கையைத் தொடங்கியது, அதைத் தொடர்ந்து நாஜி பயங்கரம், இரண்டாம் உலக போர் மற்றும் மனிதயின வரலாற்றிலேயே மிக மோசமான குற்றங்கள் நடந்தேறின.

டோஃப்னர், கோஹ்லர், ஆஸ்ட் மற்றும் அவர்கள் யாருக்காக பேசுகிறார்களோ அந்த வலதுசாரி வட்டாரங்களுக்கு மக்களிடையே குறிப்பிடத்தக்க ஆதரவு கிடையாது, இருந்தாலும் கூட அவர்கள் கருத்துக்கள் ஒரு தெளிவான எச்சரிக்கையாகும். 1930களுக்குப் பிந்தைய ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழ்ந்த நெருக்கடிக்கு விடையிறுப்பதில், ஜேர்மன் உயரடுக்கின் பிரிவுகள் ஜேர்மன் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக மீண்டும் போர், சர்வாதிகாரம் மற்றும் இனவாதத்தைக் காண விரும்புகின்றன.