சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka : Hundreds of thousands of people affected by floods

இலங்கை : இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர்

By Vimal Rasenthiran and Subash Somachandran
22 November 2015

Use this version to printSend feedback

இலங்கையில், குறிப்பாக வட மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய அறிக்கையின்படி, நவம்பர் 16 முடிவடைந்த வாரத்தில் குறைந்தது 80,000 மக்கள் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தமாக அரசாங்கத்தின் இரக்கமற்ற போக்கு அதன் அமைச்சரவை கூட்ட முடிவில் அம்பலத்துக்கு வந்தது. அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக, வடக்கில் மட்டும் 3.597 வீடுகள் முற்றிலும் இடிந்து போயுள்ளதுடன் 236 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன என்று ஒப்புக் கொண்டார். எனினும், அமைச்சரவையானது யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த குடும்பங்கள் உட்பட 1,500 புதிய வீடுகளுக்கே நிதி ஒப்புதல் வழங்கியுள்ளது.

கடந்த முப்பது வருடங்களாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தம், வடமாகாணத்தின் எஞ்சியிருந்த உள்கட்டுமானங்களையும் அழித்துவிட்டது. இது வெள்ளப் பாதிப்பை மேலும் மோசமடையச் செய்துள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் 2009 மே மாதம் யுத்தம் முடிவுக்கு வந்த வேளையில் கட்டிடங்கள், வீடுகள், நீர் வடிந்தோடும் கால்வாய்கள், மதகுகள், வரப்புகள், வீதிகள் என கிட்டத்தட்ட அனைத்து உள்கட்டுமானங்களும் அழிக்கப்பட்டிருந்த.

முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கும், இராணுவ பயன்பாட்டிற்கும் சில பிரதான வீதிகள் கட்டப்பட்டுள்ள போதிலும், ஏனைய பகுதிகள் போர் முடிவடைந்து 6 ஆண்டுகள் கடந்தும் கூட அதே நிலையிலேயே உள்ளன. பல குடும்பங்கள் பாதுகாப்பற்ற தற்காலிக கொட்டகைகளில் அல்லது அவர்களே சுயமாக அமைத்ததுக்கொண்ட குடிசை வீடுகளில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தின் போது முதலைகள் கிராமங்களை நோக்கி வந்துள்ளன. ஒரு தற்காலிக வீட்டிற்குள் நுழைந்த முதலை ஒன்றிடம் இருந்து தனது குழந்தையை தந்தை போராடி பெரிய காயங்களுடன் மீட்டுக்கொண்டார்.

வெள்ளத்தால் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் உட்பட பிரதான பயிர்ச்செய்கைகள் சேதமடைந்துள்ளன. பெரிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்களில் நிரம்பி வழிவதால் காணிகள் மூழ்கிப்போயுள்ளன.

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சில பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் பேசினர். பலர் தங்களை மீட்க அரசாங்க அதிகாரிகள் அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) அரசியல்வாதிகளோ எவரும் வரவில்லை என கோபத்துடன் குற்றஞ்சாட்டினர். தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டுவர நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்து, பின்னர் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பாதுகாக்க எதிர்கட்சி தலைவர் பொறுப்பையும் எடுத்து, யுத்தக் குற்றவாளிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமெரிக்க சார்பு அரசாங்கத்திற்குநல்லாட்சிஎன வண்ணம் பூசி பாதுகாத்து வருகின்றனர்.

கிளிநொச்சி

கிளிநொச்சியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சாந்தபுரம் மற்றும் அம்பாள்நகர் கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு இடம்பெயர்ந்த குடும்பங்கள் தமது உறவினர்களுடன் தங்கியுள்ளன. சுமார் 1050 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 65க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சூறாவளியால் தாக்கப்பட்டுள்ளன. 45 வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இடம்பெயர்ந்த குடும்பங்களின் படி, மூன்று நாட்களுக்கு பின்னர் கூட எந்த அரசாங்க அதிகாரியும் அவர்களை வந்து பார்க்கவில்லை.

இந்த குடும்பங்கள் 1993ல் பிரதான இரணைமடு குளம் மற்றும் பிற அணைக்கட்டுகளுக்கு அருகே அரசாங்கத்தினால் அரை ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டுள்ளதனால் அவர்கள் பெரும்பாலும் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த கிராமங்களில் எந்த வடிகால் அமைப்பு கிடையாது மற்றும் பாதைகள் மோசமாக சேதமடைந்துள்ளன. கிராமவாசிகளுக்கு எந்த நிரந்தர வேலையும் கிடையாது. அவர்கள் தமது சிறிய காய்கறி தோட்டங்கள் மற்றும் கூலி வேலைகளையே சார்ந்து இருக்கத் தள்ளப்பட்டுள்ளனர். பல பேர் யுத்தத்தின் போது காயமுற்றும் ஊனமுற்றும் உள்ளனர்.

எம். ராசமணி மற்றும் அவரது மகளும் கூரை கழன்று வீசப்பட்டபோது சமையலறை புகைக்கூட்டுக்குள் ஒளிந்து தப்பிக்கொண்டனர். அரசாங்கம் கொடுத்த 325,000 ரூபா நிதி போரில் சேதமடைந்த தனது வீட்டைக் கட்ட போதுமானதாக இல்லாததால் அவர் 125,000 ரூபாய் கடன் பெற்றார். "கடன் பெற்றும் கூட என்னால் கட்டிடத்தை முடிக்க முடியவில்லை. நான் கடனை கட்ட போராடிக்கொண்டிருக்கும் போது இப்போது கூரையை மீண்டும் கட்ட வேண்டிய பிரச்சினையை எதிர்கொள்கின்றேன். அரச அதிகாரிகள் எவரும் கடந்த மூன்று நாட்களாக வந்து பார்க்கவில்லை. இந்த பேரழிவு, அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள் பொய்யானவை என்பதை நிரூபிக்கின்றது. "

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட செல்லப்பா கார்த்திகேசு, 58, மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். அவரும் அவரது மனைவியும் இறுதி யுத்தத்தில் காயமடைந்தனர். தவறான சிகிச்சை காரணமாக அவரது மனைவியின் கால் திரும்பிவிட்டது. அவருக்கு மேலதிக சிகிச்சை செய்ய பணம் இல்லை. "நான் ஒரு கூலித் தொழிலாளி. நான் எப்படி பணத்தை தேடுவது? அரசாங்கம் எங்களை இங்கு போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டது. நாம் வாழை மற்றும் ஏனைய பழங்களை பயிரிட்டு வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறோம். அனைத்து மரங்களும் சூறாவளியால் சேதமடைந்துள்ளன. எப்படி வாழ்வது என்று எனக்கு தெரியவில்லை,"என்று அவர் கோபத்தில் புலம்பினார்.

அவர் மேலும் விளக்குகையில், "தேர்தல் காலத்தில் வீடுவீடாக வரும் அரசியல்வாதிகள் நாங்கள் அவலத்தில் இருக்கும்போது திரும்பியும் பார்க்கமாட்டார்கள். நாம் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கே வாக்களித்தோம். சிறிசேன பிரச்சினைகளை தீர்ப்பார் என்று அவர்கள் கூறினர், ஆனால் இன்று நாம் இராஜபக்ஷவுக்கும் சிறிசேனவுக்கும் இடையே எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை" என்றார்.

பாதிக்கப்பட்ட மாணிக்கம் சுப்பிரமணியம், 65, ஒரு காய்கறி விவசாயி. அவரது தோள்பட்டை எலும்பு யுத்தத்தின் போது சேதமடைந்துள்ளது. அவரால் எந்த வேலையும் செய்ய முடியாது. அவரது கத்தரி சாகுபடி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.


திருமுறிகண்டியில் உள்ள ஒரு பாடசாலை

கிளிநொச்சியில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமுறிகண்டி கிராமத்தில் 150 க்கும் அதிகமான குடும்பங்கள் ஒரு பாடசாலையில் தங்கியிருக்கின்றன. வெள்ள நீர் மூன்று அடி உயர்ந்து வீடுகளை சேதமாக்கியுள்ளது. கால்நடைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படாத அதேவேளை, இராணுவ மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அங்கு சூழ நின்றனர்.

யு. விஜயகுமாரி, 56, வெள்ளத்திற்கு ஒரு காரணம் கவனக்குறைவான உள்கட்டமைப்பு நடவடிக்கைகளே என விளக்கினார். "அவர்கள் முக்கிய வீதிகளை உயர்த்தி அமைத்தனர். ஆனால் ஒரு சரியான வடிகால் அமைப்பு கட்டப்பட்டவில்லை. இராணுவம் அதன் பயன்பாட்டுக்காக முறிகண்டி குளத்தின் அனைகளை உடைத்து விட்டது. அதனாலேயே வெள்ள நீர் எங்கள் வீடுகளை நோக்கி வருகின்றன."

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் பிரதேச செயலக அறிக்கையின்படி, சுமார் 14.334 குடும்பங்கள் யாழ் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. 7,000 க்கும் அதிகமான மக்கள் முகாம்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர். சுமார் 200 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதோடு 54 வீடுகள் முற்றிலும் அழிந்துள்ளன. வலிகாமம் மேற்கில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நெல் வயல்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அத்துடன் படகுகள், மீன்பிடி வலைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளம் யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதி உள்ளே கூட நுழைந்துள்ளது.


யாழ்ப்பாணத்தில் சாகுபடி நிலங்கள் வெள்ளத்தால் மூழ்கிப்போயுள்ளன

சங்குவேலி கிராமத்தில் ஒரு விவசாயியான கணநாதன் விளக்கியதாவது: "எமது நெல் வயல்கள் 2008ல் சூறாவளியினால் மூழ்கடிக்கப்பட்டது. எந்த நிவாரணமும் எங்களுக்கு கிடைக்கவில்லை. நாம் நகைகளையும் அடகுவைத்து கால்நடைகளை விற்று பயிர்ச்செய்கைக்கு முதலீடு செய்தோம். எங்களால் மீண்டும் பொருளாதார ரீதியில் எழ முடியாது. மாறாக கடனில் மூழ்கிப் போவோம்."

மற்றொரு விவசாயி அரசிளங்குமரன், 58, கூறியதாவது: "நீங்கள்தான் முதலில் எங்களைப் பார்க்க வந்தீர்கள். அரசியல்வாதிகள் எங்களைப் பார்க்க வரவில்லை. போர் முடிந்ததாதல் மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால் ஒரு பிரச்சினையும் தீரவில்லை. வடக்கு மாகாண சபை அமைக்கப்பட்டு எல்லாம் தீர்த்து வைக்கப்படும் எனக் கூறினார்கள் அதனால் ஒரு பிரயோசனமும் இல்லை. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம் அமைக்க வேண்டும் என்று நீங்கள் கூறும் வேலைத் திட்டத்தை நான் வரவேற்கிறேன்."

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் பல தசாப்தங்களாக யாழ்ப்பாணத்தில் முகாம்களில் தங்கியிருக்கும் யுத்த அகதிகளுடனும் பேசினர்.


உலக சோசலிச வலைத் தள  நிருபர் அகதிகளுடன் பேசுகிறார்

சியாமளா, 30, சுண்ணாகத்தில் உள்ள சபாபதிப்பிள்ளை முகாமில் வசிக்கின்றார். அவர் பலாலி இராணுவ முகாம் விரிவாக்கம் செய்யப்பட்டதனால் 1991ல் பல குடும்பங்களுடன் இங்கு தஞ்சம் புகுந்திருந்தார். "ஒவ்வொரு ஆண்டும் இங்கே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நாம் ஒரு வாய்க்கால் வெட்டி விட்டால் சில மணி நேரத்தில் நீர் வடிந்துவிடும். இப்போது ஒரு சீமெந்து வீதி எங்கள் முகாமிற்கு அருகே அமைக்கப்பட்டுள்ளது. அப்போதே நாம் வெள்ள நீரை வெளியேற்ற ஒரு வழி அமைக்குமாறு அவர்களை கேட்டோம். ஆனால், அவர்கள் அதை புறக்கணித்துவிட்டார்கள்.

அவர் தொடர்ந்தார்: "இராணுவம் மயிலிட்டி கிராமத்தில் உள்ள எமது காணியை திரும்பத்தருமாயின், நாம் இங்கே கஷ்டப்பட வேண்டியதில்லை. நாம் நான்கு நாட்களாக வீட்டில் சமைக்கமுடியவில்லை, கடைகளில் இருந்து சாப்பாடு வாங்கியே உயிர்வாழ்ந்தோம். தற்போது அரசாங்கம் எமக்கு பாண் மட்டும் வழங்குகிறது. வருடாவருடம் வெள்ளப்பெருக்குக்கு பிரச்சினைக்கு பாணும் பருப்பும் தீர்வல்ல இராணுவம் பிடித்துவைத்திருக்கும் எமது காணிகளை திருப்பிதரவேண்டும்.

"இந்த முகாமில் போதுமான மலசலகூடமும் இல்லாததோடு, இருப்பவையும் மோசமான நிலையில் உள்ளதால் பெண்களாகிய நாம் பல சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். தேர்தல் காலத்தில் மட்டுமே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு வந்து மீளக் குடியமர்த்த கோரும் மறியல் போராட்டத்துக்கு அழைப்பு விடுப்பர். அதன் பின்னர் அவர்கள் எங்களை கைவிட்டுவிடுவர். எங்களை சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்துவார் என்று எதிர்பார்த்து ஜனாதிபதி சிறிசேனவுக்கு வாக்களித்தோம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. இரண்டு அரசாங்கங்களும் ஒன்றுதான்." என்றார்.