சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Paris attacks, Brussels placed on lockdown

பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், புருசெல்ஸ் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது

By Stéphane Hugues and Alex Lantier
23 November 2015

Use this version to printSend feedback

பெல்ஜியன் அதிகாரிகள் வெள்ளியன்று இரவு தொடங்கி சனிக்கிழமை வரையில் ஒரு பாதுகாப்பு அவசரகால நெருக்கடி நிலையை அறிவித்த பின்னர், இவ்வாரயிறுதியில் புருசெல்ஸ் பெருநகரம் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டது. சுரங்கப் பாதை போக்குவரத்துகள் மற்றும் பிரதான பொது வீதிகளை மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது மற்றும் பாரிஸில் நவம்பர் 13 இல் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு (ISIS) அங்கத்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்ற சம்பவங்களின் அபாயத்தைக் காரணங்காட்டி, குடியிருப்போரை வீடுகளிலேயே இருக்குமாறு கூறியது.

கனரக ஆயுதமேந்திய பொலிஸ் படைகள் நேற்று மாலை புருசெல்ஸின் பல இடங்களில் ஒரு பெரியளவிலான மனிதவேட்டையை தொடங்கின, அப்போது அதிகாரிகள் குடியிருப்போரை ஜன்னல்களுக்கு அருகிலிருந்து விலகி இருக்குமாறும், விடுதிகளில் தங்கியிருப்போர் வெளியில் வரவேண்டாமென்றும் உத்தரவிட்டனர். பொலிஸ் அத்தாக்குதலின் போது தகவல் இருட்டடிப்பை திணித்தது, மேலும் மக்கள் புருசெல்ஸின் நிலைமை குறித்து சமூக ஊடகங்களில் தகவல்களைப் பதிப்பிக்கவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டாமென்றும் பொலிஸ் கேட்டுக்கொண்டது.

பெல்ஜிய கூட்டரசு வழக்கறிஞர்கள் பொலிஸ் நடவடிக்கை குறித்து நள்ளிரவுக்குப் பின்னர் ஒரு சுருக்கமான அறிவிப்பு வெளியிட்டனர். அந்த பொலிஸ் நடவடிக்கைகளுக்கு பல நாட்கள் தயாரிப்பு செய்யப்பட்டிருந்ததாக பெல்ஜிய Francophone Radio-Television (RTBF) அறிவித்தது. அந்நடவடிக்கை, பாரிஸ் தாக்குதல்களை நடத்திய ISIS குழுவின் ஓர் அங்கத்தவராக குற்றஞ்சாட்டப்பட்ட சலாஹ் அப்தெஸ்லாமை பிடிப்பதை நோக்கமாக கொண்டிருந்ததாக கூறப்பட்டது. ஆனால், புருசெல்ஸ் முழுவதிலும் பொலிஸ் நடவடிக்கைகள் இருந்த போதினும், அப்தெஸ்லாம் கண்டறியப்படவில்லை, பொலிஸ் வேறெந்த ஆயுதங்களையோ அல்லது வெடிபொருட்களையோ கூட கைப்பற்றவில்லை.

பொலிஸ் நடவடிக்கை மற்றும் புருசெல்ஸை கட்டுப்பாட்டுக்குள் நிறுத்துவதை எது உந்தியது என்பதோ, அல்லது பெரிதும் கவனமாக தயாரிக்கப்பட்ட நடவடிக்கையாக கருதப்படும் ஒன்று எதையும் கண்டறியாமல் ஏன் தோல்வியடைந்தது என்பதோ தெளிவின்றி உள்ளது. அதிகாரிகள் விளக்கமளிக்க "வாய்திறக்க மறுப்பதாக" RTBF செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

நேற்று ஒரு புதிய சூழலைக் குறித்து OCAM செய்தி வெளியிட்டதும், பெல்ஜிய அரசாங்கம், புருசெல்ஸின் அனைத்து பள்ளிக்கூடங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சுரங்கப்பாதைப் போக்குவரத்துகள் இன்று அடைக்கப்படுவதாக அறிவித்தது. இந்த அடைப்புகள் நேற்றிரவு பொலிஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னரும் கூட நீடித்திருந்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

பெல்ஜிய அரசினது அச்சுறுத்தல் ஆய்வுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பு (OCAM) வெளியிட்ட, குறிப்பிட்டு-சொல்லவியலாத எச்சரிக்கைகளைக் காரணங்காட்டி, பெல்ஜிய பிரதம மந்திரி சார்ல்ஸ் மிஷேல் சனியன்று அவசரகால நெருக்கடி நடவடிக்கைகளை அறிவித்தார்.

“இது, பாரிஸில் நடந்ததைப் போன்ற தாக்குதல் அபாயம் குறித்த, ஒப்பீட்டளவில் முக்கியமான, உளவுத்தகவல்களின் விளைவாகும். ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களுடன் பலர், ஒரே நேரத்தில் பலஇடங்களில், நடவடிக்கையில் இறங்கக்கூடிய ஓர் உத்தேச அச்சுறுத்தலைக் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்,” என்றவர் விவரித்தார்.

OCAM எச்சரிக்கையானது பெல்ஜியன் அரசின் அபாய மட்டத்தை அதிகபட்ச அளவில் நான்காம் கட்டத்திற்கு உயர்த்த இட்டுச் சென்றது. மிஷேல் கூறுகையில், “புருசெல்ஸிற்காக முடிவு செய்யப்பட்ட நான்காம் கட்ட அபாய அளவு என்பது, எங்கள் நாட்டில் ஒன்று முதல் நான்கு வரையில் அபாய அச்சுறுத்தல் அளவைத் தீர்மானிக்கும் சட்டத்தின்படி, அங்கே ஒரு 'தீவிரமான மற்றும் உடனடியான' அபாயம் நிலவுகிறது என்பதைக் குறிக்கும்,” என்றார்.

அதற்குப் பின்னர் பெல்ஜிய அதிகாரிகள் அந்த அபாயத்தின் தன்மை குறித்து பல்வேறு ஒன்றுக்கொன்று முரண்பாடான அறிக்கைகளைப் பிரசுரித்தனர். பொலிஸ் செய்திகளைக் மேற்கோளிட்டு சனிக்கிழமை Le Soir அறிவிக்கையில், புருசெல்ஸில் இரண்டு பயங்கரவாதிகள் இருந்ததாகவும், நவம்பர் 13 தாக்குதல்களின் போது பாரிஸில் Stade de France க்கு வெளியே வெடித்ததைப் போன்ற ஒரு வெடிகுண்டு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் குறிப்பிட்டது.

நீதித்துறை, பாதுகாப்புத்துறை, உள்துறை மற்றும் வெளியுறவுத்துறை மந்திரிமார்களுடன் ஞாயிறன்று ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில், மிஷேல் மீண்டும் கணிசமானளவிற்கு மிகப்பெரிய பயங்கரவாத நடவடிக்கை சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார். “பல நபர்கள் ஒரேநேரத்தில் பலஇடங்களில் தாக்குதல் நடத்தும், பாரிஸில் நடந்ததைப் போன்ற ஒரு தாக்குதல் நாட்டின் எங்கு வேண்டுமானாலும் நடக்கலாமென நாங்கள் அஞ்சுகிறோம்,” என்றவர் தெரிவித்தார். “அந்த அச்சுறுத்தல் நேற்றையதைப் போலவே தீவிரமானதும் மற்றும் உடனடியாக நிகழக்கூடியதாகவும் நாங்கள் கருதுகிறோம்,” என்றார்.

பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்கள், மக்களிடையே மதிப்பிழந்த மற்றும் பிற்போக்குத்தனமான மிஷேல் அரசாங்கத்திற்கு ஓர் ஆழ்ந்த நெருக்கடியை தூண்டிவிட்டுள்ளன. அது பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர் கட்டவிழ்த்து விடப்பட்ட பொலிஸ் விஷம பிரச்சாரத்திலிருந்து இலாபமடைய முயற்சிப்பதுடன், MR-NVA இன் சட்டஒழுங்கு நற்சான்றுகளை மெருகூட்ட முயல்கின்ற அதேவேளையில், பல ISIS தாக்குதல்தாரர்கள் பெல்ஜியம் வழியாக தான் பாரிஸிற்குள் நுழைந்தார்கள் என்று வெளியான செய்திகளுக்குப் பின்னர், அந்த அரசாங்கம் சர்வதேச அளவில் அதிகரித்த தாக்குதலின் கீழ் உள்ளது.

மிஷேல் அரசாங்கமானது, மிஷேல் இன் சிறிய, சுதந்திர-சந்தை பிரான்ங்கோபோன் (francophone) சீர்திருத்த இயக்கத்திற்கும் மற்றும் பிளேமிஸ்-பிரிவினைவாத புதிய பிளேமிஸ் கூட்டணி (NVA) தலைமையிலான பல்வேறு வலதுசாரி மற்றும் அதிதீவிர வலது பிளேமிஸ் (Flemish) கட்சிகளுக்கு இடையிலான ஒரு ஸ்திரமற்ற கூட்டணியாக உள்ளது. கடந்த ஆண்டின் போது, அதன் சிக்கனத் திட்டக் கொள்கைகளின் மீது தொழிலாள வர்க்கத்தின் கோபம் அதிகரித்ததற்கு இடையே, அது தொடர்ச்சியான வேலைநிறுத்த போராட்டங்களாலும் பாதிக்கப்பட்டிருந்தது. தீவிர-வலதிற்கு அது காட்டிய அனுதாபங்களுக்காக அது விமர்சனங்களுக்கு உள்ளானது.

உள்துறை மந்திரி ஜன் ஜம்போன் (Jan Jambon – NVA), இரண்டாம் உலக போரின் போது சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக நாஜிக்களுக்காக சண்டையிட்ட, பெல்ஜிய SS படைகளின் முன்னாள் படைவீரர்களின் ஒரு அமைப்பான Sint-Maartenfonds உடனான அவரது 2001 சந்திப்பைப் பற்றிய செய்திகள் வெளியான பின்னர், கடந்த ஆண்டு ஒரு அவதூறை தூண்டிவிட்டார். பெல்ஜியத்தில் நாஜிக்களுக்கு ஒத்துழைத்ததை குறைத்துக்காட்டி, ஜம்போன் La Libre Belgique க்கு அளித்த ஒரு பேட்டியில், “ஜேர்மனியர்களோடு ஒத்துழைத்தவர்களுக்கு அதற்கான காரணங்கள் இருந்தன,” என்றார். அவர் அவ்வாறு ஒத்துழைத்ததை ஒரு "பிழையென்று" குறிப்பிட்டார், ஏனென்றால் அதன்பின்னர் "பிளேமிஸ் தேசியவாத இயக்கம் பல தசாப்தங்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டிருந்தது” என்றார்.

வியாழனன்று, மிஷேல், பெல்ஜிய நாடாளுமன்றத்திற்கு அவர் வழங்கிய உரையில், “திரும்பிவரும் ஜிஹாதிஸ்டுகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்கள்,” என்று அறிவித்து, சிரிய போரிலிருந்து ஐரோப்பாவிற்கு திரும்பிவரும் இஸ்லாமிய போராளிகளுக்கு எதிராக ஒரு போர்வெறியூட்டும் தொனியைக் கொண்டு தாக்கினார்.

ஆனால், அதேநேரத்தில், அதிர்ச்சியூட்டும் வகையில் நவம்பர் 13 தாக்குதல்களைக் கண்டறிய தவறிய பிரெஞ்சு உளவுத்துறையை விடுத்து புருசெல்ஸைக் குற்றஞ்சாட்டும் பிரெஞ்சு அதிகாரிகளிடமிருந்து வரும் தீவிர தாக்குதல்களுக்கு அவர் பதிலளிக்க நிர்பந்திக்கப்பட்டதாக உணர்ந்தார் (பார்க்கவும்: பாரிஸ் பயங்கரவாதிகள் “வெளிப்படையாக" செயல்பட்டிருந்தனர்). பெரும்பான்மை புலம்பெயர்ந்த சமூகத்தவர்களையும் மற்றும் பெரிதும் வேலைவாய்ப்பின்மையையும் கொண்ட சுமார் 100,000 பேர் வசிக்கும் ஒரு பகுதியான, புருசெல்ஸின் மொலென்பீக் மாவட்டத்தில் வசித்துவந்த தாக்குதல்தாரர்களைக் குறித்து தங்களுக்கு பெல்ஜிய அதிகாரிகள் எச்சரிக்கை வழங்கவில்லையென அவர்கள் வாதிட்டனர்.

பிரெஞ்சு ஊடகங்களின் அதிகரித்த மிரட்சியூட்டும் தொனிக்கு, வானொலி அறிவிப்பாளரும் மற்றும் தீவிர வலதுசாரி பிரச்சாரகருமான எரிக் சிமோரின் கருத்து மிகச் சிறந்த உதாரணமாகும், அவர் பெல்ஜியத்தின் மீது குண்டுவீச பிரான்சிற்கு அழைப்புவிடுத்தார்: “[சிரியாவில் IS வசமிருக்கும் தலைநகரான] ரக்கா மீது குண்டுவீசுவதற்கு மாறாக, வெள்ளிக்கிழமை 13 ஆம் தேதி அந்த கமாண்டோக்கள் எங்கிருந்து வந்தார்களோ, அந்த மொலென்பீக் மீது பிரான்ஸ் குண்டுவீச வேண்டும்,” என்றார்.

வியாழனன்று, மிஷேல் அறிவித்தார், “எங்கள் பாதுகாப்பு சேவைகள் குறித்து கூறப்படும் விமர்சனங்களை நான் ஏற்க மாட்டேன்,” பெல்ஜிய அதிகாரிகளுக்கு எந்தளவிற்கு அதிக பொறுப்பு இருக்கிறதோ அவர்களின் சமதரப்பினரான பிரெஞ்சு அதிகாரிகளுக்கும் குறைந்தபட்சம் அதேயளவிற்கு பொறுப்பு இருக்கிறது என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

புருசெல்ஸ் மற்றும் பாரிஸ் அதிகாரிகளுக்கு இடையிலான மோதலானது, பாரிஸ் தாக்குதல்களும் மற்றும் ஐரோப்பா எங்கிலும் தற்போதைய ஒடுக்குமுறைகளும் சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு எதிரான ஆட்சி மாற்றத்திற்கான ஒரு போரில் இஸ்லாமிய போராளிகளை நேட்டோ ஆதரித்ததன் விளைவாகும் என்பதையே அடிக்கோடிடுகிறது. ஐரோப்பிய அதிகாரிகளின் உத்தியோகபூர்வமற்ற ஆதரவை அனுபவித்துக் கொண்டே, அவை சிரிய போருக்குள் ஐரோப்பா எங்கிலும் இருந்து பல ஆயிரக் கணக்கான இளைஞர்களை சேர்த்திருந்தன.

மொலென்பீக் இன் முன்னாள் மேயர் Philippe Moureaux, ISIS எழுச்சிபெறுவதற்கு உதவிய அசாத்-விரோத போராளிகளுக்கான உதவியைக் குறித்து வருத்தத்தை வெளியிட்டு Le Soir க்கு ஒரு பேட்டியளித்தார். “முதன்முதலில் நபர்களை சிரியாவிற்குச் செல்ல அனுமதித்தபோது, அவர்கள் ஒரு அரக்கனுக்கு எதிராக சண்டையிட செல்கிறார்கள் என்பதற்காக, நாங்கள் ஏறத்தாழ அவர்களை ஊக்கப்படுத்தினோம். நாங்கள் அபாயங்களை உணரவில்லை. நாங்கள் அந்த இளைஞர்களை போதியளவிற்குக் கவனித்துக் கொள்ளவில்லை, மீண்டும், இதற்காக நானும் ஓரளவிற்கு பொறுப்பேற்கிறேன்,” என்றார்.

ஆனால் இப்போது இதே சக்திகள் ஐரோப்பாவிற்கு திரும்பி வருகின்றன, ஐரோப்பா எங்கிலும் உள்ள மக்களிடையே மதிப்பிழந்த அரசாங்கங்கள், மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுக்க, அத்தாக்குதல்களை பற்றிக் கொள்கின்றன. அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும் அவசரகால நெருக்கடி நிலையைப் பிரெஞ்சு அதிகாரிகள் மூன்று மாத காலத்திற்குத் திணித்திருப்பதுடன், பிரெஞ்சு அரசியலமைப்பிற்குள் அந்த அவசரகால நெருக்கடி நிலையை நிரந்தரமாக எழுத நகர்ந்து வருகின்ற நிலையில், பெல்ஜிய அரசாங்கமோ பெருமளவில் அதன் சொந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது.

அவசரகால நெருக்கடி நிலையின் போது அசாதாரண நடவடிக்கைகளை திணிக்கவும், மொலென்பீக் பகுதியில் "முன்னெச்சரிக்கை ஒடுக்குமுறை திட்டத்தை" அபிவிருத்தி செய்யவும் மற்றும் தேடுதல் நடவடிக்கை மற்றும் கைப்பற்றுதல் அத்துடன் உளவுபார்ப்பு ஆகியவற்றில் பொலிஸ் அதிகாரங்களை விரிவாக்கவும் அந்த அரசாங்கம் தனக்குத்தானே புதிய அதிகாரங்களை வழங்க திட்டமிட்டு வருகிறது. பாதுகாப்பு செலவினங்களில் 400 மில்லியன் யூரோ அதிகரிப்பது, எல்லை கட்டுப்பாடுகளைப் பலப்படுத்துவது, கூடுதலாக 520 இராணுவ இடங்களை நிரப்புவது மற்றும் அநாமதேய முன்கட்டணம் செலுத்தப்பட்ட (prepaid) தொலைபேசி அழைப்பு அட்டைகளை நீக்குவது ஆகியவை ஏனைய நடவடிக்கைகளில் உள்ளடங்கும்.