சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

இலங்கை: அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யக் கோரி யாழ் மாணவன் தற்கொலை

By Subash Somachandran
28 November 2015

Use this version to printSend feedback

காலவரையின்றி சிறையில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் இராஜேஸ்வரன். செந்தூரன், (18) ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு, தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இவர் ஐந்து பிள்ளைகளை கொண்ட குடும்பத்தில் மூன்றாமவராவர். இணைய தளங்கள், சமூக வலைத் தளங்கள், பத்திரிகைகளில் செந்தூரனின் மரணத்திற்கு பல்வேறு சிடுமூச்சித்தனமான கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். எழுத்து தடயவியல் நிபுணர்களால் இன்னமும் உறுதிப்படுத்தப்படாதபோதும், அவரது மூத்த சகோதரி, கடிதத்தில் காணப்படுவது செந்தூரனின் கையெழுத்தே என உலக சோசலிச வலைத் தளத்திற்கு தெரிவித்தார்.

26ம் தேதி காலையில் பாடசாலைக்கு சென்ற இளம் செந்தூரன், தனது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரையும் மறந்து இரயிலின் முன்னால் பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்ட கொடூர சம்பவம், தனிப்பட்ட ஒரு இளைஞனின் புத்திபிறழ்ந்த நிகழ்வு அல்ல. யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் சமூகம் முகங்கொடுக்கும் முழு நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். இது, இலங்கையிலும் புலம்பெயர் தேசங்களிலும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் மீதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மீதும் கடும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

செந்தூரன் இந்த துயரமான முடிவை எடுக்கத்தூண்டிய அரசியல், சமூக சூழல் என்ன?

செந்தூரனின் தற்கொலை நடவடிக்கை, ஒரு குறிப்பிட்ட சமூக உள்ளடக்கத்தினுள்தான் புரிந்துகொள்ள முடியும். முதலாளித்துவ அமைப்பு முறையில் வேரூன்றிய சமூக பிரச்சினைகளுக்கு, சோசலிச அடித்தளத்திலான வர்க்கப் போராட்ட தீர்வுக்கு பதிலாக முதலாளித்துவ அமைப்பு முறைக்குள்ளேயே தனிநபர் சாகசத்தால் தீர்வு காணமுடியும் என்ற கருத்தியல், ஆயுத போராட்ட ஆரம்பகர்த்தா பொ. சிவகுமாரன் தற்கொலையில் இருந்து கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் தேசியவாதிகளால் ஊக்குவிக்கப்பட்டு வந்திருக்கிறது.

இலங்கை இராணுவத்திற்கு எதிரான போராட்டத்தில், மேற்கத்தைய ஏகாதிபத்திய வாதிகள், இந்திய முதலாளித்துவத்தின் பிரதிநிதிகளை தமது கோரிக்கையின் பக்கம் திருப்பும் முயற்சியாக, வெடிமருந்து நிரப்பிய வாகனங்களை கொண்டு சென்று மோதி வெடித்தல், வெடிகுண்டு அங்கிகளை அணிந்து தற்கொலை நடவடிக்கையில் ஈடுபடல், உண்ணாமல் இருந்து மரணித்தல், தீயிட்டு மரணித்தல் போன்ற வழிமுறைகள் தொடர்ச்சியாக தமிழ் தேசியவாதிகளால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. செந்தூரன் வளர்ந்த சமூகம் இந்த கருத்தியலால் ஆதிக்கம் செலுத்தப்பட்டிருந்தது என்பதை ஒருவர் புரிந்து கொள்வது அவசியமாகும்.

யுத்தம் முடிந்து 6 வருடங்களாகியும் பரந்துபட்ட மக்களின் மிக மிக அடிப்படை பிரச்சினைகளில் எதுவும் தீர்க்கப்படாததோடு, ஒரு வெடிப்பு நிலையையும் அடைந்துள்ளது. நம்பத்தகுந்த புள்ளிவிரங்களின் படி, மீளக் குடியமர்வு தொடர்பாக  யாழ்.மாவட்டத்தில் 9,700 ஏக்கர் நிலம், தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. 9,819 குடும்பங்கள் மீளக் குடியேறமுடியாத நிலையில் 31 நலன்புரி நிலையங்கள் மற்றும் உறவினர், நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். வடமாகாணத்தில் மட்டும் குறைந்தபட்சம் 6000 பட்டதாரிகளும், 30,000 க்கு மேற்பட்ட இளைஞர்களும் வேலையின்றி உள்ளனர். வடமாகாணத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம், போர் விதவைகள் உள்ளனர். யுத்தத்தில் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு நகரமுடியாத நிலையில் 20,000 பேர் உள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும், ஜனாதிபதி ஆணைக் குழுவில் 2500 முறைப்பாடுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவசரகாலச் சட்டத்தின் கீழ் 300 வரையானோர் சந்தேகத்தின் பேரில் விசாரணை இன்றி நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரியில் சிறிசேன ஆட்சிக்கு வந்த பின்னர், மே 13ம் தேதி, புங்குடுதீவில், சிவலோகநாதன். வித்யா என்ற 18 வயது மாணவி பாடசாலைக்கு செல்லும் வேளையில், கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வல்லுறவின் பின்னர் படுகொலை செய்யப்பட்டது, சமூகத்திற்குள் அபிவிருத்தி கண்ட பதட்டங்களின்  வெடிப்புப் புள்ளியாகியது. உடனே தமிழ் தேசிய கூட்டமைப்புசட்டம் ஒழுங்கின்பாதுகாவலர்களாகி, பரந்துபட்ட மக்களின் போராட்டங்களை ஒடுக்கி, வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி சுமார் நூற்றுக்கு மேற்பட்ட போராட்டக்காரர்களை கைதுசெய்ய அனுமதித்து அரசாங்கத்தை பாதுகாத்தது.

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்ட சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை பாதுகாக்க எதிர்கட்சி தலைவர் பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த 3 மாதங்களில், இரண்டாவது தடவையாக அரசியல் கைதிகள் தமது விடுதலை கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கம் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என  மறுத்துவந்த நிலையில் கைதிகளுக்கு சார்பாக பரந்துபட்ட மக்கள் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடத்தொடங்கினர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் தலையிட்டு, அரசியல் கைதிகளுக்கு பொய்வாக்குறுதிகளை கொடுத்து, அவர்களின் உண்ணாவிரத போராட்டங்களை  முதுகில் குத்தி முடிவுக்குக் கொண்டுவந்தனர். நவம்பர் 14 ம் தேதி தங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகளுக்கு அப்பால் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஒரு நூதனமான ஹர்த்தால் ஒன்றுக்கு அழைப்பு விடுத்து, சம்பவம் தொடர்பான பரந்துபட்ட மக்களின் கோபத்தை, ஒருநாள் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் பிரகடனப்படுத்தாத ஊரடங்கு நிகழ்வாக மாற்றி அரசாங்கத்திற்கு ஒரு ஆபத்தும் இல்லாமல் பாதுகாத்தனர்.

நவம்பர் 26 ம் தேதி செந்தூரனின் மரணத்தைக் கேள்வியுற்றுபெரும் அதிர்ச்சியும்” “ஆழ்ந்த கவலையும்அடைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, “அவருடைய உணர்வுகளை அவர் வெளிப்படுத்தியிருக்கிறார் என்பதை நாம் உணருகிறோம்என திமிர்த்தனமாக தெரிவித்த பின்னர், “எவ்வித வன்முறைகளுமின்றி அமைதியான முறையில் மனவருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவிக்குமாறுவேண்டுகோள் விடுத்தனர்.

மறுநாள் பாராளுமன்றத்தில் பேசிய எதிர் கட்சி தலைவர் சம்பந்தன், “வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பினையும், அந்த மக்கள் அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பினையும், அவர்களது மன உளைச்சல்களையும், எடுத்துக்காட்டி நிற்பதாகவே செந்தூரனின் முடிவு அமைந்திருக்கின்றதுஎன வட, கிழக்கு மக்களின் மனோநிலையை, அவர் பங்காளியாக இருந்து பாதுகாத்துவரும்நல்லாட்சிஅரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

தமது வெறுப்பேற்றும் வெற்றுப்பேச்சுக்களை கோபமடைந்துள்ள மக்களும், மாணவர்களும் ஏற்கப்போவதில்லை என்பதை சரியாக புரிந்து கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, தனது கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண சபையினூடாக வட மாகாண பாடசாலைகள் அனைத்தையும்சிறப்பு விடுமுறைஎன அறிவித்து மூடிவிட்டது. வட மாகாண கல்வியமைச்சர் . குருகுலராஜா, நவம்பர் 27 ம் தேதிமாணவர்கள் பெற்றோருடன் வீடுகளில் தங்கி இருக்குமாறுஅறிக்கையை வெளியிட்டு, மாணவர்களை வீட்டுக்குள் பூட்டிவைத்து அரசாங்கத்தை பாதுகாத்தார்.

இராஜபக்ஷவின்வடக்கின் வசந்தம்ஆட்சியிலிருந்து பெரிதும் வேறுபடாத சிறிசேனவின்நல்லாட்சியின்ஜனநாயக விரோத தன்மை மிககுறைந்த காலத்தில் அம்பலமானபோதும், இந்த ஒடுக்குமுறை அரசாங்கத்தின் மீதும், அதை ஆட்சிக்கு கொண்டுவந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதும் நம்பிக்கை வைக்கச் செய்து அரசாங்கத்திற்கு எந்த ஆபத்துமில்லாத வகையில் பரந்துபட்ட மக்களின் கோபங்களை வடிகால் கட்டி விடுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான நோக்கம் என்பது அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பான அவர்களது நடவடிக்கைகளிலும் செந்தூரனின் இறப்பு தொடர்பான அவர்களது பிரதிபலிப்பிலும் அம்பலமாகியுள்ளது.

செந்தூரனின் மரணம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கையில், “பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் கைதிகள், பயங்கரவாதிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது... நாட்டுக்கு எதிராக செயற்பட்டவர்களை காப்பாற்ற அப்பாவிகள் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது. இவ்வாறு தற்கொலை செய்வதனால் எவரும் விடுவிக்கப்படப்போவதுமில்லை. சட்டத்திற்கு உயிர் நிகரல்ல என்பதை மக்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்என்றார்.

தனது சொந்த கட்சியின் கையறுநிலை தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவிக்கையில், “இந்த அரசாங்கம் தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை, நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது. அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளதுஎன பகிரங்கமாக வாக்குமூலம் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அரசாங்கம் தொடர்பாக பரந்துபட்ட மக்களின் ஒருமித்த எதிர்ப்புணர்வை வெளிப்படுத்திய செந்தூரனின் இறுதி நிகழ்வுக்கு அஞ்சலி செலுத்த, பாராளுமன்ற பதவியிழந்த சுரேஸ். பிரேமச்சந்திரனை தவிர கூட்டமைப்பின் உயர்மட்ட தலைமையில் இருந்து எவரும் கலந்துகொள்ளவில்லை.

கடந்த இருபது வருடங்களாக, நாடு முழுவதும் உள்ள சிறையில் வாழும் அரசியல் கைதிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக குடும்பங்கள் மற்றும் உறவுகளையும் பிரிந்து சிறைகளில் வேதனையில் வாடும் எங்களுக்கு இந்த மாணவனது திடீர் உயிர்த்தியாகம், எங்களை மிகுந்த சோகத்திலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளதுஎன கவலை வெளியிட்டுள்ளனர்.

பலநூற்றுக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு தமது கோபத்தையும் அனுதாபத்தையும் வெளிப்படுத்தினர். யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் செந்தூரனின் மரண செய்தியை அறிந்தவுடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை வளாகத்தினுள் நடாத்தினர்.

அடுத்த வருடம் பல்கலைக்கழகம் செல்லும் நிரம்பிய எண்ணங்களோடு உற்சாகமாக உயர்கல்வி கற்றுவந்த இந்த இளம் செந்தூரனின் இழப்புக்கு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும், அதற்கு முண்டுகொடுக்கும் தமிழ் தேசியவாதிகளும், அதன் தலைமையில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புமே அரசியல் ரீதியாக பொறுப்பாளிகளாகும்.