சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The significance of the Fiat Chrysler workers’ fight

பியட் கிறைஸ்லர் தொழிலாளர் போராட்டத்தின் முக்கியத்துவம்

Jerry White
20 October 2015

Use this version to printSend feedback

அமெரிக்காவில் நாற்பதாயிரம் பியட் கிறைஸ்லர் (FCA) தொழிலாளர்கள் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தால் (UAW) ஆதரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு-சார்பான ஒரு புதிய உடன்படிக்கை மீது இன்றும் நாளையும் வாக்களிக்க உள்ளனர். இதற்கு முன்னதாக FCA தொழிலாளர்கள் இம்மாத தொடக்கத்தில் வழங்கிய பாரியளவிலான வாக்குகளோடு UAW ஒப்புக்கொண்டு விற்றுத்தள்ளிய முதல் உடன்படிக்கை தோற்கடிக்கப்பட்டிருந்தது.

முதலாவதில் செய்ததைப் போலவே தொழிலாளர்கள் உறுதியாக இந்த உடன்படிக்கையையும் நிராகரிக்க வேண்டும். “வேண்டாமென்ற" வாக்குகள் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டு தொழிலாளர்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த முன்னுதாரணத்தை அமைக்கும் என்பதுடன், வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மற்றும் வேலையிட நிலைமைகளின் மீது பல தசாப்தகால ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களின் ஒரு எதிர்தாக்குதலுக்கு நிலைமைகளை உருவாக்கும்.

நிறுவனங்களுக்கு எதிராக சண்டையிட தொழிலாள வர்க்க போராட்டத்திற்கென சுயாதீனமான அமைப்புகளை உருவாக்குவதும் மற்றும் மூன்று மிகப்பெரிய வாகன நிறுவனங்கள், UAW மற்றும் ஒட்டுமொத்தமாக ஆளும் வர்க்கத்தின் தொழிலாளர்-விரோத ஐக்கிய முன்னணியை எதிர்கொள்ள ஒரு புதிய அரசியல் மூலோபாயமும் அவசியப்படுகிறது என்ற உண்மை, கடந்த மாதங்களில் வாகனத் தொழிலாளர்களின் அனுபவங்களிலிருந்து தெளிவாகி உள்ளது.

எவ்வாறிருந்தாலும், இந்த இரண்டாவது உடன்படிக்கையோ முந்தையதை விட மிகவும் மோசமாக உள்ளது. வெட்டு-ஒன்று-துண்டு-இரண்டு என முதல் ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதால் மிரண்டுபோன UAW மற்றும் FCA, நிறுவனத்தின் அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் உள்ளடங்கிய இந்த திருத்திய ஒப்பந்தத்தைக் கொண்டு வர சூழ்ச்சி செய்தன. இதில் இரண்டு அடுக்கு ஊதிய மற்றும் சலுகை முறை விரிவாக்கப்படுகிறது மற்றும் அனைத்து மூன்று பெரிய நிறுவன தொழிலாளர்களது கூலிகள் மற்றும் சலுகைகளை நிரந்தரமாகவும் கடுமையாகவும் குறைக்க கட்டமைப்பு ஸ்தாபிக்கப்படுகிறது. வாழ்க்கை செலவுக்கேற்ப ஊதிய உயர்வுமுறையை நிரந்தரமாக நீக்குவது, ஓய்வூதியங்களைப் படிப்படியாக நீக்குவது, மருத்துவ நலன்களில் கடுமையான வெட்டுக்கள், மற்றும் கூடுதல் கூலியின்றி பலவந்தமான கூடுதல் வேலைநேரம் ஆகியவற்றை இது உள்ளடக்கி உள்ளது.

பியட் கிறைஸ்லர் தலைமை செயலதிகாரி Sergio Marchionne ஒரு "மாற்றம் மிகுந்த" உடன்பாடு என்று குறிப்பிடும் இந்த உடன்படிக்கை, வாகனத் தொழிலாளர்களின் முந்தைய தலைமுறைகளால் கடுமையான போராட்டத்தில் வென்றெடுக்கப்பட்ட மொத்த ஆதாயங்களையும் அழிப்பதற்கும் மற்றும் வாகனத் தொழிலாளர்களை அதீத-சுரண்டலுக்குள் மற்றும் மலிவு-உழைப்பு தொழிலாளர் சக்தியாக மாற்றுவதற்கும் அடித்தளம் அமைக்கிறது. “மரணித்துவரும் வர்க்கம்" என்று Marchionne ஆல் அழைக்கப்படும் மூத்த, அதிக-சம்பள தொழிலாளர்களை ஆலையிலிருந்து வெளியேற்றி, ஒட்டுமொத்த தொழிலாள சக்தியும் மிகக் குறைந்த கூலிகளோடு, ஈவிரக்கமற்ற வேகப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்..

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தால் மூடிமறைக்கப்பட்ட அந்த ஒப்பந்தம் குறித்த புதிய மற்றும் அதிர்ச்சிகரமான கண்டுபிடிப்புகள், சாமானிய தொழிலாளர்கள் மத்தியில் பரந்த கோபத்தைத் தூண்டியுள்ளது. தொழிலாளர் சக்தியின் பெரும்பகுதியை வேலை பாதுகாப்பு அல்லது சலுகைகள் இல்லாத நிரந்தரமற்ற தொழிலாளர்களாக (casual laborers) குறைப்பதை நோக்கிய ஒரு பிரதான நகர்வாக, குறைந்த-சம்பள தற்காலிக தொழிலாளர்களின் (temporary workers) எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதிக்கிறது என்ற உண்மையும் இதில் உள்ளடங்கும்.

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் மற்றொரு "வேண்டாமென்ற" வாக்குகளைத் தவிர்க்க, முழு பலத்தையும் பிரயோகித்து வருகிறது. Detroit Free Press வார்த்தைகளில் கூறுவதானால், அது அச்சங்கத்தை "திசைதெரியாத பகுதியில்" கொண்டு விடும். அந்த உடன்படிக்கையை "இதுவரையில் நாம் பேரம்பேசியிராத மிக அருமையான" உடன்படிக்கையாக காட்டுவதற்காக அச்சங்கம் ஒரு மக்கள் தொடர்பு நிறுவனத்தை வாடகைக்கு அமர்த்தியுள்ளது. எதிர்ப்பை சமாளிக்கும் ஒரு முயற்சியில், அது, பொய்கள், வேலை அச்சுறுத்தல்கள் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் வாகனத் தொழிலாளர் மின்னிதழ் மீதான வெறித்தனமான தாக்குதல்கள் ஆகியவற்றின் ஒரு கலவையைப் பாவித்து வருகிறது.

இந்த விற்றுத்தள்ளப்பட்ட புதிய உடன்படிக்கையை நிராகரிப்பது, முதல் படியாக மட்டுமே இருக்கும். ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு, வாகனத் தொழிலாளர்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ள சக்திகளைக் குறித்து தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகும்.

Marchionneக்குப் பின்னால் வோல் ஸ்ட்ரீட் வங்கிகள் நிற்கின்றன, அவை தொழிலாளர்களிடமிருந்து சாத்தியமான அளவிற்கு ஒவ்வொரு சல்லிக்காசையும் பிடுங்கி பங்குச் சந்தைக்குள் பாய்ச்ச தீர்மானகரமாக உள்ளன. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும், ஜனநாயகக் கட்சியினரும் சரி குடியரசுக் கட்சியினரும் சரி ஒருசேர, நிறுவனத்தின் தாக்குதலை ஆதரிக்கின்றன. “மாற்றத்திற்கான வேட்பாளர்" என்றழைக்கப்பட்ட ஒபாமா, அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரியளவில் செல்வவளத்தைப் பணக்காரர்கள் பக்கம் திருப்பிவிட்டுள்ளார், அதேவேளையில் அவரது கட்டுபடியாகின்ற மருத்துவ காப்பீட்டுச் சட்ட வடிவமைப்பில், அவர் மருத்துவ சிகிச்சைகள் மீதான தாக்குதலைத் தொடங்கி வைத்துள்ளார்.

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கமே கூட ஒரு வணிக நிறுவனமாக உள்ளது, அது அதன் நூற்றுக் கணக்கான உயர்மட்ட நடுத்தர வர்க்க அதிகாரத்துவவாதிகளுக்கான கொழுத்த சம்பளங்கள் மற்றும் செலவு கணக்குகளுக்குக் கைமாறாக ஒரு தொழிலாளர் பொலிஸ் படையாக அதன் சேவைகளை விற்று வருகிறது. மீதியிருக்கும் உத்தியோகபூர்வ தொழிற்சங்கங்களைப் போலவே அதுவொரு தொழிலாள வர்க்க அமைப்பல்ல. அது தன்னைத்தானே பெருநிறுவன நிர்வாகத்தின் கட்டமைப்பிற்குள் ஒருங்கிணைத்துக் கொண்ட அதன் தசாப்த-கால மூலோபாயத்தைப் பின்பற்றி வருகிறது.

நூறாயிரக் கணக்கான வேலைகளை அழிப்பதில் அது உடந்தையாய் இருந்ததால், அதற்கு சந்தா செலுத்தி வந்த அங்கத்தவர்களில் பாதிக்கும் அதிகமானவர்களை இழுந்துள்ளது. கறைபடிந்த நிறுவன-தொழிற்சங்க கூட்டு நிதியங்கள், வாகன நிறுவனங்களில் பங்குடைமை மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான மருத்துவ சிகிச்சை அறக்கட்டளை மீதான கட்டுப்பாடு போன்ற வருவாய் வரும் ஏனைய ஆதாரங்களை அது அபிவிருத்தி செய்துள்ளது. அது பிரதிநிதித்தும் செய்வதாக கூறும் தொழிலாளர்களை, வாகனத்துறை முதலாளிமார்கள் சுரண்டுவதை அதிகரிக்க உதவுவதில் அதற்கு நேரடியான நிதி நலன்கள் உள்ளன.

ஐக்கிய வாகன தொழிலாளர் சங்கத்துடன் கைகோர்த்து வேலை செய்வதில், Autoworker Caravan, Labor Notes பிரசுரம், மற்றும் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, தொழிலாளர் உலக கட்சி மற்றும் Socialist Alternative போன்ற போலி-இடது குழுக்களின் ஒன்றுபட்ட குழுவில் போலித்தனமான "தொழிலாளர் இடதுகளும்" ஒழுங்கமைந்துள்ளன. UAW இன் கீழ்மட்ட செயல்பாட்டாளர்களை உள்ளடக்கி உள்ள Autoworker Caravan, தொழிற்சங்க எந்திரத்திற்கு எதிராக தொழிலாளர்களின் ஒரு கிளர்ச்சிக்கு அஞ்சி “வேண்டாமென" வாக்களிக்க அழைப்பு விடுக்கவில்லை, அதற்கு மாறாக தொழிலாளர்களுக்கு "அவர்களது மனசாட்சிப்படி வாக்களிக்க" அழைப்புவிடுத்துள்ளது. தொழிலாளர் கிளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, இத்தகைய குழுக்கள் இன்னும் அதிகமாக தொழிற்சங்கங்களின் அமைப்புரீதியிலான இரும்புப்பிடியைப் பாதுகாக்கின்றன.

ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கம் தன்னைத்தானே சீர்திருத்திக் கொள்ள அழுத்தமளிக்க முடியாது. தசாப்த-கால நெடிய அதன் சீரழிவும், பெருநிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கரங்களுக்குள் அது மாறியிருப்பதும் அதன் தலைவர்களின் அகநிலையான ஊழல் மற்றும் கோழைத்தனத்தில் வேரூன்றியில்லை, மாறாக அதன் முதலாளித்துவ-சார்பு மற்றும் தேசியவாத வேலைத்திட்டத்தின் தோல்வியில் வேரூன்றியுள்ளது. UAW எதை நீண்டகாலமாக மறுத்து வருகிறதோ அது மில்லியன் கணக்கான தொழிலாளர்களுக்குத் தெளிவாகி வருகிறது: அதாவது சமூகம் இரண்டு பிரதான வர்க்கங்களுக்கு இடையே பிளவுபட்டுள்ளது: தொழிலாள வர்க்கம், இதன் கூட்டு உழைப்பு சமூகத்தில் செல்வ வளத்தை உருவாக்குகிறது, அடுத்ததாக, மேற்கொண்டு தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொள்வதற்காக அந்த செல்வவளங்களை அபகரிக்கின்ற முதலாளித்துவ சொத்துடைமையாளர்கள் இருக்கின்றனர்.

வாகனத் தொழிலாளர்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த எதிரிகள் இருந்தாலும், அவர்களுக்கு சாத்தியமான அளவிற்கு அதைவிட சக்திவாய்ந்த மில்லியன் மில்லியன் கணக்கான கூட்டாளிகள் உள்ளனர். முதல் ஒப்பந்தம் மீதான பிரமாண்டமான "வேண்டாமென்ற" வாக்குகள், சமூகத்தை நிதியியல் பிரபுத்துவம் கொள்ளயடிப்பதற்கு அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கத்தால் ஆழமாக உணரப்பட்ட எதிர்ப்பின் ஒரு வெளிப்பாடாகும்.

இவ்வார வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், வாகனத் தொழிலாளர்கள், அவர்களது போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, அவர்களுக்கு UAW இல் இருந்து சுயாதீனப்பட்ட, முதலாளித்துவ கட்டமைப்பையும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளுக்கு கொடுக்க பணமில்லை என்ற பொய்யையும் நிராகரிக்கின்ற புதிய அமைப்புகள் அவசியமாகும். கண்ணியமான சம்பளத்தில் வேலைகளைப் பாதுகாக்கவும், மருத்துவ சிகிச்சை மற்றும் ஓய்வூதிய செலவுகளை தொழில்வழங்குனரே முழுமையாக ஏற்க செய்யும் உரிமையைக் கோரும் ஒரு எதிர்தாக்குதலுக்குத் தயாரிப்பு செய்யவும், தொழிலாளர்கள் அவர்களது ஆலைகளில் சாமானிய தொழிலாளர் குழுக்களைத் தேர்தெடுக்க வேண்டும்.

இத்தகைய அடிப்படை அத்தியாவசிய தேவைகளுக்கான போராட்டம், யார் ஆட்சி செய்வது? என்ற அரசியல் கேள்வியை எழுப்புகிறது. மனிதயினத்தின் தலைவிதி நிதியியல் செல்வந்த தட்டுக்கள் மற்றும் பண-பைத்திய ஊகவணிகர்களின் கரங்களில் விடப்பட்டால், தொழிலாள வர்க்கத்தின் ஒவ்வொரு கடைசி சல்லிகாசையும் சுரண்டுவதற்கான அவர்களது வேட்கை தவிர்க்கவியலாமல் தொழில்துறை அடிமைத்தனம், சர்வாதிகாரம் மற்றும் போருக்குத் தான் இட்டுச் செல்லும்.

பெரும் பணக்காரர்களின் பொருளாதார மற்றும் அரசியல் சர்வாதிகாரத்தை உடைப்பதற்கும், வங்கிகளையும் அடிப்படை தொழில்துறையையும் உழைக்கும் மக்களின் கூட்டு உரிமை மற்றும் ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்துவதற்கும், சமூக சமத்துவமின்மையை முடிவுக்குக் கொண்டு வந்து மனிதயினத்தின் சடரீதியிலான மற்றும் கலாச்சார மட்டத்தை உயர்த்துவதற்காக உலக பொருளாதாரத்தை மறுஒழுங்கமைப்பதற்கும், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த கரங்களில் அதிகாரத்தைக் கையிலெடுப்பதற்கான அதன் ஓர் அரசியல் போராட்டமே அதற்கு மாற்றீடாகும்.