சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party (Sri Lanka) holds first national congress

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) முதல் தேசிய மாநாட்டை நடத்தியது

By our correspondents
21 April 2015

Use this version to printSend feedback

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மார்ச் 27-30ல் கொழும்பில் அதன் முதலாவது தேசிய மாநாட்டை நான்கு நாட்கள் நடத்தியது. இந்த மாநாட்டில் இரண்டு முக்கியமான தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. அதில் ஒன்று நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) வெளியிட்ட "சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும்" என்ற தீர்மானமாகும். "போருக்கு எதிரான அரசியல் போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) அரசியல் பணிகளும்," என்பது இரண்டாவதாகும்.

 

 

 

 

 

 


சோசலிச சமத்துவக் கட்சி மாநாடு

தீவின் வடக்கு மற்றும் பெருந்தோட்டப் பகுதி உட்பட இலங்கை பூராவும் இருந்து பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜேர்மனியில் சோசலிச சமத்துவக் கட்சிகளின் முன்னணி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிரித்தானியா, கனடா சோ.ச.க.யில் இருந்தும் இந்தியாவில் சோ.ச.க. ஆதரவாளர் குழுவிடம் இருந்தும் வாழ்த்துக்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

ஆரம்ப அறிக்கையை முன்வைத்த சோ.ச.க. பொதுச் செயலாளர் விஜே டயஸ், கடந்த ஆண்டு ஜூன் 9 அன்று வெளியிடப்பட்ட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின், சோசலிசமும் ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டமும் என்ற தீர்மானத்தை கட்சியின் அரசியல் போராட்டத்தின் மையத்தில் வைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் தீர்மானத்தில் இருந்து மேற்கோள் காட்டினார்: "ஒரு புதிய உலக யுத்த ஆபத்தானது முதலாளித்துவ முறைமையின் அடிப்படை முரண்பாடுகளில் இருந்தே எழுகின்றது அதாவது பூகோள பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் அது உற்பத்தி சாதனங்களின் தனியுடைமை வேரூன்றியுள்ள பகைமை தேசிய அரசுகளாக பிளவடைந்திருப்பதற்கும் இடையிலான முரண்பாட்டில் இருந்தே எழுகின்றது. இது யூரேசியன் பகுதியில், எல்லாவற்றுக்கும் மேலாக ரஷ்ய மற்றும் சீன புரட்சிகளால் பல தசாப்தங்களாக ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த பிராந்தியத்தின் மேல் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உந்துதலில் மிகக் கூர்மையான வெளிப்பாட்டைக் காண்கிறது. "

டயஸ் விளக்கியதாவது: "உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலிலான மாற்றங்களை நீண்ட காலமாக நெருக்கமாக அவதானித்து பகுப்பாய்வு செய்ததன் மூலமே, நாம் போருக்கு எதிரான மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை எங்கள் அரசியல் பணிகளின் மையத்தில் வைக்கும் முடிவுக்கு வந்தோம். எமது கட்சிகளின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்களை விரிவாக மீளாய்வு செய்யும் ஆவணங்களின் அடிப்படையிலேயே உலகம் பூராவும் சோ.ச.க.களின் ஸ்தாபக மாநாடுகள் நடத்தப்பட்டன. "

 

 

 




விஜே டயஸ்

இலங்கை சோ.ச.க.யின் 2011 ஸ்தாபக மாநாட்டின் ஆவணத்தில் இருந்து பேச்சாளர் சுட்டிக் காட்டினார். முதலாளித்துவத்தின் நெருக்கடியானது உலக மேலாதிக்கத்திற்காக அமெரிக்காவை உந்தியுள்ளமை, இன்னொரு அழிவுகரமான உலகப் போரில் மனிதகுலத்தை இழுத்துத் தள்ள அச்சுறுத்துகின்றது, என அது விளக்கியுள்ளது. இலங்கை உட்பட தெற்காசியாவில் விளைவுகள் பற்றி குறிப்பிட்ட டயஸ், அதில் மேற்கோள் காட்டினார்: "இலங்கையானது இந்தியப் பெருங்கடலின் பிரதான போக்குவரத்துப் பாதையின் மத்தியில் அமைந்திருப்பதன் விளைவாக, இந்த போட்டியின் சுழலுக்குள் இழுபட்டு வருகிறது."

டயஸ் தொடர்ந்தார்: "நாம் சர்வதேச மற்றும் வரலாற்று அணுகுமுறையின் அடிப்படையிலேயே எமது முன்னோக்குகளை அபிவிருத்தி செய்கின்றோம். அமெரிக்க ஏகாதிபத்தியம், ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கை கட்டுப்படுத்தவும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவை சுற்றி வளைக்கவும் தனது தலையீடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. இலங்கையில் 2015 ஜனாதிபதித் தேர்தலில் எமது பகுப்பாய்வு, இந்த பகுதியில் வாஷிங்டனின் தலையீட்டை ஒரு முக்கியமான திருப்புமுனையாக தேர்தலை கண்டது. [மைத்திரிபால] சிறிசேன, இந்திய ஆதரவுடன் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்றத்தில் [ஜனாதிபதி மஹிந்த] இராஜபக்ஷவை சவால்செய்ய முன்வந்தார். "

சோ.ச.க. பொதுச் செயலாளர், வரவிருக்கும் காலத்தில் இலங்கை மற்றும் பிராந்தியம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம் போட்டி ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உக்கிரமடையும் மோதல்களை எதிர்கொள்ள நேரும் என்று குறிப்பிட்டார். எனினும், நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.) போன்ற போலி-இடதுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் உலக வர்த்தக அமைப்பு மூலம் ஏகாதிபத்தியத்தியங்கள் தமது முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ளும் என்ற மாயைகளை விதைக்கின்றன. அவர்கள் அமைதியான ஏகாதிபத்தியம் என்ற கார்ல் காவுட்ஸ்கியின் கோட்பாடுகளை புதுப்பிப்பதன் மூலம், தொழிலாள வர்க்கத்தை வழிதடுமாறச் செய்ய முயல்கின்றனர். உண்மையில், ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான எந்தவொரு ஒப்பந்தமும், தற்காலிகமாவையும் அதிக நிலையற்றவையாகவும் இருந்தன. ரஷ்யாவுடனான மோதலுக்கு வாஷிங்டனின் தயாரிப்புக்கள் சம்பந்தமாக ஜேர்மனிக்கும் அமெரிக்காவுக்கும் இடையே சமீபத்தில் வேறுபாடுகள் எழுந்தன. மேலும் ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டனும் சமீபத்தில் வாஷிங்டனை அலட்சியம் செய்து சீனா தொடக்கி வைத்த ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் சேர்ந்துகொண்டன.

வாஷிங்டனால் இந்த நகர்வுகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று டயஸ் எச்சரித்தார். இலங்கையில் ஆட்சி மாற்றத்துடன் அமெரிக்கா நின்றுவிடப் போவதில்லை. சிறிசேனவின் அரசாங்கம், இராஜபக்ஷ ஆட்சியை அகற்றிய பின்னர் சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய முகவர்களிடம் இருந்து எளிதாக கடன்களைப் பெற முடியும் என்று எதிர்பார்த்தது. எனினும், சர்வதேச நாணய நிதியம் கடன் கோரிக்கையை நிராகரித்து, முன்பு கூறப்பட்டுள்ளபடி அரசாங்கம் வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வெட்டுக்களை திணிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதாவது, அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சமூக எதிர்-புரட்சியை தீவிரப்படுத்த வேண்டும்.

சர்வதேச நிதி மூலதனம் மேலும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு இந்தியாவில் மோடி அரசாங்கத்திற்கும் அழுத்தம் கொடுக்கின்றது என்று பேச்சாளர் விளக்கினார். அமெரிக்கா பாக்கிஸ்தானில் அதனது தலையீட்டை தீவிரமாக்கியுள்ளதுடன் அதன் செல்வாக்குக்குள் பர்மாவையும் கொண்டுவந்துள்ளது. பர்மா, இப்போது சீன எல்லைப் பிரதேசங்களில் இன மோதல்களைத் தூண்டி வருகின்றது. 1947-1948ல் பிராந்தியத்தின் மீது திணிக்கப்பட்ட போருக்குப் பிந்தைய தீர்வுகள் நொருங்கிப் போய்விட்டன.

டயஸ், இலங்கையில் சோ.ச.க.யை கட்டியெழுப்பும் பொருட்டு வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார். "நாம் மார்க்சிசத்திற்காக உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்," என்று அவர் கூறினார். நவ சம சமாஜக் கட்சி உட்பட்ட போலி இடதுகள், தொழிலாள வர்க்கத்திற்கு புதிய அரசியல் பொறிகளை ஏற்பாடு செய்வதில் சுறுசுறுப்பாக உள்ளனர். அதன் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன, கிரேக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை காட்டிக்கொடுத்த சிரிசா அமைப்பின் வழியிலான ஒன்றை இலங்கையில் அமைக்க இப்போது பிரேரிக்கின்றார்.

இரண்டாம் உலகப் போரின் போது ட்ரொட்ஸ்கிச இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்டத்தின் படிப்பினைகளை முன்கொணர்ந்த டயஸ், தெற்காசிய பிராந்தியத்தில் குறிப்பாக இந்தியாவில் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியை ஸ்தாபிப்பதற்கு சோ.ச.க. பொறுப்பேற்கும் என்று வலியுறுத்தினார்.

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோ.ச.க.யின் தேசிய தலைவருமான டேவிட் நோர்த் மாநாட்டுக்கு வாழ்த்துக்களை வழங்கினார். அவர், முதலாளித்துவ நெருக்கடியின் பூகோள பண்பையும் இலங்கைக்குள் நடைபெறும் அபிவிருத்திகளுக்கும் உலகளவில் முதலாளித்துவத்தில் வளர்ச்சியடையும் அடிப்படை போக்குகளுக்கும் இடையேயான உறவுகளை இந்த மாநாடு தீவிர கவனத்தில் எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். "முதல் உலகப் போர் மற்றும் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் நிலவியது போன்ற ஒரு உலக நெருக்கடியின் மத்தியில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் இவையே ஆகும், என்று அவர் விளக்கினார்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவருடைய ஏகாதிபத்திய கூட்டாளிகளின் ஈவிரக்கமற்ற செயல்களை ஆய்வு செய்த நோர்த், அவற்றின் "இறுதி விளைவுகள் அணு ஆயுதப் போராகவும் கோடிக்கணக்கான மக்களின் அழிவாகவும் இருக்கும். அவர்கள், ஒவ்வொரு நாளும் எண்ணற்ற மில்லியன் கணக்கான மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் அழிவுகரமான தீர்மானங்கள் எடுக்கும் அசாதாரண சக்தி வாய்ந்த நிதிய உயரடுக்குகளின் சார்பில் ஆட்சி செய்கின்றனர். எமது பணி அவர்களுக்கு எதிராக வெகுஜனங்களையும் தொழிலாள வர்க்கத்தையும் அணிதிரட்டுவதாகும்," என்று கூறினார்.

நோர்த் தெரிவித்ததாவது: "தோழர்களே, நிலைமை மிகவும் ஆபத்தானது. அது தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் அபிவிருத்தியின் அவசரத்தை கூர்மையாக முன்கொணர்ந்துள்ளது. பாரியளவில் உக்கிரமடைந்துகொண்டிருக்கும் பூகோள-அரசியல் பதட்டங்களின் அடி நிலையில் உள்ள அதே முரண்பாடுகள், சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டம் தீவிரமாவதற்கு உந்துதல் அளிக்கின்றன. ஏகாதிபத்திய சக்திகள் இடையேயான சர்வதேச போர் ஆபத்தை வர்க்க யுத்தத்தின் மூலம் மட்டுமே தடுக்க முடியும். அது சர்வதேச அளவில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் போராட்டமாகும்.

"வர்க்கப் போராட்டத்தின் அபிவிருத்தி இப்போது புரட்சிகரத் தலைமையின் வளர்ச்சிக்கான நிலைமைகளை உருவாக்கி இருந்தாலும், அது தானாகவே விடயத்தை தீர்மானிக்க முடியாது. எமது இயக்கத்தின் அரசியல் வேலைகள், அதன் நடைமுறை தலையீடுகள், அதன் அரசியல் வேலைத் திட்டம், தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் தத்துவார்த்த விளக்கங்களுக்கான அதன் போராட்டம், மற்றும் புரட்சிகர தொழிலாளர் காரியாளர்களுக்கான அதன் கல்வியூட்டலுமே தீர்க்கமான வரலாற்று பிரச்சினைகளாகும்."

"சிரிசா அதிகாரத்திற்கு வந்ததை கிரேக்க மக்களின் ஒரு பெரும் வெற்றியாக கிரேக்கத்திலும் உலகம் முழுவதும் உள்ள போலி இடதுசாரிகள் பாராட்டினர். நாம் இந்த களிப்புக் கொண்டாட்டத்தில் இணைந்துகொள்ள மறுத்ததற்காகவும் 'பெரிய அனுபவத்தை' பகிர்ந்துகொள்ளாமைக்காகவும் குறுங்குழுவாதிகள் என கண்டிக்கப்பட்டோம். நாம், தொழிலாள வர்க்கத்தை எச்சரிப்பதே எங்கள் பணி என வலியுறுத்தினோம். நாம் சரியாக சிரிசாவின் காட்டிக் கொடுப்பை நிராகரித்தோம் என நோர்த் கூறினார்.

"அனுபவம் பற்றிய பிரச்சினையில் கடைசியாக ஒரு புள்ளியை கூறுகிறேன். பெரிய அரசியல் உள்ளர்த்தங்கள் வாய்ந்த தத்துவார்த்த மட்டத்தில், அனுபவம் பற்றிய மார்க்சிச நிலைப்பாடானது, நடைமுறைவாத சந்தர்ப்பவாத நிலைப்பாட்டில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. நாம், பல தசாப்த கால நூற்றாண்டு கால புரட்சிகர மற்றும் எதிர்ப் புரட்சிகர அனுபவத்தின் அடிப்படையில், மார்க்சிச இயக்கத்தின் திரட்டப்பட்ட வரலாற்று அறிவை தொழிலாளர்களின் எண்ணற்ற அன்றாட அனுபவங்களுக்குள் கொண்டு செல்ல முயல்கின்றோம்.

"ட்ரொட்ஸ்கி ஒரு வரலாற்று மனிதர், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது வரலாற்றுக் கட்சி மற்றும் நாம் வெறுமனே சிரிசா பற்றி, ஒபாமா பற்றி மற்றும் சிறிசேன பற்றிய கருத்துக்களை கொண்டிருக்கவில்லை. நாம் வரலாற்று ரீதியாக பெறப்பட்ட புறநிலை அனுபவங்களை நமது அரசியல் அடிப்படையாக கொண்டுள்ளோம். தோழர்களே, நாம் வரலாறு மிகவும் கூர்மையான திருப்பங்களை கொண்டு வரும் ஒரு காலத்தில் வாழ்கிறோம். நாம் அந்த வரலாற்று இயக்கத்தில் நம்மை இணைத்துக் கொண்டுள்ளோம். மற்றும் அந்த இயக்கமே தொழிலாள வர்க்கத்தின் பரந்த மக்கள் சம்பந்தமாக எமது கட்சிகளை மாற்றப் போகிறது," என நோர்த் குறிப்பிட்டார்.

இந்த மாநாடு, சர்வதேச நிலைமை தொடர்பாக, குறிப்பாக தெற்காசியா தொடர்பாகவும் கட்சியின் அரசியல் பணிகள் தொடர்பாகவும் ஆராய்வதற்காக ஒரு தீவிர கலந்துரையாடலை மேற்கொள்ள நான்கு நாட்களை அர்ப்பணித்துள்ளது. மாநாட்டில் பங்கெடுத்துக்கொள்ள பிரதிநிதிகளில் பலர், கட்சியின் நீண்ட கால அரசியல் போராட்டங்களின் அனுபவங்களின் படிப்பினைகளை வெளிக்கொணர்ந்தனர். இந்த மாநாடு சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடத்தப்பட்டது.

"போருக்கு எதிரான அரசியல் போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) அரசியல் பணிகளும்" என்ற தீர்மானத்தில் கலந்துரையாடல்கள் குவிமையப்படுத்தப்பட்டிருந்தன. அந்த தீர்மானம் உலக புவிசார்-அரசியல் பதட்டங்களையும் அவை ஆசியாவில் ஏற்படுத்தவுள்ள தாக்கங்களையும் பரிசீலனை செய்தது. அது, இலங்கை ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை நீக்கி சிறிசேனவை பதவியில் அமர்த்த அமெரிக்கா செய்த தலையீடு, சீனாவுடனான ஒரு மோதலை நோக்கி ஒபாமா நிர்வாகம் அதிகளவு நகர்ந்துள்ளதன் கூர்மையான வெளிப்பாடு என எச்சரித்தது.

தனது கொள்ளையடிக்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்கு இந்தியாவை அடிபணியச் செய்யவும் சீனாவை தனிமைப்படுத்தி சுற்றி வளைப்பதற்குமான உயிர்நாடியாக தெற்காசியா மற்றும் இந்தியப் பெருங்கடலை வாஷிங்டன் கணிக்கின்றது என தீர்மானம் விளக்கியது. அமெரிக்கவானது ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வாஷிங்டன் தலைமையில் ஒரு நாற்கர சீன-எதிர்ப்பு கூட்டணியில் இந்தியாவை இணைத்துக்கொள்ள முயன்று வருகிறது, மற்றும் இந்த நிகழ்ச்சி நிரல் இந்தியாவில் மோடி அரசாங்கத்தின் கீழ் விரைவான முன்னேற்றங்களைக் காண்கின்றது என்று அந்த தீர்மானம் எச்சரித்தது.

தீர்மானம் சோ.ச.க.யின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தை மேற்கோள் காட்டியது. "ஜனநாயகம்" மற்றும் "நல்லாட்சியை"
மீண்டும் நிறுவுதல் என்ற போலி பதாகையின் கீழ், சிறிசேனவுக்கும் இலங்கையில் அமெரிக்க தலையீட்டிற்கும் பின்னால் அணிசேர்ந்த அனைத்து போலி இடது குழுக்களுக்கும் எதிராக, எமது பிரச்சாரம், போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிரான போராட்டத்தை அதன் மையத்தில் வைத்தது.

 இந்த போலி-இடது போக்குகளுக்கு எதிரான அரசியல் மற்றும் தத்துவார்த்த போராட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தீர்மானம், தெற்காசியாவில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுதிகளை கட்டியெழுப்புவதன் ஒரு பகுதியாக சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை கட்டியெழுப்புவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியது.

மாநாட்டின் இறுதி நாளன்று, உலக சோசலிச வலைத் தளத்தின்  தேசிய ஆசிரியராக கே. ரட்நாயக்கவும் சோ.ச.க.யின் பொதுச் செயலாளராக விஜே டயசும், தேசிய உதவிச் செயலாளராக தீபால் ஜயசேகரவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். "போருக்கு எதிரான அரசியல் போராட்டமும் சோசலிச சமத்துவக் கட்சியின் (இலங்கை) அரசியல் பணிகளும்," என்ற தீர்மானம் இத்துடன் உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்படுகிறது.