ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan regime, Tamil nationalists reject ex-LTTE members’ poisoning allegations

இலங்கை அரசாங்கமும், தமிழ் தேசியவாதிகளும் முன்னாள் புலிகளின் அங்கத்தவர்களுக்கு நஞ்சூட்டிய குற்றச்சாட்டினை நிராகரிக்கின்றனர்.

By K. Nesan
1 October 2016

கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு முன்னர், முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் தங்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதாக தெரிவித்த குற்றச்சாட்டுகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாண்ட விதம் ஜனாதிபதி சிறிசேனவின் அமெரிக்க சார்பு ஆட்சியுடன் அவர்கள் கொண்டிருக்கும் நெருங்கிய இணைப்பினை படம் பிடித்து காட்டுகின்றது.

முன்னாள் விடுதலைப் புலிகளின் அங்கத்தவர்கள் 2009 இல் உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் அவர்கள் தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது இலங்கை இராணுவம் தங்களுக்கு நஞ்சு கொடுத்ததாக குற்றம் சாட்டுகின்றார்கள். கடந்த மாதம் அவர்களில் பலர் அரசினால் நியமிக்கப்பட்ட, நல்லிணக்க பொறிமுறைகளை ஒழுங்கமைப்பதற்கான செயலகம் (SCRM) முன்னால் சாட்சியம் வழங்குகையில் தங்களுக்கு ஏமாற்றுத்தனமாக அடையாளம் தெரியாத மருந்துகள் ஊசி மூலம் ஏற்றப்பட்டதாக தெரிவித்தனர். எய்ட்ஸ் நோய்க்கு தடுப்பு மருந்துகள் இன்றுவரை இல்லாத போதும், அவர்கள் தங்களுக்கு எய்ட்ஸ் உட்பட்ட தொற்று நோய் தடுப்பு ஊசிகள் ஏற்றப்பட்டதாக சொல்லப்பட்டது என தெரிவித்தனர்.

அத்துடன் அவர்கள் தங்களுக்கு உணவில் நஞ்சு கலக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினர். தங்களுக்கு காவலில் இருந்த இராணுவத்தினர் தங்களுக்கு வழங்கிய உணவினை தவிர்த்திருந்தனர் என தெரிவித்தனர். கடந்த வருடங்களில் அடையாளம் காணப்படாத நோய்களினால் 107 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். சிலருக்கு புற்றுநோய் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த குற்றசாட்டுகள் தொடர்பாக பரந்துபட்ட பயமும், கோபமும் வளர்ச்சியடைந்துள்ளது. 2009 ல் இராணுவம் புலிகளை கொன்று குவித்ததின் பின்னர் நூறாயிரக்கணக்கான மக்கள் தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். பெரும்பான்மையான முன்னாள் புலிகளின் போராளிகள் விவசாயிகள், மீனவர்கள், கூலித்தொழிலாளர்கள் என்ற வறிய சமூக தட்டுகளில் இருந்து இயக்கத்தில் இணைக்கப்பட்டிருந்தனர். இலங்கை அரசு நஞ்சு கலக்கப்பட்டது தொடர்பான குற்றசாட்டுகளை நிராகரித்ததுடன், அதை விசாரணை செய்யவோ அல்லது மருத்துவ வசதிகளை வழங்கவோ மறுக்கின்றது.

முன்னாள் ஊடக அமைச்சர் கேகெலிய ரம்புக்வெல, “எத்தனை பேர் மரணமடைந்தனர்? இந்த குற்றச்சாட்டு தர்க்கரீதியனதா? நாங்கள் ஏன் 100 பேரோ அல்லது அவர்கள் சொல்லும் எத்தனை பேருக்கு மட்டும் இதை செய்ய வேண்டும்? எதாவது தர்க்கம் இந்த குற்றசாட்டுகளில் இருக்கின்றதா?” என்று தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது பங்கிற்கு இந்த குற்றசாட்டு முதலில் பகிரங்கப்படுத்தபட்டதில் இருந்து தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக் கொண்டது. அந்த நேரத்தில் கூட்டமைப்பு போராளிகளின் மருத்துவத்திற்கான “சர்வதேச விசாரணைகள்” என்று கூக்குரல் அறிக்கைகள் விடுத்ததுடன் மருத்துவ வசதிகளை பெறுவதாக வாக்குறுதிகளை வழங்கியது.

இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கூட்டமைப்பின் இரண்டாம் தலைவரான, சுமந்திரன் இந்த குற்றசாட்டுகளை நிராகரித்ததுடன், அரசாங்கம், தான் பொறுப்பில்லை என்ற மறுப்புரைக்கு ஆதரவு வழங்கினார். அவர், “முன்னாள் புலி அங்கத்தவர்களுக்கு அபாயகரமான ஊசிகள் ஏற்றப்பட்டது என்பதை நிரூபிக்க கூடிய சாட்சிகள் ஒன்றையும் எங்களால் காட்ட முடியவில்லை. இந்த அபாயகரமான ஊசிகளினால் நூறுக்கு மேற்ப்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டபோதும் எங்களால் ஐந்து பேரினை கூட அடையாளம் காணமுடியவில்லை” என்று தெரிவித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்த குற்றசாட்டுக்கள் தொடர்பாக மேற்கொண்டு எந்த கருத்தினையும் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கூட்டமைப்பின் நிராகரிப்புக்கள், அமெரிக்க, இந்தியா, சீனா உட்பட்ட ஏனைய பெரும் சக்திகளின் ஆதரவுடன் இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்குற்றங்களை மூடிமறைக்க அரசாங்கத்துடன் இணைந்து முயல்வதின் ஒரு பாகமாகும். இந்த கூட்டு பங்களிப்பு சிறிசேன ஆட்சியினால் கண்காணிக்கப்பட்டு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் “ஆசியாவில் முன்னிலை” மூலோபயத்திற்காக இலங்கையை தளமாக கொண்டு சீனாவிற்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு முழுமையாக அடிபணிந்ததுடன் இணைந்திருக்கின்றது.

ஆவணி மாதம் ஒன்பதாம் திகதி வளச்சியடைந்த பொதுமக்களின் கோபங்களின் மத்தியில், வெளிநாட்டு மருத்துவர்கள் முன்னாள் புலி போராளிகளினை மருத்துவ பரிசோதனை செய்ய கோரிக்கை விடுத்து ஒரு தீர்மானத்தினை வடமாகாண சபை நிறைவேற்றியது. இது வடக்கில் இராணுவ ஆகிரமிப்பினதும் தொடரும் வெள்ளைவான் கடத்தல்களினதும் மத்தியில் அப்பகுதி மருத்துவர்கள் இராணுவத்தினை குற்றம் சாட்டும் ஒரு மருத்துவ அறிக்கையினை வழங்க தயங்குவார்கள் என்பதை உள்ளார்ந்தமாக ஏற்றுக்கொள்வதாகும். சிறிசேன அரசு இந்த தீர்மானத்தினை நிராகரித்ததுடன் வடமாகாண சபை, வடமாகாண மருத்துவர்கள் மூலம் மருத்துவ பரிசோதனைகளை செய்ய ஆலோசனை வழங்கியது.

இந்த தீர்மானத்தினை தமிழ் தேசியவாதிகள் நிறைவேற்றியதன் இலக்கு முன்னாள் புலி போராளிகளின் நலன்களில் அக்கறையினால் அல்ல. பதிலாக வாஷிங்டனுடனும், ஆசியாவில் அதனது போர் திட்டங்களுடனும் தங்களது கூட்டு பங்களிப்பினை வளர்த்தெடுப்பதற்காகும். வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் மேற்க்கொள்ளப்பட்ட அமெரிக்க தலைமையில் இலங்கை இராணுவத்துடன் நடாத்தப்பட்ட இராணுவ ஒத்திகையினை மனிதாபிமான பணி என போற்றி புகழ்ந்ததுடன், ஒத்திகைக்கு வந்திருந்த அமெரிக்க மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய வேண்டுகோள் விடுத்தார்.

அமெரிக்க மருத்துவர்கள் பாதிக்கப்பட்டவர்களை பரிசோதனை செய்ய மறுத்து இருந்தனர். அப்பிடியிருந்தபோதும், பின்னர் கொழும்பின் அமெரிக்க தூதரகம், மருத்துவர்கள் தேவையான மருத்துவ உபகரணங்களை வைத்திருக்கவில்லை என தெரிவித்தது.

வடக்கு மாகாண மருத்துவமனைகள் முறையாக விசேட மருத்துவ மையங்களை பரிசோதனைகளுக்கு ஒழுங்கு செய்தன. மருத்துவ மனைகள் முன்னால் சாதாரண உடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராணுவமும், புலனாய்வு பிரிவினரும் பரிசோதனைகளை கண்காணித்ததுடன் அதற்கு வருகை தந்தவர்களை பயமுறுத்தினர்.

ஆச்சரியத்துக்கு இடமில்லாத வகையில் பங்குனி மாதத்தின் முதல் மூன்று கிழமைகளில் 12,000 முன்னாள் போராளிகளில் 96 பேர் மட்டுமே வருகை தந்திருந்தனர். பெரும்பான்மையோர் வடமாகாண சபையினால் ஒழுங்கு செய்யப் பட்ட பரிசோதனைகளில் நம்பிக்கை இல்லாதிருந்ததுடன் தங்களது மருத்துவ அறிக்கைகளை வழங்குவதற்கும் தயங்கினர்.

விக்னேஸ்வரன் மருத்துவமனைகளின் முன்னால் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதிலும், இதே பாதுகாப்பு படையினரையே, தமிழ் தேசியவாத அரசியல்வாதிகள் தங்களது சொந்த பொதுக்கூட்டங்களில் அவர்களது ஜனநாயக விரோத, தொழிலாளர் விரோத அரசியலுக்கு எதிராக கிளம்பி எழும் எதிர்ப்பில் இருந்து பாதுகாக்க தங்கியிருக்கின்றனர் என்பது ஒரு பச்சை உண்மையாகும்.

ஏனைய மேற்கு நாடுகள் உட்பட அமெரிக்க ஏகதிபத்தியமும், இந்தியா, சீனாவும் இலங்கையில் நடத்தப்பட்ட போர்குற்றங்களில் ஆழமாக சிக்கியிருக்கின்றன. இவர்கள் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷவின் தாக்குதல் முன்னெடுப்புகளுக்கு இராஜதந்திர, இராணுவரீதியில் ஆதரவு வழங்கியதுடன் “புனர்வாழ்வு” முகாம்களையும் புகழ்ந்து பாடினர். இந்த தடுப்பு முகாம்களுக்கு 2009 ல் சில இராஜதந்திரிகள் சென்று பார்த்ததாக செய்திகள் தெரிவித்தன.

இந்த “புனர்வாழ்வு” நிலையங்கள், இழிபுகழ் பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கொடுமையான இராணுவ தடுப்பு முகாம்களாக செயற்பட்டன. கைதிகளுக்கு அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்பட்டு, குற்றசாட்டுகள், வழக்கு விசாரணைகள் இன்றி சட்ட ஆலோசனகள் நிராகரிக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச சட்டத்தரணிகள் சபை, 2015 ல் வெளியிட்ட அறிக்கையில்,“ஒப்புதல் வாக்குமூலங்களை கறந்து எடுப்பதற்காகவும், தமிழ் சமூக, அரசியல் வலையமைப்புக்கள் தொடர்பான பரந்த தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கைதிகள் அடிக்கடி குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கால்வாசி பேர் இந்த விசாரணைகளின் போது கொடுமையான சித்திரைவதைகளை அனுபவித்ததுடன் மனித தன்மையற்ற இழிவான முறையில் கையாளப்பட்டனர்” என பிரகடனப்படுத்தியது.

இலங்கை இராணுவத்தின் படைத்தலைவராக 2009ல் போருக்கு தலைமை தாங்கிய சரத் பொன்சேக இந்த நஞ்சூட்டிய குற்ற சாட்டுக்களை மறுத்து இதுவரை ஒரு அறிக்கையினையும் வெளியிடவில்லை. இவர் பங்குனி 2015ல் சிறிசேனவினால் இலங்கை வரலாற்றின் முதலாவது படைத்துறை உயர் தளபதி என்று பதவி உயர்த்தப்பட்டார். மாசி 2016ல் இவரை சிறிசேன பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக நியமித்திருக்கின்றார்.

இலங்கை அரசாங்கத்தினதும், இராணுவத்தினதும் நடைமுறைகளின் சான்றுகளில் இருந்து பார்த்தால் இந்த குற்றசாட்டுக்கள் நம்பகரமானவை. 1980களில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கிளர்ச்சியின் போது ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் ஆயிரக்கணக்கானோர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கையில் “காணாமல்” ஆக்கப்பட்டனர். சமீபத்தில் அரசாங்கம் “காணாமல்” போனோர் கொல்லப்பட்டனர் என்பதை ஏற்றுக்கொண்டு கடந்த 30 வருடங்களாக காணமல் ஆக்கப்பட்ட 65,000 பேர்களது உறவினர்களுக்கு “இல்லாதற்கான சான்றிதழ்” வழங்க உடன்பட்டிருக்கின்றது.

புரட்டாதி 2011ல் இராஜபக்ஷ, ஜனாதிபதி வதிவிடமான அலரிமாளிகையில் “புனர்வாழ்வுபெற்ற” 1,800 கைதிகளை கொண்ட முதல் குழுவினரை விடுதலை செய்ய ஒரு விழாவினை அரங்கேற்றினார். அமெரிக்க தூதர் பற்றிசியா புட்னிஸ் (Patricia Butenis), இந்திய உயர் ஸ்தானிகர் அசோக் காந்த, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ராங்கின் (John Rankin) முன்னிலையில், இராஜபக்ஷ “புனர்வாழ்வினை வெற்றிகரமாக முடித்து கொண்டதற்கான” “சான்றிதழ்கள்” வழங்கி, “புனர்வாழ்வுபெற்ற” முன்னாள் புலி அங்கத்தவர்களை அவர்களது குடும்பங்களிடம் ஒப்படைத்தார்.

“முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதிலும் அரசாங்கம் பாரிய முன்னேற்றத்தினை ஏற்படுத்தி இருக்கின்றது” என்று 2014ல் இராஜபக்ஷ அரசாங்கத்தினை புட்னிஸ் புகழ்ந்திருந்தார்.