ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Social inequality and the fight against capitalism

சமூக சமத்துவமின்மையும், முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டமும்

Nick Beams
25 October 2016

சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி குறித்து ஒரு விரிவான ஆய்வை மேற்கொண்ட பிரெஞ்சு அரசியல் பொருளியல்வாதி தோமஸ் பிக்கெட்டி (Thomas Piketty) ஆல் ஞாயிறன்று ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வழங்கப்பட்ட உரை, இரண்டு நிலைப்பாட்டில் இருந்து முக்கியமானதாகும்.

முதலாவதாக, 2014 இல் சிறந்த விற்பனையான நூலான இருபத்தியோராம் நூற்றாண்டில் முதலாளித்துவம் என்ற அவரது நூலில் அவர் முன்வைத்த புள்ளிவிபரங்களின் அடிப்படையிலும், அத்துடன் அது பிரசுரிக்கப்பட்டதற்குப் பிந்தைய இரண்டாண்டுகளது புதிய புள்ளிவிபரங்களையும் சேர்த்து, பரந்த பெருந்திரளான மக்களது வாழ்க்கை தரங்கள் மந்தமாகி வருகிறது அல்லது வீழ்ச்சியடைந்து வருகின்ற நிலைமைகளின் கீழ், பிகெட்டி, பல விளக்கமான வரைபடங்கள் மற்றும் அட்டவணைகளைக் கொண்டு சமூகத்தின் உயர்மட்டங்களில் கட்டுக்கடங்காத செல்வவள திரட்சியின் நிகழ்முறையை ஆவணப்படுத்தி இருந்தார்.

இரண்டாவதாக, இந்த அதிகரித்துக்கொண்டே செல்லும் சமூக துன்பமானது செல்வவளம் மற்றும் மூலதனம் மீதான வரிகள் உட்பட முதலாளித்துவ அரசாங்கங்களது பல்வேறு கொள்கை தகவமைப்புகளை மாற்றுவதன் மூலமாக சற்று கட்டுப்படுத்தலாம் என்ற கருத்துக்காக இயங்கிவரும், பிக்கெட்டி மற்றும் ஏனைய பொருளியல்வாதிகள் முன்னெடுத்த அரசியல் முன்னோக்கின் திவால்நிலையை அந்த உரை அம்பலப்படுத்தி இருந்தது.

தரவுகள் உறுதியானவை என்ற பழமொழி கூறுவதுபோல், மேலும் புறநிலை புள்ளிவிபரங்களின் ஒரு பகுப்பாய்வில் இருந்து பிக்கெட்டி உருவாக்கிய தரவுகளே, சமத்துவமின்மையை உருவாக்கும் முதலாளித்துவ சமூக ஒழுங்கமைப்பை சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச புரட்சியைக் கொண்டு தூக்கிவீசுவதைத் தவிர, சமூக சமத்துவமின்மையை எதிர்கொள்வதற்கு வேறு வாய்ப்பில்லை என்பதற்கே வாதிடுகின்றன.

2014 மே மாதம் பிக்கெட்டியின் நூல் அதன் ஆங்கில மொழி பதிப்பாக வெளியானபோதே, நிதியியல் உயரடுக்குகள் உடனடியாக அதன் கண்டுபிடிப்புகளில் உள்ளடங்கி இருந்த அபாயங்களை ஒப்புக் கொண்டன. அவற்றின் பிரதான ஊதுகுழல்களில் ஒன்றான இலண்டனை மையமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸ், அதன் பொருளாதார பிரிவு ஆசிரியரைக் கொண்டு பிக்கெட்டி அவரது புள்ளிவிபரங்களைப் பயன்படுத்திய விதத்தில் "குழப்பம்" உள்ளது என்று கூறி, அதன் மீது கேள்வி எழுப்பும் ஒரு கட்டுரையைக் கொண்டு நேரடியாக தாக்குதலுக்குள் சென்றிருந்தது. அப்பத்திரிகை, “பிக்கெட்டியின் படைப்பின் மீது நிறைய கேள்விகள் தொங்குகின்றன" என்று தலைப்பிட்டு ஒரு தலையங்கம் எழுதியது.

அந்நூலின் புள்ளிவிபர அலைகளுக்கும், அத்துடன் அந்நூல் வெளியானதற்குப் பின்னர் பிரசுரிக்கப்பட்ட கூடுதல் உண்மைகளுக்கும் இடையே அதுபோன்ற விமர்சனங்கள் காணாமல் போயின. ஒரேயொரு எடுத்துக்காட்டை மேற்கோளிடுவதானால்: இரண்டாண்டுகளுக்கு முன்னர், உலக மக்கள்தொகையில் அரைவாசி மக்களிடம் உள்ள செல்வவளத்தின்  அளவிற்கு  சமமான செல்வவளம் 85 செல்வந்தர்கள் கட்டுப்பாட்டில் இருந்த விபரம் வெளியானது. இந்த ஆண்டு இது வெறும் 65 ஆக குறைந்துள்ளது.

சிட்னி உரையில் பிகெட்டியின் முன்னோக்கு, இலாபகர அமைப்புமுறையை தூக்கியெறியும் விடயத்தை கொண்டிருக்கவில்லை, மாறாக அதற்கு தலைகீழாக இருந்தது. அவர் அதுபோன்றவொரு விளைவைத் தடுக்க இயங்கிக் கொண்டிருக்கிறார். அவரது அரசியல் கண்ணோட்டத்தில், அவர் மார்க்ஸ் க்கு ஒரு எதிர்ப்பாளராக உள்ளார் மற்றும் சோசலிச புரட்சிக்கு இட்டுச் செல்லும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஒரு வரலாற்று நெருக்கடி மீதான மார்க்ஸின் கண்ணோட்டத்தை "உலக பேரழிவு" (apocalyptic) கண்ணோட்டமாக குறிப்பிடுகிறார்.

கிளிண்டனின் முன்னாள் தொழிலாளர் துறை செயலர் ரோபர்ட் ரைச் குறிப்பிட்ட ஒரு சொற்பதத்தைப் பிரயோகித்து குறிப்பிடுகையில், அவர் "வர்க்க போராளி" (class warrior) கிடையாது, “மாறாக வர்க்கத்திற்காக கவலைப்படும் ஒருவர்,” (a class worrier) என்கிறார். பிக்கெட்டி அவரது நூலில், நிதியியல் மூலதனத்தின் இலாபங்கள் அதிகரிப்பதற்கும் நிஜமான பொருளாதார வளர்ச்சிக்கும் இடையே அதிகரித்துவரும் பிளவைச் சுட்டிக்காட்டி இருந்தார், “செல்வவள பகிர்வின் நீண்டகால இயக்கவியல் விளைவுகள் சாத்தியமான அளவிற்கு பீதியூட்டி வருகிறது,” என்றவர் குறிப்பிட்டார்.

அதாவது, தற்போதைய சமூக மற்றும் பொருளாதார ஒழுங்கமைப்பால் அதிகரித்துவரும் அபாயங்களைக் குறித்து அவர் ஆளும் உயரடுக்குகளை எச்சரிக்க முனைந்திருந்தார் என்பதோடு, பிரதானமாக மூலதன இலாபங்கள் மீதான ஓர் உலகளாவிய வரிமுறையுடன் தற்போதைய அபாயகரமான போக்குகளை எதிர்கொள்ளும் பல நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்குகிறார். "நீண்டகால ஓட்டத்தில் தாக்குப்பிடிக்க முடியாத ஒரு விகிதத்தில் தற்போது அதிகரித்து வருகின்றதும் மற்றும் சுதந்திர சந்தையின் மிகவும் உணர்வுபூர்வமான பாதுகாவலர்களைக் கூட கவலை கொள்ள செய்துள்ளதுமான செல்வவளத்தின் வரைமுறையில்லா உலகளாவிய சமத்துவமின்மையைக் கட்டுப்படுத்தும்,” என்றவர் தெரிவித்தார்.

இந்த எழுத்துக்கள் பிரசுரிக்கப்பட்டு இரண்டாண்டுகளுக்குப் பின்னர் என்ன நடந்துள்ளது?

உலகின் மத்திய வங்கிகள் நிதியியல் சந்தைகளுக்குள் அதிமலிவு பணத்தைப் பாய்ச்சியதால் எரியூட்டப்பட்டு, சமூகத்தின் உயரங்களில் பரந்த செல்வவள திரட்சி தொடர்ந்து வேகமெடுத்துள்ளது, அதேவேளையில் அடியிலிருக்கும் நிஜமான பொருளாதாரம் எது "நீடித்த மந்தநிலை" என்று குறிப்பிடப்படுகிறதோ அதில், அதாவது குறைந்த வளர்ச்சி மற்றும் முதலீடு, வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தித்திறன், உலக வர்த்தக வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்குறைவு, மற்றும் இவற்றின் விளைவாக வாழ்க்கை தரங்களில் வீழ்ச்சி ஆகியவற்றில் அதிகரித்தளவில் சிக்கியுள்ளது.

இது அடிமட்டத்திலிருந்து கிளர்ச்சியை ஆரம்பநிலையில் உருவாக்கி உள்ளது, இவை முரண்பட்ட விதத்தில் பிரிட்டனில் பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்குகளிலும், அமெரிக்காவில் பகிரங்கமாக அறிவித்துக் கொண்ட "சோசலிஸ்ட்" பேர்ணி சாண்டர்ஸ் க்கான ஆதரவிலும், டோனால்ட் ட்ரம்ப் வேட்பாளராக தேர்வானதிலும், உலகெங்கிலும் முதலாளித்துவ-எதிர்ப்புணர்வின் வளர்ச்சி மற்றும் அரசியல் மற்றும் நிதியியல் ஸ்தாபகத்தை நோக்கி அதிகரித்துவரும் விரோதம் ஆகியவற்றிலும் பிரதிபலித்தது. இந்த பிரச்சினைகள் இப்போது சர்வதேச நாணய நிதியத்தின் மற்றும் ஏனைய பிரதான உலகளாவிய பொருளாதார அமைப்புகளின் ஒவ்வொரு கூட்டத்தின் திட்டநிரலிலும் இடம்பெறுகின்றன என்றளவிற்கு சமூகப் பதட்டங்கள் தீவிரமாக உள்ளன.

பிக்கெட்டியின் நூல் பரவலாக வாசிக்கப்பட்டுள்ளது, ஆனால் உலகின் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு அரசாங்கமும் சமூக சமத்துவமின்மையின் அதிகரிப்பைத் தலைகீழாக்க அவர் அறிவுறுத்தி உள்ள எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இது பெயரளவிலான "இடது" அரசாங்கங்கள் இல்லை என்பதால் கிடையாது. ஜூலை 5, 2015 இல் சிக்கனத் திட்டத்திற்கு எதிரான பாரிய வாக்களிப்பை மறுத்தளித்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச வங்கிகளது கோரிக்கைகளை நடைமுறைப்படுத்திய அலெக்சிஸ் சிப்ராஸ் இன் சிரிசா அரசாங்கம் உள்ள கிரீஸ் இன் அனுபவம் சர்வதேச முக்கியத்துவம் கொண்டதாகும். ஒட்டுமொத்த இலாபகர அமைப்புமுறையைத் தூக்கியெறியாமல் நிதியியல் மூலதன சர்வாதிகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேறு வழியே கிடையாது என்பதே அரசியல் அனுபவத்தில் நிரூபிக்கப்பட்டது.

பிக்கெட்டியின் சிட்னி உரையைக் கேட்டுக் கொண்டிருந்த பார்வையாளர்களில் ஒருவர் இத்தகைய அனுபவங்களுடன், அனைத்திற்கும் மேலாக உலகின் எந்தவொரு இடத்திலும் எந்தவொரு அரசாங்கமும் அவர் அறிவுறுத்திய நடவடிக்கைகளை வெறுமனே கவனத்திற்குக் கூட எடுக்கவில்லை என்ற உண்மையுடன் அவரை எதிர்கொண்ட போது, அந்த பொருளியல்வாதியினது சீர்திருத்தவாத முன்னோக்கின் முட்டுச்சந்தின் முழு பார்வையும் வெளிப்பட்டது.

கடன் மறுசீரமைப்பு முன்மொழிவுகளைப் பிரெஞ்சு மற்றும் ஜேர்மன் அரசாங்கங்கள் நிராகரித்தமை "மிகவும் வருந்தத்தக்கது" என்றவர் தெரிவித்தார். “ஒருவேளை வேறெந்த சமயத்திலாவது வேறொரு பேர்ணி சாண்டர்ஸ், ஒருவேளை குறைந்தளவில் வெள்ளையினத்தைச் சேர்ந்தவர், இதைவிட இளைஞராக இருக்கும் ஒருவர்" ஜெயிக்க முடிந்தால் "மாற்றம் ஏற்படலாம்" என்று நம்பிக்கை வெளியிட்டு, இந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் இரண்டு வேட்பாளர்களில் எவரும் அவர் அறிவுறுத்திய வரி கொள்கைகளை ஏற்க போவதில்லை என்பதை அவரே ஒப்புக் கொண்டார்.

"அறிவு ஜனநாயகமயப்படுத்துவது" தான் அவரது ஒரே முன்னோக்கு, அது கொள்கை மாற்றத்தைப் பெற "போதுமானளவிற்கு அழுத்தங்களைக்" கொண்டு வருமென அவர் நம்பினார்.

பிக்கெட்டியின் மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் ஏனைய சீர்திருத்தவாதிகளாக வரக்கூடியவர்களுடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அரசியல் முன்வரலாறு முற்றிலும் முரண்பட்டு நிற்கிறது. வெறும் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் தான், அமெரிக்காவில் வேர்க்கர்ஸ் லீக்கும் மற்றும் உலகின் ஏனைய இடங்களில் உள்ள ICFI இன் பிரிவுகளும் அவற்றின் பெயர்களை சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என்று மாற்றின.

சிறிது காலமே உயிர்பிழைத்திருந்த வளர்ச்சிக்கு அடியில் மற்றும் "சந்தையின் மந்திரம்" என்று புகழப்பட்ட ஆழ்ந்த பிரச்சாரம் ஆகியவற்றைக் கொண்டு முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் அதிகரித்து வந்த ஒழுங்கின்மை அப்போது சற்றே மூடிமறைக்கப்பட்டிருந்த நிலையில், அது அதிகரித்துவரும் சமூக சமத்துவமின்மையில் தன்னை வெளிப்படுத்தி, நமது காலத்திலேயே ஒரு தீர்க்கமான பிரச்சினையாக மாறும் என்ற புரிதலின் அடிப்படையில் தான் அந்த மாற்றம் செய்யப்பட்டது—நீண்டகாலத்திற்கு முன்னரே அது உத்தியோகபூர்வ விவாதங்களின் ஒரு விடயமாகவும் இருந்தது.

இந்த மதிப்பீட்டை தற்செயலாக வந்தடையவில்லை, அல்லது இதுவொரு அதிருஷ்டவசமான அனுமானத்தின் விளைவுமல்ல. இது மார்க்ஸ் பகுத்தாராய்ந்ததைப் போல முதலாளித்துவ அமைப்புமுறையின் புறநிலை முரண்பாடுகளைக் குறித்த ஒரு விஞ்ஞானபூர்வ மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது, இதைத்தான் பிக்கெட்டியும், ஏனையவர்களும் விடாப்பிடியாக மறுக்கிறார்கள்.

பரந்த பெருந்திரளான தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை மீது தாக்கம் ஏற்படுத்தி அவர்களது நனவை மற்றும் புரிதலை மாற்றிக் கொண்டே இருக்கும் இந்த இலாபகர அமைப்புமுறையினது நெருக்கடியின் மத்திய வடிவங்களில் ஒன்றான சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சியானது, அரசியல் மற்றும் சமூக போராட்டத்தின் ஒரு முக்கிய உந்துசக்தியாக மாறி, ஒரு தத்துவார்த்த கட்டமைப்பாக அல்ல, மாறாக வாழ்வின் ஒரு யதார்த்தமாக, சோசலிச புரட்சிக்கான அவசியத்தை முன்னிறுத்தும் என்பதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பகுப்பாய்வு முடிவாகும்.

பிரிட்டன் வெளியேறுவதில் இருந்து தொடங்கி அமெரிக்க தேர்தல்கள் வரையில், உலகெங்கிலும் சமூக எதிர்ப்பின் வளர்ச்சியினாலும் மற்றும் உடைந்துசெல்லும் முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளது ஆழ்ந்த அரசியல் நெருக்கடிகளில், அவற்றின் அனைத்து முரண்பாடுகளோடு சேர்ந்து, பிக்கெட்டி மற்றும் ஏனைய சீர்திருத்தவாத விமர்சகர்களின் கனவுகள் நிரந்தரமாக இருக்கப்போவதில்லை, மாறாக புரட்சிகர போராட்டத்தின் ஒரு புதிய காலகட்டம் எழுச்சி பெறுவதைக் காண்கிறோம்.