ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s authoritarian government of nationalism and war

ட்ரம்பின் தேசியவாதம் மற்றும் போரின் எதேச்சாதிகார அரசாங்கம்

Joseph Kishore
21 November 2016

டொனால்ட் ட்ரம்பின் ஆரம்பகட்ட நியமனங்கள், அவர் தலைமை கொடுக்க இருக்கும் நிர்வாகத்தின் அதீதமான மற்றும் வரலாற்றில் முன்கண்டிராத தன்மையை ஊர்ஜிதம் செய்கின்ற நிலையிலும் கூட, ஜனநாயகக் கட்சியும் ஊடகங்களும் அவருக்கு அரசியல் அதிகாரம் கைமாறுவதை இயல்பானதாக ஆக்குவதற்கு தங்களால் இயன்ற அனைத்தையும் செய்து கொண்டிருக்கின்றன.

அட்டர்னி ஜெனரல் பதவிக்கு, ட்ரம்ப் அலபாமாவின் செனட்டரான ஜெப் செசன்ஸ் ஐ தேர்வு செய்திருக்கிறார், இவர் குடியுரிமைகளுக்கு எதிர்ப்பு காட்டுவதிலும் அரசாங்க வேவுபார்த்தலின் மிக ஊடுருவலான வடிவங்களுக்கு உளவு முகமைகளை காட்டிலும் அதிகமாக ஆதரவு அளிப்பதிலும் நீண்டகாலமாக அறியப்பட்டு வந்திருப்பவராவார். இவர் போலிஸ் இராணுவமயமாதலின் ஒரு விரிவாக்கத்திற்கு அழைப்பு விடுத்திருப்பவர் என்பதோடு புலம்பெயர் மக்களை கடுமையாகக் கண்டனம் செய்து வருபவருமாவார், ஒருமுறை இவர், “கிட்டத்தட்ட டொமினியன் குடியரசில் இருந்து வரும் ஒருவரும் கூட” நமக்குப் “பயன்தரக் கூடிய ஒரு நிரூபணமான திறன் உடன்” அமெரிக்காவுக்கு வருவதில்லை என்று அறிவித்தார்.

சிஐஏ இயக்குநர் பதவிக்கு, ட்ரம்ப் பிரதிநிதி மைக் போம்பியோவை முன்மொழிந்து கொண்டிருக்கிறார், இவர் அரசியல் சட்டவிரோதமான வேவுத் திட்டங்களின் இன்னுமொரு வக்காலத்துவாதி ஆவார்; NSA எச்சரிக்கையூட்டியான எட்வார்ட் ஸ்னோவ்டென் மீது வழக்குவிசாரணை நடத்தப்பட வேண்டும், அவர் மீது குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட வேண்டும், அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்று இந்த வருடத்தின் ஆரம்பத்தில் கூறியிருந்தவர் இவர்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கு ட்ரம்ப் ஓய்வுபெற்ற தளபதி மைக்கல் ஃபிளினை தேர்வு செய்திருக்கிறார், இவர் சித்திரவதை செய்வதற்கு ஓரளவுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் அகற்ற வேண்டும் என்பதை ஆதரிக்கின்ற ஒரு வெறிகொண்ட இஸ்லாமிய-விரோத இராணுவவாதி ஆவார், “கடைசித் தருணம் வரையிலும் மேசை மீது பல தெரிவுகளை வைத்திருப்பதன் மீது” தான் நம்பிக்கை கொண்டிருப்பதாக கூறியிருப்பவர்.

மற்ற தெரிவுகளும் இதேபோக்கில் தான் பின்வர இருக்கின்றன. பாதுகாப்புச் செயலருக்கான போட்டியில் ஓய்வுபெற்ற மரைன் தளபதி ஜேம்ஸ் மாட்டிஸ் தான் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது, இவர் 2004 இல் ஈராக்கின் ஃபலூஜாவுக்கு எதிரான மிருகத்தனமான படுகொலைத் தாக்குதலுக்கு தலைமை கொடுத்தவர் என்பதோடு அதற்கு ஒரு வருடத்திற்கு பின்பு “சிலரைச் சுடுவதில் சந்தோசம் இருக்கிறது” என்று பயங்கரமானதொரு அறிவிப்பைக் கொடுத்தவராவார்.

ஆயினும், இதில் மிக முக்கியமானது, ட்ரம்ப்பின் புதிய “தலைமை மூலோபாயவாதி” ஸ்டீபன் பானனின் மையமான பாத்திரம் ஆகும்; Breitbart News இன் முன்னாள் தலைமை அதிகாரியான இவர் மாற்று-வலது (alt-right) என்று அழைக்கப்படுவதை சுற்றியுள்ள வெள்ளை தேசியவாத அமைப்புகளால் போற்றப்பட்டு வந்திருப்பவர் (இந்த அமைப்புகள் செசன்ஸ் இன் தேர்வையும் பாராட்டியுள்ளன).

புதிய நிர்வாகத்தின் ஒட்டுமொத்த அரசியல் திட்டநிரலை செதுக்குவதில் பானன் மையமான பாத்திரத்தை வகிக்கவிருக்கிறார். ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இதழ் வெள்ளியன்று வெளியிட்ட ஒரு நேர்காணலில், பானன், பாசிச மிகைகளுடனான பொருளாதார மற்றும் அரசியல் தேசியவாதத்தின் ஒரு கொள்கையை சுருக்கமாகக் கூறியிருந்தார்.

“நான் ஒரு வெள்ளை தேசியவாதி அல்ல” என்ற பானன், “நான் ஒரு தேசியவாதி. நான் ஒரு பொருளாதார தேசியவாதி” என்கிறார். ”அமெரிக்க தொழிலாள வர்க்கத்துக்கு கொள்ளி வைத்து ஆசியாவில் ஒரு நடுத்தர வர்க்கத்தை உருவாக்கி” இருக்கக் கூடிய ”உலகவாதிகளை” —வர்த்தகம் மற்றும் மக்களின் நடமாட்டத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிப்பதை ஆதரிக்காத எவரையும் குறிப்பிடுவதற்கு மாற்றுவலதுகள் (alt-right) மத்தியில் பிரபலமான ஒரு வார்த்தைப் பிரயோகம்— அவர் கண்டனம் செய்கிறார்.

இந்த தேசியவாதப் பொருளாதாரக் கொள்கை மற்றும் அதனுடன் சேர்ந்து கடனைக் கொண்டு நடத்தப்படும் உள்கட்டமைப்பு செலவினங்கள் இவற்றின் அடிப்படையில் “ஒரு முற்றிலும் புதிய அரசியல் இயக்கத்தைக் கட்டியெழுப்புவதே” தனது நோக்கம் என்று பானன் கூறுகிறார். அவர் அறிவிக்கிறார்: “உலகெங்கிலும் பூச்சியத்திற்கும் குறைவான எதிர்மறை வட்டி விகிதங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொன்றையும் மறுகட்டுமானம் செய்வதற்கு இது மாபெரும் வாய்ப்பாகும்... சுவற்றில் அதைத் தூக்கியெறிந்து அது ஒட்டுகிறதா என்பதை நாங்கள் காணப் போகிறோம். பழமைவாதிகள், அவர்களுடன் ஜனரஞ்சகவாதிகள், ஒரு பொருளாதார தேசியவாத இயக்கத்தில் — 1930களில் போலவே உத்வேகத்துடன், ரீகன் புரட்சியை விடவும் பெரியதாக இது இருக்கப்போகிறது.”

இது, அமெரிக்க அதிகாரத்தின் உச்சியில் இதற்கு முன் கேட்டிராத ஒரு மொழி வகை ஆகும். ட்ரம்ப்பும், பானனும் மற்றவர்களும் தங்களது வேலைத்திட்டத்தினை ஜனரஞ்சக மொழியின் தொனியில் வழங்கி, ஜனநாயகக் கட்சிக்கும் உயர்-நடுத்தர வர்க்கத்தின் சலுகைகொண்ட அடுக்குகளின் அடையாள அரசியலுக்குமான பரவலான குரோதத்தை சுரண்டிக் கொள்வதற்கு முனைகின்ற அதேநேரத்தில், பொருளாதார தேசியவாதத்தின் வேலைத்திட்டம் என்பது உக்கிரமான வர்க்கப் போரின் ஒன்றாகும்.

சொந்த நாட்டில் இதன் பொருள், “தேசம்” மற்றும் “தேசியப் பாதுகாப்பு” ஆகியவற்றின் பேரில் வர்க்கப் போராட்டம் அத்தனையையும் ஒடுக்குவது என்பதாகும். சர்வதேச அளவில் இதன் பொருள், சொந்த நாட்டில் சமூகப் பதட்டங்களைத் திசைதிருப்புவது மற்றும் ஐரோப்பா மற்றும் ஆசியாவில் இருக்கக் கூடிய அமெரிக்காவின் பிரதான போட்டியாளர்களை அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்குக் கீழ்ப்படியச் செய்வது ஆகிய இரண்டுக்காகவும் போரில் இறங்குவது என்பதாகும். புதிய நிர்வாகமானது, வோல் ஸ்டீரீட் மற்றும் நிதிப் பிரபுத்துவத்தின் வன்முறையான சாதனமாக இருக்கக் கூடிய இராணுவ-உளவு-போலிஸ் எந்திரத்தினால் மேலாதிக்கம் செலுத்தப்படுவதாக இருக்கும்.

வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் தன்மையளவுக்கு அதே முக்கியத்துவம் பெற்றதாய் இருப்பது ஜனநாயகக் கட்சியின் பதிலிறுப்பாகும். ட்ரம்ப் வெற்றி பெற்றால் நாட்டிற்கு அது ஒரு பேரழிவாக இருக்கும் என்று பித்துப்பிடித்தது போல் எச்சரித்து வந்ததில் இருந்து வரவிருக்கும் நிர்வாகத்திற்கு தாங்கள் ஆதரளிக்கப் போவதாகவும் முக்கியமான கொள்கைக் கூறுகளில் சேர்ந்து வேலைசெய்யவிருப்பதாகவும் வாக்குறுதியளிக்கின்ற நிலைக்கு ஜனநாயகக் கட்சியினர் அசாதாரணமான வேகத்தில் —இரண்டு வாரங்களுக்குள்ளாக— நகர்வு கண்டிருக்கின்றனர்.

ட்ரம்ப்பின் ஆரம்பகட்ட கபினட் நியமனங்களின் அதேகாலத்தில் ஜனநாயகக் கட்சியின் செனட் சிறுபான்மை பிரிவுத் தலைவராக சார்ல்ஸ் சூமர் தேர்வு செய்யப்பட்டிருப்பதும் நடந்துள்ளது. செனட்டில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினரில், சூமர் தான் அநேகமாக வோல் ஸ்ட்ரீட்டுக்கு மிக நெருக்கமானவர் மற்றும், குறிப்பாக சீனாவுக்கு எதிரான, வர்த்தகப் போர் நடவடிக்கைகளுக்கு மிக உத்வேகத்துடன் ஆலோசனையளித்து வருபவர் என்று கூறலாம்.

சூமர், பேர்னி சாண்டர்ஸை செனட்டில் ஒரு தலைமைப் பதவிக்கு மேலுயர்த்தியிருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, சாண்டர்ஸ், இடதுசாரி மற்றும் முதலாளித்துவ விரோத எதிர்ப்பு மனோநிலையை போர் மற்றும் வோல் ஸ்ட்ரீட்டின் வேட்பாளரான ஹிலாரி கிளிண்டனின் பின்னால் திருப்புவதற்கு வேலைசெய்திருந்தார். உலக சோசலிச வலைத் தளம் குறிப்பிட்டதைப் போல, அவரின் தேசியவாத பொருளாதார வேலைத்திட்டமானது டொனால்ட் ட்ரம்பின் வேலைத்திட்டத்திற்கு நெருக்கமாக இணைசொல்லக் கூடியதாக இருந்தது.

சூமர் மற்றும் சாண்டர்ஸ் இருவருமே வாரஇறுதியில் அளித்திருந்த நேர்காணல்களில், “வர்த்தகம்” மற்றும் “உள்கட்டமைப்பு” குறித்த பிரச்சினைகளில் ட்ரம்ப் “எங்களுடன் இணைந்து வேலைசெய்வார்” என்று நம்புவதாக அறிவித்திருந்தனர். அமெரிக்கர்கள் “தங்களது வேலைகள் சீனாவுக்கும் மற்ற மலிவு-ஊதிய நாடுகளுக்கும் செல்வதைக் கண்டு வெறுப்பும் களைப்பும் அடைந்திருந்தனர்” என்று சாண்டர்ஸ் தெரிவித்தார்.

ட்ரம்பின் பாசிச தலைமை மூலோபாயவாதியான பானனால் முன்னிலை கொடுக்கப்படுகின்ற பொருளாதார ஆலோசனைமொழிவுகளில் ட்ரம்புடன் ஒரு கூட்டணி கொள்வதற்கு ஜனநாயகக் கட்சியினர் ஆலோசனையளித்து வருகின்றனர்.

அத்தனை வகையான பொய்கள், சேறுவீசல்கள் மற்றும் வாய்வீச்சுகள் —அவற்றின் பின்னால் ஆளும் உயரடுக்கிற்குள்ளான பல்வேறு தந்திரோபாய பிளவுகளும் மோதல்களும் மோதிக் கொண்டிருக்கும்— ஆகியவையே அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலின் குணாம்சங்களாக இருக்கின்றன. இந்த வகையில் தான் ஆளும் வர்க்கத்தின் இறுதியான கொள்கையும் பயணப்பாதையும் தன்னை நிலைநாட்டுகிறது.

வரவிருக்கும் காலகட்டம் தீவிரமான அதிர்ச்சிகளும் அரசியல் எழுச்சிகளும் நிறைந்த ஒன்றாக இருக்கும். முன்னெப்போதினும் பெரிய கடனளவு மட்டங்களால் நிதியாதாரம் அளிக்கப்படுகின்ற ட்ரம்ப்பின் பொருளாதாரக் கொள்கைகளும், அவற்றுடன் சேர்ந்து செல்வந்தர்களுக்கு பாரிய வரி வெட்டுகள் மற்றும் சமூக வேலைத்திட்டங்களிலான வெட்டுகள் ஆகியவையும் சேர்ந்து, பொருளாதார குழப்பநிலையையும் வர்க்க மோதலையும் உருவாக்க இருக்கின்றன. அமெரிக்க மற்றும் முதலாளித்துவத்தின் தீராத முரண்பாடுகளை அவை தீர்க்கப்போவது கிடையாது.

மேலும், ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் சமூக அவலங்களை சுரண்டிக் கொள்ளவும் ஹிலாரி கிளிண்டனுக்கான வாக்கு வங்கி உருக்குலைந்ததில் ஆதாயமடையவும் முடிந்ததே தவிர, அவர் அமலாக்க திட்டமிட்டு வருகின்ற வேலைத்திட்டத்திற்கு வெகுஜன ஆதரவு இருக்கவில்லை.

வரவிருக்கும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதில், தொழிலாள வர்க்கம் ஒரு சுயாதீனமான அரசியல் சக்தியாக ஒழுங்கமைவதும் அணிதிரள்வதும் அடிப்படையான அரசியல் பணியாகும். ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்தில் இயங்கும் அத்தனை அமைப்புகளுடனும் முழுமையாகவும் தீர்க்கமாகவும் முறித்துக் கொள்வது இதற்கு அவசியமாக இருக்கிறது. இந்த வழியில் மட்டுமே தொழிலாள வர்க்கமானது ட்ரம்ப் நிர்வாகம் ஒன்றின் பொருளாதாரத் தேசியவாதம், எதேச்சாதிகாரவாதம் மற்றும் இராணுவவாதம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு சோசலிச, சர்வதேசிய மற்றும் புரட்சிகர எதிர்ப்பினை முன்னெடுக்க முடியும்.