ஏனைய மொழிகளில்

Print Version|Feedback
Courts halt presidential election recount in Michigan

நீதிமன்றங்கள் மிச்சிகனில் ஜனாதிபதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்துகின்றன

By Patrick Martin
9 December 2016

மிச்சிகன் மாநில ஜனாதிபதி தேர்தலின் மறுவாக்கு எண்ணிக்கையில் மூன்று நாட்கள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதற்கு எதிரான ஒரு மாநில நீதிமன்ற தீர்ப்புக்கு ஒரு பெடரல் நீதிபதி அவர் கீழ்படிவதாக அறிவித்ததும் அது நிறுத்தப்பட்டது.

பசுமை கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டைனுக்கு மறுவாக்கு எண்ணிக்கை கோருவதற்கான அதிகாரமில்லையென மிச்சிகனின் மேல்முறையீட்டு நீதிமன்றம் செவ்வாயன்று முடிவு செய்தது. மிச்சிகனில் ஸ்டைன், டொனால்ட் ட்ரம்பை விட இரண்டு மில்லியனுக்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கியிருப்பதாலும், அம்மாநில மறுவாக்கு எண்ணிக்கையில் அவர் வெற்றி பெறுவதை எதிர்பார்க்க முடியாது என்பதாலும், அவ்விதத்தில் மாநில சட்டத்தின் கீழ் அதுவொரு "பாதிக்கப்பட்ட தரப்பு" கிடையாதென்ற குடியரசு கட்சி அட்டார்னி ஜெனரல் Bill Schuette இன் மற்றும் மாநில குடியரசு கட்சியின் வாதத்தை, குடியரசு கட்சி செல்வாக்கில் உள்ள அந்நீதிமன்றம், 3 க்கு 0 வாக்குகளுடன் ஏற்றுக் கொண்டது.

வேறெந்த மாநிலத்தை விடவும் ட்ரம்பின் மிகக்குறைந்த வாக்கு வித்தியாசமாக வெறும் 10,704 வாக்கு வித்தியாசத்தில் ஹிலாரி கிளிண்டன் மிச்சிகனை ட்ரம்பிடம் இழந்தார் என்பதால், நடைமுறையில் ஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் பிரச்சாரக்குழு மட்டுமே மறுஎண்ணிக்கை கோர தகுதியுடையதாக அம்மாநில நீதிமன்றம் காண்கிறது. மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே கிளிண்டன் பிரச்சாரக் குழு ஒரு பார்வையாளராக இருந்ததே ஒழிய, அது வாக்குகளை கூர்ந்தாராயவும் மற்றும் மறுஅட்டவணைப்படுத்தவும் எந்தவிதமான அதன் சொந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.

மாநில நீதிமன்ற தீர்ப்புக்குப் பின்னர் வாரயிறுதி விசாரணையில் மறுஎண்ணிக்கையை எதிர்த்த குடியரசு கட்சியினரது சட்ட வாதங்களை நிராகரித்த பெடரல் மாவட்ட நீதிபதி மார்க் கோல்ட்ஸ்மித், செவ்வாயன்று இரவு மாநில தேர்தல் ஆணையம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளை மறுவாக்கு எண்ணிக்கையை தொடர்வதற்கு நிர்பந்திக்கும் தற்காலிக தடையாணை ஒன்றை பிறப்பித்தார்.

ஆனால் புதனன்று இரவு, அவர் மிச்சிகன் மாநில சட்ட விளக்கங்களுக்கு இணங்க மாநில நீதிமன்றத்திற்கு தலைவணங்குவதாக அறிவித்து அந்த உத்தரவை நீக்கிக் கொண்டார். “ஏனென்றால் மிச்சிகன் நீதிமன்ற தீர்ப்பைப் புறக்கணித்துவிட்டு, 'பாதிக்கப்பட்டவர்' என்ற வார்த்தையைக் கொண்டு மிச்சிகன் சட்டமன்றம் என்ன அர்த்தப்படுத்துகிறதோ அது சம்பந்தமாகவும், மிச்சிகனின் சட்டத்திட்டங்களின் கீழ் வழக்காளி தகுதியுடையவராக இல்லை என்பது சம்பந்தமாகவும் ஒரு சுதந்திரமான தீர்ப்பை வழங்க இந்த நீதிமன்றத்திற்கு எந்த அடித்தளமும் கிடையாது,” என்றவர் எழுதினார்.

ஜில் ஸ்டைனின் வழக்கறிஞர்கள் கூறுகையில் அவர்கள் இரண்டு நீதிமன்ற முடிவுகள் மீதும் மேல் முறையீடு செய்யவிருப்பதாக தெரிவித்தார்கள். மேல்முறையீட்டுக்கான மாநில நீதிமன்றத்தின் தீர்ப்பை மிச்சிக்கன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், அதேவேளையில் நீதிபதி கோல்ட்ஸ்மித்தின் தீர்ப்பை சின்சின்னாட்டியின் மேல்முறையீட்டுக்கான அமெரிக்காவின் ஆறாவது அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

அன்டோனின் ஸ்காலியா இறந்ததால் காலியாகி உள்ள பதவியை நிரப்ப மாநில உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜூனியர் ரோபர்ட் யங் மற்றும் ஜோன் லார்சன் இருவரையும் அமெரிக்க உச்சி நீதிமன்றத்திற்கு சாத்தியமான வேட்பாளர்களாக ட்ரம்ப் பெயரிட்டிருப்பதால், அந்த வழக்கு விசாரணையிலிருந்து அவ்விருவரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென, மிச்சிகன் ஜனநாயகக் கட்சியின் கடந்தகால தலைவரும் ஸ்டைனின் தலைமை வழக்கறிஞருமான மார்க் ப்ரீவர், ஒரு பிரத்யேக தீர்மானம் தாக்கல் செய்துள்ளார்.

எந்த நீதிமன்றமும் ஸ்டைனின் மேல்முறையீட்டை அனுசரணையாக பார்க்காதென்றே தெரிகிறது. மிச்சிகன் உச்ச நீதிமன்றம் 5 க்கு 2 என குடியரசு கட்சியின் பெரும்பான்மையில் உள்ளது, அதுவும் யங் மற்றும் லார்சன் தகுதி நீக்கம் செய்யப்பட்டால் அது இன்னமும் குடியரசு கட்சி பெரும்பான்மையைக் கொண்டதாக ஆகிவிடும்.

ஆறாவது அமர்வு நீதிமன்றத்தின் மூன்று அங்கத்துவ குழு, கோல்ட்ஸ்மித் அவர் சுதந்திரத்தை அவர் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்று செவ்வாயன்று தீர்ப்புரைத்து, அவரது மறுவாக்கு எண்ணிக்கைக்கான முதல் உத்தரவை ஒத்துக்கொண்டது. ஆனால் அக்குழு குறிப்பிடுகையில், “மிச்சிகன் மாநில சட்டத்தின் கீழ், மறுவாக்கு எண்ணிக்கை ஏதேனுமொரு காரணத்திற்காக பொருந்தாது என்று … அடுத்தடுத்து மிச்சிகன் நீதிமன்றங்கள் தீர்மானித்தால், இந்த வழக்கில் இந்த உத்தரவை நீக்க அல்லது திருத்துவதற்காக முறையாக தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு தீர்மானங்களையும் மாவட்ட நீதிமன்றம் ஊக்குவிக்குமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று எழுதி, துல்லியமாக அவரை மாநில நீதிமன்ற முடிவுகளுக்கு இணங்கி இருக்குமாறு கோரியது.

“மறுவாக்கு எண்ணிக்கைக்கு பிரத்யேக சிறப்பு அரசியலமைப்பு உரிமை இருக்கிறதா அல்லது மிச்சிகன் சட்டத்தின் கீழ் அந்த வழக்காளி மறுவாக்கு எண்ணிக்கையைச் செல்லுபடியாகும் விதத்தில் முன்னெடுத்துள்ளாரா, அல்லது அந்த வழக்காளி இந்த வழக்கின் தகுதிப்பாடுகளை அவசியமான அளவிற்கு பூர்த்தி செய்திருக்க வேண்டுமா" என்பது போன்ற கேள்விகள் மீது அக்குழு இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதையும் குறிப்பிடத்தக்கரீதியில் அது சேர்த்துக் கொண்டது.

மூன்று நாட்களின் மறுவாக்கு எண்ணிக்கையில் அண்மித்து மிச்சிகனின் 5 மில்லியன் வாக்குகள், எந்த குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் குறித்த அறிக்கைகளையும் வாக்கு எண்ணிக்கையில் கொண்டு வந்துவிடவில்லை, இது ஏனென்றால் எந்த உள்ளாட்சியும் எந்த முடிவையும் தாக்கல் செய்யவில்லை என்பதனால் ஆகும். ஆனால் இந்த தேர்தல் முறை செயல்பிறழ்ந்தது மற்றும் காலத்திற்கு ஒவ்வாதது என்பதற்கு, அதுவும் அம்மாநிலத்தின் மிக வறிய பகுதிகளில் குறிப்பாக டெட்ராய்டு மற்றும் ஃபிளிண்ட் இன் உள்-நகர அண்டைப்பகுதிகளில் படுமோசமாக இருக்கிறது என்பதற்கு, அங்கே ஏற்கனவே நிறைய ஆதாரம் உள்ளது.

பல தொகுதிகள் மாநில சட்டத்தின் கீழ் மறுவாக்கு எண்ணிக்கையை தடுக்கின்றன, இவை வாக்காளர் பட்டியலில் இருக்கும் வாக்காளர்களது எண்ணிக்கையுடன் மொத்த வாக்குச்சீட்டுக்களின் எண்ணிக்கை துல்லியமாக பொருந்தி இருந்தால் மட்டுமே மறுவாக்கு எண்ணிக்கைக்கு அனுமதிக்கின்றன. இவ்விரு எண்ணிக்கையும் பொருந்தாவிடில் —பெரும்பாலும் ஒரு வாக்காளர், அவர் ஆணோ பெண்ணோ, அவரது வாக்குச்சீட்டை கிழித்தெறிந்து விட்டு, ஒரு பிரதியீடு கோராமல் சென்றுவிடுவார் என்பதால்— அத்தொகுதியின் முதல் வாக்கு எண்ணிக்கையே நிலைநிறுத்தப்படும். தவறாக வாக்கிடப்பட்டு சேதமுற்ற, சவாலான அல்லது வெற்று வாக்குச்சீட்டுக்கள் அல்லது மாறிய எண்களைக் கொண்டவை போன்ற மனித தவறுகள் உட்பட ஏனைய காரணங்களில் இருந்தும் எண்ணிக்கை பொருத்தமின்மை ஏற்படுகிறது.

குடியரசுக் கட்சி மற்றும் ட்ரம்ப் பிரச்சாரக்குழுவின் சட்ட வாதங்களைக் கண்டித்து ஸ்டைன் ஒரு அறிக்கை வெளியிட்டார். “டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருக்கு உடனிருப்பவர்கள் நமது ஜனநாயகத்தின் இந்த நடைமுறையை, நமது வாக்குகளை மதிப்பிடுவதற்கான இந்த முயற்சியை சாத்தியமானளவிற்கு தடுக்க முயல ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்,” என்று கூறிய அவர், “அவர் வாக்கு செல்லாமல் போய்விடுமோ என்று டொனால்ட் ட்ரம்ப் மிகவும் பயப்படுகிறார், ஜனநாயகத்தின் இந்த நடைமுறைக்கு அவர் மிகவும் பயப்படுகிறார் என்பதையே இது அறிவுறுத்துகிறது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

கிளிண்டன் பிரச்சாரக் குழுவிற்கும் ஜனநாயகக் கட்சியின் பிரச்சாரக் குழுவிற்கும் இடையிலான அலட்சியத்தையும் ஸ்டைன் குறிப்பிட்டார். “கிளிண்டன் குழு இதில் பலவந்தமாக உள்ளிழுக்கப்பட்ட போது, அது அரைமனதாக மற்றும் ஒரு நாள் தாமதமாக இருந்தது என்று நாம் கூறலாமா,” என்றவர் தெரிவித்தார். அதன் "நலன் மீதான ஆர்வம் செயலூக்கமின்றி இருந்தது என்றொருவர் ஊகிக்கலாம்.”

மாநில சட்டங்களுக்கு பொருள் விளக்கமளிப்பதில் மாநில நீதிமன்றங்களுக்கே இறுதி அதிகாரமுள்ளதா என்று புஷ் மற்றும் கோர் சம்பந்தமான 2000ஆம் ஆண்டின் இழிவார்ந்த அமெரிக்க உச்ச நீதிமன்ற முடிவில் சம்பந்தப்பட்டிருந்த அதே பிரச்சினையே, மிச்சிகன் வழக்கின் பிரதான சட்ட பிரச்சினைகளில் ஒன்றாக உள்ளது.

புஷ் மற்றும் கோர் வழக்கில், புளோரிடா மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வெள்ளை மாளிகையை புஷ்ஷூக்கு வழங்கும் அதன் விருப்பமான முடிவை எட்டுவதற்காக, புளோரிடா மாநில தேர்தல் சட்டங்களைக் குறித்த புளோரிடா மாநில உச்ச நீதிமன்றத்தின் பொருள்விளக்கத்தை உச்ச நீதிமன்றம் 5 க்கு 4 என்ற பெரும்பான்மையில் ஏற்கவில்லை.

இது கூட்டாட்சி முறையை முழுமையாக மீறுவதாகும். கூட்டாட்சி கொள்கைகளை எதிர்க்கும் குடியரசு கட்சி தலைமையிலான மாநில அரசாங்கங்களை தூக்கிப்பிடித்த எண்ணற்ற தீர்ப்புகளை ஆதரிக்க இதை வலது சாரி பெரும்பான்மை சர்வசாதாரணமாக கையிலெடுத்தது. இந்த முரண்பாட்டை மூடிமறைக்க நீதிமன்ற பெரும்பான்மை, புஷ் மற்றும் கோர் விவகாரத்தை ஒரு முன்மாதிரியாக பயன்படுத்தக் கூடாதென வெறுமனே அறிவித்தது.

மிச்சிகன் வழக்கில், நீதிபதி கோல்ட்ஸ்மித் மாநில சட்டம் குறித்த ஒரு மாநில நீதிமன்ற பொருள்விளக்கத்திற்கு அவர் எந்தளவிற்கு உடன்பாடின்றி இருக்கிறார் என்பதை எல்லாம் விட, கூட்டாட்சி முறையின் அடிப்படையில் அதை ஏற்க அவர் கட்டுப்பட்டுள்ளதாக அறிவித்து, அவர் புஷ் மற்றும் கோர் விவகாரத்திற்கு அப்படியே எதிர்விதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

இத்தகைய சட்டரீதியிலான தந்திரங்களின் ஜனநாயக-விரோத குணாம்சமானது, ஒரு மறுவாக்கு எண்ணிக்கையை நிறுத்துவது மற்றும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வெற்றியைப் பாதுகாப்பது என அதே நடைமுறை முடிவை எட்டுவதற்காக, “கூட்டாட்சி" மற்றும் கூட்டாட்சி-எதிர்ப்பு ஆகிய இரண்டுமே கோட்பாடுகளைத் தொலைத்தொழித்து வலியுறுத்தப்படுகின்றன என்ற உண்மையையே எடுத்துக்காட்டுகின்றன.

ஜில் ஸ்டைனின் வழக்கறிஞர்கள் சட்ட சவால்களைத் தாக்கல் செய்துள்ள, ட்ரம்ப் சிறிய வித்தியாசத்தில் வென்ற மூன்று மாநிலங்களில் ஒன்றான விஸ்கான்சனில் ஜனாதிபதி தேர்தல் மறுவாக்கு எண்ணிக்கை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அம்மாநிலத்தில் ட்ரம்ப் 22,557 வாக்குகள் முன்னிலையில் உள்ளார், மற்றும் சுமார் 70 சதவீத வாக்குகள் மறுவாக்கு எண்ணிக்கையில் எண்ணப்பட்டுவிட்டன, அதில் கிளிண்டனுக்கு வெறும் 82 வாக்குகள் மட்டுமே கூடுதலாக கிடைத்துள்ளது. உள்ளாட்சிகளில் பாதி மறுவாக்கு எண்ணிக்கை முடிந்துவிட்டதாகவும், ஏனையவற்றில் டிசம்பர் 12 இறுதி நாளுக்கு முன்னரே முடிந்துவிடும் என்றும் விஸ்கான்சின் தேர்தல் ஆணையம் புதனன்று அறிவித்தது.

பென்சில்வேனியாவில் உள்ளாட்சி அதிகாரிகள் வெளிநாட்டு பட்டியல் மற்றும் சவாலான வாக்குச்சீட்டுக்களை எண்ணி முடித்த பின்னர், ட்ரம்ப் வெற்றியின் வாக்கு வித்தியாசம் 44,000 க்கு சற்று அதிகமாக கணிசமானளவிற்கு குறைந்துள்ள நிலையில், இன்னும் அங்கே மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கவில்லை. இது ஆரம்ப எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்ட 126,000 வாக்கு வித்தியாசத்திலிருந்தும், ஸ்டைன் மறுஎண்ணிக்கைக்கு கோரிய அந்நேரத்தில் இருந்த 69,000 வாக்குகள் என்ற வித்தியாசத்தை விடவும் கூர்மையாக குறைந்துள்ளது.

மாநிலந்தழுவிய மறுஎண்ணிக்கைக்கான அம்மாநிலத்தின் தன்னியல்பான தூண்டுதலை (state’s automatic trigger) விட இந்த 44,000 எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கிறது. அம்மாநிலத்தின் தன்னியல்பான தூண்டுதல் என்பது வாக்குகளில் 0.5 சதவீதமாகும், ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்த வரையில் அது சுமார் 30,000 வாக்குகளாகும்.

பிலடெல்பியாவின் கூட்டாட்சி மாவட்ட நீதிபதி பௌல் டயமண்ட், மாநிலங்கள் அவற்றின் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்க அவற்றிற்கான கூட்டாட்சியின் இறுதி காலக்கெடுவிற்கு வெறும் நான்கு நாட்களுக்கு முன்னதாக, டிசம்பர் 9 வெள்ளிக்கிழமைக்கு மறுஎண்ணிக்கைக்கான ஸ்டைனின் முறையீடு மீதான விசாரணையை வைத்துள்ளார். இறுதி காலக்கெடுவிற்கு முன்னதாக (இது டிசம்பர் 19 அன்று நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்வு சபையின் உத்தியோகபூர்வ கூட்டத்திற்கு ஆறு நாட்களுக்கு முந்தைய தினமாகும்) அதற்குள் மறுஎண்ணிக்கையை நடத்த போதிய நேரமில்லை என்று அவர்கள் வாதிடுவதற்காக, மாநில குடியரசு கட்சி நிர்வாகிகளும் மற்றும் ட்ரம்ப் பிரச்சாரக்குழுவும் வேண்டுமென்றே சட்ட வழிமுறைகளை இழுத்தடித்து வருகின்றனர்.