ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan opposition intensifies anti-government campaign

இலங்கை எதிர்க் கட்சி அரசாங்க எதிர்ப்பு பிரச்சாரத்தை தீவிரமாக்குகின்றது

By W.A. Sunil 
4 August 2016

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆளும் கூட்டணியை சவால் செய்வதற்காக, ஐந்து நாள் ஊர்வலத்தை நடத்திய பின்னர் ஆகஸ்ட் 1 அன்று கொழும்பில் ஒரு கூட்டத்தை நடத்தியது.

இந்த ஊர்வலமானது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்கள் சம்பந்தமாக பரவலாக காணப்படும் எதிர்ப்பை சுரண்டிக் கொள்ள முயல்வதன் ஊடாக, ஒரு வலதுசாரி மற்றும் பேரினவாத பிரச்சாரத்தை முன்னெடுப்பதன் மூலம் இராஜபக்ஷவை மீண்டும் அதிகாரத்தில் அமர்த்துவதற்கான ஒரு முயற்சியாகும்.

அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் மூலம் 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷ வெளியேற்றப்பட்டு சிறிசேன பதவியில் இருத்தப்பட்டார். இராஜபக்ஷவின் அரசாங்கத்தில் முன்னாள் சிரேஷ்ட அமைச்சராக இருந்த, ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (ஸ்ரீ.ல.சு.க.) பொதுச் செயலாளரான சிறிசேன, எதிர் கட்சிகளின் பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வெளியேறினார்.

வாஷிங்டனுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் விக்கிரமசிங்கவும், இந்த ஆட்சி மாற்றத்திற்கு உதவினர். வாஷிங்டன், இராஜபக்ஷவின் ஜனநாயக விரோத ஆட்சியின் வழிமுறைகளையிட்டு நீண்ட காலமாக பாராமுகமாக இருந்தபோதிலும், பெய்ஜிங் உடனான அவரது நெருக்கமான உறவுகளை முறித்துக்கொண்டு சீனாவுக்கு எதிரான தனது இராணுவ திட்டமிடலின் பின்னால், பிராந்தியம் முழுவதும் உள்ள பிற நாடுகளுடன், இலங்கையையும் மறுபடியும் அணிதிரட்ட விரும்பியது.

பதவியேற்ற பின், சிறிசேன ஸ்ரீ.ல.சு.க.யினதும் ஸ்ரீ.ல.சு.க. தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் (ஐ.ம.சு.மு.) தலைமையை எடுத்துக்கொண்டார். பின்னர் அவர் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியுடன் (ஐ.தே.க.) ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்துக்காக இந்தக் கூட்டணியை வழிநடத்தினார். எனினும், மூன்று டஜன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிசேனவை நிராகரித்து, இராஜபக்ஷவைச் சூழ மீண்டும் அணிதிரண்டு, அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய ஒரு "கூட்டு எதிரணியை" உருவாக்கினர்.

பிரச்சாரத்திற்கு பிரசித்தியை பெறுவதற்காக, இராஜபக்ஷவின் முன்னணி, கண்டிக்கு அருகே இருந்து கொழும்பு வரை "மக்கள் போராட்டம்" என்ற பெயரில் 100 கிலோமீட்டர் ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது. ஒரு மில்லியன் மக்கள் தலைநகரில் அணிரள்வார்கள் என்று அது பிதற்றிக்கொண்ட போதிலும், எந்த இடத்திலும் ஆர்ப்பாட்டம் அந்த எண்ணிக்கையை அடையவில்லை. போலீஸ் மதிப்பீடு வேண்டுமென்றே குறைந்ததாக இருக்க முடியும் என்றாலும் கூட, அது கூட்டத்தில், 10,000 பேரே இருந்ததாக அறிவித்தது. இராஜபக்ஷவின் அரசாங்கம் அதிகாரத்தில் போது, வாழ்க்கை நிலைமைகள் மீதான அதன் இடைவிடாத தாக்குதல்கள் மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகள் காரணமாக முற்றிலும் அதிருப்திக்கு உள்ளாகியிருந்தது.

இந்த எதிர் குழுக்கள், ஜனநாயக உரிமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் பற்றி கவலையை தூண்டுவதன் பேரில் வரி அதிகரிப்பு, மானியம் வெட்டுக்கள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்புக்கும் எதிராக கோஷங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதே சமயம், "நாட்டை பிளவுபடுத்த வேண்டாம்," "இலங்கையை காட்டிக்கொடுக்க வேண்டாம்" மற்றும் "போர் வீரர்களை நசுக்க வேண்டாம்” போன்ற சுலோகங்களை கூவி, சிங்களம் இனவாதத்தை கிளறிவிடுவதற்காக அவர்கள் தமிழ் முதலாளித்துவ கும்பலுடனான எந்தவொரு அதிகாரப் பகிர்வையும் எதிர்த்தனர்.

கொழும்பில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இராஜபக்ஷ, அரசாங்கம் (இராணுவ) போர் வீரர்களை சிறையில் அடைக்கப் போவதாகக் கூறி, இராணுவத்துக்கு அழைப்புவிட்டார். அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகளுகளை நசுக்கிய இராணுவப் படைகளைத் தண்டிக்க முயல்கிறது என்பதே அவரது குற்றச்சாட்டாகும். உண்மையில், 1983ல் யுத்தம் தொடங்கியதில் இருந்தே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் பொறுப்புச் சொல்ல வேண்டிய யுத்த குற்றங்களை அரசாங்கம் மூடி மறைக்கின்றது.

பௌத்த பிக்குகளையும் கூட சிறைக்கு அனுப்புவதாக அரசாங்கத்தை இராஜபக்ஷ குற்றம் சாட்டினார். தனது பிரச்சாரத்துக்குப் பின்னால் பௌத்த துறவிகளை அணிதிரட்டுவதில் அவர் ஆர்வமாக உள்ளார். தனது உரையில் முடிவில் இராஜபக்ஷ அச்சுறுத்தும் வகையில் அறிவித்ததாவது: "இந்த ஊர்வலம் ஒரு ஒத்திகை மட்டுமே. அடுத்த முறை நாங்கள் வருவது திரும்பிப் போவாதற்காக அல்ல."

அரசாங்கத்தின் உர மானிய வெட்டுக்கள் மற்றும் பெறுமதி சேர் வரியினாலும் (வாட்) பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மீது இராஜபக்ஷ அனுதாபம் காட்டினார். உண்மையில், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், வெறுமனே இராஜபக்ஷவின் தாக்குதல்களையே ஆழப்படுத்துகின்றது. அவரது அரசாங்கம், ஊதிய அதிகரிப்பை நிறுத்தி, சமூக மானியங்களை வெட்டிக் குறைத்ததோடு தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை நசுக்க பொலிஸ் மற்றும் இராணுவத்தை திரட்டியது.

ஒரு அரசியல் மறுபிரவேசத்துக்கு முற்படும் அதேவேளை, இராஜபக்ஷவின் பிரச்சாரமானது வளர்ச்சியடைந்து வரும் சமூக அமைதியின்மைக்கு ஒரு திட்டவட்டமான பதிலைப் பிரதிபலிக்கிறது. அது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி அதன் மீது பாய்வதற்காக, ஒரு வலதுசாரி, சிங்களப் பேரினவாத இயக்கத்தை உருவாக்க முயலுகிறது.

சிறிசேனவும் அரசாங்கமும் உக்கிரமடைந்து வரும் அரசியல் நெருக்கடியை கட்டுப்படுத்த ஏக்கத்துடன் முயற்சிக்கின்றனர். ஊர்வலத்துக்கு முந்தைய நாள் மாலை, ஸ்ரீ.ல.சு.க.யில் இராஜபக்ஷ பிரிவினருடன் ஒரு அவசரக் கூட்டத்தை நடத்திய சிறிசேன, "ஸ்ரீ.ல.சு.க.யில் இருந்துகொண்டே புதிய இயக்கங்களை, சக்திகளை அல்லது கட்சிகளை அமைக்க" எவருக்கும் அனுமதி இல்லை என எச்சரித்தார். ஆனாலும் ஊர்வலம் இடம்பெற்றது.

இராஜபக்ஷவின் குழுவை பிடிக்குள் வைத்திருப்தற்காக, அவரது ஆட்சிக் காலத்தில் ஊழல் சம்பந்தமாக பொலிஸ் மற்றும் நீதித்துறை விசாரணைகளை அரசாங்கம் தீவிரப்படுத்தியுள்ளது. ஆளும் கும்பலின் ஒவ்வொரு பிரிவும் ஊழல் மற்றும் கறைபடிந்த கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வந்துள்ள காரணத்தால், இது அப்பட்டமான பாசாங்குத்தனம் ஆகும். எனினும், இந்த விசாரணைகள், அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சி பிரிவுகளுக்கும் இடையே பிளவு அதிகரித்துள்ளன.

இராஜபக்ஷவின் கூட்டத்துக்கு ஒரு நாள் முன்னதாக ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சிறிசேன பிரகடனம் செய்ததாவது: "ஊர்வலங்களும் பேச்சுக்களும் எங்கள் நோக்கத்தை தடுத்து நிறுத்த முடியாது. நாம் ஐந்து வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வோம். யாரும் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. "சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க, தமது தேசிய ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை 2020 வரை நீடித்துக்கொள்ள முன்னரே முடிவு செய்து கொண்டது, கூட்டு எதிர்க் கட்சிக்கு விரோதமாக மட்டுமன்றி, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் தனது கரத்தை பலப்படுத்திக்கொள்ளும் முயற்சியாகவே ஆகும்.

ஆழமடைந்துவரும் உலக மந்தநிலைப் போக்கு, ஏற்றுமதி வீழ்ச்சி மற்றும் கடன் அதிகரிப்பை எதிர்கொள்ளும் அரசாங்கம், பிணை எடுப்பு நிதிக்கு ஈடாக, சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள முதலீட்டாளர் சார்பு கொள்கைகள் மற்றும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த தாக்குதல்கள் ஏற்கனவே உழைக்கும் மக்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் மாணவர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை கிளப்பிவிட்டுள்ளது. சமீபத்திய நாட்களில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான அரசாங்க ஊழியர்களும் அத்துடன் விவசாயிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களும் அரசின் கொள்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எதிர்க்கட்சி பிரச்சாரமானது அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கி, சர்வதேச நாணய நிதிய கடன் நிபந்தனைகளை அமுல்படுத்துவதை சாத்தியமற்றதாக்கிவிடக் கூடும் என்று ஆளும் கும்பலின் பகுதியினரிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த பதட்டத்தை வெளிப்படுத்தி சண்டே டைம்ஸ் பத்திரிகையின் அரசியல் கட்டுரையாளர் எழுதியிருப்பதாவது: "அவர்களின் நடவடிக்கைகள், தனது பொருளாதார சுபீட்சத்தை நம்பியிருக்கும் தேசத்தின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளதை ஜீரனிக்க முடியாது. கூட்டு எதிரணியை அவர்கள் இப்போது வீதியில் இருப்பது போல் அலைச்சலில் விடுங்கள். ஆனால், ஆனால் அவர்கள் தங்கள் பயணத்தில் நாட்டையும் உடன் அழைத்துச் செல்ல இடமளிக்க வேண்டாம். "

இராஜபக்ஷ குழுவின் வலதுசாரி பிரச்சாரமும் அரசாங்கத்தின் ஆழமடைந்துவரும் சிக்கன தாக்குதலும் தொழிலாள வர்க்கத்திற்கு பெரும் ஆபத்துக்களை முன்வைக்கின்றது. வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கு பதிலிறுப்பதன் பேரில், தொழிலாளர்கள் இளைஞர்களையும்

ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு, சர்வதேச சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, தொழிலாள-விவசாயிகள் அரசாங்கத்துக்காகப் போராட வேண்டும்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.), இந்த வேலைத் திட்டம் பற்றி கலந்துரையாட செப்டெம்பர் 2ம் திகதி கண்டியில் இடம்பெறவுள்ள கட்சியின் பொதுக் கூட்டத்திற்கு வர்க்க நனவுகொண்ட அனைத்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றது.