ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lanka: plantation unions conspires with companies to impose high productivity deal

இலங்கை: உயர்ந்த உற்பத்தி திறனை திணிப்பதற்கு பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கம்பனிகளுடன் சதிசெய்கின்றன

M. Thevarajah
3 August 16

தேயிலை மற்றும் இறப்பர் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைக்கவும் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்குமான புதிய திட்டத்தை புகுத்துவதற்கு பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் திரைமறைவில் அரசாங்கத்துடனும் கம்பனிகளுடனும் நெருக்கமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றன.

கடந்த வருடம் மார்ச் மாதம் முன்னய கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்ததில் இருந்து, பெருந்தோட்டக் கம்பனிகள் எந்தவொரு சம்பள உயர்வையும் கடுமையாக நிராகரித்து வருகின்றன. நெருக்கடியின் காரணமாக சம்பள உயர்வை வழங்கமுடியாது எனக் கூறி, சம்பளத்தை குறைப்பதற்கும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் வருமான பங்கீட்டு முறை ஒன்றை அவர்கள் பிரேரித்துள்ளனர். இந்த திட்டத்தின்படி, ஒரு பிரதேசமோ அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை தேயிலை செடிகளோ தொழிலாளர்களுக்கு பராமரிப்பிற்காக ஒப்படைக்கப்பட்டு, கம்பனியின் செலவுகளும் இலாபமும் கழிக்கப்பட்ட பின், வருமானத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படும். நடைமுறையில், இத்திட்டம் பழைய குத்தகை-விவசாயிகள் முறையை ஒத்ததாகும்.

இந்த முறைக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு கொடுத்த போதிலும், தொழிலாளர்களின் எதிர்ப்பு பரந்தளவில் வெடிக்கும் என்ற பயத்தினால் கம்பனிகள் இதனை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக பல தோட்டங்களில் தொழிலாளர்கள் வேலைப் பழுவை அதிகரிப்பதற்கு எதிராக எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், பெருந்தோட்டதோட்ட உரிமையாளர் சங்கம் “கலப்பு முறை” என்று அழைக்கப்படும் ஒரு புதிய கலப்பு சம்பள கட்டமைப்பை கடந்த மாதம் பிரேரித்திருக்கின்றது. இதன்படி, 12 வேலை நாட்களுக்கு வழமையான முறைப்படி நாள் சம்பளம் வழங்கப்படும். அது  620 ரூபாவிலிருந்து 720 ரூபாவாக 100 ரூபாவால் அதிகரிக்கப்படும். ஏனய 13 நாட்களுக்கு தொழிலாளர்கள் தேயிலை அல்லது இறப்பரின் உற்பத்தி திறனின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும். இந்த முறை நிச்சயமாக தொழிலாளர்களின் வேலைப் பளுவை அதிகரிக்கும் அதேவேளை, சம்பளத்தையும் குறைக்கும்.

பெருந்தோட்ட உரிமையாளர் சங்கம், கடந்த மாதம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசநாயக்க மற்றும் தொழிற்சங்கங்களுடனும் இந்த முறை பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. எனினும் ஒரு தொழிற்சங்கம் கூட இந்த புதிய திட்டத்தை எதிர்க்க முன்வராமல், அதற்கு அவற்றின் ஆதரவை சமிக்ஞை செய்துள்ளன.

மலையக மக்கள் முன்னணி தலைவரும் தற்போதய அரசாங்கத்தின் அமைச்சருமான  வி. இராதாகிருஷ்ணனிடம் உலக சோசலிச வலைத் தளம் வினவியபோது, “கம்பனியின் புதிய பிரேரணை சம்பந்தமாக நாங்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றோம், ஆனால் இன்னமும் அது சம்பந்தமாக முடிவு எடுக்கவில்லை,” எனக் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது: “பெருந்தோட்டக் கம்பனிகள், தாம் நஷ்டத்தில் இயங்குவதாகவும் தோட்டங்களை கொண்டுநடத்த முடியாத நிலை உள்ளதாகவும்  கூறுகின்றன. இத்தகைய நிலையில் இதற்கான பதலீடு என்ன? உங்களால் எதாவது மாற்றீட்டைக் கூறமுடியுமா? நாங்கள் எதாவது பதிலீட்டை முன்வைக்காவிட்டால், கம்பனிகள் தோட்டங்களை மூடத்தள்ளப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகின்றார். தொழிலாளர்கள் வேலை இழந்து வீதிக்கு வரவேண்டிய நிலைதான் வரும். இந்த நிலைமையின் கீழ் நாங்கள் என்ன செய்ய முடியும்”.  

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) தலைவர் முத்து சிவலிங்கமும் இதே மாதிரியான கருத்தையே தெரிவித்தார்: “முதலாளிமார்களுடன் கூட்டு ஒப்பந்தம் பற்றி பேசுவதற்கான திகதிக்காக நாங்கள் காத்திருக்கின்றோம். தோட்டக் கம்பனிகள் நெருக்கடியில் இருக்கின்றன என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ளகின்றோம், சில கம்பனிகள் தோட்டங்களை மூடுவதற்கு முயற்சிக்கின்றன. தொழிலாளர்கள் தொழில்களை இழப்பர். கம்பனியின் புதிய பிரேரணை சம்பந்தமாக ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்து பேசி நாங்கள் தீர்மானங்களை எடுக்க வேண்டும்”.

தொழிலாளர் தேசிய சங்கம் (NUW), ஜனநாயக மக்கள் முன்னணி (ஜ.ம.மு) ஆகிய ஏனைய தொழிற்சங்கங்களும் இது சம்பந்தமாக அரசாங்கத்துடன் மூடிமறைத்து செயற்படுகின்றன. அந்த தொழிற் சங்கங்களின் தலைவர்களான முறையே பி. திகாம்பரம் மற்றும் மனோ கணேசனும் தற்போதைய அராங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்காளாவர்.

இந்த தொழிற்சங்கத் தலைவர்களின் நிலைப்பாடு, அவர்களுக்கு கம்பனிகளின் பிரேரணையை ஏற்றுக் கொள்வதை தவிர, தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான பதிலீட்டு வேலைத்திட்டம் கிடையாது என்பதை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இராதாகிருஷ்ணன், முத்துசிவலிங்கம் மற்றும் ஏனையோரும், கம்பனி எஜமான்களுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து, கம்பனிகள் நஷ்டதில் இயங்குவதால் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள்; அதனால் தொழிலாளர்கள் வறிய மட்டத்திலான சம்பளத்தை ஏற்றுக்கொண்டு கம்பனிகளை இலாபமடய செய்ய வேண்டும், என்று கூறியவாறு தொழிலாளர்களை மிரட்டுகின்றனர்.

இது, பெருந்தோட்ட உரிமையாளர் சங்கத்தின் பிரேரணைகளை திணிப்பதற்கு, தொழிற்சங்கங்கள் முதலாளிமாரின் தொழிற்துறை பொலிஸ்காரனாக இருந்து ஆதரவளிக்க தயாராவதைப் பற்றி ஒரு எச்சரிக்கையாகும். கடந்த காலத்தில் இந்த தொழிற்சங்கங்கள், தொழிலாளர்களின் எதிர்ப்புகளை திசைதிருப்பவும் அவர்களை மிகவும் இழிவான வாழ்க்கை மற்றும் வேலை நிலைமைகளில் வைக்கவும் பெருந்தோட்ட உரிமையாளர்களுக்கு உதவி செய்தன.

பூகோள நெருக்கடியின் பாகமாக பெருந் தோட்டத்துறையின் நெருக்கடி புதிய மட்டத்தை அடைந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக தேயிலையின் ஏற்றுமதியின் அளவும் விலையும் தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகின்றது. இறப்பர் தொழிற்துறையும் இதே நிலமையே முகம் கொடுக்கின்றது. மத்திய கிழக்கு யுத்தம் மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதாரத் தடையும் இலங்கையின் தேயிலை மற்றும் இறப்பர் துறைகளை மிகவும் பாதித்துள்ளன.

தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளான கென்யா, இந்தியா, வியட்னாம், சீனா மற்றும் தென் அமெரிக்கா போன்ற நாடுகள், தமது சந்தைகளின் பங்கை அதிகரிப்பதற்காக தொழிலாளர்களின் நிலைமைகளை நசுக்கி, குரல் வளையை நெரிக்கும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஒவ்வொரு தொழிற்துறையிலும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும் வயிற்றை இறுக்கிக் கட்டிக்கொள்ள வேண்டும் என்ற அழைப்புக்கு முடிவே இல்லை.

உலக முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறை, 1930ம் ஆண்டின் பெரும் பொருளாதார பின்னடைவை விஞ்சியுள்ளதோடு ஆழமடைந்தும் வருகின்றது. உலகில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளும், இந்த அமைப்பு முறைக்குள் எத்தகைய தீர்வையும் காணமுடியாது. அமெரிக்க உட்பட்ட ஏகாதிபத்திய சக்திகள், உலகத்தை அழிவுகரமான மூன்றாம் உலக யுத்தத்தை நோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாட்டிலும், முதாலளித்துவ கூட்டுத்தாபனங்களும் அவற்றுக்குச் சேவை செய்யும் அரசாங்கங்களும், தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் எதிராக மூர்க்கத்தனமாக திரும்பி, பொரளாதார நெருக்கடியின் சுமைகளை அவர்களின் தோள்களின் மீது சுமத்துவதற்கும் ஜனநாயக உரிமைகளை நசுக்குவதற்கும் பொலிஸ்-அரச வழிமுறைகளை உபயோகிப்பதை அதிகரித்துள்ளன.

தொழிற்சங்கங்களும் அதன் தலைவர்களும் முதலாளிமாரின் நேரடி கருவிகளாக மாறியுள்ளனர். முதலாளித்துவ அமைப்பு முறை மற்றும் அரசுடனும் பிணைந்துள்ள தொழிற்சங்கங்களின் நெருக்கடிக்கான “தீர்வுகள்”, முதலாளிமாரின்  “தீர்வை” ஒத்தவையே. உண்மையில், பல தொழிற்சங்க அதிகாரிகள், பெருந்தோட்டம் அல்லது வர்த்தக உரிமையாளர்களாவர். அதே நேரம் அவர்கள் அமைசுப் பதவிகளை அல்லது அரச அதிகாரத்துவத்தில் உள்ள முதலாளித்துவ அரசியல்வாதிகளாவர்.

தொழிலாளர்களே ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உண்மையான உற்பத்தியாளர்கள் ஆவர். அவர்கள் இந்த நெருக்கடிக்கு பொறுப்பானவர்கள் அல்ல. சமுதாயத்தின் பெரும்பான்மையானவர்களின் தேவைக்காக அன்றி, இலாபத்திற்காக உற்பத்தி செய்யும், ஏகாதிபத்தியத்தினால் சர்வதேச ரீதியாக ஆதிக்கம் செலுத்தப்படுகின்ற முதலாளித்துவ வர்க்கமே இத்தகைய நெருக்கடிக்கான பொறுப்பாளியாகும்.

மனித இனத்தின் தேவைகளை நிறைவு செய்யக் கூடியவாறு, திட்டமிட்ட முறையில் உற்பத்தியை சோசலிச அடிப்படையில் ஒழுங்கு அமைக்கும் ஒரு உண்மையான மாற்றீடு, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் அதன் ஒரு பகுதியான இலங்கைத் தொழிலாள வர்க்கத்திற்கும் உள்ளது. பெருந்தோட்டங்கள், பெரிய வங்கிகள் மற்றும் நிறுவனங்களும் தொழிலாளர் கட்டுப்பாட்டின் கீழ் தேசியமயமாக்கப்பட வேண்டும்.

முதலாளித்துவ அமைப்பு முறையின் ஒரு பகுதியாக இருக்கின்ற தொழிற்சங்கங்களும் அதன் அதிகாரிகளும், தொழிலாள வர்க்கத்திற்கு ஒரே தீர்வாக இருக்கின்ற சோசலிச பதிலீட்டுக்கு முழு எதிரிகளாவர். பெருந்தோட்டங்களிலும் ஏனைய இடங்களிலும் அணுபவங்களின் அடிப்படையில், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களை நசுக்கும் கவசங்களாக மாறியுள்ளன. தொழிலாளர்களுக்கு அவர்களின் வரலாற்று நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்க புதிய வகையான அமைப்புத் தேவை. அதாவது தொழிற்சங்கங்களிலிருந்து முற்றிலும் சுயாதீனமான நடவடிக்கை குழுக்களை வேலைத் தளங்களிலும் பெருந்தோட்டங்களிலும் கட்டியெழுப்ப வேண்டும்.