ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds of thousands march in new protest against French labour law

பிரெஞ்சு தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான புதிய ஆர்ப்பாட்டத்தில் நூறாயிரக்கணக்கானோரின் பேரணி

By V. Gnana and Stéphane Hugues 
16 September 2016

சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பிரான்ஸ் எங்கிலும் நேற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் இளைஞர்களும் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். தொழிற்சங்கங்களே கூட சோசலிஸ்ட் கட்சி (PS) இச்சட்டத்தை உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொண்ட சமயமான ஜூலை மற்றும் ஆகஸ்டின் போதே இச்சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்தி விட்டிருந்தன என்றபோதும்,  இன்னும் கூட அச்சட்டத்திற்கு ஆழமான மக்கள் எதிர்ப்பு இருந்து வருகிறது. வசந்த காலத்தில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகள், மக்களில் 70 சதவீதம் பேர் இச்சட்டத்தை PS ஆல் அறிமுகம் செய்யப்பட்ட வடிவத்தில் எதிர்ப்பதாகக் கண்டறிந்து கூறின.


தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ள Jussieu பல்கலைக்கழகம்

நேற்று பாரிஸ் உட்பட பிரான்ஸ் எங்கிலும் 169 ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் வெகுஜனப் போக்குவரத்துத் துறை உள்ளிட ஏராளமான துறைகளில் தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையில் இறங்கினர். 170,000 ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடெங்கிலும் பேரணிகளில் பங்குபற்றியதாக தொழிற்சங்கங்கள் கூறிய அதேவேளை, போலிஸ் தரப்பில் இந்த எண்ணிக்கை 78,000 ஆகக் குறிப்பிடப்படுகிறது. ஏராளமான மாணவர்களும் கூட ஆர்ப்பாட்டங்களுக்கு வருகைதந்திருந்தனர்.

கிழக்கு நகரமான பேல்ஃபோர்ட் (Belfort),  ஆர்ப்பாட்டங்களின் குவியப் புள்ளிகளில் ஒன்றாய் இருந்தது. இங்கிருக்கும் தொடர்வண்டி தயாரிப்பு நிறுவனமான ஆல்ஸ்டொம் (Alstom) இல் இருக்கும் ஒரு தயாரிப்பு ஆலையை மூடவிருப்பதாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இங்கிருந்து தான் இந்நிறுவனம் 1880 இல் தனது முதல் நீராவி இரயிலை தயாரித்தது. சுமார் 400 வேலைகள் அச்சுறுத்தலில் உள்ளன. ‘ஆல்ஸ்டொம் தான் பேல்ஃபோர்ட், பேல்ஃபோர்ட் தான் ஆல்ஸ்டம்” என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரமெங்கும் பேரணியாக வலம்வந்தனர்.

பாரிஸ் உட்பட பல நகரங்களிலும் மோதல்கள் வெடித்தன; 62 பேர் கைது செய்யப்பட்டனர், 32 பேர் காவலில் வைக்கப்பட்டனர். பாரிஸில் ஐந்து போலிஸ்காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. இதில் ஒருவர் மீது பெட்ரோல் குண்டு தாக்கியிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்காக பாஸ்டிய் சதுக்கத்திற்குள் நுழைந்த ஒவ்வொருவரையும் நிறுத்தி போலிஸ் முழுமையாக சோதித்திருந்த நிலையிலும் இந்த பெட்ரோல் குண்டு எப்படியோ போலிசின் கண்காணிப்புக்குத் தப்பியிருந்தது.

தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டங்கள் தொடங்குகின்ற நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிரான தொழிலாளர்களும் இளைஞர்களும் PS இன் நீண்ட காலக் கூட்டாளிகளாய் இருந்து வந்திருக்கும் தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது அரசியல் கட்சிகளிடம் இருந்து இன்னும் அதிகமான வெளிப்படையான எதிர்ப்புக்கும் குரோதத்திற்கும் முகம்கொடுக்கின்றனர்.

இந்த வசந்தகாலம் தொடங்கி இந்த புதிய தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை  ஒழுங்கமைப்பதற்கு முன்னால், பிரான்சின் வழமையான தொழிலாளர் சட்டத்தினை மீறிய வகையில் முதலாளிகளுடன் ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தொழிற்சங்கங்களை அனுமதிக்கக்கூடியதாக இருக்கும் இச்சட்டத்தினை PS அரசாங்கத்துடனும் பெரும் வணிகக் குழுக்களுடனும் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தன. ஆர்ப்பாட்டங்களுக்கு அவை அழைப்பு விடுத்ததன் நோக்கம் இச்சட்டத்தை தடுத்துநிறுத்துவதற்கென இருக்கவில்லை, மாறாக, PS இன் சிக்கன நடவடிக்கை திட்டநிரலுக்கு எதிரான வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மீதான அரசியல் கட்டுப்பாடு தங்களிடமே இருப்பதை உறுதி செய்வதே அவற்றின் நோக்கமாய் இருந்தது. இப்போது PS சட்டத்தை நிறைவேற்றி விட்டிருக்கும் நிலையில், அவை இன்னும் வெளிப்படையாய் ஆர்ப்பாட்டங்களுக்கு குரோதம் கொண்டவையாகி இருக்கின்றன.


CGT, FO, Solidaire நிர்வாகிகளை கொண்ட பிரதான பேரணி

“இன்னுமொரு போராட்டங்களின் அலையை நாம் கொண்டுவரப் போவதில்லை, ஆனால் தொழிலாளர் சட்டத்தை எதிர்த்துப் போராட வேறு வழிகள் இருக்கின்றன” என்று FO தொழிற்சங்கத்தின் தலைவரான Jean-Claude Mailly பாஸ்டிய் சதுக்கத்தில் பிரான்ஸ் 2 தொலைக்காட்சியிடம் கூறினார். “இப்போதைக்கு ஆக்ஸிலரேட்டர் பெடலில் இருந்து நமது காலை எடுக்கிறோம். ஒவ்வொரு வாரமும் நாம் இதைச் செய்யப் போவதில்லை.”

ஸ்ராலினிச CGT தொழிற்சங்கத்தின் பிலிப் மார்ட்டினேஸ் தொழிலாளர்கள் இச்சட்டத்தை எதிர்த்து “முழு மூச்சுடன்” போராட வேண்டும் என்று அறிவித்தார். ஆயினும், மேலும் கூடுதலான பரந்த ஆர்ப்பாட்டங்களுக்கான அழைப்பை தணிக்கின்ற வண்ணம், “நீதிமன்றங்கள் மற்றும் வேலையிடங்கள் உள்ளிட சமூக அணிதிரட்டலுக்கான பிற அச்சுகள்” இருக்க வேண்டும் என்றார் அவர்.

பாரிஸில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் PS அரசாங்கத்தையும் அதன் சிக்கன நடவடிக்கை திட்டநிரலையும் கண்டனம் செய்ததோடு சமூக எதிர்ப்பைத் தீவிரப்படுத்துவதற்கு அழைப்பு விடுத்தனர். WSWS செய்தியாளர்கள் அவர்களிடம் பேசினர்.

பிரெடரிகோ கூறினார், “நான் தொழிலாளர் சட்டத்தை படித்துப் பார்த்தேன். உண்மையில், அதன் வெவ்வேறு ஷரத்துகள் அனைத்துமே பிரெஞ்சு தொழிலாளர்களின் - தொழிலாளர்களில் இருந்து மேலாளர்கள் வரை அத்தனை வெவ்வேறு அடுக்குகளின் - நலன்களுக்கும் எதிரானவையாக இருக்கின்றன. இது ஒட்டுமொத்த பிரான்சுக்கும் ஒரு பின்னோக்கிய நடவடிக்கை என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் 200 ஆண்டுகளாய் நாம் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதற்காய் போராடி வந்திருக்கிறோம்.”

மக்கள் PS அரசாங்கத்திடம் முழுமையாக ஏமாற்றமடைந்திருந்ததாக அவர் குறிப்பிட்டார். “முதலில் அவர்கள் ஓர்பால்விருப்பினர் திருமணத்தை நிறைவேற்றினர். அது ஒரு முன்னோக்கிய அடியெடுப்பு. அது நல்ல விடயமாக இருந்தது, ஆனால் அதைத் தவிர்த்து, விடயங்கள் முன்னால் செல்லச் செல்ல, பிரெஞ்சுப் பொருளாதாரத்தை நடத்துவதற்கு அவர்கள் முற்றிலும் திறனற்றவர்களாய் இருப்பதை நாங்கள்  உணர்ந்தோம். இந்த அத்தனை வருடங்களிலும் சிக்கன நடவடிக்கை எங்களுக்கு எந்த நன்மையையும் கொண்டு வரவில்லை.”


ஆர்ப்பாட்டங்களுக்கு வரும் இளைஞர், யுவதிகளை போலிஸ் சோதனையிடுகிறது

அவரது நண்பியான ஹன்னா கூறினார்: “அரசியல்வாதிகள் பிரான்ஸை நிதிரீதியாக வியாபாரம் செய்வதற்கு கவர்ந்திழுக்கும் ஒரு இடமாக ஆக்கி விடுவதற்கு மட்டுமே விரும்புகிறார்கள், ஆனால் அங்கே மக்கள் என்று இருக்கிறார்கள் தானே. நாங்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்கிறோம், அதற்காக, அரசியல்வாதிகள்  எங்களை – இந்த வார்த்தைக்காக மன்னித்து விடுங்கள் - குடைந்தெடுக்க முடியும் என்று கருதக் கூடாது.”

PS “வெளிப்படையாக வலது நோக்கி சென்று கொண்டிருக்கிறது” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். அவர் கூறினார்: “ஒரு அடிப்படையான அரசியல் சீர்திருத்தம் நமக்கு அவசியமாக உள்ளது, ஏனென்றால் நம்மிடம் இருப்பது இனியும் உண்மையான சோசலிசமாக இல்லை. இருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்துமே அத்தனையும் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. இலாபங்களுக்கும் சொந்த நலன்களுக்குமான அரசியல் கட்சிகளின் அணிவகுப்பாகவே இது இருக்கிறது.”

லெய்லா என்ற ஒரு பல்கலைக்கழக மாணவியிடமும் WSWS பேசியது. அவர் கூறினார்: “நான் இங்கே நிற்கிறேன், ஏனென்றால் இந்த தொழிலாளர் சட்டத்திற்கு எதிராய் கோடை விடுமுறைக்கு முன்பாக இருந்து நான்கு மாதங்களாக நாங்கள் போராடி வந்திருக்கிறோம். எங்களுக்கு இச்சட்டம் தேவையில்லை, மக்களில் 70 சதவீதம் பேருக்கு இது தேவையில்லை, அப்படியிருந்தும் விடுமுறை சமயத்தில், மானுவல் வால்சும் [பிரதமர்] மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் அரசியல்சட்டத்தின் 49-3 வது ஷரத்தை [தேசிய சட்டமன்றத்தில் மசோதா மீது வாக்கெடுப்பு நடப்பதைத் தவிர்ப்பதற்காக] பயன்படுத்தி இதனை நிறைவேற்றி விட்டனர். எல்லை மீறி விட்டது, இது வீதிக் கிளர்ச்சி குறித்த ஒரு பிரச்சினை.”

நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் பிரான்சில் திணிக்கப்பட்ட அவசரகால நிலையையும் – தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் வசந்த காலத்தில் தொடங்கியதில் இருந்தே அவற்றின் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு நியாயமாக அரசாங்கமும் போலிசும் இதனைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன என்று லெய்லா கண்டித்தார். லெய்லா கூறினார்: “தாக்குதல்களுக்குப் பின்னர் அவசரகால நிலை அமலாக்கப்பட்டது, இது அவர்களுக்கு, உதாரணமாய், மக்கள் மீது அவர்கள் கைவைப்பதற்கும் நம்மை ஒன்றுகூடாமல் தடுப்பதற்குமான ஒரு நல்ல சாக்காக இருக்கிறது.”


பாஸ்டிய் சதுக்கத்தை சுற்றியிடைத்திருக்கும் போலிஸின் ஒரு தடுப்பரண்

அவர் மேலும் கூறினார்: “நான் ஒருபோதும் பொருட்களை உடைப்பதில்லை, ஆனால் உண்மையில் அதற்கு மக்கள் எப்படி இட்டுச் செல்லப்படுகிறார்கள் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது, ஏனென்றால் சூழ்நிலை இன்று முற்றிலும் சாத்தியமில்லாததாக இருக்கிறது, நாங்கள் ஒவ்வொரு இடத்திலும் கண்காணிக்கப்படுகிறோம், பரிசோதிக்கப்படுகிறோம். நாங்கள் குற்றவாளிகள் இல்லை. இந்த தொழிலாளர் சட்டத்தாலும் இன்றைய ஒட்டுமொத்த அரசியல் அமைப்புமுறையாலும் உளைச்சல் கண்டுள்ள மனிதர்கள் மட்டுமே.”

முந்தைய வலது-சாரி அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை மாற்றுவதாக வாக்குறுதியளித்ததை அடிப்படையாகக் கொண்டு 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதிகாரத்திற்கு வந்ததின் பின்னர் தொழிலாளர்கள் மீது இன்னும் கடுமையாக தாக்குதல் நடத்திய PS அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான பாத்திரத்தை லெய்லா கடுமையாக கண்டனம் செய்தார். அவர் கூறினார்: “இது வலது அல்லது இடது என அவர்கள் எப்படிக்  கூறினாலும் சரி, இன்று வலதுக்கும் இடதுக்கும் இடையிலான தெளிவான எதிர்ப்பு எதுவும் இல்லை என்பதில் எல்லோரும் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன், எல்லாம் அதே பழைய மோசமான முட்டாள்கள் தான், அந்த வார்த்தையை பயன்படுத்துவதற்காக மன்னித்து விடுங்கள்.”

சோசலிஸ்ட் கட்சி குறித்து கூறுகையில், அவர் கூறினார்: ”என்னைப் பொறுத்தவரை, அது கலைக்கப்பட வேண்டும். ஒரு சரியான அடிப்படையில், நாம் முழுமையாக முதலில் இருந்து தொடங்க வேண்டும். ஆனால் அப்படியான எதுவும் இன்னும் நடக்கவில்லை. நாம் இழுத்துச் செல்லப்படுகிறோம், அதனைப் பார்க்க வேண்டுமானால் நீங்கள் ஊடகங்கள் செயல்படும் விதத்தைப் பார்த்தாலே போதும். இங்கே நிற்பவர்கள் வெறுமனே தொழிலாளர் சட்டத்தினால் மட்டும் இங்கு வரவில்லை, எல்லாவற்றுக்குமாய் தான் இங்கே நிற்கிறார்கள். அவர்களுக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. தொழிலாளர் சட்டம் என்பது மக்களை வீதிக்கு விரட்டியதற்கான ஒரு பொறியாக மட்டுமே இருந்தது. இந்த நிலைமை போதும் போதும் என்றாகி விட்டதால் தான் அவர்கள் வீதிக்கு வருகின்றனர்.”