ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The New York bombings: Feeding the “war on terror”

நியூ யோர்க் குண்டுவெடிப்பு: “பயங்கரவாத எதிர்ப்பு போருக்கு" தீனிப்போடுகிறது 

Bill Van Auken
23 September 2016

கடந்த வாரயிறுதியில் நியூ யோர்க் மற்றும் நியூ ஜேர்சி பயங்கரவாத குண்டுவெடிப்புடன் சம்பந்தப்பட்ட அஹ்மத் கான் ரஹாமி மீது, ஒன்பது முறை கொலை முயற்சி செய்ததற்காக மற்றும் பாரிய படுகொலை ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக செவ்வாயன்று இரவு குற்றஞ்சாட்டப்பட்டது.

நிறைய தகவல்கள் வெளியாகி வருகின்ற நிலையில், குறைந்தபட்சம் நியூ யோர்க் நகரம் மீதான முந்தைய 9/11 தாக்குதல்கள் மற்றும் 2001 வாஷிங்டன் தாக்குதல் நடந்த பின்னோக்கிய தேதியிலிருந்து, இந்த குண்டுவெடிப்புகளும் குழப்பான மற்றும் முன்பினும் அதிக பரிட்சயமான வடிவத்தின் பாகமாக இருக்கின்றன என்பது தெளிவாகிறது. நடைமுறையளவில் அமெரிக்க மண்ணில் நடத்தப்பட்ட ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர், மத்திய புலனாய்வுத் துறைக்கு (FBI) அல்லது ஏனைய அமெரிக்க பொலிஸ் மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு பரிட்சயமானவராக மற்றும் முன்பே அடையாளம் காணப்பட்டவராக இருந்துள்ளார்.

மறுபுறம், “முறியடிக்கப்பட்ட" “பயங்கரவாத சதித்திட்டங்களை" பொறுத்த வரையில், ஏறத்தாழ ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அவற்றில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பெடரல் முகவர்களது சூழ்ச்சி நடவடிக்கைகளில் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்கள். பல சம்பவங்களில் தனிநபர்கள் அவர்களே ஒருபோதும் சொந்தமாக அத்தகைய நடவடிக்கைகளை தொடங்காத போதும், பெடரல் முகவர்களே ஆயுதங்கள், பணம் மற்றும் இலக்குகளை அளித்துள்ளனர்.

அவரது ஏழு வயதில் ஆப்கானிஸ்தானில் இருந்து குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்த குடியுரிமை பெற்ற ஒரு அமெரிக்க குடிமகனான ரஹாமி, வெடிக்கும் சாதனங்களை —குழாய் வெடிகுண்டுகள் மற்றும் பிரஷ் குக்கர் குண்டுகள்— பொருத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார், இத்தகைய குண்டுகளில் ஒன்று மன்ஹாட்டன் வீதியில் வெடித்து அதில் 31 பேர் காயமடைந்தனர். பொலிஸ் உடனான ஒரு துப்பாக்கிச்சண்டையில் சுடப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார், அதில் இரண்டு பொலிஸ்காரர்களும் காயமடைந்தனர்.

அந்த குண்டுவெடிப்புகளுக்கு பின்னர் அதிகாரிகள் உடனடியாக வெளியிட்ட அறிக்கைகளில், அத்தாக்குதல்களுக்கும் "சர்வதேச பயங்கரவாதத்திற்கும்" எந்த தொடர்பும் இல்லையென அறிவித்தனர். இந்த கதையை அதிகாரிகளே பரப்பிவிட்டார்கள் என்றே தோன்றுகிறது. அத்தகைய தொடர்புகளைக் குறித்து இவர்களுக்கு நன்கு தெரிந்திருந்ததுடன் அவற்றை ஒதுக்கி வைப்பதென்ற அவர்களது முந்தைய சொந்த முடிவுகளைக் குறித்து இப்போது அவர்களே கவலை கொண்டுள்ளனர்.

ரஹாமி இன் தந்தை மொஹம்மத் ரஹாமி, 2014 லேயே மத்திய உளவுத்துறைக்கு ஒரு விபரமான எச்சரிக்கை அளித்திருந்ததாக வியாழனன்று நியூ யோர்க் டைம்ஸ் குறிப்பிட்டது. அவர் மகன் அச்சறுத்தலுக்குரியவராக இருப்பதாகவும், அல் கொய்தா மற்றும் ஏனைய பயங்கரவாத குழுக்களால் அதிகரித்தளவில் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். குடும்ப தகராறு ஒன்றில் உடன்பிறந்தவரை அவர் மகன் தாக்கியதைத் தொடர்ந்து நடந்த ஒரு பொலிஸ் விசாரணையின் போது, மூத்த ரஹாமி உடன் பெடரல் முகவர்கள் பேசியிருந்தனர்.

“அவர் மீது ஒரு கண் வைத்திருக்குமாறு நான் மத்திய புலனாய்வுத்துறையிடம் கூறினேன்,” என்று டைம்ஸ் க்கு அவர் தெரிவித்தார். “அவர்கள் விசாரிக்கையில், 'அவர் ஒரு பயங்கரவாதியா?' என்றனர். 'எனக்குத் தெரியாது. அவர் ஒரு பயங்கரவாதியா என்று என்னால் உங்களுக்கு 100 சதவீதம் உத்தரவாதமளிக்க முடியாது. அவர் எந்த குழுக்களில் இருக்கிறார் என்பதும் எனக்கு தெரியாது என்பதால் என்னால் உங்களுக்குக் கூற முடியாது', என்று நான் கூறினேன்,” என்றார்.

பெடரல் உளவுத்துறை ஒருபோதும் அவர் மகனை விசாரணை செய்து பின்தொடரவே இல்லை என்பதையும் அவர் தந்தை தெரிவித்தார். 

ரஹாமி மற்றும் பெடரல் உளவுத்துறை முகமைகளுக்கு இடையிலான இந்த தொடர்பு மட்டுமே ஒரேயொரு விடயமல்ல. அவர் தந்தை உடனான மத்திய புலனாய்வுத்துறையின் விவாதங்களுக்கு வெறும் ஐந்து மாதங்களுக்கு முன்னர் தான், ரஹாமி ஓராண்டுகால பாகிஸ்தான் விஜயத்திலிருந்து திரும்பி இருந்தார். அங்கே அவர் பல்வேறு இஸ்லாமிய கன்னைகளின் தலைமையிடமாக விளங்கும் பாகிஸ்தானிய பலுசிஸ்தான் தலைநகரான Quetta க்கு விஜயம் செய்திருந்தார். அந்த விஜயத்திற்காக சுங்கத்துறை அதிகாரிகளால் அவர் இரண்டு முறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், சாத்தியமான பயங்கரவாத அச்சுறுத்தலை மதிப்பிடும் அமைப்பாக கூறப்படும் உள்நாட்டு பாதுகாப்புத்துறையின் ஒரு பிரிவான National Targeting Center க்கு அதை தெரிவிக்க வேண்டிய விடயமாக சுங்கத்துறை அதிகாரிகள் கருதினார்கள். இது மத்திய புலனாய்வுத்துறை மற்றும் ஏனைய அமைப்புகளுக்கும் தெரிவிக்கப்பட்டது.  

இஸ்லாமிய அரசில் இணையும் நோக்கத்துடன் அல்லது சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க ஆதரவிலான போரில் ஈடுபட்டுள்ள அல் கொய்தாவுடன் தொடர்புபட்ட போராளிகள் குழுக்கள் ஒன்றுடன் இணையும் நோக்கில், ரஹாமி துருக்கியின் அங்காராவிற்கு மற்றொரு விஜயம் செய்யக்கூடும் என்பதை மத்திய அரசு அதிகாரிகள் அறிந்திருந்தனர் என்பதும் அந்த குண்டுவெடிப்புக்குப் பின்னர் கூடுதலாக வெளியானது.

இறுதியாக, அவரைத் தடுப்புக்காவலில் எடுக்க வழக்கு பதிவு செய்கையில், இரண்டு நியூ ஜெர்ஸி, லிண்டன் பொலிஸ்காரர்களைச் சுடுவதற்கு ரஹாமி Glock 9mm கைத்துப்பாக்கியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார், ஆனால் கடந்த ஜூலையில் ரஹாமி Glock 9mm கைத்துப்பாக்கி வாங்கியது குறித்த தகவலும் பெடரல் அதிகாரிகளுக்குத் தெரிந்திருந்தது.    

9/11 ஐ அடுத்து பிரபலமான தட்டிக்கழிப்பாக இருந்த, “புள்ளிகளை இணைக்க" தவறியமை குறித்து மீண்டுமொருமுறை கேட்க முடிகிறது.

சில சமயங்களில், முந்தைய சம்பவங்களுடனான ஒத்தத்தன்மை மிகவும் ஒளிவுமறைவின்றி இருந்தது. ரஹாமியின் விடயத்தைப் போலவே, 2009 இல் நத்தார் பண்டிகைக்கு முதல் நாள் தனது உள்ளாடையில் வெடிகுண்டை மறைத்து வைத்து சென்று நோர்த்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானத்தை கீழிறக்க முயன்ற நைஜீரிய மாணவர் உமர் பரூக் அப்துல்முத்தலாப் இன் தந்தையும் அவர் மகனின் பயங்கரவாத தொடர்புகளைக் குறித்து அமெரிக்க அதிகாரிகளுக்கு எச்சரித்திருந்தார், ஆனால் அதுவும் புறக்கணிக்கப்பட்டது.

பின்னர் அங்கே 2013 போஸ்டன் தொடர் ஓட்டப் போட்டியில் குண்டுவெடிப்பு நடந்தது, அதன் பிரதான ஒழுங்கமைப்பாளராக இருந்தவர் தாமர்லன் ஜார்னெவ் (Tamerlan tsarnaev). வடக்கு காகசஸ் இன் ஆயுதமேந்திய குழுக்களுடன் தொடர்பு கொள்ள முயன்று வரும் ஒரு சந்தேகத்திற்குரிய தீவிர இஸ்லாமியவாதியாக ஜார்னெவ் ஐ ரஷ்ய உளவுத்துறை 2011 இல் அமெரிக்க அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டியது. அதை அடுத்து அவர் மத்திய புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்பட்டார், பின்னர் எந்தவித கேள்விகளும் இல்லாமல் காகசஸ் க்கு சென்று வர அனுமதிக்கப்பட்டிருந்தார்.  

அமெரிக்க அரசு பரந்த உளவுத்துறை எந்திரத்தை பேணி வருவதுடன் அது மக்கள் மீது கடுமையான உளவுவேலைகளை நடத்தி வருகின்ற நிலையில், இதுபோன்று தலையாய நபர்களைப் பின்தொடர தவறுவது அப்பாவித்தனமாக விளக்கமளிப்பதற்கும் அல்லது சர்வ சாதாரணமாக "புள்ளிகளை இணைப்பதில்" தோல்வி அடைந்ததைக் குறிப்பிடுவதற்கும் மட்டும் வாய்ப்பளிக்கவில்லை.      

ஒருபுறம், “பயங்கரவாதிகளாக" அடையாளம் காணப்பட்ட நபர்கள் பயணிப்பதை தடுக்காமல் இருக்கும் முடிவு, அமெரிக்க அரசாங்கம் அதன் வெளியுறவுக் கொள்கை நோக்கங்களை பின்தொடர இதுபோன்ற கூறுபாடுகளைப் பயன்படுத்தி வருகிறது என்ற உண்மையில் வேரூன்றியுள்ளது. இது குறைந்தபட்சம் 1980 களின் இறுதியில் இருந்து நடத்தப்படுகிறது, அப்போது ரஹாமியின் தந்தை ஆப்கானிஸ்தானில் சோவியத் ஆதரவிலான அரசாங்கத்திற்கு எதிராக சிஐஏ முடுக்கிவிட்ட போரில் ஆப்கான் முஜாஹிதீன் உடன் இணைந்து சண்டையிட்டு வந்தார். லிபியாவில் போலவே, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க போருக்காக சண்டையிடும் பினாமி படைகளது முதுகெலும்பாக வெளிநாட்டு இஸ்லாமியவாதிகள் இருந்துள்ளனர், மற்றும் அமெரிக்க உளவுத்துறை நீண்டகாலமாக ரஷ்யா மற்றும் சீனாவில் உள்ள இதேபோன்ற சக்திகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

மறுபுறம், பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் சுதந்திரமாக அதிகாரம் செலுத்துவதற்கு விடப்படுவதும் மற்றும் இயற்கையின் போக்குப்படி நடக்கட்டும் என்று விடுவதும், “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்" என்று அரைத்த மாவையே அரைக்கும் ஒரு தீர்க்கமான அரசியல் திட்டநிரலுக்கு சேவையாற்றுகிறது. இந்த "போர்", அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களை மேற்கொண்டு முன்னெடுக்க முடிவில்லா குண்டுவீச்சுக்கள் மற்றும் தாக்குதல்களுக்கும், அமெரிக்காவிற்குள்ளேயே ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்துவதற்கும் இரண்டுக்குமாக சாக்குபோக்கை வழங்கியுள்ளது.

போருக்கு எதிரான பரந்த மக்கள் எதிர்ப்பைப் பலவீனப்படுத்துவதற்கு ஒரு வழிவகையாக, பெருநிறுவன ஊடங்களால் பயங்கரவாத நடவடிக்கைகள் பூதாகரமாகவும் முடிவின்றி பரபரப்பாகவும் காட்டப்படுகின்றன.

இறுதியாக அரசு எந்திரத்தினுள் உள்ள ஒரு கன்னையின் நோக்கங்களை விட மற்றொரு கன்னையின் நோக்கங்களை மேலதிகமாக அதிகரித்துக் காட்ட அத்தகைய நடவடிக்கைகளைச் சுரண்டிக் கொள்ள முடியும். சிரியாவில் கருக்கலைக்கப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கைக்கு கீழ்படிய முடியாது என்பதற்கு நெருக்கமாக இராணுவ உயரதிகாரிகளின் பிரிவுகள் சமீபத்தில் அறிக்கைகளை வெளியிட்டிருந்ததால், ஆதாரபூர்வமாக ஒபாமா நிர்வாகத்திற்குள்ளேயே அதுபோன்ற பிளவுகள் இருக்கின்றன என்பதுடன் நியூ யோர்க் மற்றும் நியூ ஜெர்ஸி குண்டுவெடிப்புகள் சரியாக பொருந்துகின்றன.

அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளும் மற்றும் இஸ்லாமிய பயங்கரவாத குழுக்களும் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டுள்ள பின்புல சூழ்ச்சி உலகிற்கும், இந்த குண்டுவெடிப்புகளுக்கும் இடையே என்ன தொடர்பு என்பதை இந்த ஆரம்ப கட்டத்தில் கூறுவது சாத்தியமில்லை.

ரஹாமியின் துல்லியமான உள்நோக்கமும் தெரியவில்லை. அவர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த ஒரு குறிப்புப்புத்தகத்தின் பகுதிகளில், ஒசாமா பின் லேடன் குறித்தும்; ஒரு அமெரிக்க டிரோன் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அல் கொய்தா இணைப்பு கொண்டவரும் அமெரிக்காவில் பிறந்தவருமான அன்வர் அல்-அவ்லாகி குறித்தும்; அத்துடன் ஒரு ISIS தலைவர் குறித்தும் புகழுரைகள் இருந்தன.

ரஹாமியின் குற்றகரமான நடவடிக்கை, அவரது சொந்த உணர்வின் அல்லது விரக்தி மனநிலையின் விளைவாக இருக்கலாம், அல்லது பழக்கத்திற்கு உட்பட்டதைப் போல அரசும் ஊடகங்களும் எதை "உள்நாட்டில் வளர்ந்த பயங்கரவாதம்" என்றும் அல்லது "சுயமாக தீவிரமயப்படல்" என்றும் குறிப்பிடுகிறதோ அதனுடன் சேர்ந்த உளவியல் காரணிகளின் விளைவாக இருக்கலாம். விடயம் என்னவாக இருந்தாலும், 2016 தேர்தல்களுக்கு முன்னதாக அமெரிக்க சமூகத்தின் நிலை இதுபோன்ற வன்முறைக்கு வளமான களம் அமைத்துள்ளது.

பதினைந்து ஆண்டுகளுக்கும் அதிகமான இடைவிடாத அமெரிக்க போர்கள், இவற்றில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டு, பல மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு, ஒட்டுமொத்த சமூகங்களும் சின்னாபின்னமாக விடப்பட்ட நிலையில், இவை அமெரிக்காவிற்கு உதவுவதாக இல்லை மாறாக அமெரிக்காவிற்கு உள்ளேயே மரணகதியிலான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளன. வெளிநாடுகளில் இரத்த ஆறை ஓடவிடுவது உள்நாட்டில் இடைவிடாத மூர்க்கத்தனத்துடன் இணைந்துள்ளது. ரஹாமி நியூ ஜேர்ஸியின் யூனியன் உள்ளாட்சியில் வளர்ந்தவராவார், 27 சதவீதத்திற்கும் அதிகமான வறுமை விகிதம் கொண்ட அதன் தொழிலாள வர்க்க குடிவாசிகளுக்கும் அதற்கருகில் உள்ள நியூ யோர்க் நகரில் குவிந்துள்ள பில்லியனர்கள் மற்றும் பல கோடி மில்லியனர்களுக்கும் இடையிலான சமூக சமத்துவமின்மை கடுமையாக இல்லாமல் இருக்க முடியாது. சமூகத்தின் பரந்த அடுக்குகளுக்கு இடையே படர்ந்து பரவிய சமூக இடைவெளி, தொடர்ந்து முஸ்லீம்களைத் அரக்கத்தனமாக சித்தரித்ததன் ஊடாக தீவிரமடைந்துள்ளது.

அனைத்திற்கும் மேலாக இப்போதைய அரசியல் அமைப்புமுறை, அதிகரித்தளவில் வெடிப்பார்ந்து கட்டமைந்து வரும் சமூக அதிருப்திக்கு எந்த முற்போக்கான வடிகாலும் வழங்குவதாக இல்லை. ஆரம்ப காலகட்டத்தில் அமெரிக்க போர்களுக்கு எதிராக போராடிய போலி-இடது கூறுபாடுகள் இப்போது அவற்றின் மிகவும் உத்வேகமான ஆதரவாளர்களாக காணக்கிடைக்கிறார்கள்.

இத்தேர்தலுக்கு ஏழு வாரங்களுக்கும் குறைவான காலத்தில், இத்தகைய சமீபத்திய குண்டுவெடிப்புகள் இரண்டு பிரதான கட்சிகளது அரசியல் விவாதத்தை இன்னும் அதிகமாக வலதிற்குத் திருப்ப பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாசிசவாத குடியரசு கட்சி வேட்பாளர் டோனால்ட் ட்ரம்ப் உம், இராணுவ மற்றும் உளவுத்துறை எந்திரத்தின் ஜனநாயகக் கட்சி விருப்பத்தேர்வான ஹிலாரி கிளிண்டனும், வெளிநாடுகளில் போரைத் தீவிரப்படுத்த மற்றும் உள்நாட்டில் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதற்காக, "முப்படைகளுக்கான தலைமை தளபதியாக" இருக்க யார் சிறப்பாக தயாராகி உள்ளார் என்பதன் மீது ஒருவரை ஒருவர் விஞ்சி நிற்க போட்டியிட்டு வருகின்றனர்.

அமெரிக்க அரசியலின் பிற்போக்குத்தனமான மற்றும் கேடு விளைவிக்கும் சூழல், கடந்த வாரயிறுதியில் நடந்ததைப் போன்ற தாக்குதல்கள் மேலும் நடப்பதை மட்டுமே உறுதிப்படுத்தும்.