ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French parliamentary report on terror attacks calls for new police powers

பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த பிரெஞ்சு நாடாளுமன்ற அறிக்கை புதிய போலிஸ் அதிகாரங்களுக்கு அழைப்பு விடுக்கிறது

By Alex Lantier
8 July 2016

பாரிஸில் சென்ற ஆண்டில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் மீதான இருகட்சி விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ஏற்றுக் கொள்ள பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றம் ஜூலை 5 அன்று வாக்களித்தது.

இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை, இந்த அறிக்கை தேசிய நாடாளுமன்றத்தினால் வெளியிடப்பட்டிருக்கவில்லை. ஆயினும், ஊடக ஆய்வுகளும் அத்துடன் ஆளும் சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த செபெஸ்தியான் பியெத்திரசான்டா (Sébastien Pietrasanta) மற்றும் வலது சாரி குடியரசுக் கட்சியை (LR) சேர்ந்த ஜோர்ஜ் ஃபெனெக் (Georges Fenech) ஆகிய முன்னணி விசாரணை அங்கத்தவர்களின் பொதுவிலான கருத்துகளும், இந்த அறிக்கையில் முரண்பாடுகளும், அபத்தமான மழுப்பல்களும் ஏராளமாய் அடங்கியிருப்பதை தெளிவாக்குகின்றன.

விசாரணை ஆணையத்தால் கொடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் வலைத் தளத்தில் வெளியாகிய 40 ஆலோசனைகள் போலிஸ் அதிகாரங்கள் பாரிய அளவில் வலுவூட்டப்படுவதற்கு அழைக்கின்றன. பிரான்சின் போட்டி உளவு முகமைகளையும் உள்நாட்டு சிறப்புப் படை பிரிவுகளையும் ஒருங்கிணைத்தல்; பிரான்சுக்குள்ளான மற்றும் ஐரோப்பா எங்கிலுமான பாதுகாப்பு தரவுத்தளங்களையும் மின்னணு வேவு நடவடிக்கைகளையும் மத்தியப்படுத்துதல்; பாதுகாப்புப் படைகளுக்கு குறைந்தபட்சம் 2,000 பேரையாவது கூடுதலாக பணியமர்த்துதல்; அத்துடன் பிரான்சுக்குள்ளாக கூடுதல் கனரக ஆயுதமேந்திய படைவீரர்களை நிலைநிறுத்துதல் ஆகியவை இந்த ஆலோசனைகளில் அடங்குபவையாகும்.

எப்படியிருந்தபோதிலும், வருங்காலத்தில் பயங்கரவாதத் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த போலிஸ்-அரசு நடவடிக்கைகள் அதிகம் உதவப் போவதில்லை அல்லது எந்த உதவியுமே கூட செய்யப் போவதில்லை என்பதே இந்த அறிக்கையின் தப்பிக்கவியலாத முடிவாக இருக்கிறது. PS அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சமூகப் போராட்டங்களின் மீது இப்போது நடந்து கொண்டிருக்கிற இரத்தம்கொட்டும் ஒடுக்குமுறையைப் போல, மக்களுக்கு எதிரான வேவுபார்த்தலையும் ஒடுக்குமுறையையும் அதிகரிப்பதற்கு அவை போலிசை அனுமதிக்குமேயன்றி அதேவேளையில் பயங்கரவாதத் தாக்குதல்களை அவை தடுத்து விடாது. பெரும்பாலும், மத்திய கிழக்கில் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற பிரெஞ்சு மற்றும் நேட்டோவின் போர்களில் முக்கியமான “சொத்துகளாக” சேவை செய்கின்ற நன்கறிந்த இஸ்லாமியப் போராளிகளைக் கைது செய்வதற்கு பாதுகாப்பு முகமைகள் மறுப்பதானாலேயே இந்தத் தாக்குதல்கள் சாத்தியமாகின்றன.

2015 ஜனவரி 7 அன்று சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்குப் பின்னர், ஒட்டுமொத்த பிரெஞ்சு மக்களின் மீதும் பாரிய போலிஸ் வேவுபார்த்தலை அனுமதிக்கின்ற வகையிலான ஒரு அரக்கத்தனமான போலிஸ் வேவுபார்ப்பு மசோதாவை பிரெஞ்சு அரசு நிறைவேற்றியது. அப்படியிருந்தும் கூட, சிரியா மற்றும் ஏமனில் இருக்கும் இஸ்லாமியப் பயங்கரவாதக் குழுக்களின் தலைமைக் கூட்டாளிகளாகவோ அல்லது தலைவர்களாகவோ - உதாரணமாக, சார்லி ஹெப்டோ தாக்குதல்களுக்குத் தலைமையில் இருந்த குவாச்சி சகோதரர்கள், மற்றும் பாரிஸில் 2015 நவம்பர் 13 அன்று நடந்த தாக்குதலில் மையமாகப் பங்குபெற்ற அப்துல்ஹமீட் அபாஊட் ஆகியோர் - நன்கறியப்பட்ட மனிதர்கள் ஐரோப்பாவெங்கிலும் சுதந்திரமாகப் பறந்து எந்த இடையூறுமின்றி தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதற்கு முடிந்தது.

“இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிரான்சின் மோசமான பயங்கரவாதத்தினை நடத்தியவர்கள், அனைவருமே ஏறக்குறைய பாதுகாப்பு முகமைகளால் நன்கறியப்பட்டவர்களாக, நெருக்கமாய் கண்காணிக்கப்பட்டவர்களாக, அத்துடன் சிறைவாசத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாக அல்லது கைது வாரண்டுகளை எதிர்நோக்கியிருந்தவர்களாக இருந்தபோதிலும் கூட, அவர்கள் விரும்பிய போதெல்லாம் சுதந்திரமாக வருவதும் போவதும் எவ்வாறு இயன்றது என்பதைப் புரிந்து கொள்வதே” இந்த விசாரணையின் இலக்காக இருந்ததாக ஜோர்ஜ் ஃபெனெக்கும் கூட கூறியிருந்தார்.

Le Monde பத்திரிகையிடம் பேசிய அவர் மேலும் கூறினார்: “நமது உளவு சேவைகளில் தீவிரமான ஓட்டைகள் இருந்தன, பட்டாக்லோன் தியேட்டரில் [நவம்பர் 13 அன்று] தாக்குதல் நடத்தியவர்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு மிகவும் நன்கறிந்தவர்களாக இருந்தனர், அப்படித்தான் குவாச்சி சகோதரர்களும் [சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டை நடத்தியவர்கள்].”

செபெஸ்தியான் பியெத்திரசான்டா மேலும் கூறினார்: “[நவம்பர் 13] தாக்குதல் நடத்திய சமி அமிமூர் (Samy Amimour) மீதான நீதிமன்ற கண்காணிப்பு இன்னும் கூடுதல் கடுமையுடன் இருந்திருக்க வேண்டும், 2012 இல் ஏமனுக்கு கிளம்ப அவர் தயாரிப்பு செய்தபோது அவர் விசாரணையின் கீழ் வைக்கப்பட்டதன் பின்பு அவர் மீதான கண்காணிப்பு நிறுத்தப்பட்டது ஏன் என்பதை இன்னும் கூட எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் தான் 2015 ஜனவரியில் அப்துல்ஹமீட் அபாஊட் கிரீஸில் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும்.”

பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதாகச் சொல்லப்பட்ட ஒன்றின் மத்தியில், நன்கறிந்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் ஐரோப்பாவில் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதற்கு அனுமதிக்கப்பட்டது எவ்வாறு என்பதை இந்த நிகழ்வுகளை அவற்றின் சர்வதேச உள்ளடக்கத்தில் வைக்காமல், ஒருவர் புரிந்துகொள்ள முடியாது. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போர் ஒன்றின் மத்தியில், சிரியாவில் போரை நடத்துவதற்காக மத்திய கிழக்கிற்கு வெளிநாட்டு போராளிகளை ஆளெடுப்பதற்காகவும் அனுப்புவதற்காகவும் இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்களின் ஒரு வலைப்பின்னல் உருவாக்கப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து 5,000 மற்றும் பிரான்சில் மட்டும் இருந்து 1,700 உட்பட மொத்தம் சுமார் 30,000 பேர் வரை இந்த எண்ணிக்கை இருந்ததாக சென்ற ஆண்டில் Soufan Group அளித்த அறிக்கை மதிப்பிட்டது.

இந்த பெரும் எண்ணிக்கையிலான போராளிகளின் போக்குவரத்து நேட்டோ சக்திகளது உளவு முகமைகளின் கண்களில், அதிலும் இந்த முகமைகள் — எல்லாவற்றுக்கும் மேல் சிஐஏ— மத்திய கிழக்கில் களத்தில் அவர்களுக்கு நிதியாதாரம் அளிப்பதில், ஆயுதமளிப்பதில் மற்றும் பயிற்சியளிப்பதில் நெருக்கமாக சம்பந்தப்பட்டவை என்ற நிலையில், இருந்து தப்பித்திருக்க முடியாது. குறிப்பாக உளவு முகமைகளின் நடவடிக்கைகள் பிரெஞ்சு அல்லது நேட்டோ வெளியுறவுக் கொள்கையின் இன்றியமையாத கூறுகளாகப் பாதுகாக்கப்பட்ட, இரகசிய நடவடிக்கைகளின் பகுதியாக ஆக்கப்பட்ட நிலைமைகளின் கீழ் தான், இந்தப் போராளிகளின் வலைப்பின்னல் தனிநபர்களை நெருக்கமாகக் கண்காணிக்கின்ற உளவு முகமைகளை விஞ்சும் திறனைப் பெறத் தொடங்கியது.

போலிஸ் கண்காணிப்பு முகமைகளின் மிகப் பரந்த விரிவாக்கமானது சார்லி ஹெப்டோ தாக்குதல்களை, நவம்பர் 13 தாக்குதல்களை, புரூசெல்ஸில் மார்ச் 22 அன்று நடந்த தாக்குதல்களை, அல்லது இந்த வலைப்பின்னல்கள் ஐரோப்பாவில் நடத்துவதற்காக இப்போது திட்டமிட்டுக் கொண்டிருக்கக் கூடிய எந்தவொரு புதிய தாக்குதலையும் தடுப்பதற்கு திறனற்றதாய் நிரூபணமாகியிருக்கிறது. நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையானது நாட்டை பாதுகாப்பானதாக்குவதில் எந்த உண்மையான பாத்திரமும் வகிக்கவில்லை என்பதை பியெத்திரசான்டாவும் ஃபெனெக்கும் கூட ஒப்புக் கொள்கின்றனர்.

“சொன்டினல் நடவடிக்கையில் (l'opération Sentinelle) தொடங்கி பதினெட்டு மாதங்களின் பின்னர், 10,000 பேர் நிலைநிறுத்தப்பட்ட பின், அத்தோடு இன்று 6,000 இல் இருந்து 7,000 இராணுவத்தையும் இணைத்த பின்னர், நாட்டை பாதுகாப்பானதாக ஆக்குவதில் அதன் உண்மையான மதிப்புத்தான் என்ன என்று நான் ஆச்சரியப்படுகிறேன்” என்றார் பியெத்திரசான்டா.

மாறாக, அவசரகாலநிலையும் போலிஸ் மற்றும் கண்காணிப்பு அதிகாரங்களின் தீவிரப்படுத்தலும், எல்லாவற்றுக்கும் மேல், தொழிலாள வர்க்கத்திலும் இளைஞர்களிலும் இருக்கக் கூடிய அரசியல் எதிர்ப்பை நோக்கியே குறிவைக்கப்பட்டுள்ளன. ஆர்ப்பாட்டங்கள் மீதான பாரிய கண்காணிப்பு மற்றும் வன்முறையான தாக்குதல்கள், மற்றும் தடுப்பு கைதுகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களை வீட்டுக்காவலில் முடக்கியது உள்ளிட்டவற்றுக்கான அடிப்படையை அவை உருவாக்கின.

பயங்கரவாதத் தாக்குதல்கள், உளவு முகமைகளுக்கு இடையிலான வெறும் பற்றாக்குறைகளாலும் ஒருங்கிணைப்பின்மையாலுமே விளைவதாகக் காட்ட பியெத்திரசான்டாவும் ஃபெனெக்கும் தமது சித்தரிப்புகளில் முயற்சித்ததைப் பொறுத்தவரை, அந்த சித்தரிப்புகள் அபத்தமானவையாக இருந்தன.

புரூசேல்ஸில் மார்ச் 22 நடந்த தாக்குதல்கள் சம்பவத்தில் கண்டதைப் போல, [பட்டாக்லோன் தியேட்டரைப் போன்ற] இலக்குகள், சிறையிலிருந்த இஸ்லாமியவாதிகளால் உளவு முகமைகளுக்கு அடையாளம் காட்டப்பட்டிருந்த போதிலும் கூட, நவம்பர் 13 தாக்குதல்களை தடுத்து நிறுத்துவது எவ்வாறு சாத்தியமற்றதாக இருந்தது என்பதை விளக்குவதற்கு அவர்கள் முயற்சி செய்தனர். இலக்குகள் அடையாளம் காணப்பட்டதால் அவற்றைப் பாதுகாப்பது எந்தவிதத்திலும் சுலபமாகி விடவில்லை என்ற உண்மையின் மீது அவர்கள் வலியுறுத்தினர். “விசாரணை அதிகாரிகளும் உளவு முகவர்களும் தமது விசாரணைகளின் சமயத்தில் பயங்கரவாதிகளால் குறிப்பிடப்பட்ட இலக்குகள் அத்தனையையும் தனிப்பட்ட விதத்தில் நினைவில் வைத்திருப்பது தாக்குதல்களை நிறுத்துவதற்கு அவசியமாக இருந்தது” என்று பியெத்திரசான்டா அறிவித்தார்.

இப்படியான கூற்றுகளை எல்லாம் ஒரு பொறுப்புள்ள பதில்கள் என யாரும் எதிர்பார்க்க முடியுமா? பாதுகாக்க வேண்டிய இலக்குகளின் பட்டியலை நினைவில் கொண்டுவர போலிசால் முடியாததுதான் ஒரே பிரச்சினை என்றால், அவர்கள் அதனை காகிதத்தில் எழுதிக் கொண்டிருக்க வேண்டாமா?

பிரெஞ்சு சிறை அமைப்புக்குள் வேலை செய்கின்ற சிறப்பு உளவு முகமைகள் குறித்து அவர்கள் கூறுவது தான், அதிலும் பயங்கரவாத வலைப்பின்னல்களின் அங்கத்தவர்கள் சிறைக்குள் இருந்த சமயத்தில் தான் அவற்றில் பலவும் அபிவிருத்தி கண்டன என்கிற உண்மையைக் கொண்டு பார்த்தால், குறிப்பாக திகைப்பூட்டுவதாக இருக்கிறது.

பியெத்திரசான்டாவும் ஃபெனெக்கும் அறிவித்தனர்: “2016 மே மாதத்தில், நாங்கள் Jean-Jacques Urvoas ஐ நேர்காணல் செய்தபோது அவர் எங்களிடம் கூறுகையில், அவர் நீதி அமைச்சராக ஆனதற்குப் பிந்தைய காலத்தில், சிறை உளவுமுகமைகளிடம் இருந்து, அதில் 380 ஊழியர்கள் இருந்த நிலையிலும், எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்று கூறினார். இந்த அமைப்புமுறை ஆண்டு முழுவதிலும் செயலிழந்து, முடங்கிப் போய், சிறைக்குள்ளிருப்பவர்களின் தீவிரப்படல் குறித்த எந்தத் தகவலையும் அனுப்புவதற்கு தவறுகிறது என்ற உண்மையைக் கூறி அவர் வருந்தவும் செய்தார்.”

இஸ்லாமிய ஜிகாதிசத்திற்கு எதிரான ஒரு போரில் பிரான்ஸ் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படும் நிலையில், ஒருவர் பின்வரும் கேள்விகளைக் கேட்டாக வேண்டியிருக்கிறது: அத்தகைய கைதிகள் குறித்த அறிக்கைகளை வழங்கவில்லை என்றால், இந்த 380 பேரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? அப்படி இந்தத் தகவல்களை உயர் அதிகாரிகளுக்கு வழங்க வேலை செய்யவில்லை என்றால், ஒருவேளை, இந்த “பிரச்சினை” கைதிகளை வெளிநாடுகளில் சண்டையிட அனுப்பி, உளவு முகமைகளின் ஆதரவைப் பெற்ற அந்தப் போர்களில் அவர்கள் கொல்லப்படுவதே சிறந்தது என்ற மாற்றுப் பார்வை முடிவுக்கு அவர்கள் வந்திருக்கக் கூடுமோ?