ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Spain’s elections intensify crisis of bourgeois rule

ஸ்பெயின் தேர்தல்கள் முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் நெருக்கடியை தீவிரப்படுத்துகின்றன

By Alejandro López
  25 June 2016

ஆறு மாதங்களில் இரண்டாவது முறையாக, ஸ்பெயின் மக்கள் ஜூன் 26 அன்று அடுத்த நாடாளுமன்றத்தைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த டிசம்பர் தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலும், மக்கள் கட்சி (Popular Party – PP), குடிமக்கள் கட்சி (Citizens), சோசலிஸ்ட் கட்சி (PSOE) மற்றும் யுனிடொஸ் பெடெமோஸ் (Unidos Podemos – UP) ஆகிய நான்கு பிரதான கட்சிகளில் எதற்குமே நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காதவாறு, இன்னொரு தொங்கு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஞாயிறன்று Metroscopia, Sigma Dos மற்றும் GAD3 ஆகிய மூன்று வெவ்வேறு கருத்துக்கணிப்புகள், பெடெமோஸ் மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான ஐக்கிய இடதுக்கு (IU) இடையிலான ஒரு கூட்டணியான யுனிடொஸ் பெடெமோஸ் (UP), PSOE இன் தோல்வியிலிருந்து பெரும் ஆதாயமடைந்து வருவதை எடுத்துக்காட்டின. கருத்துக்கணிப்புகளின்படி, நாடாளுமன்றத்தின் 350 ஆசனங்களில் அது 84 இல் இருந்து 95க்குள் பெறக்கூடும், டிசம்பர் தேர்தல்களில் அது 71 ஆசனங்களை வென்றிருந்தது. சோசலிஸ்ட் கட்சி (PSOE) 90 ஆசனங்களில் இருந்து குறைந்து, 78 இல் இருந்து 85 க்குள் பெறக்கூடும். இடைக்கால பிரதம மந்திரி மரீனோ ரஜோய் இன் கீழ் மக்கள் கட்சி (PP) 113 இல் இருந்து 129 ஆசனங்கள் பெறக்கூடும், குடிமக்கள் கட்சிக்கு (Citizens) 40 இல் இருந்து 41 வரையிலான ஆசனங்கள் கிடைக்கக்கூடும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் தேர்தல்கள் நடத்தப் போவதில்லை என்பதை நான்கு பிரதான கட்சிகளும் உறுதிப்படுத்தி உள்ள நிலையில், இந்த தேர்தல்களில் இருந்து எழும் எந்தவொரு அரசாங்கமும் பலவீனமாக, பிளவுபட்டதாக மற்றும் மக்கள் செல்வாக்கிழந்ததாக இருக்கும். மக்கள் கட்சி, குடிமக்கள் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையிலான மாபெரும் கூட்டணியின் அல்லது யுனிடொஸ் பெடெமோஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கு இடையிலான ஒரு கூட்டணியின் உள்ளமைவுகளினூடாக ஓர் அரசாங்கம் அமையலாமென பரவலாக பார்க்கப்படுகிறது.

ரஜோய் குறிப்பிடுகையில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடிமக்கள் கட்சி உடன் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார், “ஒரு பரந்த நாடாளுமன்ற ஆதரவுடன் அரசாங்கம் அமைவதே சிறந்ததென நான் தொடர்ந்து நம்புகிறேன், இதற்காகவே வேலை செய்ய விரும்புகிறேன்,” என்றார்.

குடிமக்கள் கட்சியின் தலைவர் அல்பேர்ட் ரிவேரா (Albert Rivera) குறிப்பிடுகையில், அவரது கட்சி ரஜோய் க்கு வாக்களிக்காது என்றும், ஆனால் அவர் ஆட்சியமைக்கும் வகையில் வாக்கெடுப்பைப் புறக்கணிக்கும் அல்லது வேறொரு மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரிக்குமென்று குறிப்பிட்டுள்ளார். “ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், மக்கள் கட்சி-சோசலிஸ்ட் கட்சி-குடிமக்கள் கட்சி ஆகிய முன்று அமைப்புரீதியிலான கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்த" ரிவேரா அழைப்புவிடுத்துள்ளார்.

ரிவேரா ஒரு "சுயேட்சை" வேட்பாளரை தேர்ந்தெடுக்கவும் நாடாளுமன்ற கதவுகளைத் திறந்துள்ளார், வேறு வார்த்தைகளில் கூறுவதானால், முன்பில்லாத வகையில் மக்கள் கட்சி, குடிமக்கள் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆதரிக்கும் ஒரு தொழில் உத்தியோகரைக் கொண்ட அரசாங்கத்தை உருவாக்க அழைப்புவிடுக்கிறார்.

பெட்ரோ சான்சேஸ் (Pedro Sánchez) தலைமையிலான சோசலிஸ்ட் கட்சி (PSOE) டிசம்பரில் இருந்ததை விடவும் பலவீனமான நிலைமையில் உள்ளது. தளபதி பிரான்சிஸ்கோ பிரான்கோ மரணித்ததற்குப் பின்னர், 1977 தேர்தல்களுக்குப் பின்னர் முதல் முறையாக PSOE கட்சியை மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு, யுனிடொஸ் பெடெமோஸ் அக்கட்சியை விஞ்சி விட்டதாக கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன.

மக்கள் கட்சி ஆட்சியிலிருந்த ஆண்டுகளில் நடந்த ஊழல் மோசடிகள், வெட்டுகள், வரி உயர்வுகளால் ஏற்பட்டிருந்த வெடிப்பார்ந்த சமூக கோபத்திலிருந்து அரசியல் ஆதாயம் திரட்ட இலாயகற்று போகும் அளவிற்கு, சமூக ஜனநாயகவாதிகள் அவர்களது முந்தைய செலவின-வெட்டு முறைமைகளால் தங்களது மதிப்பைத் தாங்களே கெடுத்து கொண்டுள்ளனர்.

சோசலிஸ்ட் கட்சி-குடிமக்கள் கட்சியினது அரசாங்கத்திற்கு கடந்த ஏப்ரலில் போதிய நாடாளுமன்ற ஆதரவைப் பெற தவறிய சான்சேஸ், மக்கள் கட்சியுடனோ அல்லது பெடெமோஸ் உடனோ கூட்டு சேர்ந்து ஆட்சி செய்யப் போவதில்லை என்று கூறி வருகிறார். ஆனால் சோசலிஸ்ட் கட்சி உடனான அவரது நிலைப்பாடு உறுதியாக இல்லை.

அக்கட்சி ஒருவேளை முன்பினும் அதிகமாக வரலாற்று தோல்வி அடைந்தால், அது ஒரு மாபெரும் கூட்டணி போன்றதை ஏற்படுத்துவதற்காக கட்சிக்குள் இருக்கும் சான்சேஸ் இன் போட்டியாளர்களே அவரை நீக்குவதற்கு அனுமதிக்கக்கூடும். அவரை அடுத்து, அன்டாலுசியாவின் (Andalusia) தற்போதைய பிராந்திய பிரதமராக உள்ள சுசானா டியாஸ் (Susana Díaz) அனேகமாக தேர்ந்தெடுக்கப்படலாம். முன்னாள் பிரதம மந்திரி Felipe González தலைமையிலான பழைய PSOE படையுடன் சேர்ந்து, டியாஸ் டிசம்பர் தேர்தல்களுக்கு பின்னர் சான்சேஸ் தலைமைக்கு முன்னணி போட்டியாளராக ஆகியிருந்தார். கட்டலோனியா சுதந்திரத்திற்காக வெகுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்ற போலி இடதுகளின் முக்கிய கோரிக்கையை ஏற்க முடியாதென கூறி, டியாஸ், பெடெமோஸ் உடன் சேர்ந்து அரசாங்கம் அமைக்கும் எந்த முயற்சியையும் எதிர்க்கிறார்.

எவ்வாறிருந்த போதினும், பிரிவினைவாத மற்றும் தேசியவாத கட்சிகளது ஆதரவுடன் யுனிடொஸ் பெடெமோஸ்-சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் அனேகமாக அடுத்த அரசாங்கமாக இருக்கலாம்.

இக்லெஸியாஸ் இன் கீழ், யுனிடொஸ் பெடெமோஸ் அதன் ஒட்டுமொத்த தேர்தல் பிரச்சாரத்தையும் சோசலிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து "அரசாங்க மாற்றத்தை" தயாரிப்பதற்காக வடிவமைத்துள்ளது. அதன் தேர்தல் விளம்பரங்கள், துண்டறிக்கைகள் மற்றும் இக்லெஸியாஸ் இன் பேச்சுக்கள் மற்றும் விவாதங்களில் தலையீடுகள் அனைத்துமே இத்தகையதொரு அரசாங்கத்திற்காக சோசலிஸ்ட் கட்சிக்கு அழுத்தமளிப்பதை நோக்கி திருப்பிவிடப்பட்டுள்ளன.

யுனிடொஸ் பெடெமோஸ் "பற்றாக்குறையைக் குறைக்க" ஒப்புக் கொண்டுள்ளது, அதாவது சிக்கன திட்டங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவை அது ஏற்று கொண்டுள்ளது. பெடெமோஸ் உம் அதன் வெகுஜனவாத வாய்சவடாலைக் கைவிட்டுள்ளது. “ஜாதி" மற்றும் "செல்வந்த தட்டுக்கள்" போன்ற வார்த்தைகளைக் கைவிட்டு, அதற்கு பதிலாக பெடெமோஸ் தன்னைத்தானே இப்போது ஒரு புதிய சமூக ஜனநாயகமாக காட்டிக் கொள்கிறது, அதாவது ஸ்தாபக கட்சிகளுக்கு எதிரான பாரிய மக்கள் எதிர்ப்பிலிருந்து பிரான்கோவிற்குப் பிந்தைய ஒழுங்கைப் பாதுகாக்க அது நோக்கம் கொண்டுள்ளது என்பதற்கு இதுவொரு தெளிவான சமிக்ஞையாகும்.

ஒரு கூட்டணியை உருவாக்குவதற்காக டிசம்பருக்கு பிந்தைய பேச்சுவார்த்தைகளில் அது PSOE மீது திணித்திருந்த பிரதான நிபந்தனையான, கட்டலோனியா சுதந்திரத்திற்காக வெகுஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதையும் இக்லெஸியாஸ் கைவிட்டுள்ளார்.

“ஸ்பானிய தேசிய இறையாண்மையை தூண்டாடும் ஓர் அரசாங்கத்தையோ, நலன்புரி அரசின் பொருளாதார மற்றும் சமூக நிலைப்புத்தன்மை மீது கேள்வி எழுப்பும் ஓர் அரசாங்கத்தையோ நாங்கள் ஆதரிக்க மாட்டோம்,” என்று சான்சேஸ் குறிப்பிட்ட உடனேயே, இக்லெஸியாஸ் கடந்த செவ்வாயன்று வானொலியில், “அங்கேயொரு வெகுஜன வாக்கெடுப்பு நடக்கும், ஆனால் எதைக் குறித்தும் பேசுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதையே நாங்கள் முன்மொழிகிறோம். நாங்கள் எந்தவித தடையும் இல்லாமல் பேச விரும்புகிறோம், ஏனைய பரிந்துரைகளையும் கேட்க விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டு தலையீடு செய்தார்.

இதற்கிடையே பிரிவினைவாத கட்டலோனியா குடியரசு இடது குறிப்பிடுகையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஓராண்டுக்குள் ஒரு வெகுஜன வாக்கெடுப்பை நடத்தும் ஓர் அரசாங்கத்தை மட்டுமே அது ஆதரிக்குமென குறிப்பிட்டுள்ளது.

இந்த தேர்தல்களுக்கு பின்னர் ஸ்பெயினை ஆட்சி செய்ய கட்சிகளது என்ன மாதிரியான கூட்டணி உருவானாலும், தெளிவாக இருப்பது என்னவென்றால் சிக்கனத் திட்டங்கள் மற்றும் போருக்கு எதிராக ஸ்பானிஷ் மக்களிடையே நிலவும் எதிர்ப்புக்கும் மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திடையே அதிகரித்து வரும் போர்குணத்திற்கும் எதிராக அந்த அரசாங்கம் மூர்க்கமாக விரோதமாக நிற்கும். பிரான்ஸ், பெல்ஜியத்தில் சிக்கனத் திட்டங்களுக்கு எதிராகவும் மற்றும் கிரீஸில் பெடெமோஸ் இன் கூட்டாளி சிரிசாவிற்கு எதிராகவும் வேலைநிறுத்தங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இருந்தபோதினும் கூட, ஸ்பெயின் கட்சிகள் வாழ்க்கை தரங்கள் மீதான தாக்குதலை ஆழப்படுத்த மற்றும் வெளிநாடுகளில் ஸ்பானிய ஏகாதிபத்தியத்தை பாதுகாக்க பொறுப்பேற்றுள்ளன.

தொழிலாள வர்க்கத்துடனான ஒரு மோதலுக்கு தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது. சிக்கனத் திட்டங்களுக்கு எதிரான பாரிய எதிர்ப்பை சிரிசா அரசாங்கம் செய்ததைப் போல ஒரு புதிய முட்டுச் சந்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் பெடெமோஸ் ஐ அதிகாரத்திற்குக் கொண்டு வருவதா அல்லது மக்கள் கட்சி-குடிமக்கள் கட்சி-சோசலிஸ்ட் கட்சியின் ஒரு கூட்டணி அமைத்து அதற்கான ஒரு பாதுகாப்பு அடைப்பானாக பெடெமோஸ் ஐ பயன்படுத்துவதா என்பதே ஆளும் வர்க்கத்தின் முன்னிருக்கும் கேள்வியாகும்.

தீவிரமடைந்து வரும் நெருக்கடியால், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த அடுக்குள் சமூக மற்றும் அரசியல் போராட்டங்களுக்குள் இழுத்து வரப்படுவார்கள். மொத்தம் 23 சதவீதமாகவும் இளைஞர்களிடையே 45 சதவீதமாகவும் இருக்கும் உறுதி செய்யப்படாத வேலை வாய்ப்பின்மை மட்டங்கள், அண்மித்து மூன்றில் ஒரு பங்கு குடும்பங்கள் வறுமையில் வாழ்கின்ற நிலைமை, கூலி வெட்டுக்கள் மற்றும் வேலை பாதுகாப்பின்மை ஆகியவற்றிற்கு இந்த முதலாளித்துவ அமைப்புமுறைக்குள் எந்த நம்பகமான தீர்வும் கிடையாது.