ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hundreds die in Indian heat wave

இந்தியாவில் நூற்றுக்கணக்கானோர் வெப்ப அலையால் இறக்கின்றனர்

By Kanda Gabriel
11 May 2016

இந்தியாவெங்கிலும் நிலவுகின்ற முன்கண்டிராத பெரும் வெப்பநிலையால் சமீப வாரங்களில் 300க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இவர்களில் அநேகமானவர்கள் விவசாயக் கூலிகளும் மற்ற வறிய மக்களும் ஆவர். தெலுங்கானாவும் (249 பேர் இறப்பு) ஆந்திரப் பிரதேசமும் (45 பேர் இறப்பு) மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலங்களாய் உள்ளன.

பலியானவர்களில் பலரும் இறக்க நேர்ந்ததற்குக் காரணம், 38 டிகிரி செல்சியசுக்கும் (100 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக வெயில் கொளுத்துகின்ற கொடுமையான நிலைமைகளிலும் அவர்களுக்கு வேலை செய்வதைத் தவிர வேறு வழியில்லாமல் இருந்ததாகும். வறட்சி பாதித்த மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவில் 12 வயது சிறுமி ஒருவர் குடிநீர் கொண்டுவருகையில் வெப்பத்திற்குப் பலியானார்.

வெயிலால் பாதிக்கப்பட்டிருக்கும் தொழிற்சாலை மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் பரந்த மக்கள் ஒரு சாத்தியமில்லாத தெரிவுக்கு முகம்கொடுத்திருக்கின்றனர்: அவர்கள் வீட்டில் சும்மா உட்கார முடியாது, ஏனென்றால் அவர்களது தினக் கூலியை நம்பித் தான் அவர்களது குடும்பம் இருக்கிறது; ஆயினும் அவர்கள் வேலைக்குப் போனால் வெப்பத்திடம் இருந்து அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை, துரிதமாய் வெப்ப அதிர்ச்சிக்கு முகம்கொடுக்கின்றனர்.

இந்த துயரத்தைக் குறித்த அதிக செய்திகளும் கூட வருவதில்லை, பெரும்பான்மையான மரணங்கள் நடக்கின்ற குக்கிராமப் பகுதிகளுக்கு தங்களது செய்தியாளர்களை அனுப்ப ஒரு சில செய்தி நிறுவனங்களைத் தவிர மற்றவை தயாராய் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணம்.

குடிநீர் பற்றாக்குறை ஒரு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளாக பருவமழை சராசரிக்கும் குறைவாக இருந்து வந்ததைத் தொடர்ந்து இந்தியாவின் 29 மாநிலங்களில் பத்து மாநிலங்கள் வறட்சி நிலையை அறிவித்திருக்கின்றன.

”20 நாளைக்கு ஒருமுறை தான் எங்களுக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது, வாரத்திற்கு ஒருமுறை குளித்தாலே அது ஆடம்பரமான விடயம் தான்” என்றார் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு விவசாய செயல்பாட்டாளரான மாணிக் கதாம். தண்ணீருக்கு அடிபிடி சண்டை ஏற்படுவதைத் தடுக்க போலிசே குடங்களை நிரப்பித் தருவதாகவும், கிராம மக்களுக்கு ஒரு நாளைக்கு 20 நிமிடங்கள் தான் தண்ணீர் வழங்கப்படுகிறது என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிகரித்துச் செல்லும் வெப்பநிலைகள் வறட்சி நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியிருக்கின்றன, குடிநீர் பற்றாக்குறை நாடெங்கும் 330 மில்லியன் மக்கள் வரை பாதிக்க அச்சுறுத்துகிறது. இது இந்தியாவின் மக்கள்தொகையில் நாலில் ஒரு பங்காகும். இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 42,829 கிராமங்களும், கிழக்கத்திய மாநிலமான ஒடிசாவில் 29,077 கிராமங்களும் தெற்கில் கர்நாடகா மாநிலத்தில் 22,759 கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

வெப்ப அலை பயிர்களுக்கும் சேதம் விளைவித்து, அது தானிய விலைகளை மேலும் அதிகப்படுத்தி, மக்கள் மீது இன்னும் பெரும் துயரத்தைத் திணித்துக் கொண்டிருக்கிறது. வடமேற்கு இந்தியாவெங்கும் நிலவுகின்ற வெப்ப அலை நிலைமைகள் தானியங்கள் மற்றும் தோட்டப் பயிர் விளைச்சலையும் கால்நடை வளர்ப்பையும் பாதிக்கிறது. மேற்கு மற்றும் தென் இந்தியப் பகுதிகளான மகாராஷ்டிரா, தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பருவமழை தாமதமானது நெல், பருத்தி, பருப்பு மற்றும் சிறுதானிய விதைப்பில் இருந்து விவசாயிகளைத் தடுத்து வைத்துள்ளது.

பத்தாயிரக்கணக்கிலான ஆடுமாடுகள் இறந்து போனதால், பலருக்கும் வாழ்வதற்கு இன்றியமையாத வாழ்வாதாரம் இல்லாது போயுள்ளது - இந்த நிலை பல இடங்களிலும் விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. அல் ஜசீராவின் ஒரு செய்தியின் படி, தக்காணச் சமவெளிப் பகுதியில், கிழக்கு மகாராஷ்டிரப் பகுதியான மராத்வாடாவில், 1,100க்கும் அதிகமான விவசாயிகள் சென்ற ஆண்டில் தற்கொலை செய்து கொண்டனர், அத்துடன் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மேலும் 216 பேர் தங்கள் உயிர்களை மாய்த்துக் கொண்டனர்.

அதிகாரிகளைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதாக் கட்சியின் தலைமையிலான மத்திய அரசாங்கமும் சரி பல்வேறு மாநில அரசாங்கங்களும் சரி, வெப்ப அலைக்கும் வறட்சிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் வழக்கமான அலட்சியமான பாணியில் தான் பதிலிறுப்பு செய்துள்ளனர்.

சில இந்திய மாநிலங்களில் அதிகாரிகள் மிகத் தாமதமாகவே மக்களை வெளியில் செல்லாமல் இருக்க எச்சரிக்கைகள் அளித்தனர், நாளின் வெப்பமிகுந்த நேரங்களில் கட்டுமானப் பணிகளை தடை செய்தனர், அத்துடன் குழந்தைகள் வெயிலால் பாதிக்கப்படா வண்ணம் அவர்களது கோடை விடுமுறையை நீட்டிக்க சில பள்ளிகளுக்கு உத்தரவிட்டனர் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆயினும், இந்த பொதுச் சுகாதார அறிவிப்புகள் மிக குக்கிராமப் பகுதிகளில் இருக்கும் பரந்த பிரிவு மக்களுக்கு சென்று சேர்வதில்லை. அத்துடன் தொழிலாளர்களுக்கு கூலி இழப்புக்கு எந்த ஈடும் செய்யப்படுவதில்லை என்பதால் அவர்கள் வேலைக்குச் செல்லவில்லை என்றால் அவர்களும் அவர்களது குடும்பங்களும் பட்டினியாகக் கிடக்க வேண்டியிருக்கும்.

சென்ற ஆண்டில் வெப்ப அலையில் இந்தியாவில் 2,422 பேர் இறந்தனர். இருதசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் வெப்பத்தால் உயிரிழந்ததில் இது அதிகப்பட்ச எண்ணிக்கையாகும். இந்தியாவின் தேசிய மற்றும் மாநில அரசாங்கங்கள் சம்பிரதாய கவலைகளை வெளிப்படுத்தின, ஆனால் வெப்ப அலை தணிந்த உடனேயே இறப்பு எண்ணிக்கை மறக்கப்பட்டு விட்டது. இந்த மற்றும் இதற்கு முந்தைய இதேபோன்ற அழிவுகளை உதாசீனம் செய்த அதிகாரிகள், இந்த ஆண்டின் தீவிரமான மற்றும் நீடித்த வெப்பத்தை முன்னெதிர்பார்ப்பதற்கும் அதன் விளைவுகளுக்குத் தயாரிப்பு செய்யவும் தவறினர்.

மறுபடியும் மக்கள் தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். வணிகப் பிரபுக்களும் நடுத்தர வர்க்கத்தின் வசதியான அடுக்குகளும் குளிரூட்டல் வசதியுடனான வசதியான வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் மறுபக்கத்தில் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் நகர்ப்புற ஏழைகளும், நெருக்கியடிக்கும் இடங்களில் வெப்பத்தைத் தாங்கியாக வேண்டும். ஏர் கண்டிஷனர்களின் அதிக விலை காரணமாக, நடுத்தர வர்க்க வீடுகளிலும் கூட, 2013 நிலவரப்படி பாதி வீடுகளில் மட்டும் தான் குளிரூட்டும் வசதி இருக்கிறது.

வறட்சியைப் பொறுத்தவரை, நவீன நீர்ப்பாசனத்தை உருவாக்கத் தவறியமை இந்தத் தாக்கத்தை பெரிதாக்கியிருக்கிறது. வருடந்தோறும் விளைச்சலுக்குப் பயன்படுகின்ற சுமார் 142 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பில், பாதிக்கும் குறைவாய், சுமார் 64 மில்லியன் ஹெக்டேர்களுக்குத் தான் உறுதியான பாசன வசதி இருக்கிறது. அடுத்தடுத்து வந்த இந்திய அரசாங்கங்களும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மூலதனத்திற்கு ஆதரவான உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கே முன்னுரிமையளித்ததால், பல நீர்ப்பாசனத் திட்டங்கள் தசாப்தக்கணக்கில் இழுபறியில் இருக்கின்றன.

இந்தியாவின் எழுச்சியாகச் சொல்லப்படுவது குறித்து மேற்கத்திய ஊடகங்கள் கொண்டாடுகின்ற அதேநேரத்தில், நாட்டின் 1.2 பில்லியன் மக்களில் வறுமைப்பட்ட பெரும்பகுதியின் மிக அடிப்படையான சமூகத் தேவைகளையும் கூடப் பூர்த்திசெய்யும் திறன் கொஞ்சமும் இல்லாததாக இந்திய முதலாளித்துவம் இருக்கிறது என்பதே அப்பட்டமான உண்மையாக இருக்கிறது.

பிரிட்டனிடம் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்றதன் பின்னான சுமார் 70 ஆண்டுகளின் காலத்தில், தொழிலாள வர்க்கம் மற்றும் கிராம மக்களின் பரந்த மக்களுக்கு கண்ணியமான ஆரோக்கியப் பராமரிப்பையும் பொது உள்கட்டமைப்பையும் கூட உருவாக்கித் தருவதற்கு இந்திய முதலாளித்துவம் தவறியிருக்கிறது.

இந்திய மக்கள்தொகையில் அறுபத்தியொன்பது சதவீதம் பேர் போதுமான சுகாதார வசதிகளுக்கு அணுகலின்றி இருக்கின்றனர். இந்திய அரசு, மொத்தமாய் அத்தனை மட்டங்களிலும் சேர்த்து, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்திற்கும் குறைவான தொகையையே சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்விக்காகச் செலவிடுகிறது.

1000 பேருக்கு 0.5 மருத்துவமனைப் படுக்கையே சராசரியாக இருக்கிறது, இந்த எண்ணிக்கை ரஷ்யாவில் 9.1 ஆகவும் சீனாவில் 3 ஆகவும் இருக்கிறது. இந்தியாவில் மொத்த உள்கட்டமைப்பு முதலீடுகளில் வெறும் 0.21 சதவீதம் மட்டுமே சுகாதாரத் துறையில் இருப்பதாக IndiaSpend இன் அரசாங்கத் தரவு மீதான ஒரு பகுப்பாய்வு தெரிவிக்கிறது.

இந்திய நிதி அமைச்சரான ஜேட்லி 2015-16 நிதியாண்டில் உள்கட்டமைப்புத் துறையிலான இந்திய அரசாங்கத்தின் செலவினத்தில் 700 பில்லியன் ரூபாய் அதிகரிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருந்தாலும், இந்திய அரசாங்கம் பல துறைகளிலும் சமூகச் செலவினங்களை வெட்டிக் கொண்டிருக்கிறது. சுகாதார ஆய்வு மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு உள்ளிட சுகாதாரப் பராமரிப்புக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டு வெறும் 331.5 பில்லியன் ரூபாய்களாக (5.4 பில்லியன் டாலர்கள்) குறைக்கப்பட்டது, கல்வித் துறை ஒதுக்கீடு 16 சதவீதம் வரை குறைக்கப்பட்டது.