ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amid strikes, French President Hollande pledges to impose labor law

வேலைநிறுத்தங்களின் மத்தியில், பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் தொழிலாளர் சட்டத்தை திணிப்பதற்கு வாக்குறுதியளிக்கிறார்

By Alex Lantier
28 May 2016

தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டங்களுக்கும் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு அதிகரித்துச் செல்லும் அலைக்கும் முகம் கொடுக்கின்ற நிலையில், ஜப்பானில் நடந்து வருகின்ற ஜி7 உச்சி மாநாட்டில் பேசிய பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், மக்கள் வெறுப்பை பெற்றிருக்கும் சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்தை தொடர்ந்தும் பராமரிப்பதற்கு வாக்குறுதியளித்தார்.

நேற்று La Rochelle இல் புதிய முற்றுகைகள் நடந்தன. இங்கு துறைமுகத் தொழிலாளர்கள் துறைமுகத்தை முற்றுகையிட்டதோடு முற்றுகையை இன்னுமொரு 24 மணி நேரத்திற்கு நீட்டிக்க நேற்றிரவு தயாரிப்பு செய்து கொண்டிருந்தனர்.

பாரிஸ் வெகுஜனப் போக்குவரத்து அமைப்பு, பிரான்சின் தேசிய இரயில்வே, மற்றும் பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை ஆகியன அடுத்த வாரம் தொடங்கி பல நாள் வேலைநிறுத்தம் அல்லது காலவரையற்ற வேலைநிறுத்தம் நடத்தவிருக்கின்ற நிலையில், வர்க்கப் போராட்டம் பரந்த அளவில் விரிவு காண்பதற்கு களம் அமைக்கப்பட்டு விட்டிருக்கிறது. வேலை நேரங்களை நீட்டிப்பதற்கும், வேலைப் பாதுகாப்பை பலவீனப்படுத்துவதற்கும், அத்துடன் தொழிற்சங்கங்களை தொழிலாளர் சட்டத்தை மீறிய வகையிலான ஒப்பந்தங்களுக்காக பேச்சுவார்த்தை நடத்த அனுமதிப்பதற்கும் வழிவகுக்கின்ற இந்த சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு, பிரெஞ்சு மக்களில் 62 சதவீதம் பேர் ஆதரவளித்தனர் என்பதை சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்று கண்டறிந்து கூறியது. ஆயினும் இந்த சட்டவிடயத்தில் விட்டுக்கொடுப்பு எதற்கும் தான் தயாராக இல்லை என்பதை ஹாலண்ட் சமிக்கை செய்திருக்கிறார்.

“நான் உறுதியாக நிற்பேன், ஏனென்றால் அது ஒரு நல்ல சீர்திருத்தம் என்று நான் கருதுகிறேன்” என்று ஹாலண்ட் அறிவித்தார். அவர் மேலும் கூறினார்: “ஒரு நாட்டின் தலைமையாக இந்த சீர்திருத்தத்தை நாம் நடைமுறைப்படுத்த விரும்புகின்றோம். ஏனெனில் நான் உண்மையாகவே இது தேவை என கருதுகின்றேன். அதனை நாம் அனைத்து வழிகளிலும் செய்வதற்கு இயலக்கூடியதாக இருக்கவேண்டும் என விரும்புகின்றேன். ஜூலை மாதக் கடைசியில் நிறைவேற்ற திட்டமிடப்பட்டிருக்கும் இச்சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டால், செப்டம்பர் தொடக்கத்திலேயே இந்தச் சட்டம் என்ன மற்றும் அதன் விளைவுகள் என்ன என்பதை ஒவ்வொருவரும் கண்டுணர வாய்ப்பு கிடைக்கும்.”

தொழிலாளர் சட்டத்தை எதிர்த்து எண்ணெய் நிலையங்களையும் எரிபொருள் கிடங்குகளையும் முற்றுகையிட்டு வரும் வேலைநிறுத்தத் தொழிலாளர்களின் மீது PS நடத்தி வருகின்ற வன்முறையான ஒடுக்குமுறையையும் ஹாலண்ட் மறைமுகமாய் பாதுகாத்துப் பேசினார். “அவசியமான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம், தொடர்ந்தும் எடுப்போம், ஏனென்றால் நாங்கள் எப்போதும் பொதுமக்கள் சுதந்திரங்களை மதித்து நடந்திருக்கிறோம், அத்தனை சுதந்திரங்களிலும் முதன்மையானது நடமாட்டத்திற்கான சுதந்திரமாகும்” என்றார் அவர்.

இச்சட்டத்தைத் திணிப்பதற்காக, வெகுஜனங்களின் எதிர்ப்பை காலில் போட்டு நசுக்குவதே ஹாலண்டின் நோக்கமாக இருக்கிறது என்பதையும் அதற்காக வேலைநிறுத்தம் செய்வதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் அரசியல்ரீதியாக பாதுகாக்கப்பட்டதாய் இருக்கின்ற உரிமைகளை மீறுவதற்கும் அவர் தயார் என்பதையும் அவரின் கருத்துகள் சந்தேகமின்றி தெளிவாக்கின. ஸ்ராலினிச CGT தலைமையில் பல தொழிற்சங்கங்களின் தரப்பில் இருந்தும் இந்த தொழிலாளர் சட்டம் தொடர்பாக வந்திருக்கக் கூடிய விமர்சனங்களை முறையானது என்று, தான் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் அவர் தெளிவாக்கினார்.

CGT என வெளிப்படையாக பெயர் குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்: “தனக்கென ஒரு வரலாற்றைக் கொண்டிருக்கக் கூடிய ஒரு தொழிற்சங்கக் கூட்டமைப்பு; சட்டம் என்பது என்ன அல்லது சட்டம் எவ்வாறானதாக இருக்கமுடியாது என்பதைத் தீர்மானிக்கலாம் என்பதை எங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.”

போலிஸ் வன்முறையைக் கொண்டு எதிர்ப்பை நசுக்கி விட்டு, சிக்கன நடவடிக்கைகளையும் சமூகப் பிற்போக்குத்தனத்தையும் திணிப்பதற்கு எண்ணுகின்ற பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் அடிப்படை நிலைப்பாட்டையே ஹாலண்டின் கருத்துகள் பிரதிபலிக்கின்றன. இருப்பினும் கூட, தொழிலாள வர்க்கத்துடன் உடனடி அபாயம் நிரம்பியதொரு மோதலை அவர் தூண்டியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்ற அதிகரித்த அழைப்புகளையும் எச்சரிக்கைகளையும் பிரான்சிலும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்திற்கு உள்ளேயிருந்து ஹாலண்ட் எதிர்கொண்டிருக்கிறார்.

“ஹாலண்ட் தனது கயிற்றின் இறுதி முடிவில் நின்று கொண்டிருக்கிறார்” என்ற அத்தகையதான ஒரு கருத்துரையில் Frankfurter Allgemeine Zeitung எழுதியது: “தனது நாடு பிரெஞ்சுப் புரட்சியின் பாரம்பரியத்தினால் அடையாளம் காணப்படுகின்றது என்பது ஜனாதிபதிக்குத் தெரியும். இந்த அரசியல் அமைப்புமுறையின் இதயத்தின் மூலத்தோற்றம் 1789 வரை பின்னோக்கி பார்க்கலாம்... CGT வேலைநிறுத்த தொழிலாளர்களின் ஒரு தீவிரமயப்பட்ட சிறுபான்மையுடன் மோதலுக்குள் செல்லக் கூடிய அளவுக்கு ஜனாதிபதியின் சட்டபூர்வத்தன்மை ஏற்கனவே மிகப் பலவீனமாக இருக்கிறது. ஒரு ஜனாதிபதி பதவிக் காலத்தின் இறுதியில், அனைத்துக்கும் மேல் பிரான்சில், சீர்திருத்தங்கள் ஏறக்குறைய சாத்தியமில்லாத ஒன்று என்பதையே இவை அனைத்தும் காட்டுகின்றன.”

PS இன் முன்னணி நிர்வாகிகளும் கூட இந்த சட்ட விடயத்தில் தங்களுடனேயே முரண்பட்டு நிற்கின்றனர்: இந்த வாரத்தின் ஆரம்பத்தில், பொருளாதார அமைச்சர் மிஷேசேல் சப்பான் இந்தச் சட்டத்தின் சில பகுதிகளை PS மாற்றி எழுதலாம் என்று ஆலோசனையளிக்க, அதன்பின் பிரதமர் மானுவல் வால்ஸ் அவரை நேரடியாக மறுத்துப் பேசினார்.

இந்த நிலைமைகளின் கீழ், தொழிலாளர் போராட்டங்களும் தனது அரசாங்கத்தை கீழிறக்கத்தக்க ஒரு பொது வேலைநிறுத்தமும் வெடித்து விடாமல் தடுக்கும் முயற்சியில், ஹாலண்ட், தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன், குறிப்பாக இந்த சட்டம் குறித்து விமர்சனப் பார்வை கொண்டுள்ள அதிகாரத்துவப் பிரிவுகளுடன், நெருங்கி வேலை செய்வதற்கு திட்டமிட்டு வருகிறார். 2012 ஜனாதிபதித் தேர்தலில் CGTயும் ஒட்டுமொத்த தொழிற்சங்க அதிகாரத்துவமும் தனக்கு ஆதரவளித்தது என்பதை அவர் நன்கு அறிவார்.

தனது நிபந்தனைகளுக்கு உடன்படுகின்ற பட்சத்தில், தொழிற்சங்கங்களுடனான நெருங்கிய அரசியல் ஒத்துழைப்பின் மீது தொடர்ந்து தங்கியிருப்பார் என்பதை ஜப்பானில் இருந்து பேசுகையில் அவர் வலியுறுத்தினார். “பேச்சுவார்த்தை எப்போதும் சாத்தியமானதே, ஆனால் இறுதித்தேர்வுகளை முன்வைப்பதை பேச்சுவார்த்தைகள் ஒருபோதும் அடித்தளமாக கொண்டிருக்க முடியாது” என்றார் அவர்.

தொழிற்சங்க அதிகாரத்துவங்களிடம் இருந்து இதற்கு உடனடியாக சாதகமான எதிர்வினை கிட்டியது. தொழிலாளர் சட்டத்தில் எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யப் போவதில்லை என்றும் அதை மக்களின் மீது திணித்தே தீருவேன் என்றுமான அவரது கருத்துக்களைக் கண்டுகொள்ளாமல், அவருடனான ஒரு உடன்பாட்டிற்கு பேச்சுவார்த்தை நடத்துவதை தொடருவதே தங்கள் விருப்பம் என்பதை வலியுறுத்துகின்றதான ஒரு அறிக்கையை நேற்று அவை பதிவிட்டன.

“அமைப்புகள் ஜனாதிபதி ஹாலண்ட்டுடன் ஒரு சந்திப்புக்காக கோரி அவருக்கு மே 20 அன்று அனுப்பியிருந்த ஒரு கூட்டுக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த நிபந்தனைகளை மீண்டும் உறுதி செய்திருக்கின்றன. சமூக உரையாடலே தனது அரசாங்கத்தின் அடிப்படை வழிமுறை என்று அவர் கூறுகின்ற நிலையில், அமைப்புகள் தங்களின் கடிதத்திற்கான ஒரு பதிலுக்காய் காத்திருக்கின்றன” என்று CGT எழுதி அதன் வலைத் தளத்தில் பதிவிடப்பட்டிருந்த ஒரு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. ஏராளமான தொழிற்சங்க மற்றும் மாணவர் சங்கங்களும் இந்த அறிக்கையில் கையெழுத்திட்டிருந்தன.

ஹாலண்டின் அடாவடித்தனங்களுக்கு CGT அளித்திருக்கக் கூடிய சாதகமான பதில், தொழிலாளர் சட்டத்தை எதிர்க்க முனைகின்ற தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் ஒரு எச்சரிக்கை ஆகும். PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வெகுஜன கோபம் அதிகரித்துச் செல்வதற்கு மத்தியில் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுக்கும் நிர்ப்பந்தத்தை CGT உணர்கின்ற அதேவேளையில், ஹாலண்டின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைக்கு எந்த கோட்பாடுமிக்க ஆட்சேபனையும் அதனிடம் இல்லை.

வேலை நிறுத்த நடவடிக்கையை “பொதுமைப்படுத்துவதற்கான” அதன் அழைப்புகள், PS அரசாங்கத்தைப் பதவியிறக்கி அதன் தொழிலாளர்-விரோதத் திட்டநிரலை தோற்கடிப்பதற்கான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுகின்ற ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கு வழிநடத்திச் செல்வதற்கான நோக்கம் கொண்டவை அல்ல.

மாறாக, தொழிலாள வர்க்கத்தை முடிந்தவரை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் அரசியல் செல்வாக்கின் கீழ் தொடர்ந்து பராமரித்து வைப்பதும், தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் PSக்கும் இடையில் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற அடையாள ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் தொழிலாளர்களை சிக்கவைப்பதுமே CGT இன் நோக்கமாய் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் தொழிலாளர்களின் சமூக அல்லது ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கு எதுவொன்றும் செய்யவியலாதவை ஆகும். இன்னும் சொன்னால், கடந்த ஏழாண்டு காலத்தில், கிரீசில் இத்தகைய ஒருநாள் அடையாள வேலைநிறுத்தங்கள் எல்லாம் மக்களின் பரந்த பிரிவுகள் மேலும் வறுமைப்படுவதற்கு மட்டுமே இட்டுச் சென்றிருந்திருக்கிறது.

பிரான்சில் தொழிலாள வர்க்கத்திலான தனது அடித்தளத்தைத் தொலைத்து, தனது வருடாந்திர நிதிநிலையில் 95 சதவீதத்திற்கு பெருநிறுவனங்களையும் அரசையுமே சார்ந்திருக்கக் கூடிய இந்த தொழிற்சங்கங்களை கையாளுவதிலும் கைப்புரட்டு செய்வதிலும் முதலாளித்துவத்திற்கு நெடிய அனுபவம் இருக்கிறது. தொழிலாள வர்க்கத்துடனான கையாளல்களில் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் அரசியல் ஸ்தாபகத்தின் மற்றும் முதலாளித்துவ வர்க்கக் கூட்டாளிகளின் ஒரு பகுதியாக இருக்கின்றன என்பதிலும் மற்றும் தற்போதுள்ள சமூக அமைப்புமுறையில் அவை ஒரு மிகப்பெரும் நிதிரீதியான மற்றும் அரசியல்ரீதியான பணயத்தை வைத்திருக்கின்றன என்பதையும் ஆளும் வட்டாரங்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றன.

தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமான போராட்ட அமைப்புகளை உருவாக்குவது ஒன்றே PS இன் தொழிலாளர் சட்டத்திற்கும் மற்றும் ஐரோப்பாவெங்கிலுமான சிக்கன நடவடிக்கைகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களின் முன்னிருக்கக் கூடிய ஒரே வழி என்பதையே CGT இன் பிரதிபலிப்புகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.