ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Socialist Equality Party in Germany demands new elections

சோசலிச சமத்துவக் கட்சி ஜேர்மனியில் தேர்தலை மீண்டும் நடத்துமாறு கோருகிறது

Sozialistische Gleichheitspartei
23 November 2017

ஜமைக்கா கூட்டணி எனப்படுவதை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த பின்னர், பேர்லினில் ஒரு புதிய அரசாங்கம் அமைப்பதன் மீது திரைக்குப் பின்னால் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன, இது அதிகரித்தளவில் ஓர் அரசியல் சதிக்கு ஒத்துள்ளது. ஜேர்மன் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இருப்பிடமான பெல்வியு மாளிகை (Bellevue Palace) ஓர் அரசியல் சதிக்குரிய நடுமையமாக மாறியுள்ளது. நாட்டின் தலைவரின் தனியுரிமை என்பதன் கீழ், ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் வலதுசாரி தீவிரவாத கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) உட்பட நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கொண்ட சகல கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து வருகிறார். அவர் புதிய தேர்தல்களுக்கு அழைப்பு விடுப்பதைத் தவிர்க்கும் இலக்கை பின்தொடர்ந்து வருகிறார்.

ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (The Sozialistische Gleichheitspartei – SGP) இவ்வாறான நடைமுறைகளை எதிர்க்கிறது. ஆளும் உயரடுக்குகள் அரசியல் நெருக்கடியை அவற்றிற்குள்ளேயே ஒரு புதிய அரசாங்கம் அமைத்து தீர்த்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது. இதன் விளைவு, எந்தவொரு ஜனநாயக கட்டுப்பாடுக்கும் உட்படாத மற்றும் முதலாளித்துவ அரசு நலன்களுக்கு கடமைப்பட்டதாக உணரும் ஒரு வலதுசாரி எதேச்சதிகார ஆட்சியாக இருக்கும்.

நாம் புதிய தேர்தல்களைக் கோருகிறோம். தற்போதைய நிலைமைகளின் கீழ், இவ்விதத்தில் மட்டுமே தொழிலாள வர்க்கம் தனது நலன்களைப் பெறுவதற்கும் மற்றும் அதிவலதின் அரசியல் தாக்குதலை எதிர்ப்பதற்கும், அரசியல் நிகழ்வுகளில் தலையீடு செய்ய முடியும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை போருக்கு எதிரான போராட்டத்துடன் இணைத்து, ஜேர்மன் மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் நலன்களை வெளிப்படுத்துகின்ற ஒரு வேலைத்திட்டத்திற்காக போராடுவதற்கும் மற்றும் இப்போதைய இந்த சமூக ஒழுங்கமைப்பில் அது காணும் ஒரு முட்டுச்சந்தில் இருந்து வெளியேறுவதற்கு ஒரு சோசலிச பாதையை வழங்குவதற்கும், அத்தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தும்.

பேர்லினில் நிலவும் அரசியல் நெருக்கடியானது, அதிகரித்தளவில் போர், சமூக துருவமுனைப்பாடு மற்றும் அதிகரித்து வரும் தேசியவாதத்தால் குணாம்சப்பட்டுள்ள ஓர் உலகில், ஜேர்மனி ஒரு ஸ்திரப்படுத்தப்பட்ட தீவு அல்ல என்பதை தெளிவுபடுத்தி உள்ளது. இந்நெருக்கடிக்கான காரணம் கூட்டணி அமைக்கக்கூடிய கட்சிகளுக்கு இடையிலான சிற்சிறு பூசல்கள் அல்ல. மாறாக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் சகல கட்சிகளாலும் தாங்கிப்பிடிக்கப்படுகின்ற ஆளும் வர்க்கத்தின் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்கும் மற்றும் பாரிய பெருந்திரளான பரந்த மக்களின் தேவைக்கும் இடையே நிலவும் ஆழ்ந்த இடைவெளியாகும்.

கடந்த நான்காண்டுகளுக்கும் அதிகமாக, கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியம் மற்றும் சமூக ஜனநாயகவாதிகளின் மாபெரும் கூட்டணி ஒரு பாரிய இராணுவ கட்டியமைத்தலை முன்னெடுத்துள்ள்ளன, புதிய வெளிநாட்டு தலையீடுகளில் ஜேர்மன் இராணுவத்தை நிலைநிறுத்தி உள்ளது, ஐரோப்பா எங்கிலும் கண்மூடித்தனமான சமூக செலவினக் குறைப்பு கொள்கைகளைத் திணித்துள்ளது, ஜேர்மனியில் வறுமை விகிதங்களையும் பாதுகாப்பற்ற வேலை சூழலையும் பாரியளவில் விரிவாக்கி உள்ளது. இந்த கொள்கைகள் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்திருந்தன. CDU, CSU மற்றும் SPD வாக்குப்பதிவுகளில் தண்டிக்கப்பட்டன. இவை ஒட்டுமொத்தமாக 14 சதவீத புள்ளிகளை இழந்து, எழுபது ஆண்டுகளில் அவற்றின் மிக மோசமான தேர்தல் முடிவுகளைப் பெற்றன.

ஆனால் சுதந்திர ஜனநாயகவாதிகள் (FDP) மற்றும் பசுமைக் கட்சியினரின் ஆதரவுடன் அங்கேலா மேர்க்கெலின் சான்சிலர் பதவி காலத்தை நீடிக்க வைக்கும் முயற்சி, நெருக்கடியை தீவிரப்படுத்த மட்டுமே செய்துள்ளது.

கூட்டாட்சி குடியரசில் நீண்டகாலமாக மேலோங்கியிருந்ததும், மேர்க்கெலின் உருவடிவில் வெளிப்படுவதுமான தந்திரோபாய சமரசம் மற்றும் மத்தியஸ்த கொள்கைகளுடன் முறித்துக் கொள்ள, ஜேர்மனிக்கான மாற்றீடு (AfD) நாடாளுமன்றத்திற்குள் நுழைவதை ஒரு சந்தர்ப்பமாக காணும் ஆளும் உயரடுக்கின் பிரிவுகளை சுதந்திர ஜனநாயகக் கட்சி (FDP) பிரதிநிதித்துவம் செய்கிறது. இந்தக் காரணத்தினால் தான் FDP ஜமைக்கா கூட்டணி பேச்சுவார்த்தைகளை தோல்வி அடையச்செய்து, அவற்றிலிருந்து அது பின்வாங்கியது.

சுதந்திர ஜனநாயகக் கட்சியின் தலைவர் லிண்ட்னருக்கான முன்மாதிரி 1970 களின் சமூக தாராளவாதிகள் இல்லை, மாறாக இன்றைய ஆஸ்திரியா ஆகும், அங்கேதான் கடும்-வலது செபஸ்தியான் கூர்ட்ஸ் FDP இன் முன்னாள் சகோதரக் கட்சியாக இருந்த வலதுசாரி தீவிரவாத கட்சியான சுதந்திர கட்சியுடன் ஓர் அரசங்கம் அமைத்து வருகிறார்.

ஜமைக்கா பேச்சுவார்த்தைகள் தோல்வியடைய காரணமாக இருந்ததற்காக, லிண்ட்னர் வலதுசாரி வலைப்பதிவுகள் மற்றும் பத்திரிகைகளிடம் இருந்து பெரும் பாராட்டுக்களை பெற்றுள்ளார். Frankfurter Allgemeine Zeitung நாளிதழ், “CDU/CSU/FDP மற்றும் பசுமைக் கட்சி ஆகியவை அதிகாரத்தைப் பரிசோதனை செய்து பார்க்க உதவாததற்காக FDP க்கு நன்றி" தெரிவித்தது. வலதுசாரி மக்கள் தொடர்பாளர் Wolfram Weiner, “வீராவேச வாய்சவடால் பேசும் குடியரசையும், அத்துடன் வெறுமனே அழுத்தமளிக்கும் கட்சி என்ற FDP இன் வரலாற்றையும்" முடிவுக்கு கொண்டு வந்ததற்காக மற்றும் பங்குச்சந்தை கருத்துக்கேற்ப தன்னை நிறுத்திக் கொண்டதற்காக லிண்ட்னரைப் பாராட்டினார். இது "பேர்லின், வரவேற்பறை என்பதற்கான ஒரு நல்ல அறிகுறி என்பதைக் காட்டிலும் ஓர் அரசியல் நெருக்கடி என்பதற்கான அறிகுறியாகும். முந்தையதன் காயங்கள் இப்போது ஆறி வருகின்றபோது, ஜமைக்கா முடிந்துவிட்டதில் இருந்து பங்குச்சந்தை நிம்மதிக்கான குறிப்பைப் பெற்றது.”

சமூக வெட்டுக்கள், இராணுவவாதம் மற்றும் அரசு எந்திரத்தைப் பலப்படுத்தும் கொள்கைகளைத் தொடர்ந்து தீவிரப்படுத்தும் ஓர் அரசியல் இயங்குமுறையை அபிவிருத்தி செய்யும் மற்றும் இந்த உடைந்த துண்டுகளை ஒன்றுசேர்க்கும் வேலையை இப்போது ஜனாதிபதி ஸ்ரைன்மையர் ஏற்றுள்ளார். இந்த பாத்திரத்தைப் பூர்த்தி செய்ய சமூக ஜனநாயகக் கட்சி பொருத்தமாக உள்ளது. அவர் வெளியுறவு அமைச்சராக இருந்து, ஜேர்மன் இராணுவவாதத்திற்குப் புத்துயிரூட்டுவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார். 2014 இல், அவர் "இராணுவ கட்டுப்பாடுகள் முடிந்துவிட்டதாக" அறிவித்தார். உக்ரேன் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்பு சதியிலும், கிழக்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவின் இராணுவத் தலையீடுகளிலும் அவர் ஒரு முன்னணிப் பாத்திரம் வகிக்க சென்றார்.

நீண்டகாலமாக தீர்க்க முடியாத ஓர் அரசு நெருக்கடி சம்பவத்தில், ஜேர்மனி புவிசார் அரசியல் செல்வாக்கை இழந்துவிடுமென அவர் அஞ்சுவதாலும், அதிகரித்து வரும் அதிருப்தி, கட்டுப்பாட்டை இழந்து அரசியல்ரீதியில் இடதிற்கு திரும்புவதை அவர் தடுக்க விரும்புவதாலும், ஸ்ரைன்மையர் புதிய தேர்தல்களுக்கு அழைப்புவிடுப்பதை தவிர்க்க விரும்புகிறார். அடிமட்டத்தில் பதட்டங்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றன. இந்த வாரத்தில் மட்டும், சீமென்ஸ் மற்றும் ஏர் பேர்லினின் பாரிய வேலைநீக்கங்களுக்கு எதிராக பல நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன.

சமூக ஜனநாயகக் கட்சி, மாபெரும் கூட்டணியை தொடர்வதற்கான ஸ்ரைன்மையரின் அழுத்தத்தை இதுவரையில் எதிர்த்து வந்துள்ளது. இது ஏனென்றால், தொழிலாள வர்க்கத்திடையே இடது-சாரி மற்றும் சோசலிச சிந்தனைகளின் செல்வாக்கிற்கு எதிராக ஒரு முட்டுக்கட்டை இடுவதையே அதன் பிரதான பணியாக அது கருதுகிறது. மதிப்பிழந்த மாபெரும் கூட்டணியில் அது தொடர்ந்தால் மேற்கூறிய முன்னோக்கு செல்வாக்கு பெறக்கூடும் என்றும், வலதுசாரி தீவிரவாத AfD கட்சி நாடாளுமன்றத்தில் மிகப்பெரிய எதிர்கட்சியாக இருக்க விட்டுவிட வேண்டியிருக்கும் என்றும் அது அஞ்சுகிறது.

எவ்வாறிருப்பினும், ஒரு மாபெரும் கூட்டணிக்கான SPD இன் எதிர்ப்பு வேகமாக உருகி வருகிறது. சாத்தியமான அளவுக்கு விரைவாக நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வர, சமூக ஜனநாயகக் கட்சி “அரசு கொள்கை பொறுப்பை” ஏற்க வேண்டுமென வலியுறுத்தும் குரல்கள் அதிகரித்து வருகின்றன. விவாதிக்கப்பட்டு வருகின்ற ஒரு மாற்றீடு, SPD ஐ எதிர்கட்சியாகவே வைத்துக்கொண்டு CDU/CSU அல்லது பசுமைக் கட்சியுடன் சேர்ந்த CDU/CSU சிறுபான்மை அரசாங்கத்தை அதை சகித்துக் கொள்ளவைப்பதாக இருக்கும்.

இது AfD பலப்படுத்துவதில் போய் முடியும். ஒரு சிறுபான்மை அரசாங்கம் மாறிக்கொண்டு இருக்கும் பெரும்பான்மையினரை சார்ந்திருக்கும் என்பதால், இது உடனடியாகவோ சற்று தாமதமாகவோ வலதுசாரி தீவிரவாதிகளுடன் ஒத்துழைக்க வேண்டியிருக்கும். மேர்க்கெல் சான்சிலராக இல்லையென்றால், அகதிகள் ஜேர்மனியில் உள்ள அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் ஒன்றுசேர்வதை அனுமதிக்கும் கொள்கையை அரசாங்கம் நிறுத்திக் கொண்டால், CDU/CSU/FDP சிறுபான்மை அரசாங்கம் ஒன்றை சகித்துக்கொள்ள தான் தயாராக இருப்பதாக முன்னணி AfD பிரதிநிதியான ஆண்ட்ரே பொக்கென்பூர்க் அறிவித்துள்ளார்.

அனைத்து நாடாளுமன்ற கட்சிகளும் AfD உடன் ஒத்துழைக்க அவை தயாராக இருப்பதை செவ்வாயன்று எடுத்துக்காட்டின. அவை மாபெரும் கமிட்டி (Grand committee) எனப்படும் ஒன்றை நிறுவின, AfD முதற்கொண்டு இடது கட்சி வரையில் எல்லா கட்சிகளும் அதில் பிரதிநிதித்துவம் செய்கின்றன. ஒரு புதிய அரசாங்கம் இறுதி செய்யப்படும் வரையில் கூட்டாட்சி அரசாங்கத்தின் நிர்வகிக்கும் தகைமையை உறுதிப்படுத்தும் வேலை இந்த மாபெரும் கமிட்டிக்கு பணிக்கப்பட்டுள்ளது. அது முதலில் மாலி, ஆப்கானிஸ்தான், சிரியா மற்றும் ஈராக்கில் இராணுவ நிலைநிறுத்ததல்களை விரிவாக்க தயாரிப்பு செய்து வருகிறது, எதற்காக என்றால், பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் வார்த்தைகளில், “ஒரு பலமான சர்வதேச குறிப்பை ஏற்படுத்துவதற்காக.” “அது ஓர் அரசாங்கம் உருவாக்கும் பாதிப்பைக் கொண்டுள்ளது,” என்று Tagesspiegel உற்சாகமாக குறிப்பிட்டது. “காரணகாரியத்துடனான ஒரு கூட்டணி.”

இடது கட்சி, SPD க்கு நெருக்கமாக நகர்ந்ததன் மூலம் அரசு நெருக்கடிக்கு விடையிறுத்துள்ளது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு சோசலிச முன்னோக்கு செல்வாக்கு மேலோங்குவதைத் தடுப்பதும் அதன் மிக முக்கிய பணியாக காண்கிறது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் SPD இன் பொதுச் செயலாளராக அவர் பதவியைத் துறந்து அக்கட்சியையும் விட்டு வெளியேறிய இடது கட்சியின் ஸ்தாபகர் ஒஸ்கார் லாபொன்டைன், இந்நகர்வு குறித்து அவர் வருந்துவதாக முதல்முறையாக இப்போது குறிப்பிட்டுள்ளார். இடது கட்சி நாடாளுமன்ற குழு தலைவர் டீட்மார் பார்ட்ஸ்-Dietmar Bartsch- உம் மற்றும் துரின்னிங்கியாவின் அரசு தலைவர் போடோ ராமலோவ்-Bodo Ramelow -உம், மேர்க்கெல் தலைமையிலான ஒரு சிறுபான்மை அரசாங்கமாக இருந்தாலும் கூட சகித்துக் கொள்ள தயாராக உள்ளனர்.

பேர்லினின் நெருக்கடி வைய்மர் குடியரசின் இறுதி ஆண்டுகளை நினைவூட்டுகிறது. அந்நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி (KPD) பின்பற்றிய தவறான கொள்கைகளால் தொழிலாள வர்க்கம் முடமாகி, அரசியல் சம்பவங்களில் சுயாதீனமாக தலையிட முடியாது இருந்ததால் ஒரு நீடித்த சமூக மற்றும் அரசியல் நெருக்கடி ஒரு பேரழிவாக விளைந்திருந்தது. ஜனவரி 1933 இல் நாஜிக்கள் அதிகாரத்தை ஏற்றதற்கு முந்தைய நான்காண்டு காலம் ஒன்று மாற்றி ஒன்றாக மக்கள் மதிப்பிழந்த வலதுசாரி ஆட்சி அதிகாரத்திலிருந்த கடுமையான நெருக்கடிகளும், சூழ்ச்சிகளும், சதியாலோசனைகளும் கொண்ட காலமாக  இருந்தது.

இறுதியில் ஹிட்லர் பாரிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்ததால் அதிகாரத்திற்கு வரவில்லை—நாடாளுமன்ற தேர்தல்களில் நாஜிக்கள் இரண்டு மில்லியன் வாக்குகளை இழந்து, SPD மற்றும் KPD இன் ஒருமித்த வாக்குகளுக்கு வெகு பின்னால் 33 சதவீத வாக்குகளுடன் இருந்தனர். சமூக ஜனநாயகக் கட்சியால் ஆதரிக்கப்பட்டு தேர்வாகி இருந்த ஜனாதிபதி பௌல் வொன் ஹின்டென்பேர்க்கின் ரைஹ் அலுவலகத்தில் ஒரு சூழ்ச்சி செய்துதான் ஹிட்லர் அவர் நியமனத்தைப் பெற்றார்.

அதுபோன்றவொரு பேரழிவு மீண்டும் நடக்காமல் தடுக்கவும், அரசியல் வலதுக்கு நகர்வதை நிறுத்தவும் மிக முக்கிய முன்நிபந்தனையாக இருப்பது, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச கட்சியைக் கட்டமைப்பதாகும். ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) புதிய தேர்தல்களுக்கான கோரிக்கையை உயர்த்துகையில், சமூக ஜனநாயகக் கட்சி, பசுமைக் கட்சியினர் மற்றும் இடது கட்சியினர் உட்பட முதலாளித்துவ கட்சிகளின் நிஜமான நோக்கங்களை அம்பலப்படுத்தி, முதலாளித்துவம், ஏகாதிபத்திய போர் மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு ஒரு நிஜமான சோசலிச மாற்றீடுக்கு ஆதரவைக் கட்டியெழுப்ப முனையும்.