ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Tillerson touts US-India partnership on South Asian tour

தெற்காசிய சுற்றுப்பயணத்தின் போது அமெரிக்க-இந்திய கூட்டுழைப்பு பற்றி ரில்லர்சன் பெருமையடிக்கிறார்

By Deepal Jayasekera
2 November 2017

அமெரிக்க வெளியுறவுச் செயலர் றெக்ஸ் ரில்லர்சன் கடந்த வாரம் இந்தியாவிற்கு விஜயம் செய்ததை வாஷிங்டனுக்கும், புது தில்லிக்கும் இடையேயான தீவிர இராணுவ ஒத்துழைப்பை ஊக்குவிக்க பயன்படுத்திக் கொண்டார்.

ரில்லர்சன், அவரது பயணத்திற்கு சில தினங்களுக்கு முன்பு வாஷிங்டனை தளமாகக் கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆயுவுகளுக்கான மையத்தில் (Centre for Strategic and International Studies-CSIS) உரையாற்றிய போது, அவரது தெற்காசிய சுற்றுப்பயணத்தின் நோக்கம் பற்றி குறிப்பிட்டார். மேலும், சீனாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான தாக்குதலில் இந்தியா முக்கிய பங்கு வகிக்குமெனவும் அவர் அறிவித்தார்.

“இந்தியாவின் மற்றும் இதர பலவற்றின் எழுச்சிக்கு நன்மை செய்த அதே சர்வதேச ஒழுங்கு” பெய்ஜிங்கிலிருந்து வரும் “அதிகரித்த அளவிலான அழுத்தத்தின் கீழ் உள்ளது” என ரில்லர்சன் கூறினார். அத்துடன், ஆசிய பசிபிக் எங்கிலும் வளர்ந்துவரும் சீன செல்வாக்கிற்கு ஒரு சிறந்த சவாலாக “இந்திய எழுச்சி” உள்ளதென அவர் பெருமையடித்தார்.

கடந்த வாரம் புது தில்லியில் நடந்த ஒரு செய்தியாளர் மாநாட்டில் ரில்லர்சன் பேசுகையில், இந்தியாவும் அமெரிக்காவும் “இயல்பான கூட்டாளிகளாக,” பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டுக்களை வளர்த்துக் கொண்டே “பயங்கரவாதத்திற்கு எதிராக தோளோடு தோள் கொடுத்து” நிற்கின்றன எனத் தெரிவித்தார்.

இந்த பிராந்தியம் முழுவதிலுமான வாஷிங்டனின் நலன்களை அழுத்தமாக முன்னெடுப்பதற்காக இந்தியாவை ஒரு தாக்குதல் நாயாக வளர்க்கும் அமெரிக்க மூலோபாயத்தை ரில்லர்சன் சூசகமாக குறிப்பிட்டு, “இந்தியா ஒரு முன்னணி சக்தியாக எழுச்சியடைவதற்கு” தனது ஆதரவை தெரிவித்தார். மேலும், “இந்த பிராந்தியம் முழுவதிலும் பாதுகாப்பை வழங்குவதற்கான இந்திய திறன்களுக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்ய’’ ட்ரம்ப் நிர்வாகம்  அதனை அர்ப்பணித்துள்ளதாக அவர் கூறினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்த திட்ட நிரல் குறித்து தனது அரசாங்கத்தின் முழு ஆதரவுக்கு சமிக்ஞை செய்தார். ரில்லர்சன் அவரது CSIS உரையின் போது, “இந்திய-அமெரிக்க உலகளாவிய கூட்டுழைப்பு” தொடர்பாக கூறிய கருத்துக்களில் இருந்த “தெளிவான பார்வை” குறித்து சுவராஜ் பாராட்டினார். மேலும், “உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயகங்களுக்கு இடையிலான இந்த உறவை பலப்படுத்தும் உங்களது வலுவான விருப்பத்தை நாங்களும் முழுமையாக பகிர்ந்து கொள்கிறோம்” எனவும் தெரிவித்தார்.

இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனும் கூட ரில்லர்சன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிதாக அறிவிக்கப்பட்ட தெற்காசிய கொள்கையை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பிராந்திய சுற்றுப்பயணத்தின் ஒரு அங்கமாக இந்த இந்திய விஜயம் இருந்தது. இந்த மூலோபாயம், சீனா, மற்றும் அதனுடன் கூட்டு வைத்திருக்கும் பாகிஸ்தான் போன்ற இந்த பிராந்தியத்திலுள்ள நாடுகள் மீது அழுத்தத்தை அதிகரிக்கப்பது மற்றும் இராணுவ குவிப்பை குறிப்பாக ஆப்கானிஸ்தானில் விரிவுபடுத்துவது ஆகியவற்றை உள்ளடக்கியது. சவுதி அரேபியா, ஈராக், கட்டார், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கும் ரில்லர்சன் விஜயம் செய்தார்.

ஆப்கானிஸ்தானில், வாஷிங்டன் உடனான புது தில்லியின் கூட்டணிக்கான நோக்கம் பற்றி ரில்லர்சன் குறிப்பிட்டார். “இந்தியாவுடனான உறவின் மீதான எங்களது பார்வை வெறுமனே குறிப்பிட்ட இந்த பிராந்தியம் பற்றியதாக இல்லாமல் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவுள்ளது” ஆனால், “ஜப்பான் முதல் இந்தியா வரையிலான ஒரு சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்திய-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்குவதாகும். எனவே இதுவொரு பரந்த உறவாகும்” எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் பிராதான போட்டியாளரான பாகிஸ்தானை ரில்லர்சன் கண்டனம் செய்தார். “இஸ்லாமாபாத்தில், பாதுகாப்பான புகலிடங்களை தேடும் பல பயங்கரவாத அமைப்புக்கள் அங்கே உள்ளன என்று முடிவுக்கு வருவதில் நாங்கள் வெளிப்படையாகவே இருந்தோம்.” “இந்த அமைப்புக்களை” சமாளிக்கும் விதமாக அமெரிக்கா “அவ்விடத்திற்கேற்ற வழிமுறைகளை செயற்படுத்துகிறது” எனவும் அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் ரில்லர்சன் பேசிய போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளை எதிர்த்து போராடும் இஸ்லாமிய குழுக்களை இஸ்லாமாபாத் நசுக்க தவறினால் அதற்கான உதவிகளின் அளவை ட்ரம்ப் நிர்வாகம் மட்டுப்படுத்தும் என்பது போன்ற எச்சரிக்கைகளை வலியுறுத்தினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நலன்களை முன்னெடுத்து செல்கையில், பாகிஸ்தானுக்கு எதிராக ரில்லர்சன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள், “எல்லை கடந்த பயங்கரவாதத்தை” இஸ்லாமாபாத் தான் ஊக்குவிக்கிறது என்ற இந்தியாவின் நீண்ட கால குற்றச்சாட்டு குறித்த ஒப்புதலாகவும் உள்ளது. இந்த கூற்றுக்களை, பேரினவாதத்திற்கு ஊக்கமளிக்கவும் கடந்த வருடம் ஆயுத மோதல்களுக்கு இட்டுச்சென்ற பாகிஸ்தானுடனான உக்கிரம்நிறைந்த எல்லைப்புற சச்சரவுகளை நியாயப்படுத்தவும், புது தில்லி பயன்படுத்திக் கொண்டது.

ரில்லர்சனின் கருத்துக்களால் ஊக்கமளிக்கப்பட்டு, சுவராஜ் பின்வருமாறு கூறினார்: “தீவிரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பயங்கரவாதம் மீதான கொள்கை வெற்றிபெற முடியும்.” சீனாவுடனான நெருக்கமான உறவுகளை விட்டு விலகிச் செல்ல பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்காவும் குற்றச்சாட்டுக்களை பயன்படுத்துகிறது.

இந்தியாவில் பேசியபோது, வட கொரியாவுடனான புது தில்லியின் இராஜதந்திர உறவுகள் பற்றியும், ஈரானுடனான அதன் பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகள் பற்றியும் ரில்லர்சன் தனது கருத்துக்களை எழுப்பினார். ட்ரம்ப் நிர்வாகத்தின், வட கொரியாவுக்கு எதிரான ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்கள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினால் கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை முடக்கும் நடவடிக்கைகள் ஆகியவற்றின் உள்ளடக்கத்தில் இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

உலக அமைதிக்கு ஒரு அச்சுறுத்தலாக வட கொரியாவின் மட்டுப்படுத்தப்பட்ட அணுசக்தி மற்றும் ஏவுகணை தொகுப்புகள் இருப்பதாக அமெரிக்கா கூறிவரும் கண்டனங்களை பின்பற்றும் இந்தியா, பியோங்யாங்கிற்கு எதிரான ட்ரம்பின் ஆக்கிரோஷமான நிலைப்பாட்டுடன் ஏற்கனவே இணைந்துவிட்டது. மேலும், அமெரிக்கா மூலம் நிறைவேற்றப்பட்டதான ஐ.நா. பாதுகாப்பு குழு தீர்மானத்திற்கும் ஒத்துழைப்பு வழங்கி வட கொரியாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளையும் இது விதித்துள்ளது.

வட கொரியாவுடனான இராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கைகளை இந்தியா எதிர்த்து வந்ததாக சுவராஜ் கூறினார். இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் “மிகக் குறைந்த அளவிற்கு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது” என்றும், மேலும் இராஜதந்திர உறவுகள் “அப்படியே பின்பற்றப்பட வேண்டும் அதன் மூலம் சில தகவல்தொடர்பு வழிகள் இன்னும் பேணப்பட்டு வருகின்றன” என்றும் கூறி அவர் அந்த உறவுகளை குறைமதிப்பிட்டார்.

வட கொரியாவிற்கு எதிரான அமெரிக்க ஆத்திரமூட்டல்களின் தொடர்ச்சியான அதிகரிப்போடு, பியோங்யாங் உடனான அனைத்து உறவுகளையும் முறித்துக்கொள்ள வலியுறுத்தும் வாஷிங்டனின் தீவிர அழுத்தத்தின் கீழ் இந்தியா அநேகமாக வரும். இருப்பினும், வட கொரியாவுடன் பேணப்படும் பொருளாதார மற்றும் இராஜதந்திர தொடர்புகளின் மட்டுப்படுத்தப்பட்ட குணாம்சத்தை ரில்லர்சன் “ஏற்றுக்கொண்டார்” என சுவராஜ் கூறினார்.

ஈரானுடனான இந்தியாவின் உறவுகளைப் பற்றி ஒரு சமரச அணுகுமுறையை ரில்லர்சன் எடுத்துக்கொண்டார். மேலும், “சட்டபூர்வமான வணிக நடவடிக்கைகளில் குறுக்கிடுவதோ” அல்லது “ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒப்பந்தங்கள் அல்லது எங்களுடைய நட்பு மற்றும் கூட்டாளி நாடுகளின் நலன்களுக்கான பொருளாதார அபிவிருத்தி மற்றும் செயல்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றில் குறுக்கிடுவதோ” அமெரிக்காவின் குறிக்கோளாக இருக்கவில்லை என்றவர் கூறினார்.

இந்த நிலைப்பாடு, ஐரோப்பிய சக்திகள் ஈரானில் முதலீடு செய்யக்கூடாது என்ற ரில்லர்சனின் எச்சரிக்கைகளுக்கு முரணானது. அக்டோபர் 22 அன்று சவுதி அரேபியாவில் பேசியபோது, ரில்லர்சன், “ஈரானிய புரட்சிகர காவலருடன் வணிகம் செய்பவர்கள், ஐரோப்பிய நிறுவனங்கள் அல்லது உலகெங்கிலும் உள்ள ஏனைய நிறுவனங்கள் - எதுவானாலும் உண்மையில் பெரும் பணயத்தில் தான் செய்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

ஈரானுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து ரில்லர்சன் கொண்டிருக்கும் “மென்மையான” நிலைப்பாடு, சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்ள, இப்பிராந்தியத்தில் புது தில்லியின் புவிசார் அரசியல் செல்வாக்கை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மூலோபாய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள ஈரானின் சபாஹார் துறைமுகத்தையும், மற்றும் ஆப்கானிஸ்தானுடன் இணையும் ஒரு போக்குவரத்து வழித்தடத்தையும் இந்தியா அபிவிருத்தி செய்து வருகிறது. இது எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த ஆசிய பிராந்தியம் முழுவதிலும் இந்திய அணுகலை விரிவாக்கும் நோக்கம் கொண்டது. இந்த திட்டங்கள், யூரேசிய நிலப்பகுதியை பொருளாதார ரீதியாக ஒருங்கிணைக்க சீனா அதன் ஒரே இணைப்பு ஒரே பாதை (One Belt, One Road) திட்டத்தின் கீழ் முயற்சிகள் மேற்கொள்வதற்கு எதிராக செயல்படும்.

அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு முன்னணியில் ஆஸ்திரேலியாவையும் இணைப்பதன் மூலம் சீன எதிர்ப்பு “நான்குமுனை பேச்சுவார்த்தையை” நிறுவுவதற்கான முன்மொழிவுகளை ரில்லர்சன் எழுப்புகிறாரா என்பது தெளிவாக தெரியவில்லை. ரில்லர்சன் தனது CSIS உரையில் அந்த முன்மொழிவை பதிவு செய்தார்.

இருப்பினும், ஜப்பான் வெளியுறவு அமைச்சர் டாரோ கொனோ கடந்த வியாழனன்று Nikkei நாளிதழுடன் பேசும்போது, ட்ரம்பின் அடுத்த வார ஆசிய சுற்றுப்பயணத்தின் போது ஜப்பானிய அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்மொழியுமென தெரிவித்தார்.