ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French police mobilize against protests by youth in Aulnay

ஒல்னே இளைஞர் போராட்டங்களுக்கு எதிராக பிரெஞ்சு பொலிஸ் திரள்கின்றன

By Anthony Torres
14 February 2017

ஒல்னே-சு-புவா (Aulnay-sous-Bois) பொலிஸால் அடிவயிற்றில் பலமாக தாக்கப்பட்ட ஒரு இளைஞர், Théo, மீதான பொலிஸின் பாலியல் தாக்குதலை எதிர்த்து பாரீஸ் பகுதி இளைஞர்களது போராட்டங்களுக்கு எதிராக, பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அவசரகால நெருக்கடி நிலைமைகளின் கீழ் இவ்வாரயிறுதியில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸை ஒன்றுதிரட்டியது. பல போராட்டங்கள் பாதுகாப்பு படைகள் உடனான மோதலாக வெடித்தன.

10 நாட்களுக்கு முன்னர், பொலிஸ், billy club எனப்படும் கையடக்க உருட்டுக்கட்டையைக் கொண்டு Théo ஐ தாக்கியதில், அவர் கடுமையாக காயமடைந்தார். அவருக்கு உடனடி அறுவை சிகிச்சையும், வேலையிலிருந்து 60 நாட்கள் ஓய்வூம் தேவைப்பட்டது. அவருக்கு தலையிலும் முகத்திலும் கூட காயங்கள் ஏற்பட்டிருந்தன. பொலிஸ் அவர்களது வாகனத்திற்குள்ளே அவரை ஏற்றி சென்று, அவரை அடித்து அவமரியாதையாக நடத்தியதுடன், அவரை "அழுக்கு நாயே" என்றழைத்தனர். 

சனியன்று, பெப்ரவரி 11 இல், Seine-Saint Denis மாவட்டத்தின் Bobigny நீதிமன்ற வளாகத்தின் முன் நடந்த ஒரு போராட்டத்தில் அரசு-சாரா அமைப்பு அதிகாரிகளும் மற்றும் தனிப்பட்ட குடிமக்களும் ஒருங்கிணைந்து கலந்து கொண்டதோடு, முன்ஆயத்தமின்றி அமைக்கப்பட்டிருந்த மேடையில் ஒலிபெருக்கி இல்லாது பேசிய அவர்கள், பொலிஸ் வன்முறையைக் கண்டித்து கருத்துக்களைக் கூறினர். “பலாத்காரம் செய்பவர்கள் சிறையில் இருக்க வேண்டும்,” “பொலிஸை ஒவ்வொருவரும் வெறுக்கிறோம்,” “Théo க்கு நியாயம் வேண்டும்,” மற்றும் "நீதியும் இல்லை, அமைதியும் இல்லை,” என்பது உட்பட அக்கூட்டம் கோஷங்களை எழுப்பியது. 

சமூக ஊடகங்களில் அழைப்புகள் வரத் தொடங்கியதும், போராட்டத்திற்கு அடுத்த நாள் Théo க்கு எதிராக பாலியல் தாக்குதலுக்கு எதிராக போராடுவதற்காக மட்டுமின்றி, மாறாக கடந்த கோடையில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தால் நடந்த Adama Traoré இன் மரணத்திற்கு எதிராகவும், அத்துடன் 2005 புறநகர் பகுதி கலகங்களுக்கு எதிராகவும் போராட Argenteuil இல் ஒரு கூட்டம் கூடியது.  

சோசலிஸ்ட் கட்சி பெருமளவிலான பொலிஸ் நிலைநிறுத்தலை ஒன்றுதிரட்டியதன் மூலம் விடையிறுத்தது. ஆர்ப்பாட்ட இடத்தை ஒதுங்கியிருந்து கவனிக்கும் விதத்தில், எண்ணற்ற பாதுகாப்பு படைகள் தலையீடு செய்தன, குறிப்பாக Bobigny இல். Bobigny மற்றும் Argenteuil இன் இரண்டு போராட்டங்களுமே பொலிஸ் உடனான மோதல்களில் முடிந்தன. கார்களும் குப்பைத்தொட்டிகளும் எரிக்கப்பட்டன, அதேவேளையில் பாதுகாப்பு படைகள் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைகுண்டுகளை வீசியது.      

அங்கே பல டஜன் கணக்கான கைது நடவடிக்கைகள் இருந்தன: Bobigny இல் 37 பேர் கைது செய்யப்பட்டனர், Argenteuil இல் எட்டு சிறார்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்; மற்றும் ஞாயிற்றுக் கிழமை இரவில் இருந்து திங்கட்கிழமை வரையிலும், இன்னும் கூட Seine Saint-Denis இல் 10 பேர் கைது செய்யப்பட்டனர். Drancy, Noisy-le-Sec மற்றும் Bondy உட்பட ஏனைய தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளிலும் கைது நடவடிக்கைகள் நடத்தப்பட்டன. அனைத்திற்கும் மேலாக, இவ்வாரயிறுதியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு கூடுதலாக, கடந்த வாரயிறுதியில் Théo மீதான தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களுக்குப் பின்னர் வேறு ஐந்து பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.    

ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், பொலிஸிற்கு ஆதரவாக குற்றமற்றவர்கள் என்ற அனுமானத்தை முன்வைத்து, Théo மீதான பாலியல் தாக்குதலையும், அதுவும் மிகவும் பரந்தளவில் பொலிஸ் காட்டுமிராண்டித்தனத்தையும், மூடிமறைக்க முயன்று வருகின்றன. எவ்வாறிருப்பினும், பொலிஸ் வன்முறைக்கு முன்னால் அதிகரித்து வரும் மக்கள் சீற்றம் அதிகரித்து வரும் வெடிப்பார்ந்த சமூக பதட்டங்களை அடிக்கோடிடுகிறது.  

பல தசாப்த காலமாக, தொழிலாள வர்க்க குடிவாசிகளும் புலம்பெயர்ந்தவர்களும் வசிக்கும் புறநகர் பகுதிகள் வழமையாக அவமதிப்புகளையும், ஏதேச்சதிகார கைது நடவடிக்கைகளையும் மற்றும் பொலிஸின் வன்முறை நடவடிக்கைகளையும் முகங்கொடுத்துள்ளன. அதேநேரத்தில், 2003 இல் பொது பாடச்சாலைகளில் முகத்திரை மீதான தடையில் இருந்து 2009 இல் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் கீழ் சோசலிஸ்ட் கட்சி தொடர்ந்த பர்க்கா மீதான தடை வரையில், முஸ்லீம்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இது பாரீஸின் புறநகர் பகுதியிலும் மற்றும் பிரான்ஸ் எங்கிலும் 2005 மற்றும் 2007 இல் பெருமளவிலான கலங்களைப் பல நாட்களுக்குத் தூண்டிவிட்டன. எவ்வாறிருந்தபோதினும், இத்தகைய கலகங்களைத் தூண்டிய விடயங்களில் சம்பந்தப்பட்ட பொலிஸ் கண்டுங்காணாமல் விடப்பட்டது.      

கடந்த கோடையில், Beaumont-sur-Oise இல், Adama Traoré பொலிஸ் காவலில் இருந்த போதே சந்தேகத்திற்கு இடமான வித்ததில் உயிரிழந்தார். அவர் குடும்பத்தினர் உடலைப் பார்ப்பதற்கு கூட பொலிஸ் அனுமதிக்கவில்லை என்பதோடு, அவர் மாரடைப்பில் இறந்ததாக பொலிஸ் வாதிட்டது—இந்த விளக்கத்தை அவர் குடும்பத்தால் ஒருபோதும் ஏற்கவில்லை.  

அவர் சகோதரர், Bagui Traoré, விவரிக்கையில், “அவரை அவர்கள் Persan இல் உள்ள gendarmerie எடுத்துச் சென்றனர். ஐந்து அல்லது ஆறு ஆயுதந்தாங்கிய காவல்படை [துணைஇராணுவ பொலிஸ்] சுற்றி நிற்க, அவரை நான் அங்கே தான் பார்த்தேன். அவர் தரையில் கிடந்தார், அவர் கைகள் முதுகுக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்தன. அவர் மூச்சுபேச்சின்றி, உயிரற்று கிடந்தார். அவர் முகத்தில் இரத்தக்கறை படிந்திருந்தது. எங்களைத் தடுத்த அந்த ஆயுதந்தாங்கிய காவல்படையில் ஒருவரை அங்கே நான் பார்த்தேன். அவர் ஒரு வெள்ளை நிற டி-சர்ட் அணிந்திருந்தார், அவர் திரும்பி வரும் போது அவர் டி-சர்ட்டில் இரத்தம் படிந்திருந்ததை நான் பார்த்தேன், அது என் சகோதரரின் இரத்தம் தான். என் துணைவியாரும் அங்கே இருந்தார், அவரும் இதை எல்லாம் பார்த்தார். Adama மாரடைப்பில் இறக்கவில்லை; அவரை இவர்கள் அடித்தார்கள்,” என்றார்.

மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ள சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம், தொழிலாள வர்க்க பகுதிகளில் கோபம் அதிகரித்து வருவதை முகங்கொடுக்கிறது, அத்துடன் 2005 மற்றும் 2007 இல் போலவே கலகங்கள் வெடிக்குமோ என்று அஞ்சுகிறது. அனைத்திதற்கும் மேலாக, 10 ஆண்டுகள் முன்னர் போலில்லாமல், சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அவர்களது போர் சூழலில் நேட்டோ அதிகாரங்களால் ஒன்றுதிரட்டப்பட்ட இஸ்லாமிய வலையமைப்புகளால் நடத்தப்பட்ட நவம்பர் 13, 2015 பாரீஸ் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சி கொண்டு வந்த அவசரகால நெருக்கடி நிலையின் சூழலில் இப்போராட்டங்கள் கட்டவிழ்ந்து வருகின்றன.  

அரசியல் ஸ்தாபகமோ போராட்டங்களுக்குத் தடைவிதிக்க மற்றும் போராட்டக்காரர்களை இன்னும் கொடூரமாக ஒடுக்க கோரி வருகின்றது. பழமைவாத ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த Réunion தீவில் இருந்து அவர் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “Bobigny போராட்டத்தை அங்கீகரிக்கும் அபாயத்தை எடுத்த" “அரசாங்கத்தின் பாத்திரத்தை" கண்டித்தார். “... திரு. Bruno Le Roux ஓர் அறிக்கை வெளியிடுவதற்காக மக்கள் காயப்பட வேண்டுமா? வன்முறை அபாயங்கள் இந்தளவிற்கு வெளிப்படையாக இருக்கையில், உள்துறை அமைச்சர் ஏன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கினார்?” என்றார்.   

Théo மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான இந்த வன்முறை, அவசரகால நெருக்கடி நிலையின் ஆழ்ந்த பிற்போக்குத்தனமான குணாம்சத்தை அடிக்கோடிடுகிறது, இதன் பிரதான இலக்கு பயங்கரவாதிகள் கிடையாது, மாறாக பிரான்சுக்கு உள்ளே உள்ள இளைஞர்களும் மற்றும் தொழிலாள வர்க்கமும் தான்.

அவசரகால நெருக்கடி நிலையை சோசலிஸ்ட் கட்சி நடைமுறைப்படுத்தியமையானது, ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும் பொலிஸை ஊக்குவித்ததோடும், அத்துடன் நவ-பாசிசவாத தேசிய முன்னணியை (FN) சட்டப்பூர்வமாக்கியதோடு கைகோர்த்து சென்றது. புலம்பெயர்ந்தோரை சோசலிஸ்ட் கட்சி கைது செய்தமையும் மற்றும் வெளியேற்றமையும், அதன் அவசரகால நெருக்கடி நிலைமையும், அது தேசிய பாதுகாப்பு படையை உருவாக்கியமையும், குடியுரிமையை பறிக்கும் கோட்பாட்டை அரசியலமைப்பில் உள்ளடக்குவதற்கான அதன் முயற்சியும், இவை அனைத்தும் தேசிய முன்னணியின் வேலைத்திட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இவையெல்லலாம், புறநகர் பகுதியில் வாழும் தொழிலாள வர்க்க இளைஞர்கள் மீது அட்டூழியங்களை நடத்த அதற்கு சுய அதிகாரம் இருப்பதாக பொலிஸ் உணரும் நிலைமைகளை உருவாக்கி உள்ளன.

2017 ஜனாதிபதி தேர்தல்களில் 56 சதவீத இராணுவ அதிகாரிகளும் மற்றும் பொலிஸூம் தேசிய முன்னணிக்கு வாக்களிக்க ஆலோசித்து வருவதாக Cevipof இன் ஒரு ஆய்வு அக்டோபர் 2016 இல் கண்டறிந்தது.

இது, முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத இனவானத்தை தேசிய முன்னணி தூண்டிவிடுவதுடன், பாதுகாப்பு படைகளின் பெரும் பிரிவுகளது பார்வை அதிகரித்தளவில் ஒருங்கிணைந்து வருவதைப் பிரதிபலிக்கிறது. 20 minutes பத்திரிகை அரசியல் ஆய்வாளர் Luc Rouban ஐ மேற்கோளிட்டது: “எனக்கு சூழ்ச்சி தத்துவங்களில் நம்பிக்கை இல்லை. அங்கே தேசிய முன்னணி இரகசியமாக பொலிஸைக் கைப்பற்றி இருக்கவில்லை, மாறாக வறிய மக்கள் மற்றும் அரசு ஊழியர்களை நோக்கிய தேசிய முன்னணியின் முறையீடுகளும், பொலிஸ் சேவைகளின் எதிர்ப்பார்ப்பும் ஒருங்கிணைந்துள்ளன.”