ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Stop the attacks on immigrants! For a socialist policy of open borders and full rights for all workers!

புலம்பெயர்வோர் மீதான தாக்குதல்களை நிறுத்து! திறந்த எல்லைகள் மற்றும் அத்தனை தொழிலாளர்களுக்குமான முழு உரிமைகள் ஆகியவற்றுக்கான ஒரு சோசலிசக் கொள்கை வேண்டும்!

Barry Grey
11 February 2017

வெள்ளிக்கிழமையன்று ஜப்பானிய பிரதமர் சின்ஸோ அபே உடனான ஒரு இணைந்த செய்தியாளர் சந்திப்பில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவரது முஸ்லீம்-விரோத பயணத் தடையை தாமதிக்கும் விதமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பால் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களை தொடர்ந்தும் நெருக்கித் தள்ளுவதில் இருந்து தன்னை நிறுத்திவிட முடியாது என்பதை தெளிவாக்கினார்.

”நமது நாட்டிற்கு மிகப்பெரும் அச்சுறுத்தல்கள்” இருக்கின்றன என்று அறிவித்த அவர், முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் நாடுகளில் இருந்தான பயணிகளை “பெருமளவில் குறைப்பதற்கான” தனது கோரிக்கையை மறுவலியுறுத்தம் செய்ததோடு, அடுத்த வாரத்தில் புதிய நடவடிக்கைகளை அறிவிக்க வாக்குறுதியளிக்கும் விதமாக, “நமது நாடு பாதுகாப்பானதாக தொடர்ந்தும் இருக்கும்படி செய்வதற்குரிய அத்தனை விடயங்களையும் நாங்கள் செய்வோம்” என்று இறுக்கத்துடன் சேர்த்துக் கொண்டார்.

பாசிசவாத அரசியல் ஆலோசகர் ஸ்டீபன் பானனையும் இப்போது அட்டர்னி ஜெனரலாக ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கும் புலம்பெயர்வோர் வேட்டையாளர் அதி-வலது ஜெப் செசன்ஸ் ஆகியோரையும் கொண்டிருக்கக் கூடிய நிர்வாகமானது, மெக்சிகோ எல்லை முழுவதிலும் ஒரு சுவரைக் கட்டியெழுப்புவதை கட்டாயமாக்கியிருக்கும் ட்ரம்ப்பின் ஜனவரி 25 உத்தரவில் கோடுகாட்டப்பட்டிருந்தவாறாக, ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு எதிராக கெஸ்டபோ-போன்ற தந்திரோபாயங்களை அமல்படுத்த ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கிறது.

ஊடகங்களில் அபூர்வமாகவே குறிப்பிடப்படுகின்ற அந்த உத்தரவானது, கைதுக்கும் மற்றும் கூட்டம்கூட்டமாய் திருப்பி அனுப்புவதற்குமாய் குறிவைக்கப்படுகின்ற ஆவணப்படுத்தப்படாத தொழிலாளர்களின் வகைகளை ஒரேயடியாய் விரிவுபடுத்துகிறது, குற்றம் இழைத்திருக்கக் கூடும் என வெறுமனே சந்தேகிக்கப்படும் மக்களும் கூட இதில் அடங்கும். இது எல்லை ரோந்தினை விரிவுபடுத்துகிறது, புலம்பெயர்ந்தோரை தடுத்துவைப்பதில் உள்ளூர் போலிசை ஈடுபடுத்த முனைகிறது, அத்துடன் அமெரிக்க-மெக்சிகோ எல்லை அருகே புதிய புலம்பெயர்ந்தோர் மையங்களை கட்டியெழுப்புவதற்கு ஏற்பாடு செய்கிறது. அமெரிக்காவில் வாழ்கின்ற கிட்டத்தட்ட 8 மில்லியன் மக்களை சுற்றிவளைத்து அவர்களை திருப்பியனுப்பும் வகையிலான உள்கட்டமைப்பினை உருவாக்குவதற்கு அது நோக்கம் கொண்டிருக்கிறது.

புதன்கிழமையன்று, அதாவது ட்ரம்ப்பின் பயணத் தடை குறித்த உத்தரவுக்கு கீழ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்ட இடைக்காலத் தடையை உறுதிப்படுத்தி மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதற்கு ஒருநாள் முன்பாக, அரிசோனா மாநிலத்தின் பீனிக்ஸ் நகரில் குடியேற்றப் பிரிவு போலிஸ், அமெரிக்காவில் 21 வருடங்களாக வாழ்ந்து வந்திருக்கும் இரண்டு குழந்தைகளின் தாயான 36 வயதுப் பெண்மணி ஒருவரை கைதுசெய்து திருப்பியனுப்பியது. அவர் தனது உள்ளூர் குடியேற்ற அலுவலகத்திற்கு வழக்கமான ஒரு விஜயத்தை மேற்கொண்டிருந்த சமயத்தில் கைது செய்யப்பட்டிருந்தார். அத்துடன் இந்த வாரத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியிலும் கூட குடியேற்றவாசிகள் வசிப்பிடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் 160க்கும் மேலான தொழிலாளர்கள் பிடிக்கப்பட்டு, பேருந்துகளில் அமர்த்தப்பட்டு மெக்சிகோவின் திஜூவானாவுக்கு அனுப்பப்பட்டனர்.

ட்ரம்ப்பின் முஸ்லீம்-விரோத பயணத் தடை தொடர்பாக அரசியல் ஸ்தாபகத்திற்குள் இப்போது நிலவி வருகின்ற மோதலில், இந்த இரண்டு பெருவணிகக் கட்சிகளுக்குள் இருக்கும் எந்தவொரு கன்னையோ அல்லது பெருநிறுவன ஊடகக் கட்டுப்பாட்டிலான ஊடகங்களோ புலம்பெயர்ந்தோரின் ஜனநாயக உரிமைகளை பாதுகாத்தான ஒரு கோட்பாடான நிலைப்பாட்டை எடுப்பதாயில்லை. உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த கட்டமைப்புமே பிற்போக்குத்தனமானதாக, “சட்டவிரோத அந்நியர்கள்” என்பதாகச் சொல்லப்படுபவர்களை பயமுறுத்துவதற்கும், சிறையில் தள்ளுவதற்கும் மற்றும் திருப்பியனுப்புவதற்கும் அரசு உரிமை கொண்டிருப்பதாக கூறப்படுவதை ஏற்பதாக இருக்கிறது. ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகள் மீது ஜனநாயகக் கட்சியினர் வைக்கும் விமர்சனங்களின் பெரும்பகுதி, அவை “பயங்கரவாதத்தின் மீதான போரில்” ஆக்கபூர்வமற்றதாக இருப்பதற்கும் வணிகங்களுக்கு நல்லதல்ல என்பதற்காகவும் அவற்றைத் தாக்குவதாய் இருக்கின்றன.

குடியேறிய மக்கள் மீதான ட்ரம்ப்பின் போரும், அதைப் போலவே அவரது மற்ற வலது-சாரிக் கொள்கைகளும் முந்தைய ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருகட்சி நிர்வாகங்களாலும் நடத்தப்பட்டிருந்த கொள்கைகளின் தொடர்ச்சியும் தீவிரப்படலுமே ஆகும். ஒபாமா நிர்வாகம் 2.5 மில்லியனுக்கும் அதிகமான புலம்பெயர்ந்தோரை திருப்பியனுப்பியிருக்கிறது, இது முந்தைய அனைத்து அமெரிக்க அரசாங்கங்களாலும் திருப்பியனுப்பப்பட்டிருந்தோரது மொத்த எண்ணிக்கைக்கும் அதிகமானதாகும்.

அமெரிக்காவால் திணிக்கப்பட்ட சர்வாதிகாரங்கள் உள்ளிட ஒரு நூற்றாண்டு கால அமெரிக்க ஏகாதிபத்திய ஒடுக்குமுறையின் மரபு அடையாளங்களாய் இருக்கக் கூடிய நசுக்கும் வறுமை மற்றும் கொலைவெறியான வன்முறை ஆகியவற்றுக்கு தப்பிக்கவே மத்திய மற்றும் இலத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்கள் தங்கள் உயிரை பணயமாக வைத்து உலகின் மிகவும் அபாயகரமான மற்றும் இராணுவமயமான எல்லைகளில் ஒன்றைக் கடந்து வருகிறார்கள் என்ற உண்மையை எவரொருவரும் எழுப்புவது கிடையாது.

புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதலை ட்ரம்ப் தீவிரப்படுத்துவது உலகளாவிய நிகழ்வுப்போக்கின் ஒரு பகுதியாக இருக்கிறது. வட அமெரிக்கா தொடங்கி ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியா வரை இருக்கக்கூடிய முதலாளித்துவ அரசாங்கங்கள் தமது சொந்தக் கொள்கைகளில் இருந்து விளையும் வேலைகள் மற்றும் வாழ்க்கைத்தரங்களின் அழிப்புக்கான பலிக்கடாக்களாக மிகவும் வறுமைப்பட்ட மற்றும் பலவீனமான நிலையிலுள்ள தொழிலாளர்களை ஆக்குவதற்கு முனைகின்ற நிலையில் தான், உலகெங்கிலும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் மீதான தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

மத்திய கிழக்கிலும் மற்ற இடங்களிலும் காலனித்துவ போர் மற்றும் சூறையாடல்களை புதுப்பிப்பதற்கான ஒரு சாக்காக பயன்பட்ட “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்று சொல்லப்படுகின்ற ஒன்றின் 15க்கும் கூடுதலான ஆண்டுகள் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் அகதிகள் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான பெரும் ஏகாதிபத்திய சக்திகளால் தங்கள் நாடுகளின் மீது திணிக்கப்பட்ட பாரிய படுகொலைகள் மற்றும் அழிவுக்கு தப்பிவருகின்ற மில்லியன் கணக்கான மக்களுக்கு எதிராக ஐரோப்பிய அரசாங்கங்கள் சுவர்களையும், முள்கம்பி வேலிகளையும், தடுத்துவைப்பு முகாம்களையும் மற்றும் இனவாதக் கிளறிவிடல்களையும் எதிர்நிறுத்துகின்றன. ஐரோப்பிய கோட்டையால் திணிக்கப்படுகின்ற அகதிகள்-விரோத ஒடுக்குமுறையின் காரணத்தால் பத்தாயிரக்கணக்கானோர் கடலிலேயே மாண்டு விடுகின்றனர்.

புலம்பெயர்ந்த மக்கள் மீதான பாரிய துன்புறுத்தல்களும் தேசிய பேரினவாத நஞ்சின் அதிகரிக்கும் அலையும் தான் முதலாளித்துவ அமைப்புமுறையின் மரண நெருக்கடிக்கு சர்வதேச முதலாளித்துவம் அளிக்கின்ற பதிலிறுப்பாய் இருக்கிறது. வர்த்தக சுவர்கள் மற்றும் வர்த்தக மற்றும் நாணயமதிப்புப் போர்களின் ஒரு புதிய வெடிப்பு ஆகியவையும் இதனுடன் கரம்கோர்த்து நிகழ்கிறது, முதலாளித்துவ வர்க்கம் அனைத்தும் அதன் போட்டியாளர்களை பலியாக்கி தனது நெருக்கடியை தீர்ப்பதற்கு முனைகின்ற நிலையில், அவர்கள் அனைவரும் தொழிலாள வர்க்கத்தின் மீது திருப்புகின்றனர்.

20 ஆம் நூற்றாண்டின் வரலாறு காட்டுவதைப் போல, இது உலகப் போருக்கான முகவுரையாகும். மந்தநிலை, சிக்கன நடவடிக்கை, பொருளாதார தேசியவாதம், முதலாளித்துவ ஜனநாயகத்தின் பொறிவு மற்றும் சர்வாதிகாரத்தை நோக்கிய திருப்பம் என 1930களின் அத்தனை நிலைமைகளும் மீண்டுமொருமுறை எழுந்து கொண்டிருக்கின்றன. புலம்பெயர்ந்தோர்களை நடத்தும் விதம் முதலாளித்துவத்தின் சிதைவின் மிக துர்நாற்றமுடைய வெளிப்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.

1940 மே மாதத்தில் ட்ரொட்ஸ்கி எழுதியதை, கொஞ்சம் கூடுதல் புதுப்பிப்புடன், நடப்பு நிலைமைகளின் மீதான ஒரு விவரிப்பாக மேற்கோள் காட்டலாம்.

சிதையும் முதலாளித்துவ உலகத்திற்கு, ஜனத்தொகைநெருக்கம் மிதமிஞ்சியதாகப்படுகிறது. அமெரிக்கா போன்ற ஒரு உலக சக்திக்கு ஒரு சில நூறு அகதிகளைக் கூடுதலாய் அனுமதிப்பது ஒரு பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கிறது. வான்போக்குவரத்து, தந்தி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி ஆகியவற்றின் ஒரு சகாப்தத்தில் நாடுகளுக்கு இடையிலான பயணம் கடவுச்சீட்டுக்கள் மற்றும் விசாக்களைக் கொண்டு முடக்கப்படுகிறது. வெளிநாடுகளுடனான வர்த்தகத்தின் வீணடிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தின் வீழ்ச்சி ஆகியவற்றின் காலகட்டமானது அதேசமயத்தில் பேரினவாதத்தின், இன்னும் குறிப்பாக யூத-விரோதத்தின் அசுரத்தனமான தீவிரப்படலின் காலகட்டமாகவும் இருக்கிறது. நிலப்பரப்பின் விரிவாக்கம் மற்றும் மனிதனுக்கு பூமியுடன் சேர்த்து விண்பரப்பையும் கூட வெற்றி கண்டு தந்திருக்கக் கூடிய தொழில்நுட்ப அற்புதங்கள் ஆகியவற்றின் மத்தியில், முதலாளித்துவ வர்க்கமானது நமது கோளத்தை ஒரு நாற்றம்பிடித்த சிறையாக மாற்ற முடிந்திருக்கிறது.

புலம்பெயர்ந்தோர் மீதான துன்புறுத்தல்கள், முதலாளித்துவத்துடன் பிணைந்ததாய் இருக்கின்ற தேசிய அரசு அமைப்புமுறை திவாலடைந்ததன் மிக சாபக்கேடான வெளிப்பாடுகளாகும். இணையத் தொடர்பு புரட்சி, போக்குவரத்திலான முன்னேற்றங்கள், உலகெங்குமான தொழிலாளர்கள் நாடுகடந்த உற்பத்திப் பின்னல்களில் பிணைக்கப்பட்டிருப்பது என பொருளாதார வாழ்வின் உலகமயமாக்கமும் உலக மக்களின் தொழில்நுட்பரீதியான ஒருங்கிணைப்பும் ட்ரொட்ஸ்கியின் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இன்னும் வெகுவாக முன்னேறியிருக்கின்றன. 

உற்பத்தி சக்திகளையும் உலக மக்களின் வாழ்க்கைத் தரங்களையும் பரந்த அளவில் விரிவுபடுத்துவதற்கான உந்துசக்தியாக திகழத்தக்க இந்த புரட்சிகர மாற்றங்கள், முதலாளித்துவத்தின் கீழ், தொழிலாள வர்க்க சுரண்டலை தீவிரப்படுத்துவதற்கும், முகச்சுளிப்பூட்டக் கூடிய அளவு ஆளும் உயரடுக்குகளிடம் ஏற்கனவே இருக்கக் கூடிய சொத்துகளை மேலும் அதிகப்படுத்துவதற்கும், தேசிய மோதல்களுக்கு எரியூட்டுவதற்கும் மற்றும் உலகப் போரை நோக்கிய செலுத்தத்திற்குமாய் பிரயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகெங்கிலுமான அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்தி தொழிலாளர்களது துயரத்திற்கான உண்மையான மூலவளமாக முதலாளித்துவ அமைப்புமுறை இருப்பதில் இருந்து கவனத்தை திசைதிருப்புவதற்காக புலம்பெயர்ந்த மக்களின் மீதான வெறுப்புக்கு உரம்போடுகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் குடியேற்றம் குறித்த உத்தியோகபூர்வ விவாதத்தின் ஒட்டுமொத்த வடிவமைப்பையுமே நிராகரிக்கின்றன. புலம்பெயரும் தொழிலாளர்கள் முகம்கொடுக்கும் நெருக்கடிக்கு ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கினை நாங்கள் முன்வைக்கிறோம். இது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியம் மற்றும் உலக சோசலிசப் புரட்சி என்ற மூலோபாய முன்னோக்கின் அடிப்படையிலானதாகும்.

உலகின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், அவர்கள் விரும்புகின்ற நாட்டில், திருப்பியனுப்பப்படுகின்ற அல்லது ஒடுக்கப்படுகின்ற அச்சமின்றி வேலைபார்ப்பதற்கும் பயணம் செய்வதற்குமான உரிமை உட்பட, முழுமையான குடியுரிமைகளுடன் வாழ்வதற்கு கொண்டுள்ள உரிமையின் பக்கமாக நாங்கள் நிற்கிறோம்.

அந்த நாட்டில் பிறந்த தொழிலாளர்களையும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களையும் பிளவுபடுத்துகின்ற அத்தனை முயற்சிகளையும் நிராகரிப்பதில் இருந்துதான் இந்த வேலைத்திட்டத்திற்கான போராட்டம் தொடங்கியாக வேண்டும். சர்வதேச தொழிலாள வர்க்கத்துடன் ஐக்கியப்படுவதன் மூலமாக மட்டுமே, அமெரிக்காவிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இருக்கும் தொழிலாளர்கள் உலகளாவிய நகர்வுத்திறன் கொண்ட முதலாளித்துவ பெருநிறுவனங்களுக்கு எதிராக வெற்றிகரமாக போராட முடியும்; உலகப் பொருளாதாரத்தை தனியார் இலாபத்திற்காய் அல்லாமல் சமூகத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கேற்ப மறுஒழுங்கு செய்வது என்ற உலகப் பொருளாதார நெருக்கடிக்கான தமது சொந்த சுயாதீனமான தீர்வை முன்வைக்க முடியும்.