ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Warning of neo-fascist victory in France, Hollande promotes EU militarism

பிரான்சில் நவ-பாசிசவாத வெற்றியை எச்சரிப்பதுடன், ஹோலாண்ட் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஊக்குவிக்கிறார்

By Alex Lantier
7 March 2017

வேர்சாயில் நேற்று நடந்த ஜேர்மன், இத்தாலி, ஸ்பானிஷ், மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளின் கூட்டத்திற்கு முன்னதாக, பிரான்சுவா ஹோலாண்ட் Le Monde க்கும் மற்றும் ஐரோப்பா கூட்டுக்குழுமத்தின் ஏனைய பத்திரிகைகளுக்கும் —Süddeutsche Zeitung, La Stampa, the Guardian, La Vanguardia, and Gazeta Wyborcza— ஒரு பிரத்தியேக பேட்டி அளித்தார். பேர்லினுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் மிக நெருக்கமான ஐரோப்பிய முதலாளித்துவ அடுக்குகளில் மேலோங்கி வரும் ஆழ்ந்த அவநம்பிக்கையான முன்னோக்குகளை பிரெஞ்சு ஜனாதிபதி விவரித்தார்.

குறிப்பாக ஏப்ரல்-மே மாத பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்களில் தேசிய முன்னணி (FN) வெற்றி பெற்றால் ஐரோப்பிய ஒன்றியத்தை சிதறடிக்கக்கூடிய ஒரு நவ-பாசிச அரசாங்கம் பாரீஸில் அமையும் என்பதால், ஐரோப்பிய ஒன்றியம் பொறிவின் விளிம்பில் உள்ளதாக ஹோலாண்ட் குழப்பத்திற்கிடமின்றி சுட்டிக்காட்டினார். ஆனால் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவ ஆட்சிகளின் திவால்நிலைமைகளை சுட்டிக்காட்டும் வகையில், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பாரிய இராணுவ மற்றும் பொலிஸ்-அரசு எந்திரமாக அபிவிருத்தி செய்வது மட்டுமே, இதற்கு அவர் வழங்கக்கூடிய ஒரே முன்னோக்காக இருந்தது.

தேசிய முன்னணியின் தேர்தல் வெற்றி குறித்து கேட்கப்பட்டபோது, ஹோலாண்ட் தெரிவித்தார்: “அந்த அச்சுறுத்தல் இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கும் அதிகமான காலத்தில், கருத்துக்கணிப்புகளில் ஒருபோதும் தீவிர வலது இந்தளவிற்கு உயரத்தில் இருந்ததில்லை,” என்றார். அவர் தொடர்ந்து கூறினார், “தேசிய முன்னணி வேட்பாளர் ஏதோவிதத்தில் ஜெயித்துவிட்டால், அப்பெண்மணி உடனடியாக யூரோ மண்டலத்திலிருந்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தே கூட, வெளியேறுவதற்கான ஒரு நடைமுறையை தொடங்குவார். இதுதான் அனைத்து ஜனரஞ்சகவாதிகளின் கண்ணோட்டமாக உள்ளது, அவர்கள் ஐரோப்பாவிலிருந்து வெளியேற கருதுபவர்கள் ஆகட்டும், தங்களைத்தாங்களே உலகுடன் நெருக்கமாக இணைத்துக் கொண்டவர்களாக ஆகட்டும், அல்லது கண்காணிப்பு கூண்டுகளால் பாதுகாக்கப்பட்ட எல்லைகளும் மற்றும் எல்லாவித தடைகளும் சூழ்ந்த ஒரு உலகைக் கற்பனை செய்பவர்கள் ஆகட்டும்.”

தீவிர வலதின் அபாயங்களுக்கு எதிராக, ஹோலாண்ட், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜனநாயகத்தின் ஒரு பாதுகாவலராக தன்னைக் காட்டிக் கொண்டார். “இதுபோன்ற வாதங்களுக்கு சமசரப்படுவதில் இருந்து, அல்லது அதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில் இருந்து பிரான்ஸைக் காப்பாற்ற தேவையான அனைத்தையும் செய்வதே எனது கடைசி கடமையாகும்,” என்று அறிவித்த ஹோலாண்ட், தொடர்ந்து கூறுகையில், “ஆனால் பிரான்ஸ் விட்டுக் கொடுத்துவிடாது. அனைத்திற்கும் முதலாவதாக, ஏனென்றால் இது பிரான்ஸ், ஏப்ரல் 23 மற்றும் மே 7 ஆம் தேதி வாக்குகள் நமது நாட்டின் தலைவிதியை மட்டும் தீர்மானிக்கப் போவதில்லை, மாறாக ஐரோப்பிய கட்டமைப்பின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது என்ற உண்மையைக் குறித்து அது நனவுபூர்வமாக உள்ளது,” என்றார்.

இத்தகைய ஜனநாயக நடிப்புகள் தரந்தாழ்ந்த பாசாங்குத்தனமாகும். தேசிய முன்னணியின் வெற்றி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிதைவுக்கான சாத்தியக்கூறு இப்போது மிக நிஜமானதாக உள்ளது, மேலும் அனைத்திற்கும் மேலாக இது ஐரோப்பிய ஒன்றியத்தால் ஐரோப்பா எங்கிலும், குறிப்பாக பிரான்சில் ஹோலாண்டின் சொந்த சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தாலும், பின்பற்றப்பட்ட சிக்கன கொள்கை மற்றும் பிற்போக்குத்தன போர் கொள்கைகள் மீதான ஒரு குற்றப்பத்திரிகையாகும்.

2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஈவிரக்கமற்ற சிக்கன நடவடிக்கை தாக்குதல், தொழிலாள வர்க்கத்தின் இரத்தத்தை உறிஞ்சி எடுத்தது, அதுவும் கிரீஸில் இது மிகவும் வெளிப்படையாக இருந்தது, மேலும் பிரான்சில் ஹோலாண்ட் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக 100 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான சிக்கன திட்டங்களைத் திணித்தார். அதிகரித்து வரும் சமூக கோபத்திற்கு ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் விடையிறுப்பு, பொலிஸ் அதிகாரங்களை அதிகரிப்பதாகவும், தொழிலாள வர்க்கத்தை இனரீதியில் பிளவுபடுத்த இன்னும் அதிகமாக முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்வோர்-விரோத உணர்வுகளைத் தூண்டிவிடுவதாகவும் இருந்தது.

பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக சோசலிஸ்ட் கட்சி அவசரகால நிலை சட்டத்தை கொண்டு வந்ததுடன், அதை தொடர்ந்தும் நீடித்தது. இத்தகைய தாக்குதல்கள், பிரான்ஸூம் ஏனைய நேட்டோ சக்திகளும் சிரியாவில் அவற்றின் பினாமி போர் நடத்துவதற்காக சார்ந்திருந்த இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளாலேயே நடத்தப்பட்டன என்ற உண்மையின் முக்கியத்துவத்தை ஆரம்பத்தில் மூடிமறைத்த சோசலிஸ்ட் கட்சி, பின்னர் அதை உதறிவிட்டது. அதற்கு பதிலாக அது ஒரு பிற்போக்குத்தனமான பாரிய மின்னணு கண்காணிப்பு சட்டத்தை நிறைவேற்றியதுடன், மதப் போர் குறித்த எச்சரிக்கையளிக்கும் மற்றும் அனைத்திற்கும் மேலாக முஸ்லீம்களுக்கு எதிராக குறி வைக்கும் பொலிஸ் கண்காணிப்பை அதிகரிக்க கோரும் ஒரு ஊடக பிரச்சாரப்புயலில் இணைந்தது.

இந்த கொள்கை பிரான்சில் ஒரு சர்வாதிபத்திய அரசுக்கான நீதித்துறை மற்றும் கண்காணிப்பு உள்கட்டமைப்பை மட்டும் உருவாக்கவில்லை, மாறாக நவ-பாசிசவாத தேசிய முன்னணி முதலாளித்துவ அரசியலின் பிரதான போக்கிற்குள் தன்னைத்தானே முழுமையாக இணைத்துக் கொள்ளவும் மற்றும் சோசலிஸ்ட் கட்சி மீதான கோபத்தை ஒரு ஜனரஞ்சகவாத அடித்தளத்தில் சாதகமாக்கி கொள்ளவும் வழிவகுத்தது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரான்ஸ் இணைந்திருப்பதற்காக பிரெஞ்சு மக்கள் தேசிய முன்னணி அரசாங்கத்தை நிராகரிக்க வேண்டுமென்ற இந்த வாதம், ஓர் அரசியல் மோசடியாகும். கடந்த ஆண்டு ஒரு கருத்துக் கணிப்பில், பிரான்சிற்கு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவம் உதவியதாக மக்கள்தொகையில் வெறும் 23 சதவீதத்தினரே கருதிய நிலையில், பிரான்ஸில் பரந்த மக்களிடையே ஐரோப்பிய ஒன்றியம் மதிப்பிழந்திருக்கிறது என்பது மட்டுமல்ல, போர் மீதும் புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் அகதிகளை தொல்லைக்குட்படுத்துவது மீதும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த நிலைப்பாடுகளே தேசிய முன்னணியின் நிலைப்பாடுகளில் இருந்து அதிகரித்தளவில் பிரிக்கவியலாதவாறு உள்ளன.

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியதற்கு பிந்தைய அரசியல் திட்டநிரலாக ஹோலாண்ட் முன்வைத்த திட்டம், பெரும்பாலும் பிரான்சிற்காக தேசிய முன்னணி பரிந்துரைக்கும் கொள்கைகள் அளவிற்கு, ஒரு ஐரோப்பாவை வழிநடத்துவதை உள்ளடக்கி இருந்தது: அதாவது, ஐரோப்பிய "சமூக உத்வேகம்" என்றழைக்கபடுவதற்கு முறையிடுவதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு பிரதான இராணுவ சக்தியாக மற்றும் பொலிஸ்-அரசு எந்திரமாக ஆயத்தப்படுத்துவது.

“ஐரோப்பிய ஒன்றியம் அவர்களை இன்னும் அதிகமாக பாதுகாக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதேயே ஐரோப்பியர்கள் கோருகிறார்கள்,” என்று அறிவித்த அவர், “அதாவது ஐரோப்பிய இறையாண்மை அவர்களது எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும், பயங்கரவாத அச்சுறுத்தலை நீக்க வேண்டும், மற்றும் இறுதியாக வாழ்வதற்கும், கலாச்சாரத்திற்கும் மற்றும் சமூக உத்வேகத்திற்கும் வழி காண வேண்டும். … இன்று, பாதுகாப்புத்துறையின் மீது ஒருமுகப்படுவதன் மூலமாக ஐரோப்பா தன்னை புதுப்பிக்க முடியும். ஒருபுறம் இது அதன் சொந்த பாதுகாப்பை உறுதிப்படுத்தும் என்றாலும், மறுபுறம் அதை அச்சுறுத்தும் மோதல்களுக்கு தீர்வுகளைக் காண உலகின் மீது அது நடவடிக்கை எடுக்கவும் அதை அனுமதிக்கிறது,” என்று அறிவித்தார்.

பிரிட்டன் வெளியேறுவது மற்றும் ட்ரம்ப் தேர்வானது என இவற்றைப் போலவே தேசிய முன்னணி அதிகாரத்திற்கு வரும் அபாயமானது, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மற்றும் 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச அதிகாரத்துவ கலைப்பிற்கு பின்னர் அபிவிருத்தி செய்யப்பட்ட உலகளாவிய முதலாளித்துவ உறவுகள் மற்றும் கட்டமைப்புகளின் ஓர் ஆழ்ந்த உடைவைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்காவுடன் போட்டியிடுவதும், அனேகமாக தவிர்க்கவியலாமல் அச்சுறுத்துவதும், அத்துடன் பிரிட்டன் வெளியேற்றத்திற்கு பிந்தைய பிரிட்டனுக்கு எதிராக ஒரு கடுமையான போக்கை பின்தொடர்வதுமே, ஐரோப்பிய ஒன்றிய இராணுவ எந்திரத்தின் நோக்கமாக இருக்கும் என்பதை ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பின்னர் ஹோலாண்ட் தெளிவுபடுத்தி இருந்தார்.

ட்ரம்ப் குறித்து அவரது முன்னெச்சரிக்கை நிலைப்பாட்டை ஹோலாண்ட் மீண்டும் வலியுறுத்தினார்: “தனிமைப்படல், பாதுகாப்புவாதம், புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகள் மற்றும் வரவு-செலவு திட்டத்தில் பொறுப்பேற்காமல் இருப்பது ஆகிய அவரது கொள்கையின் இந்த அடிப்படை போக்குகளை இப்போது நாம் நன்கறிவோம். ஆகவே இந்த நிச்சயமற்றத்தன்மையை முகங்கொடுக்கையில் அவர் கவலை கொள்ள வேண்டியதாக இருக்கிறது, மேலும் நிதியியல் சந்தைகளின் பரவசநிலை முற்றிலும் முதிர்ச்சியின்றி இருப்பதாக எனக்குப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் என்றால் என்ன என்பதைக் குறித்த அவரின் தவறான புரிதலை பொறுத்த வரையில், அது அதன் அரசியல் நல்லிணத்தை, அதன் பொருளாதார பலத்தை, மற்றும் அதன் மூலோபாய சுயஅதிகாரத்தை அவருக்கு எடுத்துக்காட்ட நம்மை நிர்பந்திக்கிறது,” என்றார்.

பிரிட்டன் அது வெளியேறியதற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவத்தின் ஆதாயங்களை பெற அது விரும்பினால் அது குறித்து அவர் கூறுவதென்ன என்று வினவிய போது, ஹோலாண்ட் அப்பட்டமாக பதிலுரைத்தார், “அது சாத்தியமில்லை, அவ்விதத்தில் அது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் தான் இருக்க வேண்டியிருக்கும். இங்கே தான் இங்கிலாந்திற்குப் பிரச்சினை ஏற்படுகிறது: அதாவது ஐரோப்பாவிலிருந்து வெளியேறுவதன் மூலமாக அது அமெரிக்காவுடன் ஒரு மூலோபாய பங்காண்மையை உருவாக்க முடியுமென அது கருதியது. ஆனால் அமெரிக்கா தன்னைத்தானே உலகிடமிருந்து பிரித்து கொள்வதாக மாறியுள்ளது. இங்கிலாந்து தவறான நேரத்தில் தவறான விருப்பத்தேர்வை தேர்ந்தெடுத்தது. வருந்துகிறேன்,” என்றார்.

ஐரோப்பிய சக்திகளுக்கு இடையிலான ஒரு மூன்றாம் உலக போர் மீளெழுவதை ஐரோப்பிய ஒன்றியம் தடுக்கும் என்று 1992 இல் அது ஸ்தாபிக்கப்பட்ட போது கூறிய வாதங்களைப் போலவே, ஐரோப்பிய ஒன்றிய வக்காலத்துவாதிகள், ஐரோப்பிய ஒன்றியம் அதன் சகல அங்கத்துவ நாடுகளது உரிமைகளை சமமாக மதிக்கும் என்ற எந்தவொரு கருத்தையும் உதறிவிட்டு வருகின்றனர். வேர்சை கூட்டத்தில் நான்கு-சக்தி குழுவால் எடுத்துக்காட்டியவாறு, இது ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அரசுகளிடமிருந்து எழும் எதிர்ப்பைக் குறைக்க எந்தவொரு உத்தியோகபூர்வ அறிக்கையும் வெளியிடுவதில்லை என்று முடிவெடுத்திருந்த நிலையில், பேர்லினும் பாரீசும் சிறிய நாடுகளை ஒதுக்கிவிட்டு, "அதிவேக" ஐரோப்பா என்றழைக்கப்படுவதை நோக்கி நகர்வதன் மூலமாக ஐரோப்பாவில் அதிகரித்துவரும் பதட்டங்களை கையாள விரும்புகின்றன.

“வெளிப்படையாக கூறுவதானால், சில அங்கத்துவ நாடுகள் ஒருபோதும் யூரோ மண்டலத்தில் இணையாது. அதை எதிர்கொள்ள வேண்டும். பொருளாதார மற்றும் நாணய ஒன்றியத்தை ஆழப்படுத்துவதில், அவற்றிற்காக நாம் காத்து கொண்டிருக்க முடியாது,” என்று ஹோலாண்ட் அறிவித்தார். “நீங்கள் ஒவ்வொன்றையும் அனைத்து 27 அங்கத்துவ நாடுகளுடன் சேர்ந்து செய்ய விரும்பினால், அதன் ஆபத்து என்னவென்றால் உங்களால் முற்றிலுமாக ஒன்றுமே செய்ய முடியாது,” என்றார்.

இறுதியில், ரஷ்யா குறித்து கூறுகையில், ஹோலாண்ட் ஒரு விரோத போக்கை ஏற்ற போதினும், ஒபாமாவின் கீழ் மாஸ்கோவிற்கு எதிராக ஓர் ஆக்ரோஷ போக்கை பின்பற்றிய அமெரிக்க வெளியுறவு கொள்கையின் பிரிவுகளுடன் கருத்து வேறுபாட்டை காட்டினார், அது சிரியா அல்லது உக்ரேனில், ரஷ்யாவுடனான ஓர் இராணுவ மோதல் எடுக்கும் மட்டத்திற்கு இருந்தது.

ஹோலாண்ட் கூறுகையில், ரஷ்யா "தன்னைத்தானே ஒரு சக்தியாக பலப்படுத்தி வருகிறது. அது நமது பொறுமையை பரிசோதிப்பதுடன், ஒவ்வொரு புள்ளியிலும் உறவுகளில் அதிகாரத்தை அளவிடுகிறது. அதேநேரத்தில் பொது கருத்தில் செல்வாக்கு செலுத்துவதற்கு … மேலாளுமை, வலையமைப்புகள் மற்றும் வாழ்க்கை பிரச்சினைகள் மீதான மிகவும் பழமைவாத கண்ணோட்டங்கள் என இந்த மூலோபாயங்களுடன், ரஷ்யா எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்துகிறது. அது இஸ்லாமிடமிருந்து கிறிஸ்துவத்தை பாதுகாக்கும் என்ற பாசாங்குத்தனங்களும் அதனிடம் உள்ளன. நாம் எதையும் பெரிதாக்கவில்லை என்றாலும், நாம் சுதாரிப்புடன் இருக்க வேண்டும்,” என்றார்.

“மக்கள் பொதுவாக என்னிடம் கேட்பது, 'நீங்கள் ஏன் அடிக்கடி ஜனாதிபதி புட்டினுடன் பேசுவதில்லை?' என்கிறார்கள். ஆனால் அவருடன் பேசுவதை நான் நிறுத்தவில்லை! அல்லது அதே போல [ஜேர்மன்] சான்சிலரிடமும் தான். அது நல்லது தான்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

உலக முதலாளித்துவ அமைப்புமுறையின் தீவிரமடைந்து வரும் பொறிவு மற்றும் போர் உந்துதலுக்கு மத்தியில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாவலர்களும் அதேபோல ஐரோப்பாவிற்குள் உள்ள பிற்போக்குத்தன ட்ரம்ப் நிர்வாகத்தின் கூட்டாளிகளும், மொத்தத்தில் இருதரப்பும், தேசிய முன்னணியை போலவே, சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிரிகளாக பார்க்கிறார்கள். முன்னேறிச் செல்ல ஒரே வழி, சிக்கனக் கொள்கைகள், போர் மற்றும் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தில் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி ஐக்கியப்படுத்துவதாகும்.