ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NPA candidate Philippe Poutou holds pro-war campaign meeting in Paris

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி வேட்பாளர் பிலிப் புட்டு பாரீசில் போர்-ஆதரவு பிரச்சார கூட்டம் நடத்துகிறார்

By Alex Lantier
21 April 2017

புதனன்று இரவு, புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி (NPA) பாரீசின் வடக்கு புறநகர் பகுதியில் அதன் ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு இன் இறுதி பிரச்சார கூட்டத்தை நடத்தியது. சுமார் 1,000 பேர் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் NPA அங்கத்தவர்கள் சிரியா மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க தலைமையிலான போர் முனைவை ஆதரித்ததுடன், ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் நிர்வாகத்தால் மதிப்பிழந்துள்ள சோசலிஸ்ட் கட்சியின் (PS) வரலாற்று பொறிவுக்கு இடையே, அதன் மீது தந்திரோபாய விமர்சனங்களை முன்வைத்தனர்.

சோசலிஸ்ட் கட்சியின் போர் மற்றும் சிக்கன கொள்கைகளை "சோசலிசத்தை" பிரதிநிதித்துவம் செய்வதாக ஊடகங்கள் பொய்யாக முன்னிறுத்துகின்ற நிலையில், பிரான்சில் "அதிதீவிர இடது" அரசியலுக்காக பல தசாப்தங்களாக அணிதிரட்டப்பட்டுள்ள உயர்மட்ட நடுத்தர வர்க்க ஆதரவுத்தளம் ஒன்றிற்காக NPA பேசுகிறது. 1968 க்கு பிந்தைய மாணவர் இயக்கத்தின் சக்திகளை தலைமையில் கொண்டுள்ள NPA, இளைஞர்களின் பல்வேறு அடுக்குகளைக் கவர்ந்திழுக்கிறது. சிலர் கோட்டு சூட்டுடனும், ஏனையவர்கள் விலையுயர்ந்த "வேறுவிதமான" ஆடைகளை அணிந்தும் கடமையுணர்வுடன் தொலைக்காட்சி நேர்காணல்களுக்கு முன்நிற்பதற்கான ஒரு தொழில் வாழ்விற்காக தயாராகி வருகின்றனர்; இத்தாலியில் இருந்து வந்திருந்த ஒரு பெண் சொற்பொழிவாளர், இத்தாலி அரசுக்கு அவர் பரிந்துரைக்க உள்ள பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு திட்டத்தை விவரித்தார்.

எவ்வாறிருப்பினும் தொழிலாள வர்க்கத்தை நோக்கி NPA கடுமையான விரோதம் கொண்டுள்ளது. அது பிரான்சில் சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் கிரீஸில் சிரிசாவின் (“தீவிர இடதுகளின் கூட்டணி”) சிக்கனத் திட்டத்திற்கு ஆதரவான அரசாங்கங்களைத் தேர்ந்தெடுக்க மீண்டும் மீண்டும் ஆதரவளித்தது. அனைத்திற்கும் மேலாக, ஏகாதிபத்திய போர்கள் மூலமாக முன்னணி ஏகாதிபத்திய சக்திகளின் நிதி மேலாதிக்கத்தையும், அவ்விதத்தில் NPA இன் உயர்மட்ட நடுத்தர வர்க்க ஆதரவுத்தளத்தின் செல்வ வளத்தையும் பேணுவதற்காக, அது வெறித்தனமாக ஏகாதிபத்திய போர்களை ஆதரிக்கிறது.

இது தான் புட்டு இன் கூட்டத்தில் NPA செய்தி தொடர்பாளர் கிறிஸ்டின் புப்பான் (Christine Poupin) வழங்கிய முதல் பிரதான பங்களிப்பின் விடயமாக இருந்தது, இவர் சர்வதேசவாதம் என்று கூறி ஓர் அறிக்கையை முன்வைத்தார், ஆனால் உண்மையில் அது குறிப்பாக சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டை முழு மூச்சுடன் நியாயப்படுத்தியது. அப்பெண்மணி, சிரிய அரசாங்கத்தை கவிழ்க்க ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் பிரதான ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அதிக வன்முறையோடு தலையீடு செய்யாததற்காக அவற்றை கடுமையாக சாடினார்.

சிரியாவில் தற்போது ஆழமாக மக்கள் செல்வாக்கிழந்துள்ள நேட்டோ ஆதரவிலான எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்கு ஆதரவை உருவாக்கும் முயற்சியில், புப்பான் யதார்த்தத்தை தலைகீழாக்க நிர்பந்தமானார். அப்பெண்மணி, நேட்டோ அதிகாரங்களின் நடவடிக்கைகளால் அசாத்-எதிர்ப்பு போராளிகள் குழுக்கள் "எந்தவிதமான பாதுகாப்பு கருவிகளும் இல்லாமல், குறிப்பாக போர்விமான-எதிர்ப்புக்கான பாதுகாப்பு இல்லாமல் விடப்பட்டிருப்பதாக" வாதிட்டார். அவர் தொடர்ந்து கூறுகையில், “உண்மையில் சிரியாவில் சகல வெளிநாட்டு தலையீடுகளும், [சிரிய ஜனாதிபதி] பஷர் அல்-அசாத் அதிகாரத்தில் நிலைத்திருக்கவே உதவியிருப்பதாக" தெரிவித்தார்.

இது பொய் மூட்டையாகும். பாரசீக வளைகுடா எண்ணெய் வள ஷேக் ஆட்சிகளின் உதவியோடு வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகளே சிரியாவில் பிரதான வெளிநாட்டு தலையீடாக இருந்தன என்ற உண்மையை புப்பான் இன் வாதம் மூடிமறைக்கிறது. அவை சிரியாவில் குர்திஷ் தேசியவாத மற்றும் இஸ்லாமியவாத எதிர்ப்பு போராளிகள் குழுக்களுக்குள் பாய்ச்சிய பில்லியன் கணக்கிலான டாலர்கள், அசாத்திற்கு "உதவ"வில்லை, மாறாக பத்து மில்லியன் கணக்கான மக்களை வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்தித்து, சிரியா மற்றும் அசாத்தின் அரசாங்கத்தை அவை நிலைகுலைத்தன.

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் போர்-ஆதரவு போக்கை, பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கை மீதான "இடது" விமர்சனமாக காட்டும் புப்பானின் முயற்சிகள், அளவுகதிகமாய் அரசியல் பொய்களைக் கொண்டுள்ளன. புப்பான் அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் நிலைப்பாட்டையே எதிரொலித்து, அசாத்தை பதவியிலிருந்து நீக்குவதற்கான சிரியாவை நோக்கிய அமெரிக்க கொள்கையானது, சிரியாவை தாக்குவதில் போதுமானளவிற்கு ஆக்ரோஷமாக இருக்க தவறியதற்காக அதை கண்டித்தார். இது, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் தீவிர வலது நிர்வாகமான ட்ரம்பை புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி வலதிலிருந்து விமர்சித்து வருகிறது என்பதையே அடிக்கோடிடுகிறது.

ஏப்ரல் 4 இல் கான் ஷேக்கௌன் நகரம் மீது விஷவாயு தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படும் சம்பவத்திற்குப் பின்னர், சிரியா மீது ஏப்ரல் 7 அன்று ட்ரம்ப் தூண்டுதலற்ற ஏவுகணை தாக்குதல் நடத்தியதை புப்பான் கண்டித்தார். 2013 கூத்தா தாக்குதலைப் போலவே நேட்டோ ஆதரவிலான எதிர்ப்பு சக்திகள் நடத்திய பல இரசாயன தாக்குதல்களுக்காக சிரிய ஆட்சி மீது பழி சுமத்தப்பட்டுள்ள நிலையில், இந்த தாக்குதலும் சிஐஏ ஆத்திரமூட்டலின் சகல அடையாளங்களையும் கொண்டுள்ளது. இருந்தாலும் புப்பான், சிரியாவிற்கு எதிரான ட்ரம்பின் நடவடிக்கையை அதன் சட்டவிரோதத்தன்மையில் இருந்து அல்ல, மாறாக அது அசாத்தை அழிக்க போதுமானளவிற்கு இரத்தக்களரியோடு இருக்கவில்லை என்பதற்காக ட்ரம்பை வலதிலிருந்து தாக்குகிறார். கான் ஷேக்கௌன் தாக்குதலுக்காக அப்பெண்மணி எந்தவித ஆதாரமும் முன்வைக்காமல் அசாத் மீது பழிசுமத்துகிறார்.

“ட்ரம்ப் காட்டும் பாவனை எங்களின் மனதை மாற்றிவிடாது ஏனென்றால் வெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தான் கான் ஷேக்கௌனில் படுபயங்கரமான இரசாயன தாக்குதல் நடந்துள்ளது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்றழைக்கப்படுவதன் உள்ளடக்கத்தில் ட்ரம்ப் பஷர் அல்-அசாத்துடன் ஒரு கூட்டணி அமைக்கலாம் என்பதையே அவர் எடுத்துக்காட்டி வருகிறார்,” என்று புப்பான் அறிவித்தார். “இதுபோன்றவொரு சமிக்ஞை, அந்த ஆட்சி அதன் குற்றங்களைத் தொடர வெளிப்படையாகவே அதை ஊக்குவிப்பதற்கான ஒரு சமிக்ஞையாகும். ஆகவே, ஆம், அசாத்தை முகங்கொடுத்துள்ள நிலையில், IS ஐ முகங்கொடுத்துள்ள நிலையில், சிரிய மக்கள் தான், அவர்கள் மட்டுந்தான், அதன் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டும்,” என்றார்.

தவறுக்கிடமின்றி, ஏகாதிபத்திய போருக்கான புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் ஆதரவானது, குறிப்பாக 2011 இல் அது நேட்டோவின் லிபிய போரை பகிரங்கமாக ஆமோதித்த பின்னர் இருந்து, அதை ஏகாதிபத்தியத்தின் ஒரு கருவியாக, தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமானதாக அம்பலப்படுத்துகிறது. எவ்வாறிருப்பினும் இது புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் நீண்ட பரிணாமம் மற்றும் 1968 பொது வேலைநிறுத்தத்திற்கு பின்னர் இருந்து பிரெஞ்சு இடதாக இருந்து மேலாதிக்கம் செலுத்திய பிற்போக்குத்தனமான பெருவணிக கட்சியான சோசலிஸ்ட் கட்சி உடனான அதன் தொடர்பு ஆகியவற்றின் இறுதி விளைவும் ஆகும். 1968 இல், அது தன்னை சோசலிஸ்டாக பொய்யாக காட்டிக் கொள்வதற்காக, அப்போது தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய வாக்காளர் அடித்தளத்தை கொண்டிருந்த ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியுடன் (PCF) அணி சேர்ந்திருந்தது.

ஒரு அரை நூற்றாண்டுக்குப் பின்னர், இன்றோ, சோசலிஸ்ட் கட்சி வேகமாக உடைந்து வருகிறது, தொழிலாளர்கள் மீது தசாப்தங்களாக, அதுவும் குறிப்பாக ஹோலாண்டின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியின் போது சிக்கன திட்டங்கள் மற்றும் போரைத் திணித்துள்ள அது ஆழமாக மதிப்பிழந்துள்ளது. சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் பொருளாதார அமைச்சர் இமானுவேல் மாக்ரோன் மற்றும் பெயரளவிலான சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் பெனுவா அமோன் ஆகியோரை போட்டியில் நிற்கும் ஜனாதிபதி வேட்பாளர்களாக அங்கீகரித்து, சோசலிஸ்ட் கட்சி பிளவுபட்டுள்ளது. அது கிரீஸின் சமூக ஜனநாயக பசோக் கட்சியைப் போல விரைவிலேயே முழுமையாக சிதைந்து போகும் என்ற அதிகரித்து வரும் அனுமானங்களுடன், அது முழு பொறிவின் விளிம்பில் வெறுப்புக்கு உள்ளாகி உள்ளது.

சோசலிஸ்ட் கட்சியின் பொறிவானது ஒரு உண்மையான புரட்சிகர சோசலிச மாற்றீட்டைக் கட்டமைப்பதற்கான பிரச்சினையை அவசரமாக எழுப்புகின்றது. ஆனால், புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியில் உள்ளதும் மற்றும் அதை சுற்றி உள்ளதுமான குட்டி-முதலாளித்துவ அடுக்கு அந்த கேள்வியை தொட விரும்பவில்லை. ஐரோப்பாவின் சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிச அமைப்புகள் பொறிந்து வருவதற்கு இடையே, அதன் முந்தைய அமைப்பான குட்டி-முதலாளித்துவ புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தால் (LCR) ட்ரொட்ஸ்கிசம் பகிரங்கமாக மற்றும் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட அடிப்படையில் 2009 இல் ஸ்தாபிக்கப்பட்ட புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியிடம் (NPA) வழங்குவதற்கு எந்த முன்னோக்கும் இல்லை.

சோசலிஸ்ட் கட்சி ஒரு வரலாற்று பொறிவை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையிலும், அண்மித்து ஒரு அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதனுடனான NPA இன் அழுகிப் போன உறவுகளை குறித்து கூறுவதற்கு அதனிடம் ஒன்றும் இல்லை. சோசலிஸ்ட் கட்சியுடனான அவர்களது நெருங்கிய உறவுகளை அவர்கள் பகிரங்கமாக ஒப்புக் கொள்வதில்லை என்றாலும், சோசலிஸ்ட் கட்சி எப்போதுமே புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியின் அரசியல் உதவிகளை சார்ந்திருந்துள்ளது. 2012 இல் புட்டு, ஹோலாண்டுக்கு வாக்களிக்குமாறு அழைப்புவிடுத்தார், 2007 தேர்தல்களில் தோல்வியுற்ற சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் செகோலென் ரோயாலை அப்போதைய NPA வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸெநோ ஆதரித்தார்.

மொத்தமாக எடுத்துப் பார்த்தால், NPA இன் பிற்போக்குத்தனமான கொள்கைகள், NPA ஐ “இடது" வாக்காளர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக ஆக்கவில்லை, மாறாக 1968 க்குப் பிந்தைய ஒரு முன்னாள் மாணவர் இயக்க தீவிர கொள்கையாளரும் மற்றும் நீண்டகால சோசலிஸ்ட் கட்சி அங்கத்தவருமான ஜோன்-லூக் மெலென்சோனை நம்பிக்கைக்கு பாத்திரமாக மாற்றியுள்ளன. அவர் கருத்துக் கணிப்புகளில் வேகமாக முன்னேறி வருகிறார், அதுவும் குறிப்பாக சிரியா மீதான ஏப்ரல் 7 தாக்குதல்களுக்கு பின்னர், ட்ரம்ப் தாக்குதலை விமர்சித்ததன் மூலமாக அதற்கு அவர் பிரதிபலிப்பு காட்டியிருந்தார். எவ்வாறிருந்த போதினும், மெலென்சோனும் சரி புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் சரி அடிப்படையில் சோசலிஸ்ட் கட்சியிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை; இரண்டுமே பல தசாப்தங்களாக அதன் விளிம்பிலிருந்து இயங்கி வந்துள்ளன.

பாரீஸ் கூட்டத்தில் மெலென்சோன் உடனான அவரது கருத்து வேறுபாடுகள் குறித்து புட்டு விவாதித்த போது, சோசலிஸ்ட் கட்சி செனட்டராக மெலென்சோனின் நீண்டகால தொழில் வாழ்க்கை மற்றும் போர்தோவுக்கு அருகில் Blanquefort இல் ஃபோர்ட் ஆலையின் ஒரு தொழிற்சங்க அதிகாரத்துவவாதியாக புட்டு இன் சொந்த தொழில் வாழ்க்கை என இவற்றின் அடிப்படையில் வளர்ந்த ஓர் அரசியல்வாதியாக அவர் மெலென்சோனை வெகுஜனவாத தரப்பிலிருந்து தாக்கினார்.

அரசியல்வாதிகள் "தார்மீக கடமைகளைக்" கொண்டிருப்பதாகவும், “அவை கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாகவும்" கூறி, புட்டு "அமைப்புரீதியிலான இடதை, அரசில் உள்ள இடதை காப்பாற்றுவதற்காக, நமக்காக விரிக்கப்படும் வலையில் விழாமல் இருக்குமாறு" எச்சரித்தார்.

புட்டு தொடர்ந்து கூறுகையில், மெலென்சோன் "எவ்வாறிருப்பினும் அவரது போர்குணத்தோடு மற்றும் சிக்கன-எதிர்ப்பு அம்சங்களோடு இருப்பதாக தெரிகிறார் என்பது அருமையானது, உண்மை என்னவென்றால் தனது வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபட்டுள்ள சிலரில் அவரும் ஒருவர், அவர் 30 ஆண்டுகள் சோசலிஸ்ட் கட்சியில் இருந்தார், ஒரு சில காலம் அவர் ஜோஸ்பன் அரசாங்கத்தில் இருந்தார்,” என்றார்.

புட்டு இன் தார்மீக அறிவிப்புகள் வெற்று வாய்சவடால்களாகும். பகுப்பாய்வின் இறுதியில் சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் செனட்டர் மெலோன்சோன் அல்லது ஜோஸ்பன் போலவே புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியும் அதே விதமான தேசியவாத, ஏகாதிபத்திய-சார்பு அரசியலை முன்னெடுக்கிறது. மெலோன்சோனிடம் இருந்து புட்டு தன்னைத்தானே தொலைவில் நிறுத்திக் கொள்ள முயல்கிறார் என்பது பொய் நம்பிக்கையாகும், இது வரையில் சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புபட்ட புட்டு இன் அரசியலுக்கும் மெலோன்சோனின் அரசியலுக்கும் இடையிலான வித்தியாசங்கள் பெரும்பாலும் மிக மெல்லியதாகவே இருந்துள்ளன என்பதும், மெலோன்சோனுடன் NPA தன்னை கூட்டு சேர்த்துக் கொள்ள விரும்புகிறது என்பதும் நன்கறியப்பட்ட விடயமாகும்.

உண்மையில், புட்டு இன் கூட்டத்திற்கு சற்று முன்னதாக Public-Sénat தொலைக்காட்சி சேனலில் மெலோன்சோன் உடனான NPA இன் கருத்துவேறுபாடுகள் குறித்து புப்பானிடம் கேட்கப்பட்ட போது, NPA உம் மெலென்சோனும் நெருக்கமான கூட்டாளிகள் என்றவர் வலியுறுத்தினார். “ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு வாக்களிக்க தயாராகி வருபவர்களும், ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு வாக்களிப்பவர்களும், மகத்தானவர்கள்,” என்றவர் தெரிவித்தார். “ஜோன்-லூக் மெலோன்சோன் இரண்டாம் சுற்றை எட்டினால், அது மிகவும் நல்ல விடயமாகும்… ஜோன் லூக் மெலோன்சோன் நமது எதிரி கிடையாது,” என்றார்.

தொழில்ரீதியிலான அரசியல்வாதிகள் மீது புட்டு இன் குறைகூறல்களும், தன்னைத்தானே ஒரு புரட்சியாளராகவும், மெலென்சோனின் முதலாளித்துவ-எதிர்ப்பு விமர்சகராகவும் காட்டிக் கொள்வதற்கான அவர் முயற்சி பல மோசடிகளைக் கொண்டிருப்பதையே இதுபோன்ற கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. சோசலிஸ்ட் கட்சியின் பொறிவுக்கு ஒரு மாற்றீட்டை தேட முயலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் NPA இன் குட்டி முதலாளித்துவ, போர்-ஆதரவு அரசியலுக்கு எதிராகவும் போராட நிர்பந்திக்கப்படுவார்கள்.