ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French youth protest Le Pen-Macron second round in presidential elections

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று லு பென்-மக்ரோனுக்கு இடையில் நடைபெறவிருப்பதற்கு பிரான்சின் இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

By Alex Lantier
28 April 2017

ஜனாதிபதி தேர்தலின் இரண்டாம் சுற்று முன்னாள் வங்கியாளர் இமானுவல் மக்ரோன் மற்றும் தேசிய முன்னணியின் தலைவரான மரின் லு பென் ஆகிய இரண்டு வலது-சாரி வேட்பாளர்களுக்கு இடையிலானதாக சுருங்கி விட்டிருப்பதற்கு எதிரான கோபம் பெருகிச் செல்வதன் மத்தியில், வியாழக்கிழமை அன்று பிரான்ஸ் எங்கிலுமான நகரங்களில் ஆயிரக்கணக்கான உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தினர், தத்தமது பள்ளிகளை முற்றுகையிட்டனர், பேரணிகள் நடத்தினர்.

பிரான்ஸில் அமையவிருக்கும் ஒரு எதேச்சாதிகார மற்றும் இராணுவவாத ஆட்சிக்கு எந்த ஜனாதிபதி மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதை மட்டுமே இந்தத் தேர்தல் தங்களுக்கு தெரிவாக அளிக்கிறது என்பதை மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கின்றனர். மக்ரோனை பொறுத்தவரை, சென்ற ஆண்டில் PS இன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பாரிய இளைஞர் ஆர்ப்பாட்டங்களை மிருகத்தனமாக ஒடுக்கிய இப்போதைய சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தில் பொருளாதார அமைச்சராய் அவர் வகித்த பாத்திரத்திற்காக இளைஞர்களால் பரவலாய் வெறுக்கப்படுபவராக அவர் இருக்கிறார்.

பாரிஸ், ரென் மற்றும் நான்ந்த் ஆகிய நகரங்களில் நேற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பேரணி நடத்தினர், உயர்நிலைப் பள்ளிகள் பலவும் முற்றுகையிடப்பட்டன. “பிளேக்கிற்கும் காலராவுக்கும் இடையில் ஒரு தெரிவு” மற்றும் “மரினும் வேண்டாம் மக்ரோனும் வேண்டாம், தாய்நாடும் வேண்டாம் உயரதிகாரியும் வேண்டாம்” ஆகியவையும் சுலோகங்களில் இடம்பெற்றிருந்தன.

பாரிஸில், 20 உயர்நிலைப் பள்ளிகள் முற்றுகையிடப்பட்டன, அல்லது ஆர்ப்பாட்டங்களால் பாதிக்கப்பட்டன. குடியரசு சதுக்கத்தில் “பாசிசமும் வேண்டாம் சுதந்திர சந்தை முதலாளித்துவமும் வேண்டாம்” என்ற சுலோகத்தின் கீழ் லு பென் மற்றும் மக்ரோன் இருவருக்கும் எதிரான ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கு பெற்ற அனுமதி பெறாத ஆர்ப்பாட்டம் ஒன்று வெடித்தது, பாஸ்டி சதுக்கத்தில் நடைபெற்ற ஒரு ஆர்ப்பாட்டத்தில் போலிசுக்கும் மாணவர்களுக்கும் இடையில் மோதல்கள் வெடித்தன. உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் வாக்களிக்கும் வயதை எட்டியிருந்தோரில் பலர், தாங்கள் வெற்று வாக்குகளை அளிக்க திட்டமிட்டதாகத் தெரிவித்தனர்.

சில மாணவர்கள், முந்தைய முறை FN இரண்டாம் சுற்றுக்கு  முன்னேறிய 2002 ஆம் ஆண்டுடன் இப்போதைய போட்டியை ஒப்பிட்டனர். 2002 இல் இது தன்னியல்பான வெகுஜன ஆர்ப்பாட்டங்களை உசுப்பி விட்டது. இன்று “எவரொருவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடாததைக் கண்டு எனக்கு அதிர்ச்சியாய் உள்ளது” என எலிஸ் தெரிவித்தார். “மரின் லு பென் இரண்டாம் சுற்றுக்கு வருவார் என்பதை எல்லோருமே எதிர்பார்த்தனர், அதுவே போதுமே: எல்லோருமே அதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர் என்பதே திகிலூட்டுவதாய் உள்ளது! FNக்கு எதிராய் நமது விழுமியங்களைப் பாதுகாத்து ஏதேனும் நாம் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்தோம். வாக்களிக்கும் அளவுக்கு எங்களுக்கு வயது வந்திருக்கவில்லை என்றாலும் கூட இது எங்களின் எதிர்காலமாகும். ஒரு இனவாத மற்றும் வெளிநாட்டினர் வெறுப்புக் கட்சி அதிகாரத்தில் அமர்வதை நாங்கள் விரும்பவில்லை.”

மாணவர் குழுக்கள் இன்னுமொரு தேர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று மாலை 7 மணியளவில் பாரிஸ் மாநகரசபை முன்பாக நடத்தவிருக்கின்றன.

ரென் நகரில், ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக பேரணி சென்று கொண்டிருந்த சமயத்தில், பேரணி நகரின் மையத்திற்கு முன்னேறாமல் தடுக்கும் முயற்சியில் போலிஸ் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு போலிசுடன் மோதல்கள் வெடித்தன. அதன்பின் மோதல்கள் மையப்பகுதிகள் எங்கும் பரவின, “மக்ரோன், லு பென், எங்களுக்கு அவர்கள் வேண்டாம்” என்று இளைஞர்கள் முழக்கமிட்டனர். “அமைப்புமுறை-எதிர்ப்பு” கட்சியாக FN வாய்ச்சவடாலாய் கூறிக் கொள்வதைக் குறிப்பிட்டு, இளைஞர்கள் “உண்மையான அமைப்புமுறை-எதிர்ப்பு சக்திகள் நாங்களே” என்றும் முழங்கினர்.

லியோன், துலூஸ் மற்றும் டிஜோன் உள்ளிட்ட நகரங்களில் மற்ற ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன. டிஜோனில் “வங்கியாளரும் வேண்டாம் பாசிஸ்டும் வேண்டாம்” உள்ளிட்ட சுலோகங்களின் கீழ் நூற்றுக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.

ஆளும் சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய பிரான்சின் பாரம்பரியமான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களுமே வெளியேற்றப்பட்டிருக்கும் ஜனாதிபதி தேர்தல் குறித்து மக்கள்தொகை முழுமையிலுமே ஆழமான சமூக கோபம் நிலவுவதன் ஆரம்பகட்ட அறிகுறிகளே இந்த இளைஞர் ஆர்ப்பாட்டங்களாகும். வாக்காளர்கள் தொடர்ந்து தங்கள் தெரிவுகளை மாற்றினர் என்பதுடன் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு வெறிக்கூச்சல் ஆகியவற்றால் ஆதிக்கம் செலுத்தப்பட்ட ஒரு பிரச்சாரத்திலான தங்கள் வெறுப்பையும் வெளிப்படுத்தினர். மக்ரோன் மற்றும் லு பென் இருவருமே பரவலாய் வெறுக்கப்படுபவர்களாய் உள்ளனர்.

இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிராய் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே எழுந்திருக்கும் அரசியல் எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கும் இரண்டு பிற்போக்குத்தனமான வேட்பாளர்களில் எவர் ஜெயித்தாலுமே அவருக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் போராட்டத்திற்கு தயாரிப்பு செய்வதற்குமாய் தேர்தலின் இரண்டாம் சுற்றினை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு PES (Parti de l’égalité socialiste) விடுத்திருக்கும் அழைப்பின் காலப்பொருத்தத்தை இளைஞர் போராட்டங்களது இந்த வெடிப்பு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பல வருட கால போர், பாரிய வேலைவாய்ப்பின்மை, மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் PS அரசாங்கத்தின் கீழ் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்திருக்கும் ஒரு அவசரகாலநிலையின் திணிப்பு ஆகியவற்றிற்கு பின்னர், தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெடிப்பான சமூக கோபம் நிலவுகிறது. முதல் சுற்றுக்கு ஒரு சில வாரங்கள் முன்பாகத்தான் கடல்கடந்த பிரெஞ்சு பகுதியான கயானாவில் ஒரு பொது வேலைநிறுத்தம் வெடித்தது.

ஊடகங்களது பிற்போக்குத்தனமான மக்ரோன்-ஆதரவு பிரச்சாரத்தை மறுதலித்து, ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்திற்கு எதிரான அரசியல் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டும் பொருட்டு அதனை நோக்கித் திரும்புவதே தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்ற இளைஞர்கள் முகம் கொடுக்கின்ற இன்றியமையாத பிரச்சினையாகும்.

அதிகரித்துச் செல்லும் வர்க்கக் கோபத்தை மட்டுப்படுத்தி லு பென்னைக் காட்டிலும் மக்ரோன் கொண்டிருக்கும் மயிரிழை முன்னிலையை காப்பாற்றுவதற்காக —லு பென்னுக்கு முன்கண்டிராத வகையில் 40 சதவீத வாக்குகள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன— ஊடகங்கள், இடதின் பக்கத்தில் இருந்து மக்ரோனை எதிர்க்கின்ற எவரையும் நவ-பாசிசத்தின் கூட்டாளிகளாய் அவதூறு செய்து, ஒரு கபடப் பிரச்சாரத்தின் அலையை கட்டவிழ்த்து விடுகின்றன. பிரெஞ்சு தினசரியான லிபரேஷன், பத்திரிகையாளர் Johan Hufnagel இன் ஒரு பகிரங்க கடிதத்தை நேற்று வெளியிட்டது. “லு பென்னுக்கு எதிராக வாக்களிக்க மாட்டேன் என்ற எனது இடது பக்க நண்பர்களுக்கு” என்று முகவரியிடப்பட்ட இந்த கடிதம், உடனடியான ஆலை மூடலையும் வேலை இழப்பையும் முகம்கொடுத்து நிற்கும் அமியான் Whirlpool தொழிலாளர்களின் கதி குறித்த பிரச்சினையை எழுப்பி பின் நிராகரித்தது.

“தமது பெரும் உற்சாகமான திட்டங்களுக்காக Whirlpool தொழிலாளர்களை மகிழ்வுடன் தியாகம் செய்யக்கூடிய வலதுசாரி, பெருவணிக, சுதந்திர-சந்தையாளர்களால் ஆதரிக்கப்படும் ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது குறித்த உங்களது அசவுகரியத்தைப் புரிந்து கொள்ளும் முயற்சியில் இதை அனைத்து திசைகளில் இருந்தும் நான் பார்க்கிறேன். நீங்கள் வாக்களிக்கப் போகமாட்டீர்கள் என்று நான் நம்பவில்லை” என்று எழுதிய அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “இமானுவல் மக்ரோன் உங்களில் சிலருக்கு ஒரு விரும்பத்தகாதவராய் தெரிகிறார், ஆனால் அவர் ஒரு எதிரி அல்ல. மரின் லு பென் தான், ஜனநாயகத்தின் எதிரி, குடியரசின் எதிரி என்பதோடு இனவாதிகளின், யூத-விரோதிகளின், யூதப் படுகொலை மறுப்பாளர்களின், அதி-வன்முறையான மற்றும் ஓர்பால்விருப்பத்தை வெறுக்கும் குழுக்களின் கூட்டாளியாக இருக்கிறார்.”

இந்த வரிகள் ஒரு அரசியல் மோசடியாகும். ஜனநாயக உரிமைகளுக்கான உதாசீனம் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான அலட்சியம் என்ற —1971 இல் PS ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதனைச் சுற்றி இயங்கி வருகின்ற திவாலடைந்து போன, உயர்-நடுத்தர-வர்க்க “இடது” அடுக்குகளின்— இரண்டு தனித்துவமான அம்சங்களை இவை ஒன்றுகலக்கின்றன.

முதலாவதாய், மக்ரோனும் கூட ஜனநாயகத்தின் ஒரு எதிரியே ஆவார். தன்னிச்சையான கைதுகள், போலிஸ் பறிமுதல்கள் மற்றும் ஊடகத் தணிக்கைகள் ஆகியவற்றை அனுமதிக்கின்ற, விடாது நீட்டிச் செல்லத்தக்க ஒரு அவசரகாலநிலையை PS திணித்த சமயத்தில், ஹாலண்டின் உயர்நிலை ஆலோசகர்களில் ஒருவராக, இவர் ஆதனை ஆதரித்தார். இனவாதம் மற்றும் குடியரசுக் கோட்பாடுகளை பொறுத்தவரையில், மக்ரோன் ஒரு அமைச்சராக இருந்த அதே PS அரசாங்கம் தான், இன நடுநிலைக்கான குடியரசுக் கோட்பாடுகளை அப்பட்டமாய் மீறியதாய் இருந்த இனரீதியாய் ரோமாக்களை திருப்பியனுப்புகின்ற, ஒரு அபாயச்சங்காயிருந்ததொரு கொள்கையை முன்னெடுத்தது.

இரண்டாவதாய், Whirlpool தொழிலாளர்களின் கதியை Hufnagel அலட்சியமாக நிராகரிப்பதான நிலை தான் FN இன் அபாயகரமான எழுச்சிக்கு உந்துசக்தியாய் இருக்கின்ற வர்க்க சக்திகளுக்கு உதாரணமாய் விளங்குகிறது. பல தசாப்தங்களாக “இடது” என்று சொல்லி கடந்து சென்ற ஒன்றில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்மைக்குள் தள்ளப்படுவதைக் குறித்து எந்த அக்கறையும் காட்டாத வசதியான நடுத்தர வர்க்க செயல்பாட்டாளர்கள் ஆதிக்கம் செலுத்தியமை தான், அதி-வலது ஜனரஞ்சகவாதிகள் உழைக்கும் குடும்பங்களது உண்மையான பாதுகாவலர்களாய் காட்டிக் கொள்வதற்கு அனுமதித்திருக்கிறது.

தங்களது ஆலை வெகு விரைவிலேயே போலந்துக்கு மாற்றப்படும் நிலைக்கு முகம்கொடுத்து நிற்கின்ற Whirlpool தொழிலாளர்களின் நிலை இதில் உதாரணகரமானதாகும். விளம்பரத்துக்காக Whirlpool ஆலையைச் சுரண்டிக் கொள்ளும் ஒரு சிடுமூஞ்சித்தனமான முயற்சியில் Whirlpool தொழிற்சங்க நிர்வாகிகளை சந்திக்க மக்ரோன் திட்டமிட்டிருந்தார். ஆயினும் ஆலைக்கு விஜயம் செய்யவோ, அல்லது ஊடகங்களில் அவரைக் கடுமையாக கண்டனம் செய்த தொழிலாளர்களுடன் பேசவோ அவர் துணியவில்லை. அவர்களில் ஒருவர் மக்ரோனைச் சந்திக்கச் செல்லவிருந்த தொழிற்சங்கப் பிரதிநிதி ஒருவரிடம் கூறினார்: “அவருக்கு கைகொடுக்க வேண்டாம். எப்படியானாலும், அவரும் கூட அழுக்கான தொழிலாளியின் கரங்களைத் தொடுவதற்கு விரும்பப் போவதில்லை.”

சிபில் என்ற Whirlpool நிறுவனத் தொழிலாளி ஒருவர் WSWS இடம் தெரிவித்தார்: “எங்கள் எல்லோரையுமே வெளியேற்றப் போகிறார்கள் என்பது நிச்சயம். எல்லாமே எங்களுக்கு எதிராய்த் தான் இருக்கிறது. அதனால் மக்ரோன் மீது எங்களுக்கு நம்பிக்கை எதுவும் இல்லை. நாங்கள் எல்லாம் படிப்பறிவில்லாதவர்கள், அவருக்கு வாக்களிக்கும் அளவுக்கு எங்களுக்கு IQ பத்தாது என்பது போல அவர் கருதிக் கொள்கிறார்.”

ஓய்வுபெற்ற Whirlpool தொழிலாளி ஒருவரின் நண்பரொருவர் மேலும் சேர்த்துக் கொண்டார்: “நாங்கள் தொழிலாள வர்க்கம், ஆகவே மக்ரோனுக்கு வாக்களிக்க மாட்டோம்.”

தொழிலாளர்களுக்கும் பிரான்சின் அரசு-நிதி உதவிபெறும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களுக்கும் இடையிலான நன்கறிந்த வர்க்கப் பிளவினை சுரண்டிக் கொண்டு, மக்ரோனை கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பமாக லு பென் அதைக் கையிலெடுக்கிறார்: தொழிலாளர்களுடன் உரையாடுவதற்கும் மக்ரோனின் நடத்தையை கண்டனம் செய்வதற்கும் Whirlpool ஆலைக்கு திடீரென அவர் விஜயம் செய்தார். “Whirlpool தொழிலாளர்கள் ஒரு மிகப் பெரும் உதாசீனத்தைக் கடந்து சென்று கொண்டிருப்பதை இது காட்டுவதாக நான் கருதினேன், அதனால் தான் உங்களை வந்து பார்க்க நான் முடிவெடுத்தேன்” என்று கூறிய அவர், தொழிற்சங்கங்களுடன் அமர்ந்து “சிறப்புவகை கேக்குகள்” சாப்பிட்டுக் கொண்டிருப்பதாக மக்ரோனை கேலி செய்தார்.

அமியானில் லு பென்னின் ஜனரஞ்சகவாத வாய்வீச்சு ஒரு எச்சரிக்கையாகும்: தொழிலாள வர்க்கத்தில் வெடிப்பான கோபம் நிலவுவதன் மத்தியில், மக்ரோனுக்கு இடதுபக்கத்தில் இருந்து எழுகின்ற எதிர்ப்பை ஒடுக்குவதற்கு முனைபவர்கள் FN ஐ வலுப்படுத்திக் கொண்டிருப்பதை மட்டும் தான் செய்கிறார்கள். PES மக்ரோனுடன் எந்தவகையிலுமான எந்தவித கூட்டையும் கொண்டு தன்னை சமரசப்படுத்திக் கொள்ளாது, மாறாக ஒரு சோசலிச மற்றும் சர்வதேச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இரண்டு வலது-சாரி வேட்பாளர்களுக்குமான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கு அது முயலும்.