ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

இலங்கை தோட்டத் தொழிற்சங்கங்கள் இந்தியப் பிரதமரை வரவேற்க முண்டியடிப்பதன் பின்னணியில்

By R. Shreeharan
11 May 2017

மே 12 அன்று, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழும் இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்யவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் நிகழ்வை ஏற்பாடு செய்வதில் தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய தோட்டத் தொழிற்சங்கங்கள் மோதிக்கொள்கின்றன. ஐ.நா. ஏற்பாடு செய்துள்ள வெசாக் கொண்டாட்டங்களை திறந்து வைக்க இலங்கை வரும் மோடி, ஹட்டனுக்கு அருகில் டிக்கோயாவில் இந்திய நிதியில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலை ஒன்றை திறந்து வைக்க தோட்டப் பகுதிக்கும் செல்லவுள்ளார். அதன் பின்னர் அங்கு நோர்வுட் நகரில் இடம்பெறவுள்ள பொதுக் கூட்டத்திலும் பங்கேற்பார்.

ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியிடம் (த.மு.கூ.) ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு இந்திய முதலாளித்துவத்துடன் பாரம்பரிய உறவுகொண்டுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரசும் அதில் பங்கேற்க முயற்சிக்கின்றது. கடந்த ஞாயிறு மாலை ஏற்பாடுகளை பார்வையிட நோர்வுட் சென்ற இ.தொ.கா. பிரமுகர் செந்தில் தொண்டமானை, த.மு.கூ.யின் ஒரு தலைவரும் அரசாங்கத்தின் அமைச்சருமான பழனி திகாம்பரம் இடை நடுவில் வழி மறித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. திகாம்பரம் தங்களை மிரட்டியதாக செந்தில் தொண்டமான் பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.

மோடியை “பிரமிக்க வைப்பதற்காக” இரு சாராரும் தத்தமது கட்சிகளில் இருந்து அதிகளவானவர்களை அணிதிரட்டுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தமது வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை தரத்தின் மீதான தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலைமைகளின் மத்தியிலேயே மோடியின் விஜயம் இடம்பெறுகின்றது. தொடர்ச்சியான காட்டிக் கொடுப்புகளின் விளைவாக இ.தொ.கா. தேர்தல் தோல்விகளை அடைந்துள்ளதுடன், அதன் மீதான தொழிலாளர்களின் எதிர்ப்பை சுரண்டிக் கொண்டு தலை தூக்கியுள்ள த.மு.கூ.யின் கீழும் தொழிலாளர்கள் தமது வாழ்க்கை நிலைமையில் எந்த வளர்ச்சியையும் காணவில்லை.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த இரு தொழிற்சங்கங்களும் அரசாங்கமும் தேயிலைத் தோட்டக் கம்பனிகளுடன் சேர்ந்து சதி செய்து, உற்பத்தி திறனுடன் பிணைக்கப்பட்ட ஒரு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதேவேளை, தொழிலாளர்களை குத்தகை விவசாயிகள் முறையுடன் கட்டிப்போட்டு, அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது ஒழிப்பதற்கான சதியை அமுல்படுத்துவதற்கும் இந்த தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் ஒத்துழைக்கின்றன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் தொழிலாளர்களின் சம்பளம் வெறும் 110 ரூபாயால் அதிகரிக்கப்பட்டதோடு அடிப்படை சம்பளம் 50 ரூபா அற்பத் தொகையால் அதிகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வேலைச் சுமை அதிகரிப்புக்கு எதிராக தொழிலாளர்கள் அடிக்கடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பில் தெற்காசியப் பிராந்தியத்தில் பொலிஸ்கார வேலையை பொறுப்பெடுத்துள்ள இந்திய ஆளும் வர்க்கத்துடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்வதும், கல்வி மற்றும் வீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் நிதி உதவிகளை அதிகரிக்குமாறு மோடியிடம் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வளரும் அதிருப்தியை தணிப்பதுமே மோடியை பிரம்மிக்க வைப்பதன் பிரதான நோக்கமாகும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்கச் சார்பு கொழும்பு அரசாங்கமும், தமிழ் முற்போக்கு கூட்டணியும் தோட்டத் தொழிலாளர்களை லயன் வாழ்க்கையில் இருந்து மீட்டல் என்ற பெயரில் ஆங்காங்கே சிறு சிறு வீடுகளைக் கட்டிக்கொடுப்பதும் வீதிகளைப் புணரமைப்பதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் தங்களுக்கான ஆதரவை தக்கவைத்துக்கொள்வதற்கே ஆகும்.

2015 ஜனவரியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை அகற்றி சிறிசேனவை பதவியில் அமர்த்துவதற்கு, மோடி நிர்வாகத்தின் ஆதரவுடன் அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முழுமையாக ஒத்துழைத்ததன் மூலம் அமைச்சர் மனோ கனேசன் தலைமையிலனா த.மு.கூ., பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிரான வாஷிங்டனின் மூலோபாய நலன்களுக்கு சேவையாற்ற தன்னை வெளிப்படையாக அர்ப்பணித்துக்கொண்டது. நிதி நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன கோரிக்கைகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அன்றாடமளவில் வளர்ச்சியடையும் தொழிலாளர் போராட்டங்களை எதிர்கொள்கின்றது. இந்தப் போராட்டங்களுடன் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டங்களும் ஒன்று சேர்ந்து அமெரிக்க-சார்பு அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக வளர்வதை தடுப்பதற்கு த.மு.கூ. விழிப்புடன் செயற்படுகின்றது. இ.தொ.கா. இதிலிருந்து வேறுபட்டது அல்ல.

பிராந்தியத்தில் சீனாவுக்கு எதிராக தனது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முயலும் மோடி நிர்வாகம், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் நிதி நெருக்கடியில் இருந்து தலை தூக்கும் அவநம்பிக்கையான முயற்சியில் அடிக்கடி சீனா பக்கம் சாய்வதைப் பற்றியும், இராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு உள்ளேயே இருந்து கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வர முயற்சிப்பது குறித்தும் கவலை கொண்டுள்ளது. இதனால் இலங்கை ஆளும் வர்க்கத்தின் பகுதியை தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் இலங்கை தொழிலாள வர்க்கத்தின் பெரும் பகுதியினரான தோட்டத் தொழிலாளர்களை தொழிற்சங்கங்களின் ஆளுமையின் கீழ் வைத்திருக்க உதவிபுரியவும் மோடி அக்கறை காட்டுகின்றார்.

பிரிட்டிஷ் காலனித்துவத்தால் மலையகப் பகுதியில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து வரப்பட்ட பின்னர், இந்திய காங்கிரசின் தலைவரும் இந்தியாவின் முதல் பிரதமருமான ஜவகர்லால் நேரு 1939ல் பெருந்தோட்டப் பகுதிக்கு விஜயம் செய்ததற்கும், மோடியின் விஜயத்துக்கும் சமாந்தரத்தை காண முடியும்.

1939ல் மாபெரும் உலகப் பொருளாதார பின்னடவு மற்றும் இரண்டாம் உலகப் போர் பதட்டங்களின் மத்தியில் நாட்டில் இடம்பெற்ற மாபெரும் தொழிலாளர் போராட்டங்களுக்கு அப்போது லங்கா சமசமாஜக் கட்சியே (ல.ச.ச.க.) தலைமை வகித்தது. காலனித்துவத்திடம் இருந்து முழுமையான சுதந்திரத்தை கோரிய, சோசலிசத்தை முன்நிறுத்திய ல.ச.ச.க.யின் கீழ் ஆயிரக்கணக்கான சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்கள் அணிதிரண்டிருந்தனர்.

இந்த வர்க்கப் போராட்டங்களையிட்டு அச்சமடைந்த நேரு, இந்திய வம்சாவழியினர் மீதான இலங்கை அரசாங்கத்தின் அடக்குமுறைகளை சவால் செய்ய, தொழில் மற்றும் சாதி அடிப்படையிலான அமைப்புகளை ஒரணியில் திரளுமாறு ஆலோசனை கூறி, தோட்டத் தொழிலாளர்களை சிங்களத் தொழிலாளர்களில் இருந்து தனிமைப்படுத்த முயற்சித்தார். இதன் விளைவாக தோன்றிய இலங்கை-இந்திய காங்கிரசில் இருந்தே சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உருவானது. அன்று முதல் இன்றுவரை இ.தொ.கா. பெருந்தோட்டக் கம்பனிகளின் இலாபத்துக்காக தொழிலாளர்களின் நலன்களை அடகுவைத்து வந்துள்ளது.

இன்றைய உலகப் பொருளாதார நெருக்கடி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தில் வளர்ச்சியடையும் மூன்றாம் உலகப் போர் பதட்டங்கள் மற்றும் வர்க்கப் பகைமைகள் வளர்ச்சியடைகின்ற நிலைமயின் கீழ், மோடி மலையகத்திற்கு விஜயம் செய்கின்றார்.

தொழிற்சங்கங்கள் சித்தரிப்பது போல், மோடி அல்லது இந்திய ஆளும் வர்க்கம் ஒரு கொடையாளியோ அல்லது ஜனநாயகமானதோ அல்ல. இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதா கட்சி அரசாங்கத்தின் கீழ், இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் மாருதி சுசுகி வாகன தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை மோடியின் தொழிலாள வர்க்க விரோத வணிகச் சார்பு கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும். குற்றச்சாட்டுக்கள் நிருபீக்கப்படாமலேயே, சோடிக்கப்பட்ட வழக்கில் 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனையும் 18 பேருக்கு 5 ஆண்டுகால சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதே இந்த தொழிலாளர்கள் செய்த ஒரே “குற்றமாகும்”. இது முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காகவும் தொழிலாளர்களை எச்சரிப்பதற்காகவும் கம்பனியும், நீதித் துறையும், பொலிசும் மற்றும் பா.ஜ.க. அரசாங்கமும் சேர்ந்து செய்த சதியாகும்.

இந்தியா தற்போது 101 பில்லியனர்களைக் கொண்டுள்ள அதே வேளை, மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் நாள் ஒன்றுக்கு 2 டொலருக்கும் குறைவான வருமானத்தில் வாழத் தள்ளப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையில் இருந்து மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தொழிலாளர்கள் தமது சொத்துக்களை இழந்து மீண்டும் தமிழ் நாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் நாடு திரும்பியவர்கள் என்ற பெயரில் உழைக்கத் தள்ளப்பட்டுள்ளனர். நாடு திரும்பியவர்களும் ஏனைய தோட்டத் தொழிலளர்களும் உலகச் சந்தையில் கழுத்தை நெரிக்கும் போட்டியின் மத்தியில் சுமார் 100 இந்திய ரூபா நாள் சம்பளத்தில் சுரண்டப்படுகின்றனர்.

அதே வேளை இலங்கையின் இனவாத போரின் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்த இலட்சக்கணக்கான வடக்கு, கிழக்கு மற்றும் தோட்டப்புறத்தைச் சேர்ந்த தமிழர்கள் இழிநிலையிலான அகதி முகாம்களில் 20 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படுவதோடு குறித்த நேரத்தில் வெளியேறி மாலை 6 மணிக்கு முன்னர் முகாமிற்கு திரும்பி விட வேண்டும். கடந்த ஆண்டு ஒரு அகதியை அதிகாரி ஒருவர் கீழ்த்தரமாக நடத்தியமையினால் மனமுடைந்த அவர் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்டார். இத்தகைய ஒடுக்குமுறைகளைக் கையாளும் ஆளும் வர்க்கத்தையே இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் தொப்புள்கொடி உறவு என அழைக்கின்றனர்.

இந்தியா போன்ற அரசுகள் வழங்கும் அற்ப சலுகைகளுக்குப் பின்னால் அவற்றின் பெரும் நலன்களும் கொடூரங்களும் உள்ளன என்பதற்கு தமிழ் மக்களின் அனுபவமே உதாரணமாகும். 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் யுத்தப் பிராந்தியமான வடக்கு மற்றும் கிழக்குக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்து இறங்கிய இந்திய அமைதிப் படையே ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்றொழித்தது. இப்போது அமெரிக்காவும் இந்தியாவும் கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டணி வைத்திருப்பது சீனாவுக்கு எதிரான போர் தயாரிப்புகளுக்கு தீவைப் பயன்படுத்திக்கொள்வதற்கே ஆகும். இதனால் கோடிக்கணக்கான மக்களின் உயிர்களை பலியெடுக்கும் மூன்றாம் உலக அணுவாயுத யுத்தம் வெடிக்கும் ஆபத்தை மனிதகுலம் எதிர்கொண்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் இலங்கைத் தொழிலாளர்களதும் உண்மையான உறவினர்கள் இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கம் அல்ல, மாறாக மில்லியன் கணக்கான இந்தியத் தொழிலாளர்களே ஆகும். தங்களது சொந்த நலன்களுக்காக ஏகாதிபத்தியத்துடனும் பிராந்திய வல்லரசுகளுடனும் உறவு ஏற்படுத்திக்கொள்ள முயலும் தொழிற்சங்கங்களையும் கட்சிகளையும் தொழிலாளர்கள் நிராகரிக்க வேண்டும். இலாப நோக்கு உற்பத்தி முறையை ஒழித்துக்கட்டி, தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை, அதாவது சோசலிச அரசாங்கத்தை கட்டியெழுப்புவதற்கு அவர்கள் இந்தியத் தொழிலாளர்களுடனும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுடனும் சுயாதீனமாக ஐக்கியப்படுவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை தக்க வைத்துக்கொள்ள முடியும்.