ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Speech at a Session of the Petrograd Soviet on reports by the socialist ministers

சோசலிஸ்ட் அமைச்சர்களால் வழங்கப்பட்ட அறிக்கைகள் மீது பெட்ரோகிராட் சோவியத்தின் கூட்டத்தொடரின் ஒரு பிரிவில் வழங்கப்பட்ட உரை

By Leon Trotsky
May 26, 1917

இது மே 26, 1917 அன்று பெட்ரோகிராட் சோவியத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியால் வழங்கப்பட்ட உரையின் சுருக்கப்பட்ட பதிப்பின் ஒரு புதிய மொழியாக்கம். ((May 13 O.S.). அது முதன்முதலில் Novaya Zhizn (புதியவாழ்க்கை) இல் வெளியிடப்பட்டது. எண். 23, 14 (27) மே 1917. [1]

தோழர்களே,

ஷ்கோபிலேவ் (Skobelev) உங்களிடம், தொழிலாள வர்க்கம் அதன் கோரிக்கைகளை தொழிலாளர் அமைச்சகத்தின் ஊடாக அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்கும் என்று கூறினார். தொழிலாளர் அமைச்சகம் உண்மையில் முதலாளித்துவ அரசின் ஒரு அங்கமாக இருக்கையில், தொழிலாள வர்க்கம் அதன் சொந்த போர்க்குணமிக்க அமைப்புக்கள் மூலம் அதன் கோரிக்கைகளை வைக்கும் என இதுவரைக்கும் நான் நினைத்திருக்கிறேன். அல்லது ஒருவேளை ஷ்கோபிலேவ் அமைச்சராக ஆன கணத்திலிருந்து, தொழிலாளர் அமைச்சகம் பாட்டாளி வர்க்க அமைப்பாக மாறிவிட்டதா?

ஷ்கோபிலேவ் முதலாளித்துவ இலாபங்கள் அனைத்தையும் கைப்பற்றிக்கொள்ள உத்தேசம் கொண்டுள்ளார். மிக நல்லது தான் ஆனால், மொத்தத்தில், இலாபம்தான் முதலாளித்துவ உற்பத்தியின் ஒரே உந்து சக்தியாகும். முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்தின் கைகளில் அதிகாரத்தை கையளித்துவிட்டு, ஒருவர் எப்படி முதலாளித்துவ உந்து சக்தியை அழிக்க முடியும்? இதனைச்செய்ய வேண்டுமானால் தொழிலாளர் சோவியத்துக்கள் மற்றும் படைவீரர் பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கரங்களில் அதிகாரத்தை மாற்றுவது அவசியமாக இருக்கிறது. எமக்கு முன்னால் இங்கே பேசிய ஷேர்நோவ் (Chernov) விவசாயப் புரட்சியின் ஒரு அமைச்சராக பேசவில்லை, மாறாக விவசாயப் புள்ளிவிவரங்களின் ஒரு அமைச்சராகவே பேசினார். அவர் ஒழுங்கமைக்கப்படாத வழிகளில் நிலத்தைக் கைப்பற்றுவது தொந்திரவைக் குறிக்கும் என்றார். இது ஒரு தலைகீழ் தேற்றம். அவர் எங்களுக்கு ஒரு நேரடி தேற்றத்தை வழங்கட்டும் மற்றும் விவசாயிகள் பிரதிநிதிகளின் சோவியத்தால் நிலம் ஒழுங்கமைக்கப்பட்ட வழியில் கைப்பற்றப்பட எமக்கு அழைப்பு விடுக்கட்டும்.

கெரென்ஸ்கி சோவியத் பற்றி ஒன்றும் குறிப்பிடாதிருப்பதையும் முதலாளித்துவ பத்திரிகை கெரென்ஸ்கியை சுற்றி விளம்பரம் செய்வதையும் கவனிக்க: இந்த பத்திரிகை ரஷ்ய போனபார்ட்டிசத்தின் குறிக்கோள்களுக்காக கெரென்ஸ்கியை பயன்படுத்துவதாக இல்லையா?[2] கெரென்ஸ்கிதாமே என்ன செய்துகொண்டிருக்கிறார்? அவர் அருமையான உரைகளை வழங்குகிறார், அதேவேளை அதிகாரிகளின் மாநாட்டில், “இணைப்புக்கள் அல்லது இழப்பீடுகள் இல்லாமல்“ என்பது கற்பனையானதாக இருக்கும் என்ற முழக்கத்தை அறிவிக்க அனுமதித்ததன் மூலம் இடைக்கால அரசாங்கத்தின் முகத்தில் அறைய, தலைமைத் தளபதி அலெக்சேயேவ் இனை அனுமதிக்கிறார். ஆனால் தளபதி அலெக்சேயேவ்[3], மொத்தத்தில், ஷ்கோபிலேவ் பெயரில் இடைக்கால அரசாங்கத்தில் இராணுவத்தை வழிநடத்துகிறார்.

குறிப்புகள்:

[1] பெட்ரோகிராட் சோவியத்தின் இந்த கூட்டத்தொடரில் மூன்று சோசலிச அமைச்சர்கள் அறிக்கை அளித்தனர்; ஷ்கோபிலேவ், ஷேர்நோவ் மற்றும் செரெட்டெலி ஆகியோர். செரெட்டெலி “வானத்தில் நாரையை“ (வானத்தில் ஒரு பறவையை) வெளியுறவுக் கொள்கையின் அதிகாரப் பரப்பாக சித்தரித்த அதேவேளை, ஷ்கோபிலேவ் முதலாளிகளின் இலாபங்களுக்கு 100 சதவீதம் வரி விதிக்க ஒரு வெற்று வாக்குறுதியை அளித்தார். அடுத்தடுத்து வந்த பேச்சுக்களில், தற்போதைய ஒன்றில் போலவே, L. D. ட்ரொட்ஸ்கி முதலாளித்துவ அரசாங்கத்தின் இருப்பைக் குறிக்கும் இந்த வாக்குறுதிகளின் அவநம்பிக்கைக்குரிய தன்மை பற்றி அடிக்கடி வலியுறுத்தினார்.

[2] போனபார்ட்டிசம்: மகத்தான பிரெஞ்சுப் புரட்சியின் முடிவை நோக்கி முதலாளித்துவ வர்க்கத்தில் தங்கியிருக்கும் அதேவேளை, ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை ஏற்படுத்திய முதலாம் நெப்போலியன் (போனபார்ட்) இன் சகாப்தத்திலிருந்து அதன் தோற்றத்தைக் காணும். 1917ல் ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் முயற்சிகள் அத்தகைய ஒரு இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவும் திசையில் துல்ல்லியமாகச் சென்றது. போனபார்ட்டிசத்திற்கான அதன் தயாரிப்பில், முதலாளித்துவ வர்க்கமானது கெரென்ஸ்கியைக் கூட பயன்படுத்தியிருக்கிறது, அதன் இலக்குகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் அவர், ஒருவேளை அகற்றப்படலாம்தான் என்றாலும் கூட.

[3] தளபதி Alekseyev: ஜாரிச இராணுவத்தில் தளபதியாக இருந்த அவர், உண்மையில் 1914–1918 வரையில் ரஷ்ய இராணுவத்தை வழிநடத்தினார். 1917ன் இலையுதிர்காலத்தில், Alekseyev கோர்னிலோவ் இருந்த இடத்தில் அதியுயர் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். அக்டோபரை அடுத்து உடனேயே, Alekseyev வெண்படையை ஒழுங்கமைப்பதில் பங்கேற்றதன் மூலம் அவரது செயல்பாட்டை வெளிக்காட்டினார். செக்கோஸ்லாவிக் கலகத்தை அடுத்து, Alekseyev புகழ்பெற்ற தன்னார்வலர் படையை டான் குடியரசில் நிறுவினார்.